என் மலர்tooltip icon

    கடலூர்

    • நேற்று முன்தினம் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், அஷ்டத் பலி, புற்று மண் எடுத்தல், காப்பு கட்டுதல் ஆகியவை நடந்தது.
    • நாளை முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு மதுரா துண்டுக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது அழகுமுத்து மாரியம்மன் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கணபதி, முருகன், தட்சணாமூர்த்தி, நொண்டிவீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான யாக சாலையில் நேற்று முன்தினம் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், அஷ்டத் பலி, புற்று மண் எடுத்தல், காப்பு கட்டுதல் ஆகியவை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை அனுக்ஞை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் நடந்தது. மாலைஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம், பஞ்சசூத்ர பாராயணம், நவக்கிரஹ பூஜை. நாடி சந்தானம், திரவிய ஹோமம், தேவாரம் திருவாசகம், மந்தாபுஷ்பம், பூர்ணாஹூதி, மஹாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை, லஷ்மி பூஜை, தன பூஜை, சாமிக்கு காப்பு கட்டுதல், தத்துவார்ச்சனை ரக்ஷாபந்தனம், ஸ்பர்ணாஹூதி, யாத்ரா தானம், தீபாராதனை ஆகியவை நடைபெற்று .

    10 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கஅஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி எனவிண் அதிர கோஷம் எழுப்பினர். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,கன்டோன்மென்ட் சண்முகம், சத்யா பன்னீர்செல்வம், பா.ம.க. மாவட்ட தலைவர் வடக்குத்து ஜெகன், வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் குபேரன், சாத்திப்பட்டு மதுராவில் உள்ள 16 கிராம மக்கள் ஊர் முக்கியஸ்தர்கள், கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர், இளைஞர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. இரவு வீதி உலா காட்சி நடக்கிறது. நாளை முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சாத்திப்பட்டு துண்டுகாடு கிராமவாசிகள், விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துண்டு காடு கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்காதை முன்னிட்டு காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இரண்டு பிரம்மோற்சவ விழா மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.
    • மகா சாந்தி திருமஞ்சனம் ஹோமம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் வருடம் தோறும் இரண்டு பிரம்மோற்சவ விழா மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பாலாலயம் கடந்த 5-ந்தேதி பாலாலயம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து பகவத் பிரார்த்தனை புண்ணியாவாஜனம், ஹோமம், பூர்ணாஹதி மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டன. நேற்று 6-ந் தேதி காலை புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், ஹோமம், பூர்ணா ஹதி, மாலை மகா சாந்தி ஹோமம், மகா சாந்தி திருமஞ்சனம் ஹோமம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது. இறுதி நாளான இன்று அக்னி பிரவேசம், மகா பூர்ணாஹதி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். இதனைத் தொடர்ந்து பாலாலயம் நடைபெற்று கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.
    • தாய்மார்களின் விபரம் குறித்து சுகாதார துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகப்பேறு இறப்பு மற்றும் சிசு மரணம் ஆகியவற்றை முற்றிலும் வராமல் தடுக்கும் விதமாக 24 மணி நேர சேவை மையம் கடலூர் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் வம்சம்கடலூர் என்ற திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் பொதுப்பணி த்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்யாதவ், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா.இராஜேந்திரன், இராதாகிருஷ்ணன், சிந்தனைச் செல்வன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. 24 மணி நேர மகப்பேறு சேவை மையத்திற்கென பிரத்தியோகமாக தொலைபேசி எண்கள் ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. அதன்படி தொலைபேசி எண்கள் 7598512042, 7598512045 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்திய மருத்துவ சங்கம், இந்திய குழந்தைகள் மருத்துவ சங்க உறுப்பினர்களிடம் தங்களது மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களின் விபரம் குறித்து சுகாதார துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

    • வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
    • வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி தற்போது வரை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து 104 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் வெயிலில் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் காலை 11.30 மணி அளவில் 101.48 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது. இதன் காரணமாக வழக்கம் போல் அனல் காற்று வீசி வந்த நிலையில் மதியம் திடீரென்று வானிலை மாற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கொட்டி தீர்த்த மழையாக மாறியது. மேலும் இடி மின்னல் மற்றும் காற்று வீசி வந்ததால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டன. இந்த மின்தடை சுமார் 4 முதல் 5 மணி நேரம் நீடித்தது.

    சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்திருந்த நிலையில், இந்த திடீர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடும் வெப்ப சலனம் மற்றும் வெயிலின் தாக்கம் 104 டிகிரிக்கு மேல் இருந்து வந்த நிலையில் ஏன் திடீர் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது என வானிலையாளர் பாலமுரு கனிடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வழக்கத்தை விட அதிக அளவில் வெப்ப சலனம் ஏற்பட்டு சுட்டெரிரக்கும் வெயில் இருந்து வந்தது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி வரும் நிலையில் தமிழகத்தில் வெப்பம் குறைந்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று கேரள மாநிலத்தில் தொடங்காத காரணத்தினாலும் கடலில் ஈர பதக் காற்று நேரம் தவறி வருவதால் கடும் வெப்பம் நிலவி வந்தது. ஆனால் நேற்று மதியம் கிழக்கிலிருந்து வரக்கூடிய ஈரப்பத காற்று சரியான நேரத்திற்கு உள்ளே வந்தது. மேலும் அதிக வெப்ப சலனம் இருந்து வந்த நிலையில் , திடீரென்று ஈரப்பதற்காற்று உள்ளே வந்ததால் வானிலை மாற்றம் ஏற்பட்டு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

    பலத்த காற்று ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் எப்போதும் மேற்கு திசையில் இருந்து வரக்கூடிய வறண்ட காற்று வெப்ப சலனமாக மாறி அனல் காற்று அதிகரிப்பதாகும். மேலும் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வெப்ப சலனம் அதிகமாக உள்ள நேரத்தில் திடீர் மழை ஏற்பட்டபோது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது குறிப்பிடத்தக்கதாகும் என தெரிவித்தார். கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வழக்கமான விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சுமார் 500- க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேப்பூர் - 75.0 பண்ருட்டி - 71.0 கீழச்செருவாய் - 36.0 லக்கூர் - 19.4 கலெக்டர் அலுவலகம் - 18.0 கடலூர் - 16.4 குப்பநத்தம் - 12.8 மீ-மாத்தூர் - 12.0 வானமாதேவி - 11.2 பெல்லாந்துறை - 9.6 விருத்தாசலம் - 9.0 வடக்குத்து - 8.3 எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 6.0 காட்டுமயிலூர் - 5.0 தொழுதூர் - 4.0 கொத்தவாச்சேரி - 3.0 குறிஞ்சிப்பாடி - 3.0 பரங்கிப்பேட்டை - 2.8 அண்ணாமலைநகர் - 2.2 புவனகிரி - 2.0 சிதம்பரம் - 1.6 என மொத்தம் - 328.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது

    • கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பயன்படுத்தி வரும் பாதையில் 15 அடி ஆழமான வாய்க்கால் உள்ளது
    • ஆபத்தான பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் கிறிஸ்தவ மதத்தவ ர்களுக்கான சடலத்தை புதைக்கும் சுடுகாடு கே.கே. நகர் மேற்கு பகுதியில் உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல கடந்த 50 ஆண்டுகளு க்கும் மேலாக இவர்கள் பயன்படுத்தி வரும் பாதையில் 15 அடி ஆழமான வாய்க்கால் உள்ளது ஒவ்வொரு முறையும் சடலத்தை சுமந்து செல்லும் பொழுது 15 அடி வாய்க்காலில் தண்ணீரில் மிதந்து சென்று எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாலம் கட்டித் தர கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் மாவ ட்ட நிர்வாகம் இது வரை பாலம் கட்டித் தரவில்லை எனவும் இதனால் ஒவ்வொரு முறையும் உடலை 15 அடி ஆழமான ஆபத்தான பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். தற்ேபாது அப்பகுதியில் இறந்த கூலித் தொழிலாளி மரியதாஸ் உடலை 15 அடி ஆழமான வாய்க்கால் பள்ளத்தில் இறங்கி எடுத்துச் சென்ற காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை அடுத்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சப் -இன்ஸ்பெக்டர் மாசிலமணி மற்றும் போலிசார் கருங்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை இருந்தது.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உத்தரவின்பேரில் சப் -இன்ஸ்பெக்டர் மாசிலமணி மற்றும் போலிசார் கருங்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விருத்தாசலத்திலிருந்து ேஜாதிராமலிங்கம் மற்றும் அவரது உறவினர் சுந்தரமூர்த்தி உடன் மோட்டார் சைக்கிளில் பொருட்களுடன் கருங்குழியில் உள்ள தனது கடைக்கு வந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரிடம் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை இருந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து ஜோதிராமலிங்கம் மற்றும் சுந்தரமூர்த்தியை கைது செய்தனர்.

    • நேற்று இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்தது.
    • இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்தது. இதனால் ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கபட்டது. மேலும் வாகையூரில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். லேசான மழை பெய்தால் இந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து விடுகின்றனர். இதனையடுத்து அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் நாள் கணக்கில் மின்சாரம் வழங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து மின்சார துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • குழந்தைகள் விடுதிகள் உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளன.
    • அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதிகளை நடத்த வேண்டும்.

