என் மலர்
திண்டுக்கல்
- போலீசார் காரில் குட்கா கடத்தி வந்த 3 பேரை கைது செய்தனர்.
- 500 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
நத்தம்:
தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டபோதும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கடத்தப்பட்டு ரகசியமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பெங்களூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வழியாக அதிக அளவில் குட்கா கடத்தப்படுகிறது.
போலீசார் அதிரடி நடவடிக்கையால் பல்வேறு பகுதிகளில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி காரில் குட்கா கடத்திவரப்படுவதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீஸ் - இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப் -இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் மற்றும் போலீசார் நத்தம் - அய்யாபட்டி சாலையில் உள்ள தேங்காய் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு இருந்த சொகுசுகாரில் விற்பனைக்காக 500 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் காரில் குட்கா கடத்தி வந்த ஊராளிபட்டியை சேர்ந்த சுதாகர்(வயது35), நத்தத்தை சேர்ந்த முகமது ஈசாக் (34), ஜஹாங்கீர் (37) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து 500 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தப்பியோடிய கார் டிரைவர் ராகுல், நாகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- கிரிவலத்தின்போது கடம்ப மலர்களை பெண்கள் சூட்டி கொள்கின்றனர்.
- கழுதிருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது.
பழனி முருகன் கோவிலில் கோடைகாலத்தில் அக்னி நட்சத்திர கழுதிருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத கடைசி 7 நாட்கள், வைகாசி மாத முதல் 7 நாட்கள் என 14 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த நாட்களில் பக்தர்கள் காலை, மாலை வேளையில் பழனி கிரிவீதிகளில் வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். அவ்வாறு கிரிவலம் வரும்போது சுத்தமான சஞ்சீவி காற்று வீசும் என்றும், இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும் என்பது நம்பிக்கை. மேலும் கிரிவலத்தின்போது கடம்ப மலர்களை பெண்கள் சூட்டி கொள்கின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கழு திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை வேளையில் பக்தர்கள் பழனி மலையை சுற்றிலும் கிரிவலம் வந்து வழிபட்டனர்.
இந்நிலையில் கழுதிருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் பழனி மலையை சுற்றிலும் கிரிவலம் வந்தனர்.
அப்போது பெண்கள் கடம்ப மலர்களை தலையில் சூடிக் கொண்டும், கையில் ஏந்தியும் சென்றனர். இதற்காக கிரிவீதியில் ஆங்காங்கே இலையுடன் கூடிய கடம்ப மலர்கள் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பக்தர்கள் கிரிவலம் வந்தபோது அழகுநாச்சி அம்மன் கோவில், வனதுர்கை அம்மன், மகிஷாசூரமர்த்தினி அம்மன், வீரதுர்கை அம்மன் கோவில்களுக்கும் சென்று வழிபட்டனர். இன்று திருவிழா நிறைவு பெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
- காற்று அதிகமாக அடித்ததால் படகு சவாரியும் நேற்று மாலை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று பகல் பொழுதில் வெயில் அடித்தாலும் மாலையில் திடீரென சூறாவளிக்காற்று, இடி மின்னல்களுடன் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி, செண்பகனூர், நாயுடுபுரம், பெருமாள்மலை, வில்பட்டி, வட்டகானல், பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
சுற்றுலா பயணிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, பைன்பாரஸ்ட், தூண்பாறை, மோயர்பாய்ண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். காற்று அதிகமாக அடித்ததால் படகு சவாரியும் நேற்று மாலை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
எனினும் சாரல் மழையில் நனைந்தபடியே உற்சாகமாக சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம் அருவி உள்ளிட்ட இடங்களில் உற்சாகமாக புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பிரையண்ட் பூங்காவில் மலர்களின் பெயர்களை கண்டறிய கியூ ஆர் கோடு அந்தந்த மலர்களின் பெயர் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த பூக்களின் குடும்ப வகைகள் உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பூங்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகர் பகுதியில் போக்குவரத்து போலீசார் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக உள்ளது. எனவே இதற்கு நிரந்தர நீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பாடை கட்டி, ஒப்பாரி வைத்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் :
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு மேல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் நேற்று ஒட்டப்பட்டிருந்தது.
அந்த போஸ்டரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மாதிரி அச்சிடப்பட்டு, அதன் கீழே பிறப்பு 8-11-2016, இறப்பு 19-05-2023, மத்திய பா.ஜ.க. அரசால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டு 19-05-2023 அன்று மாலையில் அகால மரணமடைந்தது.
