என் மலர்tooltip icon

    கடலூர்

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் முக கவசம் அணிந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கடலூர் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயத்தில் கொண்டாடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நள்ளிரவு 1.15 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் ஆலயத்தின் வெளியே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை ஏசு சொரூபத்தை பங்குத்தந்தை அந்தோணி லூர்துராஜ் வைத்தார்.அதன் பிறகு சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    புத்தாடை அணிந்து தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு 11.40 மணிக்கு ஆலயம் திறக்கப்பட்டது. அதற்கு முன்பாக ஆலயத்துக்கு வந்தவர்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் நாற்காலிகளில் அமரவைக்கப்பட்டனர்.

    ஆலயம் திறந்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆலயம் நுழைவு வாசலில் வைக்கப் பட்டிருந்த சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தனர். அனைவரும் முக கவசம் அணிந்து பங்கேற்றனர். மற்ற தேவாலயங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெறுகிறது.
    ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேவங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி செங்கனி. இவர் நேற்று அரியலுார் மாவட்டம் கருக்கையில் இருந்து விருத்தாசலத்திற்கு அரசு பஸ்சில் வந்தார்.

    விருத்தாசலம் பஸ் நிலையத்துக்க வந்த அவர், தான் பையில் வைத்திருந்த பர்சை திறந்து பார்த்தார். அதில் வைத்திருந்த 4½ பவுன் நகையை காணவில்லை. பஸ்சில் வரும்போதே அவரது நகையை மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


    திட்டக்குடி அருகே 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி வடகரை பகுதியை சேர்ந்தவர் முருகையன் மகன் மணிகண்டன் (வயது 26). தொழிலாளியான இவர் கடந்த 15.2.2019 அன்று அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் சக குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச்சென்றார். பின்னர் அந்த சிறுமியை சமுதாய நலக்கூடத்தில் உள்ள ஒரு அறைக்குள் வைத்து பூட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இது பற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது பற்றி சிறுமியின் தாய் விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலைச்செல்வி ஆஜராகினார்.
    லண்டனில் இருந்து கடலூர் வந்த 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
    கடலூர்:

    சீனாவில் கடந்த ஆண்டு உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது இதன் தாக்கம் குறைந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில்,ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளி வருகிறது. இது கொரோனா வைரசின் புதிய வடிவம் என்று டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து டெல்லி வழியாக தமிழகத்திற்கு வந்தவர்களுக்கு அதன் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டது.

    இதையடுத்து லண்டன் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் வருவோரை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டத்திற்கு வெளி நாடுகளில் இருந்து நேற்று வரை 1700 பேர் வந்துள்ளனர். அதில் லண்டனில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு 40 பேர் வந்ததாக பட்டியல் அளிக்கப்பட்டது.

    அந்த பட்டியலில் 6 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 4 பேரின் பெயர்கள் 2 முறை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் 30 பேர் லண்டனில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் கடலூரில் 4 பேர், குமராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், மற்றொருவர், விருத்தாசலம், சிதம்பரம் என பல்வேறு இடங்களில் உள்ளதை சுகாதாரத்துறையினர் கண்டறிந்தனர்.

    அவர்களுக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று ஸ்டிக்கர் ஒட்டவும் முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டனர். அதன்படி அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டனர். இதேபோல் பிற நாடுகளில் இருந்து வந்தவர்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். இருப்பினும் அவர்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    சிதம்பரம் ஜவுளிக்கடையில் திருடிய மாமியார், மருமகளை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    குறிஞ்சிப்பாடி புவனகிரி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஞானசவுந்தரி (வயது 58). இவருடைய மருமகள் மதிவதனி (36). இவர்கள் இருவரும் சிதம்பரம் மேலவீதியில் உள்ள ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க சென்றனர்.

