என் மலர்
கடலூர்
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடியை சேர்ந்தவர் ராணி (வயது 40).
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தொண்டாங்குறிச்சியில் இவரது உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராணி உள்பட 100 பேர் 2 மினி லாரிகளில் இன்று காலை தொண்டாங்குறிச்சி புறப்பட்டனர்.
இன்று காலை 10.30 மணிக்கு வேப்பூர் கூட்ரோடு அருகே மினி லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று பின்னால் சென்ற ஒரு மினி லாரி மீது மோதியது.
இதில் அந்த மினி லாரி நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர். இந்த விபத்தில் ராணி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந் தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 30 பேரை மீட்டு உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாசலம், பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சுப்பிரமணியன், சிவகாமி, பூங்காவனம், மலர்கொடி, அஞ்சலை உள்பட 7 பேரும், உளுந்தூர்பேட்டை ஆஸ்பத்திரியில் சுகந்தி (29), சரண்யா (50), தேவி (45), அழகம்மாள் (55), கமலம் (26), ஜெயா (45), முத்துலட்சுமி (40), பட்டம்மாள் (60), கல்யாணி (52) உள்பட 20 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெய்வேலி புதுநகர் 24-வது வட்டம் டைப்-4 குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் சம்பத்குமார். இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் துணை பொதுமேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று மாலை தனது காரில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். காரை ஷெட்டில் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.
இந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு திடீரென்று அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அவர் தீயணைப்பு துறையினருக்கு தகல் தெரிவித்தார்.
என்.எல்.சி. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக காரில் தீப்பிடித்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
நெய்வேலி:
நெய்வேலி புதுநகர் 22-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் வீரேந்திரகவுதம் (வயது 38). இவரது மனைவி அனுராதா (32). இவர்களுக்கு 2 வயதில் பெண்குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கணவனும், மனைவியும் நெய்வேலி மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் வீரர்களாக பணியாற்றி வருகிறார்கள். கணவனும், மனைவியும் வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனிக்க ஆள்இல்லாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து வீரேந்திரகவுதம் தனது சித்தப்பா மகள் பலாக் (15) என்ற சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். வீரேந்திரகவுதமும், அனுராதாவும் வேலைக்கு சென்றிருந்தபோது குழந்தையை சிறுமி பலாக் கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலையில் கணவனும், மனைவியும் வேலைக்கு சென்றிருந்தனர். இரவு அவர்கள் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது குழந்தை மட்டும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தது. பலாக்கை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை. இதனைத்தொடர்ந்து நெய்வேலி தெர்மல் போலீசில் அனுராதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமி பலாக்கை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள பெரியகொசப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 27). பட்டதாரியான இவருக்கு திருமணமாகி 2 மாதத்தில் கைக்குழந்தை உள்ளது.
குமரேசன் அங்குள்ள ஒரு நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 6 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள். அந்த சிறுமியை குமரேசன் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இது குறித்து அந்த சிறுமி அழுதபடி சென்று தனது பெற்றோரிடம் கூறினாள். உடனே அவளது பெற்றோர் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கை விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர். இதைத்தொடர்ந்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசனை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. #Tamilnews
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள வி.சாத்தப்பாடி கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக சாத்தப்பாடி ஊராட்சி சார்பில் ஆழ்துளை மோட்டாருடன் கூடிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆழ்துளை மோட்டார் பழுதானது. இதனால் புதிய ஆழ்துளை மோட்டார் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில வாரங்களாகவே மிகவும் கலங்கலாக வருகிறது. இந்த நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். இது குறித்து கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த வி.சாத்தப்பாடி கிராம பெண்கள் இன்று காலை அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம்-பரங்கிபேட்டை சாலையில் காலிக்குடங்களுடன் திரண்டனர். அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் கலங்கலாக வருவதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்த தாசில்தார் ஸ்ரீதரன் மற்றும் கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் பள்ளி, கல்லூரி வேன் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரம் டி.ஆர்.வி. நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35). மினிபஸ் அதிபர். இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் கொள்ளையடித்த பொருட்களுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போனவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து பண்ருட்டிக்கு வந்த ராமச்சந்திரன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு அருகே உள்ள பெட்ரோல் பங்க் வரை ஓடி நின்றது. இதையடுத்து பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சந்தேகப்படும்படி யாராவது சென்றார்களா? என பார்த்தனர்.
