என் மலர்
கடலூர்
கடலூர்:
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி அந்த கட்சி நிர்வாகிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நடுவீரப்பட்டு டாஸ்மாக்கடைக்குள் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் தயாநிதி (வயது 36) தலைமையில் நிர்வாகிகள் தெய்வீகன், பாலசந்தர், சிரஞ்சீவி, விஜயபாரதி, மணிமாறன் ஆகியோர் புகுந்தனர். அங்கிருந்த ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
மேலும் டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தயாநிதி உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய தயாநிதி மீது நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் தயாநிதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டார். இதையடுத்து தயாநிதியை நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், குண்டர் சட்டத்தில் கைது செய்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோ.பூவனூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது குடும்பத்தினர் நேற்று இரவு வீட்டின் பின்பக்க கதவை பூட்டிவிட்டு முன்பக்க வராண்டாவில் தூங்கி கொண்டிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் நள்ளிரவில் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் கொள்ளையடித்த பொருட்களோடு வெளியே வந்தனர். மீண்டும் அந்த பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி பாலகிருஷ்ணன் வீட்டின் அருகே வசிக்கும் வேணுகோபால் என்பவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து 2 பவுன் நகை மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் 2 வீடுகளிலும் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை சுருட்டி கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
2 வீடுகளிலும் கொள்ளைபோனவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இன்று காலை கண்விழித்து பார்த்த அந்த 2 குடும்பத்தினரும் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. கதவை உடைத்து மர்ம மனிதர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் மங்கலம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த 2 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் வீடுகளில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன். இவரிடம் தற்போது தினகரன் அணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டபோது கூறியதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா என்னை நேரடியாக விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்ததால்தான் எம்.எல்.ஏ.வாக தேர்வானேன். நான் அ.தி.மு.க.வில்தான் இருந்து வருகிறேன். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன்.
ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. அரசை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்-அமைச்சராக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால் நாங்கள் அவருக்கு வாக்களித்து முதல்-அமைச்சராக தேர்வு செய்தோம்.
தற்போது டி.டி.வி.தினகரனுடன் நட்பு ரீதியாகதான் இருந்து வருகிறேன். மேலும் அவர்தான் என்னை அவரது அணிக்கு மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.வில்தான் இருப்பதாக கூறுகிறீர்கள், ஆனால், தமிழக அரசை மட்டும் குறை கூறி வருகிறீர்களே ஏன் என்று கேட்டபோது, தமிழக அரசுக்கும், எனக்கும் மாற்று கருத்துதான் உள்ளது. அதனால்தான் எங்கள் பகுதியில் உள்ள குறைகளை சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறினேன். அதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது நியமித்துள்ள சத்துணவு பணியாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட தி.மு.க. தொகுதிக்கு சுமார் 10 கோடி அளவில் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், எனது தொகுதி முழுவதும் புறக்கணிக்கப்பட்டு அடிப்படை வசதியான குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்தவித வசதியும் செய்து கொடுக்காமல் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் செயல்பட்டு வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்ற நான் வலியுறுத்தி வருகிறேன். கேள்வி கேட்பது என்னுடைய உரிமை, அதை செய்து வருகிறேன். ஆனால், அ.தி.மு.க. கட்சிக்கும், எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார். #dinakaran #kalaiselvanmla #admk
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் பவித்ரா (வயது 15). இவரது தாய்-தந்தை இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர்.
இதனால் பவித்ரா தனது உறவினர்களால் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக சேவை இல்லத்தில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு விடுமுறைக்காக திருக்கோவிலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் சேவை இல்லத்துக்கு வந்த அவர் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.
பள்ளி முடிந்து சேவை இல்லத்துக்கு வந்த பவித்ரா முன்புபோல் யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாகவே இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பவித்ரா தங்கி இருந்த அறைக்கு சென்ற அவரது தோழிகள் அவர் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது சேவை இல்லத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பவித்ரா சுடிதாரின் துப்பட்டாவில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து மற்ற மாணவிகள் சேவை இல்ல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் புதுநகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பவித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழகத்தில் விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் சூரிய ஒளி மின்நிலையத்தை அமைத்துள்ளது.
