என் மலர்
திண்டுக்கல்
- 15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு எந்தஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
- கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் போடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற ஞாயிற்றுக்கிழமை போடியில் ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள முல்லை பெரியாறு-கொட்டக்குடி கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் போடிக்கு வருகை தருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் குடிநீர் பிரச்சினையில் தன்னிறைவு அடையும். போடி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு விடுக்கப்படும். அவர் வருவதும், வராமல் இருப்பதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம்.
போடி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற பிறகு அவர் எத்தனை முறை ஊருக்கு வந்து மக்களை சந்தித்துள்ளார் என்பது இப்பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றுப்போன நான்தான் அடிக்கடி போடி தொகுதிக்கு வந்து மக்கள் நலத்திட்டங்களை பார்வையிட்டு செயல்படுத்தி வருகிறேன்.
15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு எந்தஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தற்போது அவர் கேரளாவில் ஆயில் மசாஜ் எடுத்து வருகிறார். கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணி தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அழகேசனின் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அருகே நின்றிருந்த யுவராஜா தூக்கி வீசுப்பட்டார்.
- சவப்பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழனி:
பழனி மருத்துவ நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா (வயது38). திருமணமாகாதவர். இவரது நண்பர் அழகேசன் (30). பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அழகேசன் உடல்நலக்குறைவால் நேற்று இறந்தார்.
குளிர்சாதன பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அழகேசனின் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அருகே நின்றிருந்த யுவராஜா தூக்கி வீசுப்பட்டார். இதையடுத்து அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சவப்பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- லிப்ட் பணிகள் செயல்பாட்டிற்கு வர தாமதமானதால் அவசர பிரிவுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
- லிப்ட் சேவையை நோயாளி கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க இயலாத வர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட த்திற்கு அரசு மருத்துவ கல்லூரி வந்ததையடுத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி, அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் பொது மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 4ம் தேதி நவீன வசதிகளுடன் 500 படுக்கைகள் கொண்ட 5 மாடி கட்டிடத்தை அமைச்சர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இங்கு அமைக்கப்பட்டி ருந்த லிப்ட் பணிகள் முடிவடையாமல் இருந்த தால், செயல்பாட்டிற்கு வர தாமதமானது. இதனால் அவசர பிரிவுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து பணிகளை விரைவில் முடிக்க கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி உத்தரவிட்டார். இந்நிலை யில் பணிகள் நிறைவடைந்து லிப்ட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து ள்ளனர். சிரமமின்றி லிப்ட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த லிப்ட் சேவையை நோயாளி கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க இயலாத வர்கள் மட்டும் பயன்படுத்தி கொள்ளுமாறு டீன் சுகந்தி ராஜகுமாரி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் சின்னையா (வயது50). பருத்தி வியாபாரம் செய்து வந்தார். நேற்று தனது வீட்டிலேயே பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே சின்னையா உயிரிழந்தார். இது குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிறுமலை பலாப்பழத்திற்கு என தனி மகத்துவமும். மற்ற மாவட்டங்களில் விளையும் பலாப்பழத்தை விட இங்கு விளையும் பலாபழமானது இனிப்பும், புளிப்பும் சுவை கொண்டது.
- இந்த ஆண்டு முன் கூட்டியே சீசன் தொடங்கியதை யொட்டி வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ளது சிறுமலை. இங்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட மலை விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் மலை சார்ந்த விவசாயமே ஆகும். சிறுமலையில் கனிகளில் பிரதான கனிகளான சிறுமலை வாழையும், பலாவும் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் மிளகு, காப்பி, எலுமிச்சை, அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட காய்கனிகள் விவசாயம் செய்து மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
சிறுமலையின் சிறப்பு அம்சமே வாழையும், பலாப்பழமும் தான். வழக்கமாக பலாப்பழ சீசன் ஆனி, ஆடி மாதம் தொடங்கும். தற்பொழுது ஒரு மாதம் முன்னதாகவே சீசன் தொடங்கியுள்ளது. இதையொட்டி சிறுமலை சந்தையில் பலாப்பழம் விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது. சிறுமலை பலாப்பழத்திற்கு என தனி மகத்துவமும் உண்டு. மற்ற மாவட்டங்களில் விளையும் பலாப்பழத்தை விட இங்கு விளையும் பலாபழமானது இனிப்பும், புளிப்பும் சுவை கொண்டது.
