search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cool air"

    • சில நாட்களாக 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது.
    • பொதுமக்கள் நடமாட்டம் பெருமளவில் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் வெப்ப சலனம் காரணமாக அனல் காற்று வீசி வந்தது. கடந்த சில நாட்களாக 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் மதிய நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் பெருமளவில் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இதனையடுத்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 7-ம் தேதியான இன்று திறக்க இருந்த அனைத்து பள்ளிகளும் வருகிற 12 மற்றும் 14 - ம்தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து கடும் சேதத்தை விளைவித்தது. இதனை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதன்பின்னர் விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தனர். இதனைதொடர்ந்து மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்த காரணத்தினால் கடும் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோன்று நேற்றும் காலை முதல் மாலை நேரங்களில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் மாலை முதல் குளிர்ந்த காற்று வீசதொடங்கி மலை பெய்தது. இந்த மழை கடலூர் மாவட்டத்தில் காட்டு மயிலூர், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, வேப்பூர், சேத்தியாதோப்பு, குறிஞ்சிப்பாடி, வடக்குத்து, கடலூர், அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்தது. இதனால் 2-வது நாளாக கடலூர் மாவட்டத்தில் மழை பதிவானது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஆங்காங்கே விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளையும் மும்முரமாக மேற்கொண்டு வந்ததும் காண முடிந்தது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:-

    காட்டுமயிலூர் - 10.0 மி.மீ, மே.மாத்தூர் - 10.0 மி.மீ, பரங்கிப்பேட்டை- 8.6 மி.மீ, பண்ருட்டி- 6.0 மி.மீ, வேப்பூர் - 6.0 மி.மீ, சேத்தியாதோப்பு - 5.2 மி.மீ, குறிஞ்சிப்பாடி -3.5 மி.மீ, வடகுத்து -3.0 மி.மீ, வானமாதேவி -3.0 மி.மீ, கடலூர் - 3.0 மி.மீ, ஆட்சியர் அலுவலகம் -1.9 மி.மீ, அண்ணாமலைநகர் -1.7 மி.மீ, என மொத்தம் - 61.90 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×