என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கடந்த 2021 ஆம் ஆண்டு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
    • பிரதமர் மோடி பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார்.

    விவசாயத்தில் பங்களிப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வென்ற கோவையை சேர்ந்த பாப்பம்மாள் (109) பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 100 வயதை கடந்தும் இயயற்கை விவசாயம், ஆரோக்கிய உணவு பழக்கம் என சுறுசுறுப்பாக வலம் வந்தவர் ஆவார்.

    சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் கொண்டிருந்த பாப்பம்மாள் தனது வாழ்க்கையை விவசாயத்திற்காக அர்ப்பணித்தார். விவசாயத்தை முறையாக கற்றுக் கொள்ள தமிழக வேளான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இதே பல்கலைக்கழகத்தில் விவாதக் குழு அமைப்பாளராகவும் இருந்தார்.

    விவயாசயத்தில் இவர் செய்த சாதனைகளை பாராட்டும் வகையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. கோவையை அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வந்த பாப்பம்மாளை கடந்த 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி கோவை வந்த போது, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். 

    • மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
    • வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

    நான் விமானத்தில் விமானியாக (பைலட்) பணியாற்றினேன். போட்டி தேர்வில் பங்கேற்க விரும்பியதால், நான் பார்த்து வந்த விமானி வேலையை விட்டு விட்டு, போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தேன்.

    இந்த நிலையில் அவினாசி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் என்ஜினீயரான ஆனந்தராஜ் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார்.

    நாங்கள் கடந்த 2023-ம் ஆண்டு முதல் நெருங்கி பழகி வந்தோம். இதனை அறிந்த எனது தந்தை, ஆனந்தராஜை அழைத்து கேட்டார்.

    அதற்கு அவர், தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், தற்போது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    அத்துடன் இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருவதாகவும், அது முடிந்ததும் உங்களது மகளை திருமணம் செய்து கொள்வதாகவும் எனது தந்தையிடம் தெரிவித்தார்.

    இதனை எனது தந்தையும் நம்பினார். அத்துடன் நாங்கள் பழகுவதையும் தடுக்கவில்லை.

    எனது தந்தை கார் வாங்குவதற்காக ரூ.16 லட்சம் வைத்திருந்தார்.

    கார் வாங்குவது தொடர்பாக எனது தந்தை ஆனந்த ராஜிடம் தெரிவித்தார். அதற்கு அவர் நான் உங்களுக்கு கூடுதலாக பணம் போட்டு வேறு ஒரு புதிய காரை வாங்கி தருவதாக தெரிவித்து, அவரிடம் இருந்த பணத்தையும் வாங்கி கொண்டார். ஆனால் கார் வாங்கி கொடுக்கவில்லை.

    கடந்த ஜூலை மாதம் ஆனந்தராஜ், என்னை அவர் குடியிருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து எனக்கு குளிர்பானம் கொடுத்தார். நானும் அதனை குடித்தேன்.

    அதனை தொடர்ந்து ஆனந்தராஜ் நாம் தான் திருமணம் செய்ய போகிறோமோ இருவரும் உல்லாசம் அனுபவிக்கலாம் என தெரிவித்தார்.

    இதை கேட்டு அதிர்ச்சியான நான், அதெல்லாம் திருமணத்திற்கு பிறகு தான் என மறுத்தேன். ஆனால் ஆனந்தராஜ் வலுக்கட்டாயமாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

    மேலும் இதனை வீடியோவாகவும் எடுத்து, அதனை லேப்-டாப்பிலும் பதிவு செய்துள்ளார். ஆனால் அது எனக்கு தெரியாது.

    தொடர்ந்து நான் ஆனந்தராஜை சந்தித்து, என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். அத்துடன் என்னை ஜாதியை சொல்லியும் திட்டினார்.

    எனவே என்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த என்ஜினீயர் ஆனந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

    அவரது புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, என்ஜினீயர் ஆனந்தராஜ் மீது கற்பழிப்பு, வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.

    • பெண்கள் தங்கள் புகைப்படங்களை பிறருக்கு அனுப்பக்கூடாது.
    • வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ், புரொபைல் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றனர்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தனுஷ்வெங்கட் (வயது 20) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    அதே நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் பணியாற்றினார். ஒரே நிறுவனத்தில் பணியாற்று வதால் 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தனுஷ்வெங்கட் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறினார். முதலில் அந்த பெண், காதலை ஏற்க மறுத்தார். ஆனால் தனுஷ்வெங்கட், விடாமல் காதல் வலை வீசினார்.