பலாப்பழத்தில் புரத ச்சத்துக்களும், மாவுச்சத்து க்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கி யுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், சிறுமலை பலாபழங்களை போட்டி போட்டுக் கொண்டு ஏல முறையில் எடுத்துச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு முன் கூட்டியே சீசன் தொடங்கியதை யொட்டி வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வருகின்றனர்.
வடிவம், சுலை, பருமனை பொறுத்து விலை நிர்ணயம் செய்யபடுகிறது. அதன்படி இன்று நடந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். ஒரு பலாப்பழம் ரூ.500 முதல் ரூ.1000 வரை விலை போனது. சீசன் தொடக்கத்திலேயே பலாப்பழங்களின் விலை உச்சம் தொட்டதால் விவ சாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
+2
- சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையிலான அதிகாரிகள் சென்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
- பளியர் இனத்தை சேர்ந்த 17 குடும்பங்களில் முதன்முறையாக ராஜேஸ்வரி மட்டும்தான் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி சாதித்தவர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் உள்ள குகைகளில் பளியர் இன மலைவாழ் மக்கள் அதிகளவு வசித்து வந்தனர். இவர்களை வனத்துறையினர் பழனி அருகே உள்ள குட்டிக்கரடு, மண்திட்டு, பொந்துபுளி, குதிரையாறு மற்றும் சண்முகம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்தனர்.
இவர்களுக்கு ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவையும் பெற்று தந்தனர். இருந்தபோதும் இவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து பின்னர் இடையில் நின்றுவிட்டனர். பளியர் இனத்தை சேர்ந்த 17 குடும்பங்கள் சண்முகம் பாறையில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் குடிசை வீட்டில் மின்விளக்கு வசதி இல்லாத மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்தனர். இதுவும் இவர்களது குழந்தைகள் கல்வியை தொடர முடியாத நிலைக்கு காரணமாக அமைந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் கல்வித்துறை அதிகாரிகள் முயன்றனர். அப்போது தன்னாசி மகள் ராஜேஸ்வரி(16) என்பவர் 10-ம் வகுப்பை பாதியில் நிறுத்தியது தெரியவந்தது.
அவருக்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையிலான அதிகாரிகள் சென்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்பிறகு பள்ளியில் சேர்ந்த ராஜேஸ்வரி அரையாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இந்த தகவல் அறிந்ததும் மாணவியை உதவி கலெக்டர் பிரியங்கா நேரில் சந்தித்து தோல்வியை பற்றி கவலைப்படாமல் அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகுமாறு கூறினார். அதன்பின் மீண்டும் பள்ளிக்கு சென்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். தேர்வு முடிவு வெளியான நிலையில் அவர் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டாட்சியர் சிவக்குமார் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டினார். மேலும் 11-ம் வகுப்பில் சேர்வதற்கான கல்வி உபகரணங்களை வழங்கி படிப்பை தொடருமாறு கூறினார்.