இறுதி ஊர்வலம் 20-05-2023 அன்று மாலை 4 மணிக்கு சாலை ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த போஸ்டர், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே நேற்று மாலை திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். அவர்கள் தங்களது கைகளில் கட்டு, கட்டாக 2 ஆயிரம் மாதிரி ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்திருந்தனர். பின்னர் பாடை கட்டி, அதில் நோட்டுகளை போட்டனர். இதைத்தொடர்ந்து பாடையை சுற்றி ஒப்பாரி வைத்தனர். அப்போது சங்கு ஊதி, மணி அடிக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது.
அதன்பிறகு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சக்காளை, கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் வேங்கைராஜா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் முகமது மீரான், கவுன்சிலர் பாரதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
- தேனி ரெயில் நிலையம் அருகே இருந்த தற்காலிக குட்டையில் சிறுவர்களின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- குட்டை மற்றும் நீர்நிலைகளில் சிறுவர்கள் மூழ்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:
தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த சிவராஜா மகன் சிவசாந்தன்(12). தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் வீரராகவன்(12). இவர்கள் 2 பேரும் தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மாலை விளையாட சென்ற அவர்கள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை தேனி ரெயில் நிலையம் அருகே இருந்த தற்காலிக குட்டையில் சிறுவர்களின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு சிறுவர்களின் உடல்களை சடலமாக மீட்டனர். பின்னர் இருவரது உடல்களும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாதுகாப்பு இல்லாத குட்டை மற்றும் நீர்நிலைகளில் சிறுவர்கள் மூழ்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கோசுகுறிச்சி கால்நடை மருத்துவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கால்நடைதுறையினர் இறந்த காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தனர்.
- பின்னர் காட்டெருமையை வனப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
நத்தம்:
செந்துறை அருகே பழனிபட்டியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் 8 வயதுள்ள காட்டெருமை இறந்து கிடந்தது. இதை பார்த்த கணேசன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் வனத்துறை சார்பில் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இறந்த காட்டெருமையை மீட்டனர். பின்னர் கோசுகுறிச்சி கால்நடை மருத்துவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கால்நடைதுறையினர் இறந்த காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து காட்டெருமை வனப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
- அந்த தெருவைச் சேர்ந்த பேர் சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுங்கள் அதன்பிறகு சாலை போடுங்கள் என கூறி வாக்குவாதம் செய்தனர்.
- பின்னர் தகாத வார்த்தையால் திட்டி, தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்
கொடைரோடு:
கொடைரோடு அடுத்த பொம்மணம்ப ட்டியைச் சேர்ந்த முனியப்பன் மனைவி சத்யா (வயது 40). இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். பொம்மணம்பட்டியில் உள்ள ஒரு தெருவில் சாலை அமைக்க சர்வே பணிகள் நடைபெற்றது. அங்கு கவுன்சிலர் சத்யா பார்வையிட்ட சென்றார்.
அப்போது சத்யாவிடம் அந்த தெருவைச் சேர்ந்த சரவணன், பாண்டிராஜ், பாண்டிராஜ் மனைவி சண்முகவடிவு ஆகியோர் சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுங்கள் அதன்பிறகு சாலை போடுங்கள் என கூறி வாக்குவாதம் செய்தனர். பின்னர் தகாத வார்த்தையால் திட்டி, தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த சத்யா நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் அம்மையநாயக்கனூரில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவரஞ்சன் முற்றிலும் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி.
- நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 455 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மார்க்கெட் குமரன் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஓவியராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு அக்சயா(18), சிவரஞ்சன்(15), கிரண்யா(9) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். அக்சயா கல்லூரியில் படித்து வருகிறார். சிவரஞ்சன் முற்றிலும் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி ஆவார்.
