search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    லண்டனில் இருந்து கடலூர் வந்த 30 பேருக்கு கொரோனா பரிசோதனை

    லண்டனில் இருந்து கடலூர் வந்த 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
    கடலூர்:

    சீனாவில் கடந்த ஆண்டு உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது இதன் தாக்கம் குறைந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில்,ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளி வருகிறது. இது கொரோனா வைரசின் புதிய வடிவம் என்று டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து டெல்லி வழியாக தமிழகத்திற்கு வந்தவர்களுக்கு அதன் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டது.

    இதையடுத்து லண்டன் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் வருவோரை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டத்திற்கு வெளி நாடுகளில் இருந்து நேற்று வரை 1700 பேர் வந்துள்ளனர். அதில் லண்டனில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு 40 பேர் வந்ததாக பட்டியல் அளிக்கப்பட்டது.

    அந்த பட்டியலில் 6 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 4 பேரின் பெயர்கள் 2 முறை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் 30 பேர் லண்டனில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் கடலூரில் 4 பேர், குமராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், மற்றொருவர், விருத்தாசலம், சிதம்பரம் என பல்வேறு இடங்களில் உள்ளதை சுகாதாரத்துறையினர் கண்டறிந்தனர்.

    அவர்களுக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று ஸ்டிக்கர் ஒட்டவும் முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டனர். அதன்படி அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டனர். இதேபோல் பிற நாடுகளில் இருந்து வந்தவர்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். இருப்பினும் அவர்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×