மேலும் தனது காரில் முன்புற சீட்டில் மாணவியை அமர வைத்து ஊரை வலம் வந்தார். நீயும் நல்ல முறையில் கல்வி கற்றால் அரசுப்பணியில் சேர்ந்து இதுபோல சைரன் வைத்த காரில் வலம் வரலாம். மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று தன்னம்பிக்கை ஏற்படுத்தி பேசினார். இது மாணவியின் குடும்பத்தினர் மட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பளியர் இனத்தை சேர்ந்த 17 குடும்பங்களில் முதன்முறையாக ராஜேஸ்வரி மட்டும்தான் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி சாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- குழந்தை சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- கடந்த 2 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகள் மற்றும் அதன் தாய்மார்கள் விவரம் சேகரிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையில் ஒரு ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்தது. இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் குழந்தை ஏதேனும் காணாமல் போய் உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 2 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகள் மற்றும் அதன் தாய்மார்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் எந்த குழந்தையும் மாயமாகவில்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் ஆராயப்பட்டது. அதில் நைட்டி அணிந்த ஒரு பெண் துண்டில் குழந்தையை சுற்றி உட்கார்ந்து இருந்தார். இரவு 11 மணி அளவில் அவர் கழிவறைக்கு சென்று 20 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த காட்சி பதிவாகி இருந்தது.
ஆனால் அவருக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்க வில்லை. வெளியில் குழந்தை பெற்று அதனை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறையில் வீசி சென்றது உறுதியானது.
அந்த புகைப்படத்தின் அடிப்படையில் குழந்தையை வீசி சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எழில் கொஞ்சும் வனப்பகுதியின் நடுவே அருவி ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியில் செல்பி, புகைப்படம் எடுக்க அத்துமீறி செல்கின்றனர்.
- ஆர்வ மிகுதியால் தடுப்பு இல்லாத அருவியின் மேலே ஏறிச்செல்கின்றனர். இதனால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது.
கொடைக்கானல்:
கோடை சீசனையொட்டி கொடைக்கானலில் ஏராள மான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கோடை விழா மலர் கண்காட்சி வருகிற 26ந் தேதி தொடங்குகிறது. எனவே அப்போது சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொடை க்கானலில் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது.
இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம் அருவி, லிரில் அருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியின் நடுவே அருவி ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியில் செல்பி, புகைப்படம் எடுக்க அத்துமீறி செல்கின்றனர்.
குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வட்டக்கானல் அருவி, புலிச்சோலை அருவிகளில் பயணிகள் ஆர்வ மிகுதியால் தடுப்பு இல்லாத அருவியின் மேலே ஏறிச்செல்கின்றனர். இதனால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது.
மேலே செல்ல வனத்து றையினர் அனுமதி அளி க்காதபோதும் சிலர் ஆப த்தை உணராமல் செல்கின்ற னர். எனவே வனத்துறை யினர் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுருளி அருவியில் மரம் முறிந்து விழுந்து சென்னை மாணவி பலியானார். எனவே மேலும் ஒரு அசம்பாவித சம்பவம் நிகழும் முன்னர் வனத்து றையினர் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன், பைக், பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட னர்.
நத்தம்:
நத்தம் அருகே குமர ப்பட்டிபுதூரை சேர்ந்தவர் சின்னையா மகன் அழகேசன் (வயது21). இவர் நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் 4 வழிச்சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவர்களை மிரட்டினர். மேலும் அழகேசனை தாக்கி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.
இது குறித்து நத்தம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் அத்திப்பட்டு மலைப்பகுதியில் பதுங்கி இருந்த மதுரையை சேர்ந்த ஆகாஷ் (22), நத்தம் பரளிபுதூரை சேர்ந்த அபிமன்யூ (23), காளையார்கோவிலை சேர்ந்த ஹரிதர்ஷன் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன், பைக், பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட னர். இதில் ஹரிதர்ஷன், ஆகாஷ் ஆகியோர் மீது பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் அவர் தேடப்படும் குற்றவாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- கழிவறையில் இன்று காலை பிறந்து ஒரே நாளே ஆன ஆண் சிசு கொலை செய்யப்பட்டு கிடந்தது.