    தனுஷ்வெங்கட்டின் ஆசைவார்த்தைகளில் மயங்கி அந்த பெண்ணும் அவரை காதலிக்கத் தொடங்கினார். நேரில் சந்தித்து பேசுவது மட்டுமல்லாமல் வீடுகளுக்கு திரும்பியபிறகு அவர்கள் செல்போனிலும் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு தனுஷ்வெங்கட், அந்த பெண்ணை வாட்ஸ்-அப் அழைப்பில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணை ஆடையின்றி பார்க்க விரும்புவதாக கூறி உள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் தானே உன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், பிறகு ஏன் தயங்குகிறாய் என கூறி கெஞ்சி உள்ளார்.

    அந்த பெண்ணும் தனுஷ்வெங்கட்டை நம்பி, அவர் கூறியதுபோல வாட்ஸ்-அப் அழைப்பில் ஆபாசமாக நின்றுள்ளார். அதனை அந்த பெண்ணுக்கு தெரியாமலேயே தனுஷ்வெங்கட் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். அதன்பின் காதலியின் ஆபாச வீடியோவை அடிக்கடி பார்த்து ரசித்துள்ளார்.

    அவர் ரசித்தது மட்டுமல்லாமல் தனது நண்பர் ஒருவருக்கும் காதலியின் ஆபாச வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த நண்பர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். காரணம் அவர் அந்த இளம்பெண்ணின் உறவினர் ஆவார். உடனே அவர் ஆபாச வீடியோ குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பெண்ணை கண்டித்தனர். அப்போது தன்னை ஏமாற்றி தனுஷ்வெங்கட் ஆபாச படம் எடுத்து விட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இதையடுத்து பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு ஏற்பட்ட துயர சம்பவம் குறித்து கோவை மேற்கு மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தனுஷ்வெங்கட்டை கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் தனுஷ்வெங்கட்டின் நடவடிக்கைகளால் பிடிக்காமல் அவர் காதலித்த பெண் அவரை விலகிச் சென்றுள்ளார். மீண்டும் அந்த பெண், தன்னுடன் பழக வேண்டும் என்று எதிர்பார்த்த தனுஷ்வெங்கட், பெண்ணை மிரட்டும் வகையில் அவரது உறவினரான தனது நண்பருக்கு ஆபாச வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். தற்போது போலீசில் சிக்கிக் கொண்டார்.

    இதுபற்றி போலீசார் கூறும்போது தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் பெருகி விட்டன. எனவே பெண்கள் தங்கள் புகைப்படங்களை பிறருக்கு அனுப்பக்கூடாது. வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ், புரொபைல் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றனர்.

    • பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இத்திருவிழா உற்சாகமாக நடைபெற உள்ளது.
    • லுலு ஹைப்பர் மார்க்கெட், பிரத்யேக சலுகைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு அற்புதமான தள்ளுபடிகளுடன் தயாராகி வருகிறது.

    கோயம்புத்தூர் லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேக் மிக்சிங் திருவிழா வரும் செப்டம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது.

    பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இத்திருவிழா உற்சாகமாக நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற Cookd TVன் சிஇஓ அதித்தியன் கலந்து கொண்ட சிறப்பிக்க உள்ளார்.

    கொண்டாட்டம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமான பாரம்பரிய கேக் மிக்சிங் விழா, வரவிருக்கும் விடுமுறை காலத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைய இருக்கிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், லூலு ஹைப்பர்மார்க்கெட் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பண்டிகைக்கால அனுபவத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை இந்த விழா சிறப்பித்துக் காட்டுகிறது.

    அதே நேரத்தில், லுலு டோனட் விழாவை நடத்துகிறது. இது அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாடிக்கையாளர்கள் கிளாசிக் சுவைகள் முதல் அற்புதமான புதிய வகைகள் வரை டோனட்களின் மகிழ்ச்சிகரமான வகைப்படுத்தலில் ஈடுபடலாம் என்றும் இது அனைத்து இனிப்பு பிரியர்களுக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத.

    நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், லுலு ஹைப்பர் மார்க்கெட், பிரத்யேக சலுகைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு அற்புதமான தள்ளுபடிகளுடன் தயாராகி வருகிறது.

