என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த காவனூரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). இவர் விருத்தாசலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை-1ல் அரசு பஸ் டிரைவராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.
கடந்த 16-ந் தேதி காலை முருகானந்தம் வேலைக்கு வந்திருந்தார். அப்போது பணிமனையின் வாசலில் உள்ள மரத்தின் அடியில் காவலாளி ஒருவர் சோர்வாக நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த முருகானந்தம் காவலர் அமருவதற்காக பணிமனையில் இருந்து நாற்காலியை எடுத்து கொடுத்தார்.
அப்போது அங்கு வந்த மற்றொரு டிரைவர், எதற்காக காவலாளிக்கு என்னுடைய நாற்காலியை எடுத்து கொடுத்தாய்? என்று முருகானந்தத்தை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் அந்த டிரைவர் ஆத்திரம் அடைந்தார். தான் கையில் வைத்திருந்த கத்தியால் முருகானந்தத்தை குத்த முயன்றார். அப்போது அங்கிருந்த மற்ற ஊழியர்கள் இதனை தடுத்து சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து முருகானந்தம் தன்னை கத்தியால் குத்த முயன்றவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை முருகானந்தம் வழக்கம்போல் பணிக்கு வந்தார். அவருக்கு அதிகாரிகள் பணி வழங்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த முருகானந்தம் அ.தி.மு.க. கொடியுடன் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் 3-வது மாடிக்கு சென்றார்.
கொடியை கையில் ஏந்தியபடி, எனக்கு பணி வழங்கக்கோரியும், தன்னை தாக்கிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். இதையறிந்த மற்ற ஊழியர்கள் அங்கு திரண்டனர்.
உங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் மனுவாக கொடுக்கலாம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். எனவே, நீங்கள் உடனே கீழே இறங்கி வாருங்கள் என்றனர்.
ஆனால், இதற்கு முருகானந்தம் மறுப்பு தெரிவித்து அங்கேயே நின்று கொண்டிருந்தார். கீழே நின்று கொண்டிருந்த ஊழியர்களில் சிலர் 3-வது மாடிக்கு ஏறி சென்று அவரை பிடித்து இழுத்து கீழே கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து தனது கோரிக்கைகளை முருகானந்தம் மனுவாக எழுதினார். அங்கிருந்த பணிமனை மேலாளர் மோகனசுந்தரத்திடம் கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட அவர் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து முருகானந்தம் கூறும்போது, எனது புகார் மனு குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் நாளை பணி மனை அலுவலகத்தின் முன்பு தீக்குளிப்பேன் என்றார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்து சென்று முருகானந்தத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று காலை ஆனித்திருமஞ்சன திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
தேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் தேரோட்டத்தை தனது செல்போனில் படம் பிடிக்க முயன்றார். இதைபார்த்த தீட்சிதர், செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என கூறினார். திடீரென அவர் அந்த போலீஸ்காரரிடமிருந்து செல்போனை பறித்ததாக தெரிகிறது.
இதனால் அவர்களுக் கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்தது. பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பறிக்கப்பட்ட செல்போன் போலீஸ்காரரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள காணூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், விவசாயி. இவரது மகள் சுகந்தி (வயது 19). இவர் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் சுகந்தி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சுகந்தியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை சுகந்தி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுகந்தி வயிற்று வலியினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. #Tamilnews
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வ.உ.சி.தெருவில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்து விட்டு கோவில் பூசாரி சங்கர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இதைநோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நேற்று நள்ளிரவு கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இன்று காலை கோவிலை சுத்தம் செய்வதற்காக வந்த தொழிலாளி ஒருவர் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளைபோய் இருந்தது.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த கோவிலில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews
கடலூர் அருகே உள்ள சிந்தாமணி குப்பத்தை சேர்ந்தவர் பலராமன் (வயது 41). இவர் சிதம்பரம் அருகே முட்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று இரவு டாஸ்மாக் கடையில் வேலையை முடித்துவிட்டு சிந்தாமணி குப்பத்துக்கு செல்வதற்காக அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சிதம்பரம் அருகே பெரியப்பட்டு பகுதியில் கடலூர் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
அவரது பின்னால் கடலூர் சிப்காட்டில் மத்திய சேமிப்பு கிடங்கில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த சேடப்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (36) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் இவர்களின் மோட்டார் சைக்கிளின் எதிரே கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக பலராமன் மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் மீது மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலராமன் மற்றும் தமிழ்செல்வன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து புதுசத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
கடலூர்:
கடலூர் முதுநகரை சேர்ந்த 8 வயது சிறுமி கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டாள். ஆனால், அவள் பள்ளிக்கு செல்லவில்லை.
சிதம்பரம் பகுதியில் சாலையோரம் தனியாக நின்று கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த அவளது உறவினர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நீ மட்டும் தனியாக இங்கு ஏன் நிற்கிறாய்? என்று கேட்டார்.
அதற்கு, அந்த சிறுமி கூறும்போது, நான் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன். என்னை ஒரு கும்பல் காரில் கடத்தினர். அந்த காரில் என்னை போல் 4 மாணவிகள் இருந்தனர்.
