என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் அருகே முன்விரோதத்தில் வீட்டுக்கு தீ வைத்ததால் சிலிண்டர் வெடித்து 6 வீடுகள் எரிந்து சாம்பலானது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ளது சேடாபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் வெற்றிவேல் (வயது 19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தஜோதி, முகுந்தன், விஜயகுமார் ஆகியோருக்கிடையே செல்போனில் வாட்ஸ்-அப் அனுப்புவதில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆனந்தஜோதி உள்பட 6 பேர் சுமதி வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரிடம் தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த சுமதியின் உறவினர் கார்த்திக் (29) என்பவர், ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று தட்டி கேட்டார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தஜோதியும், அவரது நண்பர்களும் கார்த்திகை சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த கார்த்திக் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனது அண்ணன் கார்த்திக் தாக்கப்பட்ட சம்பவம் அவரது தம்பி விக்னேசுக்கு தெரியவந்தது. அவரும், அவரது நண்பர் செந்தில்குமாரும் நேற்று இரவு ஆனந்தஜோதியின் வீட்டுக்கு சென்றனர். பின்பு அவரது கூரைவீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென்று குடிசை வீடு முழுவதும் பரவியது. வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த தனசேகர், செல்வம், வெங்கடேசன், ராஜவேலு, மாரியம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியது. உடனே பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

    மேலும் இது குறித்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆனந்தஜோதி வீடு உள்பட 6 பேரின் வீடுகளும் எரிந்து சாம்பலானது.

    வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமாகின. இந்த தீ விபத்தில் 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன.

    இந்த சம்பவம் தொடர்பாக முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் முகுந்தன், விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சேடாபாளையம் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணி மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்வதற்கு வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக ககன் தீப் சிங் பேடி இன்று காலை கடலூருக்கு வந்தார்.

    கடலூர் கம்மியம் பேட்டை பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் கரையை பலப்படுத்தும் பணி ரூ.22 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை ககன் தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதனை ஆய்வு செய்ய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் குடிமராமத்து பணியினை ஆய்வு செய்ய என்னை நியமித்து உள்ளனர்.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணியை ஆய்வு செய்து வருகிறேன். மேலும் கடலூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் கெடிலம் ஆற்றில் இருபுறமும் நிரந்தரமாக கரையை பலபடுத்தும் பணியும் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் மூலம் கடலூர் நகரில் உள்ள கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது வெள்ளம் ஊருக்கு புகாமல் நிரந்தரமாக தடுக்கப்படும். மேலும் கடலூர் மாவட்டத்தில் பரவனாறு,செங்கால் ஓடை, பழைய கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வெலிங்டன் ஏரி, வீராணம் ஏரி, ஆகிய ஏரிகளில் தமிழக அரசு மற்றும் என்.எல்.சி. நிறுவனமும் இணைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் தண்டபாணி, மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, சப்- கலெக்டர் சரயூ மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். #GagandeepSinghBedi
    அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இளைஞர்களின் முயற்சியால் மூங்கில் கழிகளை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. அதன்பிறகு அதனை கட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இளைஞர்களின் முயற்சியால் மூங்கில் கழிகளை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், இளைஞர்களை பாராட்டினர்.

    சிதம்பரம் அருகே ஜெயங்கொண்ட பட்டிணம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடங்களில் ஜெயங்கொண்ட பட்டிணத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஜெயங்கொண்ட பட்டிணத்திற்கும் அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கும் இடையில் பழைய கொள்ளிடம் ஆறு ஓடுகிறது.

    அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணம், கீழக்குண்டலபாடி, திட்டுக்காட்டூர் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றின் வழியாகத்தான் ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கு செல்ல முடியும். மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும். அதுமட்டுமின்றி அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியாது.

    எனவே ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கும், அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கும் இடையே உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது.

    அந்த தரைப்பாலத்தை கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் 3 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தினர். அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த தரைப்பாலத்தை வெள்ளம் அடித்துச்சென்றது. அதன்பிறகு அங்கு பாலம் கட்டப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக ஆற்றில் இறங்கிதான் கிராம மக்களும், மாணவ-மாணவிகளும் சென்று வருகிறார்கள்.

    இது ஒருபுறமிருக்க ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அந்த முதலைகளும் அவ்வப்போது கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதையும் மீறி அவர்கள் வேறு வழியின்றி தினமும் ஆபத்தான நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி செல்கிறார்கள்.

    பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று 3 கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகள், கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் நாட்கள் உருண்டோடி செல்கிறதே தவிர, அதில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதற்கு ஒரு முடிவு கட்டவும், தற்காலிகமாக 3 கிராம மக்கள் அச்சமின்றி கொள்ளிடம் ஆறு வழியாக செல்லவும் இளைஞர்கள் ஒன்று திரண்டு ஆலோசித்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மூங்கில் கழிகளை கொண்டு தற்காலிக பாலம் கட்ட முடிவு செய்தனர். அதற்காக இளைஞர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை கொடுத்தனர். இதன் மூலம் ரூ.20 ஆயிரம் வசூலானது.

    இந்த பணத்தை வைத்துக்கொண்டு இளைஞர்கள், கொள்ளிடம் ஆற்றில் பழைய தரைப்பாலம் இருந்த இடத்தில் கான்கிரீட் தூண்கள் எழுப்பினர். அதன்மேல் மூங்கில் கழிகளால் பாலம் கட்டும் பணி 2 நாட்களாக நடைபெற்றது. இந்த பணியை தொழிலாளர்கள் செய்தனர். பணி நேற்று முன்தினம் முடிவடைந்தது. 3 கிராம மக்களும், மாணவ-மாணவிகளும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மூங்கில் பாலத்தின் வழியாக சென்று வருகிறார்கள். இளைஞர்கள் தாங்களாக முன்வந்து மூங்கில் பாலம் அமைத்ததால் மகிழ்ச்சி அடைந்த 3 கிராம மக்கள், அவர்களை வெகுவாக பாராட்டினர். 
    கடலூர் நகரசபை அலுவலகத்தில் சப்-காண்டிராக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் கங்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் துரை என்கிற ரட்சகன்(வயது 42). இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு முகேஷ் என்ற மகன் உள்ளான்.

    ரட்சகன் கடலூர் நகராட்சியில் பல்வேறு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் சப்-காண்டிராக்டர் எடுத்து பணி மேற்கொண்டு வந்தார். பணிகள் முடிந்த பிறகு இவருக்கு நகராட்சி அலுவலகத்தில் இருந்து பணம் எதுவும் வழங்கப்படவில்லை. ரூ.30 லட்சம் வரை பணம் கொடுக்க வேண்டியிருந்ததாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து ரட்சகன் நகராட்சி அலுவலகம் சென்று தனக்கு தர வேண்டிய பணத்தை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் பணம் எதுவும் அவருக்கு வழங்கப் படவில்லை.

    இதனால் ரட்சகன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இன்று காலை ரட்சகன் தனது மனைவி ராதிகா, மகன் முகேஷ் ஆகியோருடன் பணத்தை கேட்பதற்காக கடலூர் நகரசபைக்கு வந்தார்.

    அப்போது ரட்சகன் தனது சட்டைப்பையில் வி‌ஷப்பாட்டில் வைத்திருந்தார். நகரசபை அலுவலகத்தில் இருந்து கமி‌ஷனர் சரவணன் வெளியே வந்து தனது காரில் ஏற முயன்றார். அப்போது அங்கு நின்ற ரட்சகன் திடீரென்று வி‌ஷபாட்டில் எடுத்து குடித்து கமி‌ஷனர் கார் முன்படுத்து உருண்டு மறியல் செய்தார்.

    வி‌ஷம் குடித்ததால் அவர் அங்கேயே ரத்த வாந்தி எடுத்தார்.

    இதுகுறித்து புதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வி‌ஷம் குடித்திருந்த ரட்சகனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த அவரது மனைவி ராதிகாவையும் கணவருடன் செல்லுமாறு போலீசார் கேட்டனர். ஆனால் அவர் செல்ல மறுத்துவிட்டார். எங்களுக்கு தர வேண்டிய பணத்தை தர வேண்டும் என்று கூறி அவர் நகரசபை வாசலில் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    போராட்டத்தில் ஈடுபட்ட ராதிகாவிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர் கணவரை பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    கடலூர் நகரசபை அலுவலகத்தில் சப்-காண்டிராக்டர் வி‌ஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியில்லாமல் மணல் ஏற்றி சென்ற 5 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று இரவு உளுந்தூர்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது விருத்தாசலம் சாலையில் மணல் ஏற்றிய 2 லாரிகள் வேகமாக வந்தன. போலீசார் அந்த லாரிகளை தடுத்து நிறுத்தினர். உடனே டிரைவர்கள் லாரிகளை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள சே‌ஷ நதியில் சிலர் மினி லாரிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அங்கு போலீசார் சென்ற போது மணல் அள்ளி கொண்டிருந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது. இதையடுத்து அங்கிருந்த 2 மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதுபோல் உளுந்தாண்டவர் கோவில் பகுதியில் உள்ள ஏரியில் ஒரு கும்பல் லாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தது.

    இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    மணல் ஏற்றிய நிலையில் அங்கு நின்ற ஒரு லாரியையும், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பண்ருட்டி அருகே பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவனூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்(19). இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

    இவர்கள் அதே பகுதியில் வீட்டில் குளிக்கும் பெண்களை மறைந்து நின்று தங்களது செல்போனில் படம் பிடித்தனர். அதை வைத்து கொண்டு பெண்களை மிரட்டினர். எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் செல்போனில் பிடித்த படங்களை வாட்ஸ்-அப், பேஸ்புக்-கில் வெளியிடுவோம் என கூறினர்.

    இதனால் அந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து பிரேம்குமார் மற்றும் மோகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    கடலூர் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூரை அடுத்த உள்ளேரிபட்டு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். (வயது 35). தொழிலாளி. இவருடைய மனைவி இலக்கியா (28). இவர்களுக்கு கார்த்திக் (3), நகுல்(1) ஆகிய 2 ஆண் குழந்தைகள் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கார்த்திக்கும், நகுலுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இன்று காலை மோட்டார் சைக்கிளில் அவர்களை கருணாகரனும், அவரது மனைவியும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் தனது மகன்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நெல்லிக்குப்பம் நோக்கி புறப்பட்டனர். கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.

    சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த கருணாகரன் அந்த பள்ளத்தில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக திடீரென்று மோட்டார் சைக்கிளை பிரேக் அடித்து நிறுத்தினார்.

    இதில் தாய் இலக்கியா மடியில் வைத்திருந்த குழந்தை நகுல் எதிர்பாராமல் சாலையில் தவறி கீழே விழுந்தது. அப்போது பின்னால் வந்த அரசு பஸ் சக்கரம் நகுல் தலையில் எதிர்பாராமல் ஏறியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இதனைப் பார்த்த தாய்-தந்தை இருவரும் தங்கள் கண் முன்னே பலியான குழந்தையை கையில் எடுத்து கொண்டு கதறி அழுதனர். இதைபார்த்த அங்கு திரண்டு இருந்த பொதுமக்களும் கண் கலங்கினார்கள்.

    இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    கடலூர் அடுத்த கோண்டூர் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இதை அறிவிக்க எந்தவித பேரிகார்டோ அல்லது எச்சரிக்கை பலகையோ அங்கு அதிகாரிகள் வைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பது சரியாக தெரிவதில்லை. அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    இன்று குழந்தை நகுல் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற விபத்துகள் நடப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் இளம்பெண்ணை கற்பழித்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 28), லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    மோகன்ராஜுக்கு அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அவரது நிலத்தின் அருகே 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார்.

    அந்த பெண்ணை, மோகன்ராஜ் குண்டுக்கட்டாக அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்கு வைத்து அவரை கற்பழித்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறினார். உடனடியாக அவர்கள் ஊர் பஞ்சாயத்தில் கூறினர். ஊர் பஞ்சாயத்தார், மோகன்ராஜை பிடித்து விசாரித்த போது, அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டார்.

    உடனே அந்த பெண்ணை நீதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மோகன்ராஜியிடம் ஊர் பஞ்சாயத்தார் கூறினர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டு சென்றார்.

    இந்த நிலையில் மோகன்ராஜ் திடீரென்று மாயமாகி விட்டார். இது பற்றி தகவல் அறிந்த இளம் பெண்ணின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாகி இருந்த மோகன்ராஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    கேரளாவில் புரை ஏறி இறந்ததாக கூறப்பட்ட 11 மாத ஆண் குழந்தையின் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மனைவி சுகுணா. இவர்களது 11 மாத குழந்தை ஸ்டீவக். இவர்கள் குடும்பத்துடன் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் சரலயம் பகுதியில் வசித்து வருகிறார்கள்.

