search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் நடராஜர் கோவில்
    X
    சிதம்பரம் நடராஜர் கோவில்

    சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவுக்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

    சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவில் கலந்துகொள்ள வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் தங்கத் தேரோட்டத்தை நடத்த 100 நபர்களுக்கும், 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் நடராஜமூர்த்தி எழுந்தருளும் பிரதான தேரோட்டத்தை நடத்த ஆயிரம் பேருக்கும், சிவகாமசுந்தரி அம்மன் தேரோட்டத்தை நடத்த 400 நபர்களுக்கும், விநாயகர் தேரோட்டத்தை நடத்த 200 பேருக்கும், சுப்பிரமணியர் தேரோட்டத்தை நடத்த 200 நபர்களுக்கும், சண்டிகேஸ்வரர் தேரோட்டத்தை நடத்த 200 நபர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

    மேலும் 30-ந் தேதி கோவில் வளாகத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள, குறிப்பிட்ட நேர இடைவெளியை ஒதுக்கீடு செய்து, கோவில் வளாகத்தினுள் ஒரே சமயத்தில் 200 நபர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும், கொரோனா தடுப்பு தொடர்பாக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்படுவதை கோவில் நிர்வாகம் மற்றும் தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் ஆருத்ரா தரிசன மகோத்சவ விழாவில் கலந்து கொள்ள வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. நகருக்குள் வெளியூர் பக்தர்கள் ஆருத்ரா தரிசனத்திற்காக வருகை புரிவதை தடுக்கும் வகையில், சிதம்பரம் நகருக்குள் வரும் சாலைகளில் காவல் துறை மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே, சிதம்பரம் நகரில் உள்ள தங்கும் விடுதிகள், மடங்கள், திருமண மண்டபங்கள், சத்திரங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், வெளியூர் பக்தர்களைத் தங்க அனுமதிப்பதையும், அவர்களுக்கு முன்பதிவு செய்வதையும் தவிர்க்க வேண்டும். மேலும் ஆருத்ரா தரிசன விழாவினை பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே காணும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×