    பண்டிகை இனிப்புகள் முதல் வீட்டிற்குத் தேவையான பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல வகைகளில் நம்பமுடியாத சலுகைகளை வாங்க இருக்கிறது.

    லுலுவின் நவராத்திரி மற்றும் தீபாவளி ஆஃபர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருங்கள் மற்றும் பண்டிகை காலத்தின் உற்சாகத்தில் எங்களுடன் இணைந்திருங்கள் என்று லுலு ஹைப்பர் மாக்கெட் தெரிவித்துள்ளது.

    லுலு ஹைப்பர் மார்க்கெட் கோயம்புத்தூர் உங்கள் அனைத்து ஷாப்பிங் தேவைகளுக்கும், முறியடிக்க முடியாத சலுகைகள் மற்றும் மகிழ்ச்சிகரமான அனுபவங்களுடன், ஒரே இடத்தில் இருக்கும் இடமாகத் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
    • வடசென்னை, ஓசூர், கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படுகிறது.

    கோவை:

    கோவை விளாங்குறிச்சி அருகே டைட்டில் பார்க் வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணிகளை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவையில் உள்ள மிகப்பெரிய துறை இது. பல்வேறு காரணங்களால் கட்டிடம் தாமதம் ஆகியது. இருந்தாலும் உரிய விதிமுறைகள், சான்றிதழ்கள் பெற்று இந்த கட்டிடத்தை திறக்க இருக்கிறோம். இந்த தகவல் தொழில்நுட்ப கட்டிடம் திறக்கப்படுவதன் மூலம் 3,250-க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும்.

    இதில் ஒரு சில நிறுவனங்கள் இடத்தை முழுமையாக கேட்கின்றன. ஆனால் அது நியாயமாக இருக்காது. இதற்கு என்று விதிமுறை உருவாக்க தெரிவித்துள்ளேன்.

    அதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு என்று 15 ஆயிரம் சதுரடியாவது வழங்கப்பட வேண்டும் என சொல்லியிருக்கிறேன்.

    தமிழகத்தில் ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. வடசென்னை, ஓசூர், கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படுகிறது.

    பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீங்கள் நிதி துறையில் சீர்திருத்தம் செய்த மாதிரி, தகவல் தொழில்நுட்பத் துறையில் சீர் திருத்தம் செய்ய வேண்டும்.

    அதற்காகவே உங்களை அங்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார். அதன்படி நான் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். தகவல் தொழில்நுட்ப துறையில் சில இடங்களில், அணுகு முறையில் திருத்தம் தேவைபடுகின்றது.

    நான் வேறு துறையில் இருப்பதால் ஜி.எஸ்.டி குறித்து கருத்து கூற விரும்பவில்லை. நான் உறுப்பினராக இருந்த போது ஜி.எஸ்.டி. திட்டமிடுதலில் உள்ள குறைகளை சுட்டிகாட்டி இருக்கிறேன்.

    ஜி.எஸ்.டி. விவகாரத்தில் மத்திய அரசின் மனப்பான்மை சரியாக இருக்க வேண்டும். ஜி.எஸ்.டியில் உள்ள தவறுகளை வேகமாக சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது எல்காட் நிறுவன மேலாண் இயக்குனர் கண்ணன், கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • செந்தில் பாலாஜி, மாநில அரசின் ஆதரவை பெற்ற அதிகாரமிக்க அமைச்சராக இருந்தவர்.
    • சமூக ஊடகங்களில் போடப்படுகின்ற சிறு கருத்துக்கு கூட இந்த அரசு அதீத நடவடிக்கைகளை எடுக்கிறது.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கியிருப்பது குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள நபர்கள் அனைவரும் வழக்கு விசாரணையை விரைந்து நடத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் சாட்சிகளை அவர்கள் மிரட்டுவது என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போது இருக்கக்கூடிய தி.மு.க. அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை எப்போதும் நியாயமான விசாரணைக்கு அனுமதிப்பது இல்லை. இது அவர்களுடைய வரலாறு.

    தி.மு.க. அரசு இன்று அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப்போகாமல் குறிப்பாக குற்றச்சாட்டு கொடுத்திருப்பவர்களை மிரட்டுவதோ, வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபடவோ கூடாது என்பது எங்களின் எண்ணம்.

    செந்தில் பாலாஜி மீது என்னென்ன ஊழல் வழக்குகள் உள்ளன என்பதை வேறு யாரோ சொல்லவில்லை. அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை முதலமைச்சர் மறந்திருக்கலாம். ஆனால் மக்கள் மறக்கமாட்டார்கள். இது ஆயிரக்கணக்கானோர் சம்பந்தப்பட்ட வழக்கு. நீதிமன்றமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு இந்த அரசு செயல்பட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

    செந்தில் பாலாஜி, மாநில அரசின் ஆதரவை பெற்ற அதிகாரமிக்க அமைச்சராக இருந்தவர். இவர் உள்ளேயே இருந்தால் கூட வெளியில் அரசியல் நடத்தியவர் என ஊடகங்கள் சொன்னதை நாங்கள் பார்த்திருக்கிறோம். மீண்டும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், செல்வாக்கு மிக்க பதவிக்கு வந்தால் நிச்சயமாக அது சாட்சிகளை பாதிக்கும். எனவே முதலமைச்சர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த அரசு ஊழலுடன் சமரசம் செய்து கொள்ளாது என எப்படி முதலமைச்சர் பேசிக் கொண்டு இருக்கிறாரோ அதனை செயலிலும் காட்ட வேண்டும்.

    சமூக ஊடகங்களில் போடப்படுகின்ற சிறு கருத்துக்கு கூட இந்த அரசு அதீத நடவடிக்கைகளை எடுக்கிறது. கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிற தி.மு.க. அரசுக்கு அவர்கள் மீதே நம்பிக்கை இல்லை. சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகளை போட்டு தி.மு.க. அரசு துஷ்பிரயோகம் செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
    • முதலமைச்சர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டது.

    செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இது தொடர்பாக கோவையில் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. சுப்ரீம் கோர்ட்டு இதில் சரியாக ஒரு நல்ல முடிவாக கொடுத்துள்ளது.

    நிச்சயமாக இதனை நாங்கள் மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக தான் எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்னால் பல சிரமங்களும், தேவை இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    முதலமைச்சர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக. இதற்கும், தற்போது வந்த தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை. செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளதை ஒரு வெற்றி, மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறோம்.

    அவருக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து தலைமை தெரிவிக்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது. தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமையும், முதல்-அமைச்சரும் முடிவெடுப்பார்கள்.

    விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நன்றாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பிரவீன்குமார் கேட்டார்.
    • தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன்குமார் சம்பவம் குறித்து கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை:

    கோவை வேடப்பட்டி அருகே உள்ள ஹரி ஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது28).

    இவர் வாட்டர் டேங்க் சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு திருப்பூரை சேர்ந்த மார்சல் பிரிட்டோ என்பவர் அறிமுகம் ஆனார். அவர் தான் தொழில் அதிபராக இருப்பதாகவும், துபாயில் பிபிஓ அலுவலகம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் துபாயில் பிபிஓ அலுவலகம் திறந்தால் நன்றாக பணம் சம்பாதிக்கலாம். எனவே நீங்கள் பணம் முதலீடு செய்தால் நாம் இருவரும் சேர்ந்து துபாயில் தொடங்கலாம். அதில் வரும் லாபத்தில் உங்களுக்கும் பங்கு தந்து விடுகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதனை பிரவீன்குமார் உண்மை என நம்பிவிட்டார். பின்னர் பிரவீன்குமார் அவரிடம் ரூ.48 லட்சம் பணத்தை கொடுத்தார். அதனை தொடர்ந்து பிரவீன்குமாரை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது தொழில் தொடங்கவில்லை. இதுகுறித்து மார்சல் பிரிட்டோவிடம் கேட்டதற்கு அவர், கொரோனா என்பதால் தொடங்கவில்லை என தெரிவித்து விட்டார்.

    இதையடுத்து பிரவீன்குமார் அங்கிருந்து கோவைக்கு வந்தார். அதன்பிறகும் தொழில் தொடங்கவில்லை. இதனால் பிரவீன்குமாருக்கு மார்சல் பிரிட்டோ மீது சந்தேகம் ஏற்பட்டது.

    தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பிரவீன்குமார் கேட்டார். அதனையும் அவர் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன்குமார் சம்பவம் குறித்து கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், தொழில் தொடங்குவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திருப்பூர் தொழில் அதிபர் மார்சல் பிரிட்டோ மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சில நிமிடங்கள் கழித்து காரில் வந்தவர்கள் காரை எடுக்க வந்தனர்.
    • போலீசார் விரைந்து வந்து காரில் வந்த 6 பேரையும், காரையும் வால்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    நேற்று திருப்பூரில் இருந்து ஒரு காரில் 6 பேர் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் வால்பாறையில் சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, இரவு 7 மணியளவில் அக்காமலை எஸ்டேட் செல்லும் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே சென்ற போது காரில் இருந்தவர்கள் தங்களது காரை சாலையில் நிறுத்தினர்.

    பின்னர் காரை விட்டு இறங்கி வெளியில் சென்றனர். 20 நிமிடங்கள் ஆகியும் அவர்கள் வரவில்லை. இந்த சாலையில் ஒரு வாகனத்தை நிறுத்தினால் மற்றொரு வாகனம் செல்ல முடியாது. இந்த நிலையில் அக்காமலை எஸ்டேட்டில் இருந்து வால்பாறை நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை சரவணன் என்பவர் ஓட்டி வந்தார்.

    சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே பஸ் வந்த போது, சாலையில் கார் நிற்பதை சரவணன் பார்த்தார். காரை எடுத்தால் தான் பஸ் செல்ல முடியும் என்பதால் 20 நிமிடத்திற்கும் மேலாக அங்கே பஸ் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதேபோல் சாலையின் மறுபுறமும் ஒரு பஸ் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    சில நிமிடங்கள் கழித்து காரில் வந்தவர்கள் காரை எடுக்க வந்தனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    காரை எடுக்குமாறு தெரிவிக்கவே, ஆத்திரம் அடைந்த 6 பேரும், அரசு பஸ் டிரைவர் சரவணன் மற்றும் கண்டக்கரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை தகாத வார்த்தைகளாலும் திட்டினர்.

    இதை பார்த்த பயணிகள் வந்து, காரை எடுக்குமாறு தெரிவிக்க, பயணிகளிடமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து காரில் வந்த 6 பேரையும், காரையும் வால்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் பஸ் அங்கிருந்து வால்பாறை நோக்கி சென்றது. போலீசார் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த முரளி தரன்(35), சசிக்குமார்(42), துரைமுருகன்(36), வெங்கடேஷ்(25), அருண்(30), திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த கோதண்டம்(46) என்பதும் தெரியவந்தது.

    இவர்களில் முரளிதரன், சசிக்குமார் ஆகியோர் திருப்பூர் பா.ஜ.க மண்டல பொதுச்செயலாளர்களா கவும், துரைமுருகன் திருப்பூர் பா.ஜ.க கொங்கு மண்டல இளைஞர் அணி தலைவராகவும், வெங்கடேஷ் பா.ஜ.க கொங்கு மண்டல இளைரணி துணைத் தலைவராகவும், அருண் திருப்பூர் மண்டல பா.ஜ.க இளைஞர் அணி செயலாளராகவும் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே இவர்கள் 6 பேர் மீதும் அரசு பஸ் டிரைவர் சரவணன், இவர்கள் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாக வால்பாறை போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் இவர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 6 பேரையும் பொள்ளாச்சி சப் ஜெயிலில் அடைத்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று கோவை வந்தார்.
    • தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் இடையில் எந்த சிக்கலும் எழாது. சிக்கலும் எழுவதற்கு வாய்ப்பு இல்லை.

    கோவை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி இல்லாமல் வடமாவட்டங்களில் தி.மு.க. வெல்ல முடியாது.

    40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் ஏன் துணை முதல்-அமைச்சர் ஆகக்கூடாது? என பல்வேறு கருத்துகளையும் அதில் தெரிவித்து இருந்தார்.

    இவரது இந்த கருத்துக்கு தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பதிலடி கொடுத்திருந்தார். ஆதவ் அர்ஜூனா மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய 2 கூட்டணி கட்சிகளுக்கு இடையில் எந்த சலசலப்பும் இல்லை. விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாகுவதற்கு வாய்ப்பும் இல்லை.

    என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான ஒரு சின்ன வீடியோ, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை விவாதத்துக்கு பலரும் எடுத்துக் கொண்டனர். அது மேலும் மேலும் விவாதத்துக்கு வழிவகுத்து விட்டது.