    நேற்று குழந்தைக்கு சுகுணா பால் கொடுத்து பின்னர் படுக்க வைத்தார். பின்னர் துணி துவைக்க சென்று விட்டார். வெகுநேரம் குழந்தையின் அழுகுரலோ, அசைவோ இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுகுணா ஓடிச்சென்று குழந்தையை எடுத்து பார்த்தபோது குழந்தை மயங்கியதுபோல் கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையை எடுத்துக்கொண்டு குன்னங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் பால் புகட்டும்போது புரையேறி குழந்தை இறந்து விட்டதாக கூறினார்.

    இதனையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் முதுகெலும்பில் 2 இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து குன்னங்குளம் போலீசாருக்கு தெரியவந்ததும் குழந்தையின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை புரையேறி இறந்ததா? அப்படி என்றால் முதுகு எலும்பு முறிவு எப்படி ஏற்பட்டது? குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிதம்பரத்தில் வியாபாரியின் மொபட்டில் இருந்த ரூ.1½ லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் வியாபாரியின் மொபட்டில் இருந்த ரூ.1½ லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    சிதம்பரம் புதுப்பேட்டை வடக்குத்தெருவை சேர்ந்தவர் குஞ்சிதபாதம்(வயது 75). வியாபாரி. இவர், ஏலச்சீட்டு நடத்தும் தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.2 லட்சத்துக்கான மாதந்தோறும் பணம் கட்டி வந்தார். குஞ்சிதபாதத்துக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. எனவே அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கேட்டார். அதன்படி அந்த நிறுவனம் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கான காசோலையை குஞ்சிதபாதத்திடம் வழங்கியது.

    அந்த காசோலையை மாற்றி பணம் பெறுவதற்காக குஞ்சிதபாதம் நேற்று மதியம் 12 மணி அளவில் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு வந்தார். அங்கு காசோலையை கொடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட அவர், அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

    வங்கியின் முன்பு நிறுத்தி இருந்த தனது மொபட் சீட்டின் அடியில் பணத்தை வைத்து குஞ்சிதபாதம் பூட்டினார். பின்பு அவர் அருகில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட் சீட் திறந்து கிடந்தது. அதன் அடியில் இருந்த பணத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நடந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து குஞ்சிதபாதத்திடம் விசாரித்தனர். விசாரணையில், குஞ்சிதபாதம் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து வந்து மொபட்டில் வைத்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அதனை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து வங்கியில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராக்களில், குஞ்சிதபாதத்தின் மொபட்டில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிய காட்சி பதிவாகி இருக்கிறதா? என்று வீடியோ காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    புதுச்சேரி, சென்னைக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகையையொட்டி கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கடலூர் முதுநகர்:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாட்கள் சென்னை, புதுச்சேரியில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் புதுச்சேரியில் தங்கி உள்ளார். அவர் வருகையையொட்டி கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் கடலூர் மாவட்டம் கிள்ளை முதல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை படகில் சென்று கடற்கரையோரம் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தி, சந்தேகப்படும் படியாக யாராவது வந்தால் உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். இந்த ரோந்து பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்து நடைபெறும் என்று கடலோர காவல் படையினர் தெரிவித்தனர். 
    பண்ருட்டி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 37). ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி புஷ்பா (30). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள முந்திரி தோப்பில் நேற்று முன்தினம் அண்ணாமலை தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அண்ணாமலை குடும்பத்தினருக்கு தகவல் கூறினர்.

    உடனே புஷ்பா மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து, அண்ணாமலையின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை வீட்டுக்கு தூக்கி சென்றனர். அதைத் தொடர்ந்து இறுதி சடங்கு ஏற்பாடும் நடந்தது.

    இந்த நிலையில் அண்ணாமலையின் தம்பி இளைய ராஜா, காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதில் எனது அண்ணன் அண்ணாமலை சாவில் மர்மம் உள்ளது. அவரை யாரேனும் அடித்து கொலை செய்து அதனை மறைப்பதற்காக சேலையில் தூக்கில் பிணமாக தொங்க விட்டு உள்ளனர்.

    எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் குமரய்யா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ சேகர் மற்றும் போலீசார் அண்ணாமலை வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அந்த பகுதியை சேர்ந்த பலரிடமும், அண்ணாமலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும் போலீசார் விசாரித்தனர்.

    அண்ணாமலையை அடித்து கொலை செய்து யாரேனும் தூக்கில் தொங்க விட்டனரா? அல்லது வேறு ஏதும் காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×