இந்த 300 மெகாவாட் சூரிய ஒளிமின் நிலையத்தை மத்திய மந்திரி பியூஷ் கோயல் நெய்வேலியில் நடந்த விழாவில் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இதை தொடர்ந்து, என்.எல்.சி. இந்தியா நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை, அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வுத்துறையுடன் இணைந்து மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி பணிக்கான ஒப்பந்தம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்தானது.
அதன்பின்னர் மத்திய மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்.எல்.சி. நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வடமாநிலத்துக்கு ரெயில் மூலம் நிலக்கரி எடுத்து செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விழுப்புரம்-கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக ரெயில் சேவைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இயக்கப்படும் அந்த் தோதியா ரெயில் கடலூர் மாவட்டத்தில் நின்று செல்ல வேண்டும் என என்.எல்.சி.நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த ரெயில் கடலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் வேலை கேட்கிறார்கள். வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை என்.எல்.சி.நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால் வேலை அவர்களுக்கு உறுதியானது அல்ல. என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் போதிய ஊதியம் வழங்கவில்லை என கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சராசரி ஊதியத்தை விட அதிகமாக வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
பண்ருட்டி:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கிலும், நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் இந்திய இறை யான்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவம் நடை பெற்று வருகின்றன.
கடந்த சிலநாட்களுக்கு முன்பு கடலூர் கம்மியம் பேட்டையில் உள்ள டாஸ் மாக்கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல்குண்டு வீசினர். அதுபோல் நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சி.என்.பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்து மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன் குப்பம் சந்தைதோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை மீது மர்ம நபர்கள் பெட் ரோல்குண்டு வீசினர். இதில் கடையில் இருந்த ஊழியர் கண்ணன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் நேற்று மாலை திடீரென்று கடலூர் வந்தார்.
அவர் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று ஐ.ஜி.ஸ்ரீதர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அதன்பின்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சேதமடைந்த கம்மியம் பேட்டை, பணிக்கன்குப்பம் டாஸ்மாக்கடைகள் மற்றும் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்ட அரசு பஸ் சையும் ஐ.ஜி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து பணிக்கன் குப்பம் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று இரவு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அரங்கநாதன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம் சந்தை தோப்பு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக மணிவேல் (வயது 49) என்பவரும், உதவியாளராக பண்ருட்டி சத்திய மூர்த்திதெருவை சேர்ந்த கண்ணன் (39) என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.
நேற்று இரவு 2 பேரும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். இரவு 9 மணி அளவில் மர்ம மனிதர்கள் சிலர் டாஸ்மாக் கடையின் பின் பக்கம் உள்ள ஜன்னல் வழியாக திடீரென்று பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கடையின் உள்ளே விழுந்த பெட்ரோல் குண்டு தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் குண்டு வெடித்ததில் கண்ணன் பலத்த தீக்காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
படுகாயம் அடைந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வடலூர் அருகே உள்ள கருங்குழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸ்காரர் ஒருவர் மட்டும் இருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் மர்ம மனிதர்கள் சிலர் வந்தனர். டாஸ்மாக்கடை முன்பு போலீஸ் இருப்பதை பார்த்ததும் தாங்கள் கொண்டுவந்திருந்த மண்எண்ணை பாட்டிலை டாஸ்மாக்கடை முன்பு வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்மியம்பேட்டை-செம் மண்டலம் இணைப்பு சாலையில் உள்ள டாஸ் மாக் கடையில் மர்ம மனிதர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். அதுபோல நடுவீரப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம மனிதர்கள் புகுந்து டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து சூறையாடினார்கள். அங்கிருந்து மதுபாட்டில்களையும் உடைத்தனர்.
கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசி வருவதால் டாஸ் மாக்கடை ஊழியர்கள் அச்சமடைந்தள்ளனர்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த கட்சியை சேர்ந்தவர்கள் டாஸ்மாக்கடை மீது பெட்ரோல்குண்டு வீசியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கம்மியம் பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட் ரோல் குண்டு வீசியதில் சேத மடைந்தகடையை நேற்று இரவு டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையத்தில் சூறையாடப்பட்ட டாஸ்மாக் கடையையும் பார்வையிட்டார்.