இவர் மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 455 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். தமிழ்-96, ஆங்கிலம்-87, கணிதம்-87, அறிவியல்-92, சமூக அறிவியல்-93 என மொத்தம் 455 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளார். அவருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
- திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் ஊருக்கு வந்த பழனிச்சாமியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
- 21-ம் நூற்றாண்டில் இன்னும் இதுபோன்ற கொடுமைகள் உள்ளதா என பழனிச்சாமி வேதனையுடன் உள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பாலப்பட்டி ஊராட்சி பழையமாரப்பன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(62). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் விசயமாக ஹைதராபாத்துக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கு வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் ஊருக்கு வந்த பழனிச்சாமியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
மாற்றுசமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால் ஊருக்குள் வரக்கூடாது என தெரிவித்தனர். இதனையடுத்து பழனிச்சாமி தனது மனைவி மற்றும் பெற்றோருடன் கூம்பூர் அருகே தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். தனது ஊரில் உள்ளவர்களை எப்போதாவது பார்க்க வேண்டும் என நினைத்தால் கூட ஊருக்குள் விடாமல் தடுத்து வந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்துவிட்டார். இறப்பு செய்தி சொல்வதற்காக அந்த ஊருக்கு சென்றபோது அவர்கள் யாரும் வரவில்லை. இதனால் மனம் வெறுத்து தனது குடும்பத்தினர் உதவியுடன் தந்தையை எடுத்துச்சென்று அடக்கம் செய்தார். தற்போது இவரது தாயாரும் முதுமை காரணமாக இறக்கும் தருவாயில் உள்ளார். அவரும் தான் இறந்துவிட்டால் ஊர்மக்களை அழைத்து தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
ஆனால் ஊர்மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 21-ம் நூற்றாண்டில் இன்னும் இதுபோன்ற கொடுமைகள் உள்ளதா என பழனிச்சாமி வேதனையுடன் உள்ளார். காதல் திருமணம் செய்தது தவறா, அவர்கள் வாழ தகுதியற்றவர்களா என கதறி அழுது தனது தாய் நிம்மதியாக ஊர்மக்கள் அனைவரையும் பார்க்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- நகரங்களில் வசிப்பவர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைகூட அறியாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
- குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்தால் எதிலும் கிடைக்காத நிம்மதி கிடைக்கிறது.
தமிழகத்தில் குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 56 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரே நேரத்தில் மாட்டு வண்டிகளில் புறப்பட்டு தங்களது குல தெய்வங்களை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வார்கள். இதற்காக 15 நாட்களை செலவிட்டு கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பு கிராமத்தில் இருந்து மாட்டு வண்டிகளில் புறப்பட்டு செல்வார்கள். 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.
இவர்களின் குலதெய்வ கோவில்களுக்கு புறப்பட்டு செல்லும்போது விருதுநகர் மாவட்டம் சிவகாசி வரை ஒன்றாக செல்வார்கள். அதன் பின்னர் அங்கிருந்து 3 பிரிவாக பிரிந்து புதுப்பட்டி கூடமுடை அய்யனார் கோவில், கீழராஜகுலராமனின் உள்ள எர்ச்சீஸ்வரர் பொன் இருளப்பசுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள தைலாபுரம் மல்லி வீரகாளியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு செல்வார்கள்.
முதலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்த 56 கிராம மக்கள் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குலதெய்வ கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெறும் குலதெய்வ வழிபாட்டுக்காக கடந்த 17-ந்தேதி 215 மாட்டு வண்டிகளில் 56 கிராம மக்கள் புறப்பட்டனர். அவர்கள் அகத்தாரிருப்பு கிராமத்தில் இருந்து மாட்டு வண்டிகளில் அணிவகுத்து சென்றனர்.
தற்போதைய கால கட்டத்தில் போக்குவரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மாட்டு வண்டியில் செல்வது பழைய கால வழக்கமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த 56 கிராம மக்கள் காலங்கள் கடந்தாலும் தங்களது பாரம்பரியத்தை மீறக்கூடாது என்ற நோக்கத்தில் மாட்டு வண்டிகளில் செல்வதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக ஒரு மாட்டு வண்டிக்கு 15 நாட்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை வாடகை கொடுத்து தங்களது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர்.
சொந்த மாட்டுவண்டி வைத்திருப்பவர்கள் தங்களது மாட்டு வண்டிகளில் வந்து விடுகின்றனர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மாட்டு வண்டிகளை வாடகைக்கு எடுத்து செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு சமைக்க தேவையான பொருட்களையும் மாட்டு வண்டிகளில் எடுத்து செல்கின்றனர்.
குலதெய்வ கோவிலை அடைந்ததும் அங்கு தங்கி இருந்து வழிபாடுகளை செய்கின்றனர். இதன் மூலம் 56 கிராம மக்களும் ஒருவரை யொருவர் அறிந்து கொண்டு குடும்ப சம்பந்தமான உறவுகளை மேம்படுத்தி கொள்கின்றனர். நகரங்களில் வசிப்பவர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைகூட அறியாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அதனை நாகரீகமாகவும் கருதுகின்றனர்.