    அதனால் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் இடையில் எந்த சிக்கலும் எழாது. சிக்கலும் எழுவதற்கு வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆதவ் அர்ஜூனா மீது ஆ.ராசா எம்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறாரே? அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு திருமாவளவன் பதில் அளித்து கூறும்போது, கட்சியில் உள்ள முன்னணி தோழர்களோடு கலந்து பேசி தான் எந்த நடவடிக்கையும் இருக்கும். கட்சி விவகாரங்களை முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர், உயர்நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ள தோழர்களுடன் தொலைபேசி மூலமாக பேசி இருக்கிறேன். மீண்டும் கலந்து பேசி நடவடிக்கை இருக்கும் என தெரிவித்தார்.

    • தேயிலை தோட்டங்களில் யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.
    • தண்ணீருக்குள் படுத்து ஆனந்த குளியல் போட்டு, நீந்தி மகிழ்ந்தது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் எண்ணற்ற தேயிலை தோட்டங்களும், இயற்கை காடுகளும் நிறைந்து காணப்படுகிறது.

    இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் தேயிலை தோட்டங்கள், இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்கு என்று நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    சுற்றுலா பயணிகளின் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் வால்பாறை இருந்து வருகிறது. அவர்கள் தேயிலை தோட்டங்களை கண்டு ரசித்து, கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    வால்பாறையில் உள்ள வனப்பகுதிகளில், காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து, அங்குள்ள தண்ணீர் தேங்கும் பகுதியில் தண்ணீர் குடிப்பதுடன், குளித்து நீந்தி மகிழ்ந்தும் வருகிறது.


    சம்பவத்தன்று 8 காட்டு யானைகள் கூட்டம் குட்டியுடன் வனத்தை விட்டு வெளியேறி, தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு வந்தன. அங்குள்ள தேயிலை தோட்டங்களில் யானைகள் கூட்டம் சிறிது நேரம் சுற்றி திரிந்தது.

    பின்னர் யானைகள் தேயிலை தோட்டங்களையொட்டி உள்ள தண்ணீர் தேக்கும் பகுதி வழியாக காட்டு யானைகள் கூட்டம் நடந்து சென்றன.

    அங்கு தண்ணீரை பார்த்ததும் யானைகள் கூட்டத்தில் இருந்த யானை ஒன்று மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தது.

    தண்ணீரை கண்ட யானை துள்ளிகுதித்த படி தண்ணீருக்குள் இறங்கி, தண்ணீரை பருகியது. மேலும் தண்ணீருக்குள் படுத்து ஆனந்த குளியல் போட்டு, நீந்தி மகிழ்ந்தது. அத்துடன் துதிக்கையால் தண்ணீரை ஊறிஞ்சி அதனை தனது உடல் முழுவதும் பீய்ச்சி கொண்டு மகிழ்ச்சியடைந்தது.

    சில மணி நேரம் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்ட யானை, அதன்பிறகு யானை கூட்டத்துடன் சேர்ந்து, வனத்தை நோக்கி சென்றது.

    அங்கு தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் சிலர் வெகுதூரத்தில் இருந்து இந்த காட்சியை கண்டு ரசித்தனர். அதனை தங்கள் செல்போனில் வீடியோ, புகைப்படமும் எடுத்து கொண்டனர். இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிரவே தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

    • முன்பதிவு இல்லாத பெட்டியின் சீட்டில் 2 வயது பெண் குழந்தை ஒன்று தூங்கி கொண்டிருந்தது.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கோவை:

    சென்னையில் இருந்து கோவைக்கு சம்பவத்தன்று இரவு கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

    ரெயிலில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், ஊழியர்கள் ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியின் சீட்டில் 2 வயது பெண் குழந்தை ஒன்று தூங்கி கொண்டிருந்தது.

    இதை பார்த்ததும் ரெயில் பணியாளர்கள் அதிர்ச்சியாகினர். உடனடியாக இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் கஜேந்திரன், ரம்யா ஆகியோர் அங்கு சென்று பார்த்தனர்.

    அங்கு குழந்தை தூங்கி கொண்டிருந்தது. அந்த குழந்தையை போலீசார் மீட்டனர்.

    அந்த குழந்தையை ரெயிலில் அழைத்து வந்தது யார்? அதனுடைய தாய் யார்? என்பது தெரியவில்லை.

    இதையடுத்து போலீசார் குழந்தையை குழந்தைகள் நல அலுவலர் மூலம் கிணத்துக்கடவு பகுதியில் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    அந்த குழந்தையை ரெயிலில் பயணித்த பயணி மறந்து போய் விட்டு சென்றாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×