கொள்ளை சம்பவம் பற்றி ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேப்பகுதியில் தொழில்அதிபர் சிவக்குமார் வீட்டில் பீரோவை உடைத்து 100 பவுன் தங்க நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பஸ்அதிபர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. இது அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நெய்வேலி இந்திராநகரில் உள்ள எஸ்.பி.டி.யார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். எனவே காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி பவன் உங்களை நோக்கி வந்திருக்கிறது. இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டம் மாநாடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் இருந்தது தற்போது அண்ணா தி.மு.க பிளவு பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் ஒன்றாக இருக்கின்றார்கள். ஆனால் தலைவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள். இந்த நிலை மாறி அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி விரைவில் அமைய வேண்டும். யார் முதல்-அமைச்சர் என்பது முக்கியமல்ல. தலைவர் ராகுல் விட்ட பணியை சிறப்பாக செய்து வருகிறேன். முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை, தகுதி எனக்கு உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பு இழப்பால் ஏழைகளுக்கு எந்த பயனும் இல்லை. இந்த அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல. கடந்த நான்கு ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை.
மத்திய அரசை மாற்ற காங்கிரசால் மட்டுமே முடியும். நாடு முழுவதும் ராகுல் அலை வீசுகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வருவார்.
இவ்வாறு அவர் பேசினார். #congress #Thirunavukkarasar
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் சன்னதி வீதி நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அன்பரசன்(வயது 24). கார் டிரைவர். நேற்று மதியம் 4 மணியளவில் அன்பரசன் தனது மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் செல்வதற்காக ஆத்துகுறிச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஸ்ரீமுஷ்ணம் நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அன்பரசன் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இறந்த அன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் (வயது 35). முருகையன் தினமும் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் அருகே கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ள திண்ணையில் படுப்பது வழக்கம்.
பெலாந்துறை அருகே உள்ள கே.கே.நகரை சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி முருகன் (40) என்பவரும் முருகையன் படுத்து இருந்த இடம் அருகே தூங்கி வந்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு 10 மணிக்கு முருகையன் அந்த இடத்தில் படுக்க வந்தார். அப்போது முருகனும் அங்கு வந்தார். உடனே முருகையன், வெளியூரை சேர்ந்த நீ இங்கு வந்து ஏன் படுக்கிறாய்? என்று முருகனிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் முருகன் படுக்கும் இடத்தில் முருகையன் தண்ணீரை ஊற்றி விட்டு படுத்து தூங்கி கொண்டிருந்தார். இதனால் அருகில் உள்ள இடத்தில் முருகன் படுக்க இயலாமல் தவித்தார். உடனே அங்கிருந்து சென்று விட்டார்.
இன்று அதிகாலை கொடிக்கம்பம் அருகே முருகையன் ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கொடிக்கம்பம் அருகே பிணமாக கிடந்த முருகையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு கொடிக்கம்பம் அருகே படுத்து தூங்குவது தொடர்பாக முருகையனுக்கும், முருகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முருகையன் கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக முருகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட முருகையனுக்கு அனிதா (30) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
வாலிபர் கழுத்து அறுத்து கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ராமதிலகம் (வயது 15). இவர்அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு செல்லும் போதுஅதேபகுதியை சேர்ந்த கொத்தனார் ஜனார்த்தன்(20)என்ற வாலிபர் இவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மாணவி ராமதிலகம் கர்ப்பமானார். தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள மாணவி ராமதிலகம் நேற்று காதலன் ஜனார்த்தனன் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அவர் உன்னை திருமணம்செய்து கொள்ள முடியாது என மறுத்துள்ளார். பின்னர் அவரை திட்டி வீட்டை விட்டு விரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி ராமதிலகம் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் எழிலரசி இதுகுறித்து ஜனார்த்தனன் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்.