தனித்தனி தீவுகளாக மாறிபோன மனிதர்களுக்கு மத்தியில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் 56 கிராம மக்கள் குல தெய்வ வழிபாட்டுக்கு ஒன்றாக செல்வது வேறு எங்கும் காண முடியாத காட்சியாக உள்ளது. மாட்டு வண்டிகளில் செல்லும்போது இயற்கையை ரசித்து செல்லும் வாய்ப்பும் ஏற்படுகிறது. இது சிறுவர், சிறுமிகள் மனதை மிகவும் கவருகிறது.
இந்த மாட்டுவண்டி பயணம் 15 நாட்கள் தொடர்கிறது. சில நாட்கள் மட்டும் குல தெய்வ கோவில்களில் தங்கி இளைப்பாறுகின்றனர். அங்கு ஒன்றாக சமைத்து சாப்பிட்டு உறவினர்களுடன் உரையாடி மகிழ்கின்றனர்.
இந்த பயணத்தில் சிறுவர், சிறுமியர் முதல் முதியவர்கள் வரை கலந்து கொள்கின்றனர். குல தெய்வ வழிபாட்டுக்கு புறப்பட்டு சென்ற சிலரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
100 கிலோ மீட்டர் தூரத்தை 4 நாட்கள் கடந்து சென்று 7 நாட்கள் தங்கி இருந்து 3 கோவில்களிலும் வழிபாடுகள் நடத்தி விட்டு மீண்டும் மாட்டு வண்டியில் சொந்த கிராமங்களை சென்றடைவதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளோம். மாட்டு வண்டி சொந்தமாக இல்லாதவர்களும் ரூ.35 ஆயிரம் வாடகை செலுத்தி மாட்டுவண்டி பூட்டி செல்கின்றோம்.
மாட்டு வண்டி இல்லாதவர்கள் சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மாட்டுவண்டிகளை ஏற்பாடு செய்து குல தெய்வ கோவில்களுக்கு செல்கிறோம்.
மாட்டு வண்டிகளில் சென்று வழிபட்டால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி கிடக்கிறது. பல ஆண்டுகளாக சென்று வந்தபோதிலும் எங்களுக்குள் எந்தவித மோதல்களும் ஏற்பட்டதில்லை. எங்கள் உறவு தொடர்ந்து நீடித்து வருகிறது. சொந்த பந்தங்களுடன் உறவாட இது வாய்ப்பாக இருக்கிறது.
இந்த வழிபாட்டில் முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், கொம்பூதி, கமுதி, பரமக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்கிறோம்.
தமிழகத்தில் கொரோனா பரவியதால் கடந்த முறை செல்ல முடியவில்லை. 6 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் செல்கின்றோம். நமது முன்னோர்கள் காட்டிய வழியில் சென்றால் பல நன்மைகளை அடையலாம். ஆனால் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்தால் இழப்பு நமக்குத்தான்.
இந்த வழிபாட்டை முதலில் தொடங்கியவர்கள் பாத யாத்திரையாக சென்று வந்துள்ளனர். அதன் பின்னர் மாட்டு வண்டிகளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போது மாட்டு வண்டி கிடைக்காதவர்கள் கார் மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்களில் சென்று வருகிறோம். குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்தால் எதிலும் கிடைக்காத நிம்மதி கிடைக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியான அன்டன் ஜான்சா பிறந்தநாள் உலக தேனீக்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- மனித வாழ்க்கைக்கு தேனீ வளர்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தம்பதி தெரிவித்தனர்.
நத்தம்:
பல நூற்றாண்டுகளாக கடினமாக உழைக்கும் உயிரினமான தேனீக்கள் மக்கள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பயனளித்து வருகின்றன.
ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்கு மகரந்தத்தை எடுத்துச் செல்வதன் மூலம் தேனீக்கள் மற்றும் பிற மகரந்த சேர்க்கைகள் ஏராளமான பழங்கள், கொட்டைகள், மற்றும் விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டு மல்லாமல் உணவு பாது காப்பு மற்றும் ஊட்ட ச்சத்திற்கு பங்களிக்கும் பல்வேறு வகைகளையும் சிறந்த தரத்தையும் உருவாக்குகின்றன.
