என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் அருகே மணல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது மணவாளநல்லூர். இந்த கிராமத்தில் மணி முக்தாறு செல்கிறது. இங்கு கடந்தசில மாதங்களுக்கு முன்புஅரசு சார்பில் மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்தனர்.

    இதை அறிந்த பொதுமக்கள் இங்கு மணல் குவாரி ஏதும் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதனால் அங்கு மணல் குவாரி அமைப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அங்கு மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்தனர். அதற்காக இன்று காலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இந்திராதேவி, சீனிவாசன் ஆகியோர் வாகனங்களில் வந்தனர்.

    பின்னர் அவர்கள் மணிமுக்தாறு ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி அமைக்க உள்ள இடத்தை அளவீடு செய்தனர்.

    மணிமுக்தாற்றில் அதிகாரிகள் வந்து மணல் குவாரிகள் அமைக்க இடத்தை பார்வையிடவந்த தகவல் அந்த கிராம மக்களுக்கு தெரியவந்தது. உடனே வாலிபர்கள், மற்றும் பெண்கள் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணிமுக்தாறு செல்லும் வழியில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது அவர்கள் தரையில் வாழை இலை விரித்து அதில் மணல் போட்டு உண்ணும் போராட்டம் நடத்தினர். அப்போது ஆற்றில் அளவீடு பணியை முடித்துக்கொண்டு அதிகாரிகள் வாகனங்களில் வந்தனர். இதை அறிந்ததும் அவர்கள் உடனே எழுந்துஅதிகாரிகள் வந்த 3 வாகனங்களையும் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது அதிகாரிகளிடம் கிராம மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் எக்காரணம் கொண்டும் மணல் குவாரி அமைக்கக்கூடாது. ஏற்கனவே பள்ளம் தோண்டப்பட்டு வறண்டு காணப்படுகிறது. நிலத்தடி நீரும் குறைந்து விட்டது. எனவே இங்கு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்றனர்.

    உடனே அதிகாரிகள், அரசு வீடு கட்டும் பணி மற்றும் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்காகதான் மணல் குவாரி அமைக்கப்படுகிறது என்றனர். ஆனால், பொதுமக்கள் இந்த கருத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகளின் வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 21-வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நேற்று மாலையில் வீட்டில் இருந்த பிரியா திடீர் என்று வி‌ஷத்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பிரியா இறந்தார்.

    இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் பிரியாவின் தந்தை ரங்கன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரியாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது.

    இதற்கு அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து வருகிற 17, 20-ந்தேதி தோழமை கட்சிகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #chennaisalemgreenexpressway

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை குறித்து மாற்று கருத்து சொல்பவர்களையும், எதிர் கருத்து சொல்பவர்களையும் கைது செய்யும் நிலை உள்ளது. இதை விடுதலை சிறுத்தை கட்சி கடுமையாக கண்டிக்கிறது. இந்த முறையை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    மக்கள் விருப்பம் இல்லாமல் செயல்படும் இந்த சாலை திட்டத்தை கண்டித்து வருகிற ஜூலை 17-ந் தேதி திருவண்ணாமலையிலும், 20-ந் தேதி சேலத்திலும் தோழமை கட்சிகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    மாநில ஆட்சியில் தலையிடுவது மற்றும் மாவட்ட அதிகாரிகளை சந்திப்பது போன்ற விதிகளை மீறி செயல்பட்டு வரும் கவர்னருக்கு எதிராக தி.மு.க அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    அதனை தடுக்கும் விதமாக கவர்னர் மாளிகை 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அறிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் கவர்னருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கைது சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.


    இதனை உடனடியாக கைவிட வேண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடைபெறுகிறதா? கவர்னர் ஆட்சி நடைபெறுகிறதா? என்று தெரியவில்லை. போலீசார் யார் கட்டுப்பாட்டில் உள்ளார்கள் என்பது தெரியவில்லை. இது போன்று நடக்கும் கவர்னரின் நடவடிக்கை அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

    பள்ளி பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி என்ற குறியீடுகள் அகற்றப்பட்டு பொ.மு, பொ.பி என்று பொது ஆண்டுகளுக்கு முன்பு பின்பு என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது.

    விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட இந்த குறியீடு தொடர்பான புள்ளிவிவரங்களை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.

    பா.ஜ.க.வின் நான்காண்டு சாதனைகள் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்திய புள்ளி விவரத்தின்படி உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறுபான்மையினர் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு நாடு இந்தியா என்பது தான் பா.ஜ.க.வின் நான்காண்டு சாதனை.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #chennaisalemgreenexpressway

    விருத்தாசலம் அருகே கலெக்டர் தண்டபாணி அரசு பஸ் மூலம் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்பது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிகாரிகள் கார் மூலம் சென்று வந்தனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகத்துக்கு அதிக செலவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட கலெக்டர் தண்டபாணி மற்றும் அதிகாரிகள் அரசு பஸ்சில் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தையடுத்த ராஜேந்திர பட்டினத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் மற்றும் மனுநீதிநாள் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் தண்டபாணி, மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா உள்பட அரசு அதிகாரிகள் இன்று காலை அரசு பஸ்சில் புறப்பட்டனர்.

    இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் அரசு பஸ் மூலம் செல்வதால் அதிகாரிகள் அனைவரும் ஒரே பஸ்சில் சென்று கலந்து கொள்கின்றனர். இதனால் அதிகாரிகள் காலதாமதம் இன்றி முகாமில் கலந்து கொள்கின்றனர். கலெக்டர் தண்டபாணி அரசு பஸ் மூலம் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்பது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


    காட்டுமன்னார் கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் 3 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி அவசியமாகும். இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி போதிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டு-புத்தகம், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம், பாட திட்டத்தில் மாற்றம், பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் என பல திட்டங்களை சொல்லலாம்.

    இருப்பினும் அரசு பள்ளிகள் மீதான பெற்றோரின் மனநிலை இன்னும் மாறா தழும்பாக தான் இருக்கிறது. இதனால் இன்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு அரங்கேறி வருகிறது.

    அரசு எவ்வளவு முயற்சி எடுத்தாலும், தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் அதிகரிப்பால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வகுப்பறைகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட ஒருசில அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் 3 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.

    இது குறித்த விவரம் வருமாறு:-

    1946-ம் ஆண்டு காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டு தற்போது மேல்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் தனியார் பள்ளிகள் அதிகரிப்பால் மாணவர் சேர்க்கை குறைய தொடங்கியது. இதன் விளைவாக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்றனர். இந்த நிலையில் கடந்த கல்வியாண்டில் 476 மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்றனர்.

    காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியை படத்தில் காணலாம்.

    தற்போது 374 மாணவர்கள் தான் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 6-ம் வகுப்பில் 3 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 7-ம் வகுப்பில் 5 மாணவர்களும், 8-ம் வகுப்பில் 20 மாணவர்களும், 9-ம் வகுப்பில் 40 மாணவர்களும், 10-ம் வகுப்பில் 56 மாணவர்களும், பிளஸ்-1 வகுப்பில் 119 மாணவர்களும், பிளஸ்-2-வில் 131 மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.

    தலைமை ஆசிரியர் உள்பட 21 ஆசிரியர்களை கொண்ட இந்த பள்ளியில் சில வகுப்புகளில் ஒற்றை எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் மட்டும் தற்போது 26 உயர்நிலைப்பள்ளிகள், 15 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இதில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் அடங்கும்.

    இதனால் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது. மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்தவித பயனும் இல்லை. 21 வகுப்பறைகள் கொண்ட இந்த பள்ளியில் குறைந்த அளவிலான மாணவர்கள் இருப்பதால் பல வகுப்பறைகள் காலியாக இருப்பதை காணமுடிகிறது. காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது என்பது ஒரு முக்கிய காரணமாகும் என்றனர்.

    இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவுக்கான காரணம் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பா? அல்லது அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கை குறைந்ததா? என கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே திருமண வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுப்பேட்டை:

    பண்ருட்டி அருகே திருமண வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    புதுப்பேட்டை அருகே மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). கொத்தனார். இவருடைய மகன் தாமோதரன். இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தாமோதரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இவர்களது திருமணம் நேற்று முன்தினம் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் நடைபெற்றது. பின்னர் மாலை பண்ருட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி கண்ணன் தனது வீட்டை நேற்று முன்தினம் அதிகாலை பூட்டிவிட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சியில் மும்முரமாக இருந்தார். இந்த நிலையில் திருமண வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நைசாக உள்ளே புகுந்தனர். பின்னர், அவர்கள் வீட்டில் இருந்த 5½ பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் இரவு 10.30 மணிக்கு மேல் கண்ணன் தனது குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதியை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது நகை-பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    திருமண வீட்டில் நகை-பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல், செல்வம் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
    தொழில் அதிபரை கடத்திய புதுவை கூலிப்படையை பிடிக்க தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி தொழில் அதிபர் விஜயரங்கனை நேற்று முன்தினம் மர்ம மனிதர்கள் தாக்கி காரில் கடத்தி சென்றனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் கடத்தப்பட்ட விஜயரங்கனை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். கடத்தல்காரர்களை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று விஜயரங்கன் வீடு திரும்பினார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் தொழில் அதிபரை கடத்தியது கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

    விஜயரங்கனுக்கு, புதுவையை சேர்ந்த சிலருடன் தொழில் ரீதியாக பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்து வந்துள்ளது. இதில் பிரச்சினை ஏற்பட்டு புதுவையை சேர்ந்த கூலிப்படையினர் விஜயரங்கனை கடத்தி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து புதுவை மற்றும் கடலூர், நெய்வேலி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கூலிப்படையினரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    கூலிப்படையினர் பிடிபட்டால்தான் விஜயரங்கன் கடத்தப்பட்டது ஏன்? என்பதற்கான முழு விவரங்களும் தெரியவரும்.

    பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 27). இந்து மக்கள் கட்சி நிர்வாகி. இவர் கோவையில் தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    தாமோதரனுக்கு திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேற்று திருமணம் நடந்தது. பின்னர் மாலையில் பண்ருட்டி-கொக்குப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக தாமோதரன், அவரது பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு அங்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் தாமோதரன் வீட்டுக்கு வந்தனர். பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த கல்யாண சீர்வரிசை பொருளான 10 பவுன் நகை மற்றும் 1 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போனவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    இந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து தாமோதரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இரவு 9 மணிக்கு வீடு திரும்பினர். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பண்ருட்டியில் தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜயரங்கன் (வயது 46). பிரபல தொழில் அதிபர். காங்கிரஸ் பிரமுகர் ஆவார். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விஜயரங்கன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    மேலும் அவர் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 9 மணிக்கு கடையை பூட்டி விட்டு விஜயரங்கன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். காமராஜர் நகரில் வடகைலாசம் கூட்டுறவு சங்கம் அருகே சென்ற போது பின்னால் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென்று விஜயரங்கனின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி விஜயரங்கன் கீழே விழுந்தார்.

    அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. அதில் இருந்து 6 பேர் கீழே இறங்கினர். சாலையில் விழுந்து கிடந்த விஜயரங்கனை சரமாரியாக தாக்கி குண்டுக்கட்டாக தூக்கி காரில் கடத்தி சென்றனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களில் ஒருவர் விஜயரங்கனின் மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்று விட்டார்.

    தொழில் அதிபர் விஜயரங்கன் கடத்தப்பட்ட சம்பவம் அவரது அண்ணன் விஜயராகவனுக்கு தெரியவந்தது. உடனே அவர் இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.

    தொழில் அதிபர் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் விஜயரங்கனின் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    விஜயரங்கன் அந்த பகுதியில் பலருக்கு வட்டிக்கு பணம் அதிகளவு கொடுத்துள்ளார். தொழில் போட்டி காரணமாகவோ அல்லது அவரிடம் இருந்த பணத்தை பறிக்கவோ அவரை மர்ம மனிதர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மேலும் அவரை கடத்தியது கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். விடிய விடிய போலீசார் வாகன சோதனை மேற் கொண்டனர்.