- கடந்த 2 நாட்களில் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் எத்தனை பெண்களுக்கு குழந்தை பிறந்தது என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி, புதிய கட்டிடத்தில் தலைமை மருத்துவமனையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இதில் 20 படுக்கைகள் கொண்டு சிகிச்சை பிரிவு உள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த பிரிவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 24 மணிநேரமும் நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இங்குள்ள கழிவறையில் இன்று காலை பிறந்து ஒரே நாளே ஆன ஆண் சிசு கொலை செய்யப்பட்டு கிடந்தது. கழிவறையை சுத்தம் செய்ய சென்ற துப்புரவு பணியாளர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத ஆண் சிசு உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகர், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் சிசுவை கொன்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் கடந்த 2 நாட்களில் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் எத்தனை பெண்களுக்கு குழந்தை பிறந்தது என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. தவறான தொடர்பில் குழந்தை பிறந்ததால் அதனை கொலை செய்து கழிவறையில் வீசிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் இறந்த சிசுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வட்டாரத் தலைவர் கொடியேற்றி வைத்து தமிழக அரசு அறிவித்த காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்கள் மூலமாக வழங்க வேண்டும் என பேசினார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டுவில் சத்துணவு ஊழியர் சங்கத்தின்32-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய கொடியேற்றி இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் செல்வம் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து தமிழக அரசு அறிவித்த காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்கள் மூலமாக வழங்க வேண்டும் என பேசினார். அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
சத்துணவு ஊழியர் சங்க மாநில முன்னாள் துணைத் தலைவர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சக்தி வடிவேல் முருகன் வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் உதயகுமார் இந்திராணி, மேலாளர் மகாராஜன், நிர்வாகிகள் சுரேஷ்குமார், சுந்தரவடிவேல், சிவக்குமார் மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் செல்வராணி நன்றி கூறினார்.
- கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பிஞ்சு உதிர்ந்ததால் கத்திரிக்காய் வரத்து குறைந்துள்ளது.
- கத்திரிக்காயின் விலை ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் விஷேச வீட்டார்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே என்.ஜி.ஓ. காலனியில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது அன்றாட சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகளை வாங்க குவிந்தவண்ணம் உள்ளனர்.
இந்த உழவர்சந்தையில் மொத்தம் 70 கடைகள் செயல்பட்டு வருகிறது. முள்ளிப்பாடி, தாமரைப்பாடி, வடமதுரை மற்றும் பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விலைவித்த தக்காளி, வெண்டை, முரு ங்கைக்காய், வெங்காயம், பூசணி போன்ற காய்கறி களை விற்பனைக்கு இங்கு கொண்டு வருகின்றனர்.
70 கடைகளிலும் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளை விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் தற்போது கத்திரிக்காய் விலை கிடுகி டுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பிஞ்சு உதிர்ந்ததால் கத்திரிக்காய் வரத்து குறைந்துள்ளது. எப்போதும் நாள் ஒன்றுக்கு 2 டன் கத்திரிக்காய் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகும். ஆனால் இன்று 150 கிலோ மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது.
இதனால் நேற்றுவரை கிலோ ரூ.40 மற்றும் ரூ.50க்கு விற்ற கத்திரிக்காயின் விலை இன்று கிடுகிடுவென கிலோ ரூ.100க்கு விற்பனையானது. பெரிய கத்திரிக்காய் கிலோ ரூ.100, சின்ன கத்திரிக்காய் கிலோ ரூ.90, நீல கத்திரிக்காய் கிலோ ரூ.60 என விற்பனை செய்யப்பட்டது. நாளை முகூர்த்தநாள் என்பதால் அன்றாடம் தேவைப்படும் கத்திரிக்காயின் விலை ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் விஷேச வீட்டார்கள் அதிர்ச்சியடைந்தனர். தேவை அதிகமாக இருந்தாலும், விலை உயர்வின் காரணமாக சிலர் கத்திரிக்காயின் கொள்ளளவை குறைத்து மற்ற காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.
1 கிலோ தக்காளி ரூ.20, வெண்டைக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.90, முருங்கைக்காய் ரூ.40, பச்சைமிளகாய் ரூ.45, சின்ன வெங்காயம் ரூ.50, இஞ்சி ரூ.230, உருளைக்கிழங்கு ரூ.40, கேரட் ரூ.70 என விற்பனையானது.