அதன்பின்பு அவர் கூறும்போது, கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து பெட்ரோல்குண்டு வீசப்பட்டு வருகிறது. மேலும் ஒருசில வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகள், அரசு பணிமனை மற்றும் பஸ் நிலையங்களுக்கு போலீஸ்பாதுகாப்பு போடப்படும் என்றார்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த வடகரை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது45). விவசாயி. இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ராஜாவின் குடிசை வீட்டில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த ராஜாவையும் அவரது குடும்பத்தினரையும் சத்தம் போட்டு எழுப்பினர்.
சத்தம் கேட்டு எழுந்த ராஜா வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட் டில் இருந்து வெளியே வந்தனர்.
பின்னர் அந்த பகுதி பொது மக்கள் உதவியுடன் ராஜா தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.
இதில் தீயின் வேகம் மேலும் அதிகரித்து அருகில் இருந்த ராஜாவின் தாய் ஞானாம்பாளின் குடிசை வீட்டிற்கும் தீ பரவியது.
இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ராஜாவின் வீட்டில் உள்ள 20 ஆயிரம் பணம் மற்றும் 8 பவுன் நகை மற்றும் 2 வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன.
இது குறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவின் வீட்டில் மின்கிசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சத்தியசீலன், ஆயுதப்படை போலீஸ்காரர். இவரது மனைவி கவிதா (வயது 27). இவர் கடலூர் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.
இன்று காலை வேலையை முடித்துவிட்டு கவிதா வீட்டுக்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த கவிதா திடீரென விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கவிதாவின் உறவினர்கள் கூறும்போது, பணிச்சுமை, தொடர் வேலைகாரணமாக கவிதா மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கவிதா தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றனர்.
இதுகுறித்து புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தனிச பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவரது மனைவி ரேவதி (32). இன்று காலை கணவனும் மனைவியும் கடலூர் புதிய கலெக்டர் அலவலகம் வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து திடீரென்று உண்ணாவிரதம் இருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உண்ணாவிரதம் இருந்த ரேவதி மற்றும் பாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரேவதி போலீசாரிடம் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாங்கள் தனிசபாக்கத்தில் வசித்து வருகிறோம். இந்த பகுதி அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்டதாகும். கடந்த பிப்ரவரி மாதம் அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்காக நேர்முக தேர்வு நடைபெற்றது. இதில் நான் கலந்து கொண்டேன்.
என் கணவர் தலையில் அடிப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னுடன் நேர்முகதேர்வு எழுதிய பலருக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனால் எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இந்த பகுதியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியை எனக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் ரேவதியை கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரியிடம் தனது கோரிக்கை மனுவை கொடுத்தார்.
அங்குள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சந்திரசேகர் தீட்சிதர் கொடியேற்றினார். பின்பு கொடி மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா மொத்தம் 10 நாட்கள் நடக்கிறது.
தினமும் காலையிலும், இரவு வேளையிலும் தங்க, வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது. வருகிற 20-ந் தேதி முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் மூலவரான சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான் தேரில் எழுந்தருளுகிறார். இதனைத் தொடர்ந்து தனித்தனி தேர்களில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகியோர் வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது.
21-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. பின்னர் 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது.
22-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் தினமும் இரவு குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
அதேபோல் நேற்று இரவு 11.30 மணிக்கு அந்த பஸ் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
பஸ்சுக்குள் டிரைவரும், கண்டக்டரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர்.
திடீரென்று அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சின் டயருக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அப்போது பஸ்சுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்த டிரைவர்-கண்டக்டர் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் பஸ்சின் டயர் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியடித்து வெளியே வந்து கூச்சலிட்டனர்.
அவர்களது சத்தம் கேட்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஓட்டலில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் டயர் முற்றிலும் எரிந்து சேதமானது.
இது குறித்து தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அந்த பஸ்சுக்கு மாற்று டயர் பொருத்தப்பட்டு உடனே கடலூர் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அரசு டவுன் பஸ்சுக்கு தீ வைத்த மர்ம மனிதர்கள் யார்? என்று போலீசார் தேடிவருகிறார்கள். மேலும் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்தும் குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews






