என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூர் கூத்தப்பாக்கத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் முதியவர் தவறி விழுந்தார்.
    • அதிர்ஷ்டவசமாக அந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    கடலூர்:

    கடலூர் கூத்தப்பாக்கம் அருகே சி .கே. சுப்பிரமணியன் நகர் உள்ளது. இந்த நகரில் கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடை பள்ளத்தில் மூடி உடைந்த நிலையில் அது மூடப்படாமல் உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    நேற்று இரவு அந்த வழியாக சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் அந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்துள்ளார். மேலும் அவர் பள்ளத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளார்.இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டனர் அதிர்ஷ்டவசமாக அந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அந்த பாதாள சாக்கடை பள்ளத்தை மூடி, அந்த பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சேத்தியாத்தோப்பில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபர் அங்கு நின்று ெகாண்டிருந்தார்.

    கடலூர்:

    சேத்தியாதோப்பு உட்கோட்ட டி.எஸ்.பி. ரூபன் குமார் உத்தரவின் பேரில் குற்ற பிரிவு தனிப்படை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன் மற்றும் போலீசார் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபர் அங்கு நின்று ெகாண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் பேசினார். இதை தொடர்ந்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் புவனகிரி அருகே சீயப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முரளிதரன் (வயது 20) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, முரளிதரனையும் கைது செய்தனர். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

    • சிதம்பரம் அருகே அரசு ஊழியர் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்.
    • செயற்கைக் கால் பொருத்திய மாற்று திறனாளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோழன் (வயது 45). இவர் காட்டுமன்னார்கோவில் சார்நிலை கருவூலத்தில் பணியாற்றி வந்தார். மேலும் செயற்கைக் கால் பொருத்திய மாற்று திறனாளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குமராட்சியில் உள்ள ராஜன் வாய்க்காலுக்கு தனியாக குளிக்க சென்றார். பின்னர் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரின் வேகம் அதிகரித்து எதிர்பாராத விதமாக சோழன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

    குளிக்கச் சென்ற சோழன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் வீட்டில் உள்ளவர்கள் ராஜன் வாய்க்கா லுக்கு சென்று அவரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நீரில் அடித்துச் செல்லப்பட்டு புதரில் மாட்டி இருந்த சோழனின் உடலை போராடி மீட்டனர். பின்னர் சோழ னின் உடலை குமராட்சி போலீஸ் நிலையத்திடம் ஒப்ப டைத்தனர். குமராட்சி போலீசார் சோழனின் உடலை பிரேத பரிசோ தனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • சிதம்பரம் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
    • மர்ம நபர்கள் இங்கு வந்து இரும்பு பொருட்களை திருடி செல்கின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் புதுச்சத்திரம் அருகே என்.ஓ.சி.எல். என்னை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் செயல்படாத அந்த நிலையத்தில் உள்ள இரும்பு பொருட்களை அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றும் அதனை சுற்றியுள்ள மர்ம நபர்கள் இங்கு வந்து இரும்பு பொருட்களை திருடி செல்கின்றனர். இதனால் அந்த எண்ணெய் நிலையத்தின் உரிமையாளர் அங்குள்ள இரும்பு பொருட்களை எல்லாம் புதுவையில் உள்ள மற்றொரு தொழிற்சாலைக்கு அப்புறப்படுத்த முயன்றார். இதனால் 2 டாரஸ் லாரி மூலம் புதுச்சத்திரத்தில் இருந்து சுமார் 120 டன் இரும்பு பொருட்களை ஏற்க்றி கொண்டு புதுவையில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது இந்த 2 லாரிகளும் கடலூர் வழியாக புதுவைக்கு செல்லாமல் வேப்பூர் வழியாக திருச்சி சாலையில் மாற்றி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 லாரிகளையும் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் டிரைவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்த தால் அவர்களை லாரியுடன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி, நாகப்பட்டினம் மாவட்டம் ஈசனூரை சேர்ந்த பவுல்ராஜ் மற்றும் ஆண்டாள் முரளி பகுதியை சேர்ந்த சுகதேவ் ஆகியோர் 2 லாரிகளில் ரூ.20 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்களை உரிய இடத்திற்கு கொண்டு செல்லாமல் வேறொரு இடத்துக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. உடனே 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்

    • நெய்வேலியில் கழுத்தை அறுத்து என்.எல்.சி. தொழிலாளி இறந்து கடந்தார்.
    • வீட்டின் கதவு வழியாக ரத்தம் வந்ததை அறிந்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தனர்.

    கடலூர்:

    நெய்வேலி புதுநகர்4-வது வட்டம் புண்ணாக்கு தெருவில் வசித்தவர் சண்முகம் . இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் காண்ட்ராக்ட் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு வந்ததும் தூங்கிவிட்டார்.இன்று காலை சுமார் எட்டு மணி அளவில் வீட்டின் கதவு வழியாக ரத்தம் வந்ததை அறிந்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த நிலையில் கழுத்து அறுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சண்முகம் பிணமாக கிடந்தார். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். யாராவது சண்முகத்தை கொலை செய்தார்களா? தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடலூர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழ்பாகு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சகுந்தலா (வயது 55). சம்பவத்தன்று இவர் சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை மர்ம மனிதர்கள் பறித்துச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது குறித்து சகுந்தலா, சிதம்பரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே கோவில் திருவிழாவில் 2 தரப்பினர் மோதிக்கொண்டனர்.
    • மோதலில் காயமடைந்த சரண்யா, கிஷோர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 23). இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சம்பவத்தன்று மஞ்சள் விரட்டு விழா முன்னிட்டு சாமி ஊர்வலம் சென்றது. அப்போது சாமிஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம் சாமியுடன் வந்த சிலர் ஓரமாக செல்லும்படி தெரிவித்தனர்.

    அப்போது திடீரென்று சரண்யாவுக்கும் அந்த நபர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.இதில் சரண்யாவை 3 பேர் திடீரென்று கல்லால் தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது‌. மேலும் இந்த தகராறில் கிஷோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சரண்யா, கிஷோர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த கிஷோர், வீரமணி, வீரவேல், உள்ளிட்ட சிலர் மற்றும் கிஷோர் கொடுத்த புகாரின் பேரில் சைமன், ஜோசப், சச்சின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

    • விருத்தாசலத்தில் நீர்நிைலகளில் ஆக்கிரமிக்கப்பட்ட வீடு-கடைகள் அகற்றப்பட்டது.
    • காவல் உதவி கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட ஆலடி ரோட்டில் உள்ள நீர் ஓடையை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாக வீடு மற்றும் கடைகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் பேரில், அதனை நிறைவேற்றும் வகையில் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் தனபதி தலைமையிலான குழுவினர் ஆக்கிரமிப்பில் இருந்த வீடு மற்றும் கடைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாழடைந்த ஒரு வீடு மற்றும் ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றம் செய்தனர். ஆக்கிரமிப்பு செய்யும் பணி அடுத்துவரும் நாட்களில் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு செய்யும் பணி நடைபெறுகையில் வட்டாட்சியரிடம் பெண்கள், வீடுகளை இடித்தால், தங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்படும் எனவும்தங்களுக்கு போக்கிடம் இல்லை எனவும் கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில்நகராட்சி ஊழியர்கள், மின்சார ஊழியர்கள், வருவாய் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். காவல் உதவி கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வடலூரில் இன்று மின்சாரம் தாக்கி பெயிண்டர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    • வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அவரது மகன் பிரான்சிஸ் (வயது 28). பெயிண்டர். இவர் இன்று காலை வடலூர் கும்பகோணம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக உயர் அழுத்த மின்கம்பி சென்றது. இதை கவனிக்காமல் பிரான்சிஸ் குனிந்து நிமிர்ந்தபோது அவரது தலை மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி பிரான்சிஸ் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலூர் அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
    • குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் பாவாடை. அவரது மனைவி ராஜலட்சுமி. இந்த பாவாடைக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி கணவன் மனைவிக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவர் பாவாடை மது அருந்தி வீட்டுக்கு வந்த போது மீண்டும் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ராஜலட்சுமி வீட்டில் விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்தார்‌.

    இதனை பார்த்த அவர்களது உறவினர்கள் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திட்டக்குடி அருகே போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
    • இருவீட்டு பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுநத்தம் கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது27). அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் கவுசல்யா (23) இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். அப்போது 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதனால் கவுசல்யா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அதிர்ச்சி அடைந்த கவுசல்யா தன்னை திருமணம் செய்துகொள்ள முருகானந்தத்தை வற்புறுத்தி உள்ளார். ஆனால் காதலர்கள் 2 பேரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த நிலையில் முருகானந்தம் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

    எனவே ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் கவுசல்யா தரப்பினர் புகார் அளித்தனர். இதுகுறித்து திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப் இன்ஸ்பெக்டர் தனசீலன் ஆகியோர் இருவீட்டு பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தினர். பின்னர் போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு ஆவினங்குடி போலீஸ் நிலைத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அதன்பின்னர் கவுசல்யாவின் பெற்றோர், உறவினர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    • கடலூர் அருகே தனியார் நிதி நிறுவனம் நெருக்கடியால் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
    • வீடு கட்டுவதற்கு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 6 லட்சம் கடன் வாங்கி இருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே அணுகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி ஜெயந்தி (வயது 45).இவர்கள் வீடு கட்டுவதற்கு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 6 லட்சம் கடன் வாங்கி இருந்தனர். இதற்காக அவர்கள் மாத தவணை கட்டி வந்தனர். கடந்த மாதம் தவணை கட்டவில்லை. இதனை அறிந்த நிதிநிறுவனத்தினர் நேராக செல்வராஜ் வீட்டுக்கு விரைந்தனர். அப்போது செல்வராஜ், அவரது மனைவி யந்தி வீட்டில் இல்லை. அங்கு ஜெயந்தியின் மகள் மட்டும் இருந்தார். 

    உடனே நிதிநிறுவனத்தினர் ஜெயந்தி மகளிடம் தவணை கட்டுவதற்கு குறித்து தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர் மாலைநேரம் ஜெயந்தி தனது வீட்டுக்கு வந்தார். அப்போது நடந்த விவரம் குறித்து மகள் கூறினார். இதனால் ஜெயந்தி மனமுடைந்தார். நிதி நிறுவனம் பணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதால் தற்கொலை செய்வது என தீர்மானித்தார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜெயந்தி தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்கான கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

    ×