என் மலர்tooltip icon

    கடலூர்

    சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவில் கலந்துகொள்ள வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் தங்கத் தேரோட்டத்தை நடத்த 100 நபர்களுக்கும், 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் நடராஜமூர்த்தி எழுந்தருளும் பிரதான தேரோட்டத்தை நடத்த ஆயிரம் பேருக்கும், சிவகாமசுந்தரி அம்மன் தேரோட்டத்தை நடத்த 400 நபர்களுக்கும், விநாயகர் தேரோட்டத்தை நடத்த 200 பேருக்கும், சுப்பிரமணியர் தேரோட்டத்தை நடத்த 200 நபர்களுக்கும், சண்டிகேஸ்வரர் தேரோட்டத்தை நடத்த 200 நபர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

    மேலும் 30-ந் தேதி கோவில் வளாகத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள, குறிப்பிட்ட நேர இடைவெளியை ஒதுக்கீடு செய்து, கோவில் வளாகத்தினுள் ஒரே சமயத்தில் 200 நபர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும், கொரோனா தடுப்பு தொடர்பாக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்படுவதை கோவில் நிர்வாகம் மற்றும் தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் ஆருத்ரா தரிசன மகோத்சவ விழாவில் கலந்து கொள்ள வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. நகருக்குள் வெளியூர் பக்தர்கள் ஆருத்ரா தரிசனத்திற்காக வருகை புரிவதை தடுக்கும் வகையில், சிதம்பரம் நகருக்குள் வரும் சாலைகளில் காவல் துறை மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே, சிதம்பரம் நகரில் உள்ள தங்கும் விடுதிகள், மடங்கள், திருமண மண்டபங்கள், சத்திரங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், வெளியூர் பக்தர்களைத் தங்க அனுமதிப்பதையும், அவர்களுக்கு முன்பதிவு செய்வதையும் தவிர்க்க வேண்டும். மேலும் ஆருத்ரா தரிசன விழாவினை பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே காணும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    திட்டக்குடி அருகே சிறுமியை தாயாக்கி விட்டு சென்னையில் பதுங்கி இருந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    விருத்தாசலம்:

    திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 29). இவர் தனது உறவினரான திட்டக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை மிரட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சசிகுமார் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி, சிறுமியிடம் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் சிறுமி கர்ப்பமடைந்தாள். இதையறிந்த பெற்றோர், சிறுமியிடம் கேட்டபோது நடந்த சம்பவம் குறித்து கூறினாள். இதற்கிடையே சசிகுமார் வெளிநாடு வேலைக்கு சென்று விட்டார்.

    இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை பலாத்காரம் செய்த சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் வெளிநாடு வேலைக்கு சென்ற சசிகுமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்து, ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சென்னை சென்று, அங்கு தங்கியிருந்த சசிகுமாரை கைது செய்து விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
    கடலூர் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் அருகே உள்ள சிங்காரத்தோப்பை சேர்ந்தவர் பிச்சாண்டி மனைவி கலைச்செல்வி (வயது 40). இவர் மகளிர் சுயஉதவி குழுவில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாங்கிய கடனை கலைச்செல்வியால் திரும்ப செலுத்த முடியாததால், அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இதற்கிடையே சம்பவத்தன்று அவர், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

    இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலைச்செல்வி பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து அவரது மகள் இந்துமதி(25), கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணாடம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அருகே அரியராவி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் 190 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். கடந்த 2 மாத காலமாக பொதுமக்களுக்கு சரியான முறையில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இது குறித்து கடை ஊழியர்களிடம் பொதுமக்கள் கேட்டபோது அவர்கள், பிறகு தருவாக கூறிவந்துள்ளனர். இந்த நிலையில் பொருட்கள் வாங்காத பலரின் செல்போன் எண்ணுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கியதாக குறுந்தகவல் வந்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சென்று ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்த விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் தவறுதலாக குறுந்தகவல் வந்துவிட்டது. இனி இதுபோல் நடக்காது என்று கூறியுள்ளார். தொடர்ந்து பொதுமக்களுக்கு முறையாக அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இருப்பினும் பிரச்சினைக்கு காரணமான விற்பனையாளரை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கொரோனா தொற்று காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் பங்கேற்காமல் டிராக்டர் மற்றும் புல்டோசர் மூலம் தேர் இழுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதற்கு நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனவிழா வருகிற 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தேரோட்டம் 29-ந் தேதியும், ஆருத்ரா தரிசனவிழா 30-ந் தேதியும் நடக்கிறது.

    கொரோனா தொற்று காரணமாக விழாவில் பக்தர்கள் பங்கேற்காமல் டிராக்டர் மற்றும் புல்டோசர் மூலம் தேர் இழுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதற்கு நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து நடராஜர் கோவில் தேரை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். தேரின் ஸ்திரத்தன்மை, தேர் சக்கரத்தின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பொது தீட்சிதர்கள் உடன் இருந்தனர்.

    தேரை பார்வையிட்ட தொழில்நுட்ப பொறியாளர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அளித்தபிறகு டிராக் டர், புல்டோசர் மூலம் தேர் இழுப்பதா? என முடிவு செய்யப்படும்.

    இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் தேர்திருவிழா என்பது பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுப்பதே ஆகும். தேரை எந்திரம் மூலம் இழுத்துசெல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடராஜர், சிவகாமி அம்மன் தேர்கள் மிகப்பெரியது. இந்த தேர்களை எந்திரம் மூலம் இழுத்து சென்றால் சுவாமிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்றனர்.
    பண்ருட்டி அருகே கள்ளக்காதலியுடன் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எல்.என்.புரம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மனைவி ஜோதிலட்சுமி (வயது 42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    அண்ணாதுரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதற்கிடையில் பண்ருட்டி பகுதிக்கு கொத்தனார் வேலைக்காக வந்த குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சின்னக்கண்ணாடி ஆடூரை சேர்ந்த செல்வம் மகன் தண்டபாணி (32) என்பவருடன் ஜோதிலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது.