குறிஞ்சிப்பாடி:
தமிழக அரசை அகற்றக்கோரி கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் 17 பேர் முதல்-அமைச்சராக இருந்துள்ளார்கள். இதில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஊழல் செய்து இருக்கிறார்கள். இருந்தாலும் மத்திய அரசுக்கு எப்போதாவது வளைந்து கொடுப்பார்கள். ஆனால் தற்போதைய ஆட்சி அப்படி இல்லை. மிகவும் மோசமான ஆட்சி.
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மாதம் ரூ.10 லட்சத்துக்கு பணிகளை ஒதுக்கி கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சியும் அப்படித்தான் இருக்கிறது. ஆளும் கட்சியும் அப்படித்தான் இருக்கிறது. எனவே இந்த ஊழல் ஆட்சியை அகற்ற மக்கள் மனம் மாற வேண்டும்.
என்னை பற்றி பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்து இருக்கிறார். அவருக்கு சமூகம், அரசியல், பொருளாதாரம் பற்றி தெரியாது. இட ஒதுக்கீடு என்றாலே என்னவென்று அவருக்கு தெரியாது. பா.ம.க. நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். போராட்டத்தின் போது 100 மரங்களை பொதுமக்களே வெட்டினார்கள்.
குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அங்குள்ள சமுதாய மக்கள் இட ஒதுக்கீட்டுக்காக போராடி இருக்கிறார்கள். அப்போது அவர்கள் பஸ்களை உடைத்து இருக்கிறார்கள். அரசு பொது சொத்துக்களை சேதப்படுத்தி இருக்கிறார்கள். இது பற்றி தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெரியாதா? இனி அவரை பற்றி பேச வேண்டாம்.
நடிகர்கள் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறோம். சர்கார் என்ற படத்தில் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நடிகர்களும், தயாரிப்பாளர்களும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
இதே பழைய ராமதாசாக இருந்தால் அந்த படத்தை ஒரு சினிமா தியேட்டரிலும் ஓட விட மாட்டோம். அந்த காட்சியில் நடித்ததற்காக நடிகரும், தயாரிப்பாளரும் சிகரெட் கம்பெனியிடம் காசு வாங்கி இருப்பார்கள், அதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
8 வழி பசுமை சாலையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உளுந்தூர்பேட்டை-சேலம் 4 வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. இந்த அரசு ஒருநிமிடம் கூட ஆட்சி செய்ய தகுதி இல்லாத அரசு. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு போராடினேன். அப்போதே ஆலையை மூடி இருக்கலாம். இப்போது துப்பாக்கி சூடு நடந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.
அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூர், சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ramadoss
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள கருணாகரநல்லூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 45). விவசாயி. இவர் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு தனியார் நிறுவனத்திடம் இருந்து டிராக்டர் ஒன்று விலைக்கு வாங்கி இருந்தார். அதற்கு மாதந்தோறும் தவணை தொகை செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழரசனால் தவணை தொகையை கட்ட முடியவில்லை. இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தினர், தவணை தொகையை உடனே செலுத்துங்கள் என்று கூறியுள்ளனர். ஆனாலும் அவர் பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளார்.
மேலும் அவர் டிராக்டரை ஒரு மறைவான இடத்தில் பதுக்கி வைத்திருந்தார். இது பற்றிய தகவல் அறிந்த தனியார் நிறுவனத்தினர் நேற்று தமிழரசனின் வீட்டுக்கு வந்தனர்.
வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த டிராக்டரை எடுத்து சென்று விட்டனர். இதனால் தமிழரசன் மனஉளைச்சல் அடைந்தார்.
பின்னர் அவர் தவணை தொகையை தன்னால் கட்ட முடியவில்லையே என வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார்.
வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம் பரம் ராஜாமுத்தையா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழரசன் இன்று பரிதாபமாக இறந்தார்.
தவணை தொகையை செலுத்த முடியாததால் தனியார் நிறுவனத்தினர் டிராக்டர் எடுத்து சென்றதால் விவசாயி மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தமிழரசனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.