மகரந்த சேர்க்கை பொதுவாக சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்லுயிர், விவசாயம் மற்றும் மனித நேயம் சார்ந்திருக்கும் துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்புகளை பராமரிக்க உதவுகிறது. மனித நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கு முக்கியமான பல்வேறு வகையான தாவரங்களுக்கு மகரந்த சேர்க்கை தேவை ப்படுகிறது. உண்மையில் தேனீக்கள் மற்றும் பிற மகரந்த சேர்க்கைகள் பல பயிரிடப்பட்ட மற்றும் காட்டுத்தாவரங்களின் இனப்பெருக்கம் ஆகியவற்றின் முக்கியமான சுற்றுச்சூழல் சேவையை வழங்குகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் உலக தேனீ தினத்தை அனுசரிப்பதன் மூலம் மக்களையும் உலகத்தையும் ஆரோக்கியமாக வைத்திரு ப்பதில் தேனீக்கள் மற்றும் பிற மகரந்த சேர்க்கைகள் வசிக்கும் முக்கிய பங்கு மற்றும் அவை இன்று எதிர்கொள்ளும் பல சவால்கள் குறித்து விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியான அன்டன் ஜான்சா பிறந்தநாள் உலக தேனீக்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஜான்சா ஸ்லோவேனி யாவில் உள்ள தேனீ வளர்ப்பவர்களின் குடும்ப த்திலிருந்து வந்தவர், அங்கு தேனீ வளர்ப்பு என்பது நீண்ட கால பாரம்பரிய த்துடன் ஒரு முக்கியமான விவசாய நடவடிக்கையாகும்.
தற்போது தேனீக்கள் மகரந்த சேர்க்கைகள் மற்றும் பல பூச்சிகள் ஏராளமாக குறைந்து வருகின்றன. இந்த நாள் நம் அனைவருக்கும் நாம் அரசாங்கங்கள் நிறுவன ங்கள் அல்லது சிவில் சமூகத்திற்காக வேலை செய்தாலும் அல்லது அக்கறையுள்ள குடி மக்களாக இருந்தாலும் மகரந்த சேர்க்கைகள் மற்றும் அவற்றின் வாழ்விட ங்களை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அவற்றின் மிகுதியையும் பன்முக த்தன்மையையும் மேம்படுத்தும் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் செயல்களை ஊக்குவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இது குறித்து நத்தம் விவசாயி குணசேகரன் கூறுகையில்,
கடந்த 2010-ம் ஆண்டு மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி பெற்றேன். 2 காலி பெட்டிகளை வாங்கி தேனீக்கள் வளர்க்க ஆரம்பித்தேன். தேன் கிடைப்பதை விட பூக்களில் அயல் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் அவசியம் என்பதை நிறைய மகசூல் பெற்ற அனுபவத்தில் உணர்ந்தேன். கதிர் கிராம தொழில்கள் ஆணையத்தின் ரூ.9.5 லட்சம் கடன் பெற்று தேனீக்கள் வளர்ப்பை தொழிலாக தொடங்கினேன். ரூ.2.90 லட்சம் மானியம் கிடைத்தது. இப்போது 1000 தேனீ பெட்டிகள் வைத்துள்ளேன். 300 பெட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கிறது. 700 பெட்டிகளில் தேன் போக தேனீக்கள் உற்பத்தியாக பராமரிக்கிறேன்.
தோட்டக்கலை வேளாண்மை துறைகளுக்கு தேனீக்களுடன் பெட்டிகளை விற்பனை செய்கிறேன். தேன், தேன் மெழுகு மகரந்தம் அனை த்துமே நல்ல விலைக்கு விற்கலாம். ஆண்டுக்கு 2 டன் தேன் உற்பத்தி செய்கிறேன். தேனீக்களை ஒரே இடத்தில் வைத்து வளர்க்க முடியாது ஒவ்வொரு மரம், செடிக்கும், பூக்கும் சீசன் மாறுபடுவதால் அதற்கேற்ப அவற்றை இடம்பெயர்த்த வேண்டும். எனது மனைவி மாரிய ம்மாளும் தற்போது தேனி வள ர்ப்பில் ஆர்வம் காட்டி வரு கிறார். மனித வாழ்க்கைக்கு தேனீ வளர்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
- திண்டுக்கல் மாணவி பவித்ரா 495 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் இடம் பிடித்துள்ளார்.
- மாணவி பவித்ராவுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் எஸ்.எம்.பி.எம். பள்ளியை சேர்ந்த மாணவி பவித்ரா 495 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை விஜய்ஆனந்த் ஜவுளிகடை வைத்துள்ளார்.
நாகல்நகர் முனியப்பன்கோவில் தெருவை சேர்ந்த மாணவி பவித்ரா தமிழ் 98, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூகஅறிவியல் 99 என மொத்தம் 495 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.