    இதைத்தொடர்ந்து இருவரும் கணவன், மனைவி போல ஜோதிலட்சுமியின் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ஜோதிலட்சுமிக்கு காச நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதில் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இதனால் 2 பேரும் இனி உயிரோடு இருப்பதைவிட சாவதே மேல் என்று முடிவு செய்ததாக தெரிகிறது.

    இதையடுத்து நேற்று மதியம் தண்டபாணியும், ஜோதிலட்சுமியும் விஷத்தை எடுத்து குடித்து விட்டனர். இதில் தண்டபாணி வீட்டை விட்டு வெளியேறி தெருவோரத்தில் மயங்கி விழுந்து இறந்தார். ஜோதிலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டிலேயே மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜோதிலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பெண்ணை தாக்கி 5 பவுன் நகையை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள தெற்கிருப்பு கிராமம் திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் சரவணன். மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார்.

    அவரது மனைவி தீபா. இவர் அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த முகமூடி கொள்ளையர் சரமாரியாக தாக்கினர்.

    இதில் தீபா அலறி துடித்தவாறு கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய முகமூடி கொள்ளையர் தீபா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு வயல் வெளியாக தப்பி ஓடிவிட்டனர்.

    அலறல் சத்தம் கேட்டு தீபாவின் கணவர் சரவணன் மற்றும் உறவினர்கள் ஓடிவந்தனர். நடந்த விவரத்தை தீபா அவர்களிடம் தெரிவித்தார். உடனடியாக அங்குள்ளவர்கள் கொள்ளை கும்பலை தேடி சென்றனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
    வல்லுநர் குழு ஒப்புதல் பெற்று நடராஜர் கோவில் தேர்த்திருவிழாவுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன விழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாதத்தையொட்டி ஆருத்ரா தரிசன விழா, வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வெள்ளி சந்திர பிரபை வாகனத்திலும், 23-ந் தேதி (புதன்கிழமை) தங்க சூரிய பிரபை வாகனத்திலும், 24-ந்தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 25-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், தெருவடைச்சானிலும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    முக்கிய விழாவான தேர்த்திருவிழா 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி தேர்த்திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறுகையில், தேர் மற்றும் தரிசன விழா நாட்களில் சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோவிலுக்கு வரும் பொதுமக்களிடையே எவ்வாறு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் தரிசன விழாவை மேற்கொள்ளலாம் என்று பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் தேரோட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் ஒப்புதல் பெற்று, அதனடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும். அபிஷேகத்தை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து, ஸ்தல ஆய்வு செய்து அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது என்பது முடிவு செய்யப்படும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, சப்-கலெக்டர் மதுபாலன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெயராஜ பவுலின், அரசு வக்கீல் சந்திரசேகர், சிதம்பரம் தாசில்தார் ஆனந்த் மற்றும் தீட்சிதர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    விவசாயி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    அண்ணாமலைநகர்:

    சிதம்பரம் அருகே உள்ள வடக்கு தில்லைநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 57). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் கார்த்திக் (37) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தனது உறவினர் தண்டபாணி என்பவருடன் சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் செல்வம் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த கார்த்திக், கதிர்வேல், சந்துரு என்கின்ற சந்திரபாபு, இளங்கோவன், ஸ்டாலின், ஜெயசக்தி ராஜன் ஆகிய 6 பேரும் செல்வம், தண்டபாணி ஆகியோரை இரும்பு கம்பி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். படுகாயம் அடைந்த செல்வத்தை சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து போனார். தண்டபாணி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த சம்பவம் குறித்து கிள்ளை போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு விசாரணை சிதம்பரத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு) இளவரசன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளியான கார்த்திக் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2, 100 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட மற்ற 5 பேரும் விடுவிக்கப்பட்டனர். அரசு தரப்பில் வக்கீல் ஞானசேகரன் ஆஜராகி வாதாடினார்.
    நெல்லிக்குப்பம் அருகே ஷேர் ஆட்டோவில் சாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி தலைமையிலான போலீசார் நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் சாராய பாக்கெட்டுகளுடன் 2 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆட்டோவில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கடலூர் சேடப்பாளைத்தை சேர்ந்த மாயவன்(வயது 70), சண்முகம்(58), குணமங்கலத்தை சேர்ந்த காசிலிங்கம்(47) ஆகியோர் என்பதும், புதுச்சேரி பகுதியில் இருந்து 110 லிட்டர் சாராயத்தை வாங்கி, கடத்தி வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, சாராயத்தை கடத்தி வந்த மாயவன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சாராய பாக்கெட்டுகள் கொண்ட 2 மூட்டைகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட ஷேர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது
    வேப்பூர் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் குமாரமங்கலம் அருகே உள்ள இச்சிகாமலைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் (வயது 75). சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக ஒரு காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மைக்கேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கடலூர் மாவட்டத்திற்கு அமைச்சர் எம்சி சம்பத் என்னென்ன பணிகள் செய்துள்ளார் என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் திமுகவின் தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் முக ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 

    அதிமுக ஆட்சியில் கடலூர் மாவட்டம் கவனிக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். 

    நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் சிதம்பரம் கோயிலில் மழைநீர் தேங்கியது. முதல்வருக்கு மக்களைப் பற்றிய அன்பு இல்லை, தொலைநோக்குப் பார்வை இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
    ×