search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kattumannarkoil Government Boys School"

    காட்டுமன்னார் கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் 3 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி அவசியமாகும். இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி போதிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டு-புத்தகம், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம், பாட திட்டத்தில் மாற்றம், பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் என பல திட்டங்களை சொல்லலாம்.

    இருப்பினும் அரசு பள்ளிகள் மீதான பெற்றோரின் மனநிலை இன்னும் மாறா தழும்பாக தான் இருக்கிறது. இதனால் இன்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு அரங்கேறி வருகிறது.

    அரசு எவ்வளவு முயற்சி எடுத்தாலும், தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் அதிகரிப்பால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வகுப்பறைகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட ஒருசில அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் 3 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.

    இது குறித்த விவரம் வருமாறு:-

    1946-ம் ஆண்டு காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டு தற்போது மேல்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் தனியார் பள்ளிகள் அதிகரிப்பால் மாணவர் சேர்க்கை குறைய தொடங்கியது. இதன் விளைவாக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்றனர். இந்த நிலையில் கடந்த கல்வியாண்டில் 476 மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்றனர்.

    காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியை படத்தில் காணலாம்.

    தற்போது 374 மாணவர்கள் தான் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 6-ம் வகுப்பில் 3 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 7-ம் வகுப்பில் 5 மாணவர்களும், 8-ம் வகுப்பில் 20 மாணவர்களும், 9-ம் வகுப்பில் 40 மாணவர்களும், 10-ம் வகுப்பில் 56 மாணவர்களும், பிளஸ்-1 வகுப்பில் 119 மாணவர்களும், பிளஸ்-2-வில் 131 மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.

    தலைமை ஆசிரியர் உள்பட 21 ஆசிரியர்களை கொண்ட இந்த பள்ளியில் சில வகுப்புகளில் ஒற்றை எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் மட்டும் தற்போது 26 உயர்நிலைப்பள்ளிகள், 15 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இதில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் அடங்கும்.

    இதனால் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது. மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்தவித பயனும் இல்லை. 21 வகுப்பறைகள் கொண்ட இந்த பள்ளியில் குறைந்த அளவிலான மாணவர்கள் இருப்பதால் பல வகுப்பறைகள் காலியாக இருப்பதை காணமுடிகிறது. காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது என்பது ஒரு முக்கிய காரணமாகும் என்றனர்.

    இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவுக்கான காரணம் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பா? அல்லது அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கை குறைந்ததா? என கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×