    கடலூர்:

    தமிழ்நாடு சிறார் மற்றும் பெண்களுக்கான வீடுகள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதுகுறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி க்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:- 

    இச்சட்டத்தின்படி தனியாரால் நடத்தப்படும் குழந்தைகள் விடுதிகள் உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அனைத்து தனியார் குழந்தைகள் விடுதிகள் பதிவு பெற உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 18 தனியார் குழந்தைகள் விடுதிகள் தவிர வேறு எவரும் உரிமம் பெற கடலூர் மாவட்ட கலெக்டரை அணுகவில்லை. தற்போது தனியார் குழந்தைகள் விடுதிகள் சுகாதாரமற்ற முறையில் இயங்குவதாகவும், விடுதியில் தங்கியுள்ள வர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் பல விடுதிகள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதும், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களின் சேர்க்கை முறையாக பதிவு செய்யாமல் இருப்பதும் தெரியவந்தது. முறையாக உரிமம் பெறாமல் இயங்கிவரும் விடுதிகள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு துரிதநட வடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

    தமிழ்நாடு சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான வீடுகள் மற்றும் விடுதிகள் முறைபடுத்துதல், குழந்தைகள் விடுதிகளை நடத்திட விடுதி உரிமையாளர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விடுதியின் உரிமம் பெற, தீயணைப்பு சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ், கட்டிடம் உறுதித்தன்மை சான்று ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதிகளை நடத்த வேண்டும். விடுதியில் சி.சி.டிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். விடுதி மேலாளர் மற்றும் விடுதி பாதுகாவலர் காவல் துறையினரால் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பதிவுபெற்ற மருத்துவர் மூலம் உடற்தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும். ஒருவர் விடுதியில் தங்குவதற்கு சராசரியாக 40 சதுர அடி இடத்தினை ஒதுக்கீடு செய்து தருவதை விடுதி மேலாளர் உறுதி செய்ய வேண்டும். மேலும் தனிக்குடும்பமாக வசிப்பதற்கென்று உள்ள தனி வீடுகளை வாடகைக்கு எடுத்து அதில் எந்த உரிமமும் பெறாமல் விடுதியாக உரிய உரிமம் மற்றும் போதிய வசதிகள் இல்லாமல் செயல்படுவது கண்டறிய ப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறினார்.

    • நேற்று இரவு புவனேஸ்வரிக்கு அருள் வந்து சாமி ஆடி உள்ளார்.
    • 10 அடி ஆழத்தில் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பத்தை சேர்ந்தவர் அமரேசன் (வயது 40), இவரது மனைவி புவனேஸ்வரி (35). இவர்கள் அதே பகுதியில் பச்சைவாழி அம்மன்கோவில் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் உள்ள பழமையான வேப்பமரம் ஒன்றில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பால் வடிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் நேற்று இரவு புவனேஸ்வரிக்கு அருள் வந்து சாமி ஆடி உள்ளார்.

    சாமி ஆடியபோது வேப்பமரத்தின் அடியில் பூமியில் லிங்கத் திருமேனியாக சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரை வெளியே எடுத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பக்தர்கள் திரண்டு வேப்ப மரத்தின் அடியில் பள்ளம் தோன்டியுள்ளனர். 10 அடி ஆழத்தில் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. இதனை யாரும் எடுக்க கூடாது என்று சாமி ஆடி புவனேஸ்வரி கூறினார். மேலும் பக்தர்கள் சிவாய நம, நம சிவாயம் என விண் அதிர கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள வாகையூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்கிற செந்தாமரை (வயது 43). இவர் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறி விட்டு திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    உடனே பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிறுமி இறந்தார். இதனை தொடர்ந்து கைதான செந்திலுக்கு ஜாமீன் வழங்க கூடாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பெண்கள் திட்டக்குடி-ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் வாகையூரில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த ராமநத்தம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த மறியல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மோகன்ராஜ் ஜவான் பவன் கெடிலம் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார்.
    • திருநங்கை ஒருவர் மோகன்ராஜ் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடினார்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 26). இவர் கடலூர் ஜவான் பவன் கெடிலம் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருநங்கை ஒருவர் திடீரென்று மோகன்ராஜ் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் திருநங்கை பிடிப்பதற்கு முயன்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோகன்ராஜிடம் நகையை பறித்தது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளத்தைச் சேர்ந்த திருநங்கை என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, 2 பவுன் நகையை மீட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை அமைக்கும் பணி கடந்த 15 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
    • சாலை நடுவே தலைக்குப் புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கடலூர்:

    விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை அமைக்கும் பணி கடந்த 15 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணி அளவில் காடாம்புலியூரில் இருந்து நெய்வேலி இந்திரா நகர் நோக்கி நெடுஞ்சாலை பணியாளர்கள் கார் வேகமாக வந்துகொண்டிருந்தது. காடாம்புலியூர் அடுத்த கீழக்கொல்லை பஸ் நிறுத்தம் அருகே அந்த வாகனம் வந்து கொண்டிருந்த போது குறுக்கே வந்தமோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.

    இதனால் நெடுஞ்சாலை பணியாளர் வந்த வாகனம் சாலை நடுவே தலைக்குப் புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர், குறுக்கே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் காயம் ஏதும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×