என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் டிரைவர் தற்கொலை மிரட்டல்"

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பணிமனை கட்டிடத்தில் ஏறி நின்று அரசு பஸ் டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த காவனூரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). இவர் விருத்தாசலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை-1ல் அரசு பஸ் டிரைவராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.

    கடந்த 16-ந் தேதி காலை முருகானந்தம் வேலைக்கு வந்திருந்தார். அப்போது பணிமனையின் வாசலில் உள்ள மரத்தின் அடியில் காவலாளி ஒருவர் சோர்வாக நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த முருகானந்தம் காவலர் அமருவதற்காக பணிமனையில் இருந்து நாற்காலியை எடுத்து கொடுத்தார்.

    அப்போது அங்கு வந்த மற்றொரு டிரைவர், எதற்காக காவலாளிக்கு என்னுடைய நாற்காலியை எடுத்து கொடுத்தாய்? என்று முருகானந்தத்தை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் அந்த டிரைவர் ஆத்திரம் அடைந்தார். தான் கையில் வைத்திருந்த கத்தியால் முருகானந்தத்தை குத்த முயன்றார். அப்போது அங்கிருந்த மற்ற ஊழியர்கள் இதனை தடுத்து சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து முருகானந்தம் தன்னை கத்தியால் குத்த முயன்றவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை முருகானந்தம் வழக்கம்போல் பணிக்கு வந்தார். அவருக்கு அதிகாரிகள் பணி வழங்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த முருகானந்தம் அ.தி.மு.க. கொடியுடன் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் 3-வது மாடிக்கு சென்றார்.

    கொடியை கையில் ஏந்தியபடி, எனக்கு பணி வழங்கக்கோரியும், தன்னை தாக்கிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். இதையறிந்த மற்ற ஊழியர்கள் அங்கு திரண்டனர்.

    உங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் மனுவாக கொடுக்கலாம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். எனவே, நீங்கள் உடனே கீழே இறங்கி வாருங்கள் என்றனர்.

    ஆனால், இதற்கு முருகானந்தம் மறுப்பு தெரிவித்து அங்கேயே நின்று கொண்டிருந்தார். கீழே நின்று கொண்டிருந்த ஊழியர்களில் சிலர் 3-வது மாடிக்கு ஏறி சென்று அவரை பிடித்து இழுத்து கீழே கொண்டு வந்தனர்.

    இதனை தொடர்ந்து தனது கோரிக்கைகளை முருகானந்தம் மனுவாக எழுதினார். அங்கிருந்த பணிமனை மேலாளர் மோகனசுந்தரத்திடம் கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட அவர் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதையடுத்து முருகானந்தம் கூறும்போது, எனது புகார் மனு குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் நாளை பணி மனை அலுவலகத்தின் முன்பு தீக்குளிப்பேன் என்றார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்து சென்று முருகானந்தத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews

    ×