    அப்போது, அங்கு சேலைகள், நைட்டிகளை அவர்கள் திருடினர். இதை கண்காணிப்பு கேமரா மூலம் கடை உரிமையாளர்கள் பார்த்து அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து, ஞானசவுந்தரி, மதிவதனி ஆகிய இருவரையும் கைது செய்தார்.
    கடலூர் மாவட்டத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் உள்பட 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 540 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் கடலூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமாருக்கும் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

    அதோடு அவரது அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இது தவிர பீகார், கேரளாவில் இருந்து என்.எல்.சி. வந்த 3 பேருக்கும், கடலூரை சேர்ந்த பிரசவித்த தாய், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கடலூரை சேர்ந்த நோயாளி, சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 3 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 554 ஆக உயர்ந்தது.

    நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 157 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 15 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். கொரோனா பாதித்த 69 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 32 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். .
    குறிஞ்சிப்பாடி அருகே 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா வெங்கடாம்பேட்டை அடுத்த வேகாக்கொல்லை பிள்ளைபாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 34). பொக்லைன் எந்திர டிரைவர். இவரது மனைவி சுதா (வயது 30). இவர்களுக்கு திலோக்நாத் (4) என்கிற மகனும், ஐஸ்வர்யா (3) என்கிற மகளும் இருந்தனர்.

    கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. நேற்று மதியம் தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுதா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் சுதாவின் மாமனார் சண்முகம் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு அவரது பேரக்குழந்தைகள் இருவரும் பிணமாக கிடந்தனர். மேலும் மருகள் சுதா தனது சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வடலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நெய்வேலி உதவி போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா, வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சுதா தனது 2 குழந்தைகளையும் தனது ஜாக்கெட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்து, பின்னர் தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சுதாவின் கணவர் அய்யப்பன் நேற்று வீட்டில் இல்லை. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒடப்பன்குப்பத்தை சேர்ந்த சுதாவின் தந்தை சுப்பிரமணியன் போலீசில் அளித்த புகாரில், தனது பேரக்குழந்தைகள் மற்றும் மகளின் உடலில் காயங்கள் உள்ளது. எனவே அவர்களது சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, சுதாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், கடந்த வாரம் அவர் வீட்டுக்கு வந்து 3 பவுன் நகையை வாங்கி சென்றார். இந்த நிலையில் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு தனது குழந்தைகளுடன் சுதா உயிரிழந்துள்ளார். எனவே இவர்களது சாவில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுதாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று வடலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    கடலூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற பள்ளி மாணவி திடீரென இறந்தாள். இதனால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகள் கீர்த்திகா (வயது 10). இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு சந்திரன், தனது குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கீர்த்திகாவுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவளை, பெற்றோர் சிகிச்சைக்காக தூக்கணாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு டாக்டர் இல்லை. இதையடுத்து பணியில் இருந்த செவிலியர் ஒருவர், கீர்த்திகாவுக்கு ஊசி போட்டு, மாத்திரை கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது.

    இதையடுத்து சந்திரன், கீர்த்திகாவை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார். இதற்கிடையே அதிகாலை 2 மணி அளவில் கீர்த்திகாவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவளை பெற்றோர்கள், தூக்கணாம்பாக்கம் ஆரம்ப அரசு சுகாதார நிலையத்துக்கு மீண்டும் அழைத்து சென்றனர். அங்கு அவளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவள், மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே கீர்த்திகா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கீர்த்திகாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதற்கிடையே இதுகுறித்து அறிந்த சந்திரனின் உறவினர்கள் நேற்று மதியம் கடலூருக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கீர்த்திகாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறை முன்பு கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கீர்த்திகாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூக்கணாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இறந்த கீர்த்திகாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். அதற்கு போலீசார், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட சிறுமியின் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் ¼ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    விடியமலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது 2-ம் கட்ட பிரசாரத்தை கடலூர் மாவட்டத்தில் தொடங்கினார்.

    ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தற்போது நடக்கும் அ.தி.மு.க. ஆட்சி பாரதீய ஜனதா கட்சியின் சொல் கேட்டு நடக்கும் அடிமை ஆட்சி. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று கவர்னரை சந்தித்து அ.தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை மனுவாக கொடுத்துள்ளார். நீட்தேர்வுக்கு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது உள்ள எடப்பாடி அரசு நீட்தேர்வை ஆதரித்துள்ளது. இதனால் அனிதா உள்ளிட்ட 15 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    பா.ஜனதா அரசு தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் நிலையில் செயல்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து வாக்களித்தனர். இதனால் 38 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. இதைபோல் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் பொதுமக்களின் ஆதரவை பெற்று 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராவார்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டதிருத்த மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் பிரசாரத்தின் போது வேளாண் சட்டதிருத்த மசோதாவால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுவதாக என்னிடம் தெரிவித்தனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வெட்கமின்றி ஊழல் செய்கிறார்கள் எனக் கூறிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், திமுக-வும் அதிமுக-வும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி எனது பணியை சுலபமாக்கின்றனர் எனத் தெரவிதத்துள்ளார்.
    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கடலூரில் இன்று பேசும்போது ‘‘தற்போது வெட்கமின்றி பகிரங்கமாக ஊழல் செய்கிறார்கள். ஊழல் செய்துவிட்டு சிறை செல்வோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    வருமான வரி செலுத்தியது தொடர்பாக என்னிடம் வெள்ளை அறிக்கை கேட்கின்றனர். வருமான வரி தொடர்பாக வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்கவேண்டும்.

    ஊழல்வாதிகளை பதவியில் அமர விடக்கூடாது. திமுக-வும் அதிமுக-வும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி என் பணியை சுலபமாக்கிவிட்டனர்’’ என்றார்.

    அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது 97 பக்க ஊழல் புகார் பட்டியலை அளித்தனர்.

    அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக காலத்தில் விடப்பட்ட டெண்டர்களில்தான் ஊழல் எனப் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    அதிமுக அரசின் ஊழல்களை மக்களுக்கு எடுத்து கூறி பிரசாரம் செய்ய வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சிதம்பரம்:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர்   உதயநிதி ஸ்டாலின்   கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

    சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் எனக்கு திருப்தி அளித்துள்ளது. செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் வெள்ளம் அதிகமாக உள்ளது. அடுத்த முதல்-அமைச்சர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான். எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வை அடித்து விரட்டியது போல் சட்டமன்ற தேர்தலிலும் விரட்டியடிக்க வேண்டும்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் 200 தொகுதியில் வெற்றி என்றார். நான் கூறுகிறேன், 234 தொகுதிகளிலும் நமது கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும். அ.தி.மு.க. மீது மக்கள் கோபமாக உள்ளனர். கொரோனாவை பார்த்து பயந்து ஓடிய ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி.

    எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்- அமைச்சர் அல்ல. சசிகலாவின் காலை பிடித்து முதல்-அமைச்சர் ஆனவர். ஜெயலலிதா, சசிகலா, யாருக்கும் எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை.

    கட்சி தொண்டர்கள் கூட்டத்துக்கு வந்தோமா, போனோமா என்று இல்லாமல், அடுத்த 4 மாதங்களும் அ.தி.மு.க. அரசின் ஊழலை மக்களுக்கு எடுத்துக்கூறி பிரசாரம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவை வீடுகளில் இருந்தே காணும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    கடலூர் :

    உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 29-ந் தேதியும், ஆருத்ரா தரிசன விழா 30-ந் தேதியும் நடக்கிறது. இந்த விழாவில் பக்தர்களை அனுமதிக்கலாமா? என்பது குறித்து சர்ச்சை எழுந்தது.

    இது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளது. அதனை பின்பற்றி நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா நேற்று (21-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.

    28-ந் தேதி தங்க தேரோட்டத்தை நடத்த 100 பேருக்கும், 29-ந் தேதி நடராஜர் தேரோட்டத்துக்கு 1,000 பேர், சிவகாம சுந்தரி அம்மன் தேரோட்டத்துக்கு 400 பேர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேரோட்டங்களுக்கு தலா 200 பேர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    சிதம்பரம் நகரில் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு உரிமையாளர்கள் அனுமதிக்கக்கூடாது.

    ஆருத்ரா தரிசன விழாவை வீடுகளில் இருந்தே காணும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் விழாவில் பங்கேற்கக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
    ×