காரில் இருந்த நான் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டேன். ஆனால், அதற்குள் அந்த கும்பல் காரை வேகமாக ஓட்டி வந்தனர்.
சிதம்பரம் பகுதிக்கு வந்தபோது காரில் இருந்து நான் கீழே குதித்து தப்பினேன். பின்னர் அந்த கும்பல் காரை வேகமாக ஓட்டி தப்பி சென்று விட்டது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர் அந்த சிறுமியை அழைத்து கொண்டு சிதம்பரம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறினார்.
இதையடுத்து சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவள் கொடுத்த தகவலின் பேரில் கடலூர், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியாக வரும் கார்களை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.
உண்மையிலேயே இந்த சிறுமி கடத்தப்பட்டாளா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்கலாமா? என்று பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பொன்னாங்குப்பம்-அரசூர் மெயின்ரோட்டில் வசித்து வருபவர் ஆதிசேஷன். இவரது மனைவி தனலட்சுமி(வயது55). இவர் தனது வீட்டின் பின்புறத்தில் 1,200 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததை புதுப்பேட்டை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் தனலட்சுமியை கைது செய்தனர்.
இவர் மீது புதுப்பேட்டை, பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் 8 சாராய வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரின் குற்றச்செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு அவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரைத்தார். அதன்பேரில் தனலட்சுமியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீசாருக்கு கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டார்.
அதன்படி தனலட்சுமி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையத்தில் கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. மழைக்காலங்களில் இந்த ஆற்றங்கரையோரம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இதனை தடுக்க கெடிலம் ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடு மற்றும் கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் தீக்குளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை புதுப்பாளையம் காமராஜர் நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிப்பதற்காக பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.
அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதையறிந்த அந்த பகுதி பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இன்று இடிக்கப்படும் என்று உங்களுக்கு ஏற்கனவே நோட்டீசு அனுப்பி உள்ளோம். அதன்படிதான் இன்று வந்துள்ளோம். எனவே, இந்த பணியை யாரும் தடுக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறினர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராதா (வயது 69) என்ற பெண் திடீரென்று தான் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், ராதாவின் கையில் இருந்த மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். அந்த பெண்ணின் உடலில் தண்ணீரை ஊற்றினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது. இதனை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளை இடிக்கக்கூடாது என்று கோஷமிட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதன் பின்னர் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள பலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 40) தொழிலாளி. இவர் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவி விஜயலட்சுமி, தம்பி தினேஷ் மற்றும் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதேப்போல் குடிபோதையில் வீட்டில் இருந்த தம்பி தினேசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி தினேஷ் ஆத்திரம் அடைந்து கத்தியால் சதாசிவத்தின் கழுத்தில் குத்தினார். இதில் சதாசிவம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமரய்யா வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தினேசை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தினேஷ் வெளியூருக்கு தப்பி செல்வதற்காக சாத்திப்பட்டு பஸ் நிலையத்தில் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் குமரய்யா தலைமையிலான போலீசார் தினேசை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வடக்கு கஞ்ச கொல்லை பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகள் வசந்தராணி (வயது17).
இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை
இதை தொடர்ந்து வசந்த ராணியின் தாய் வசந்தா காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து மாயமான வசந்தராணியை தேடிவருகிறார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஆதிவராக நல்லூர் பகுதியை சேர்ந்தவர் கனகயா (வயது 66). இவர் ஸ்ரீமுஷ்ணம்- ஆதிவராக நல்லூர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கனகயா மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக் காக விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலன் அளிக்கமால் கனகயா நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் கடும் வெயிலும், மாலையில் இடி-மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை கடலூர், திருப்பாதிரிப்புலியூர், ராமாபுரம், முதுநகர், மஞ்சக்குப்பம், தூக்கணாம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இடி-மின்னல் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதில் நெல்லிக்குப்பம் காமராஜர் நகர் பகுதியில் மின் கம்பம் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. மேலும் கடலூர் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
கடலூர் அடுத்த ராமாபுரம், வி.காட்டுப்பாளையம், ஒதியடிக்குப்பம், காத்தாங் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரம் விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர்.
நேற்று வீசிய சூறை காற்றில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதைப்பார்த்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இது பற்றி விவசாயி சிற்றரசன் என்பவர் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் நேற்று மாலை சூறை காற்றுடன் மழை பெய்தது. சூறை காற்றால் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். ஒரு ஏக்கர் வாழை பயிரிடுவதற்கு குறைந்தது ரூ.1½ லட்சம் வரை செலவாகிறது.
நேற்று பலத்த சூறை காற்று வீசியதால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் வாழை தார்கள், வாழை பிஞ்சுகள் உள்ளிட்ட அனைத்தும் சேதமானது.
இந்த பாதிப்பில் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் சுமார் ரூ.2 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். இதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் முறிந்து விழுந்து சேதமான வாழை மரங்களை நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