    மேலும் சந்தேகப்படும் படியான வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். தொழில் அதிபர் விஜயரங்கன் நேற்று காலை முதல் யாரிடமெல்லாம் செல்போனில் பேசியுள்ளார் என்ற தகவல்களையும் போலீசார் சேகரித்தனர். செல்போன் டவர் மூலம் ஆய்வு மேற் கொண்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    தொழில் அதிபரை கடத்தி சென்றவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் 3 தனிப்படை அமைத்துள்ளார். இதில் புதுப்பேட்டை இன்ஸ் பெக்டர் முருகேசன், காடாம் புலியூர் இன்ஸ்பெக்டர் குமரய்யா, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந் திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தொழில் அதிபரை கடத்தி சென்றவர்கள் புதுவையில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் இன்று அதி காலை புதுவைக்கு சென்று அங்குள்ள லாட்ஜூகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பண்ருட்டியில் தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    குழந்தை கடத்த வந்ததாக நினைத்து ஆந்திரா பெண்ணை உருட்டு கட்டையால் வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்ணாடம்:

    ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 61). இவர் நேற்று மாலை கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள வாள்பட்டறையில் வெகு நேரமாக சுற்றித் திரிந்தார்.

    அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக மாணவ-மாணவிகள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் லட்சுமி பேசிக்கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று லட்சுமியிடம் கேட்டனர். லட்சுமிக்கு தமிழ் தெரியாது. அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. தெலுங்கில் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்.

    இதையடுத்து லட்சுமி குழந்தை கடத்த வந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த வாலிபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். அதில் சிலர் உருட்டு கட்டையாலும் லட்சுமியின் தலையில் அடித்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். லட்சுமியை மீட்டு பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லட்சுமியிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழைய சேலைகளை வாங்கி அதனை விற்பனை செய்வதற்காக கடலூர் மாவட்டத்துக்கு வந்ததும் தெரியவந்தது.

    இதற்கிடையே லட்சுமி இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதையறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், திட்டக்குடி துணைபோலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் சம்பவம் நடந்த இடமான வாள்பட்டறை பஸ் நிறுத்தம் பகுதிக்கு சென்றனர். லட்சுமியை தாக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் லட்சுமி இறந்த தகவல் உண்மைதானா? என்று பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டு கேட்டனர். அதில் லட்சுமி இறக்கவில்லை என்றும், ஆஸ்பத்திரியில் மயக்கமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

    லட்சுமியை தாக்கியவர்கள் யார்? என்பதை கண்டறிய வாள்பட்டறை பஸ்நிறுத்தம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த காட்சியை வைத்து லட்சுமியை தாக்கியவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து வாள்பட்டறை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. 

    நெல்லிக்குப்பம் அருகே இன்று காலை அரசு பஸ்சின் முன்பக்க வாசலின் வழியாக தவறி விழுந்து பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பலப்பட்டு காலனியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவருடைய மகள் தனலட்சுமி (வயது 16 ) இவர் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை தனலட்சுமி வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதற்காக பலப்பட்டில் இருந்து சி.என்.பாளையம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினாள். பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பக்க வாசலின் வழியாக திடீரென்று தனலட்சுமி தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க டயர் எதிர்பாராதவிதமாக தனலட்சுமி மீது ஏறி இறங்கியது. இதில் தனலட்சுமி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கடலூரில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி குண்டர் சட்டத்தின் கீழ் கைதானார்.
    கடலூர்:

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டித்து அவரது கட்சி நிர்வாகிகள பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். கடந்த 10-ந்தேதி கடலூர் கம்மியம்பேட்டை டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    இந்த வழக்கில் கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பாருக்கானை போலீசார் கைது செய்தனர்.

    பாருக்கான் மீது ஏற்கனவே கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணிக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் பாருக்கானை கடலூர் புதுநகர் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.#Tamilnews
    ×