என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீடு.
    X
    கொள்ளை நடந்த வீடு.

    பண்ருட்டி அருகே பஸ் அதிபர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை கொள்ளை

    பண்ருட்டி அருகே பஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரம் டி.ஆர்.வி. நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35). மினிபஸ் அதிபர். இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் கொள்ளையடித்த பொருட்களுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போனவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து பண்ருட்டிக்கு வந்த ராமச்சந்திரன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவ்வாது உசேன், லூயிஸ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.

    பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.

    கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு அருகே உள்ள பெட்ரோல் பங்க் வரை ஓடி நின்றது. இதையடுத்து பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சந்தேகப்படும்படி யாராவது சென்றார்களா? என பார்த்தனர்.

    கொள்ளை சம்பவம் பற்றி ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேப்பகுதியில் தொழில்அதிபர் சிவக்குமார் வீட்டில் பீரோவை உடைத்து 100 பவுன் தங்க நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பஸ்அதிபர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. இது அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×