என் மலர்
கோயம்புத்தூர்
- போலீசார் அந்த ஓட்டலில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
- தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கோவை:
கோவை அவினாசி ரோட்டில் உள்ள 3 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஓட்டல் ஒன்றில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதனால் போலீசார் அந்த ஓட்டலில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
ஓட்டல்களுக்கு வந்த இ-மெயில் மிரட்டலில் கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபினின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஜமேஷா முபின் இறந்து இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஐ.எஸ்.அமைப்பினர் அந்த ஓட்டல்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், காலை 10.30 மணிக்கு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வெடிகுண்டு சோதனையில் அது புரளி என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
காரணம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் தான் கோவையில் கார்குண்டு வெடித்து ஜமேஷா முபின் பலியானான். கோவையில் தீபாவளி கூட்டத்தில் கார் வெடிகுண்டை வெடிக்கச் செய்து பெரும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த சதியில் ஜமேஷா முபினே சிக்கி பலியானான்.
இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதுதொடர்பாக 5-க்கும் மேற்பட்ட முறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாநிலம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் தற்போது தீபாவளி பண்டிகை வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புதுத்துணிகள், நகைகள் எடுப்பதற்காக கோவையின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் இப்போதே கூடத் தொடங்கி விட்டனர். இதை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மக்கள் அதிகம் கூடும் கோவை ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, ராஜவீதி மற்றும் காந்திபுரம் கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு போன்ற இடங்களில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் நின்றவாறும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுமாறும், சந்தேக நபர்கள் யாராவது தென்பட்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் ஒலிபெருக்கிகள் மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
தீபாவளியை நெருங்கும் வேளையில் ஆயிரக்கணக்கான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கூட மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
- விஸ்வகர்மா திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.
கோவையில் நடந்த நிகழ்ச்சியில் குலத்தொழில் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வானதி சீனிவாசன் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு அனுமதிக்கவில்லை. குலத்தொழிலை திமுக அனுமதிக்க மறுக்கிறது. விஸ்வகர்மா சமுதாயத்திற்குரிய பெருமையான விஷயத்தையே குலைக்க நினைக்கிறார்கள். பெருமையை குலைக்க நினைப்பவர்களை கேள்வி கேட்க யாராலும் முடியவில்லை.
கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கூட மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படுகிறது. விஸ்வகர்மா திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஒவ்வொரு சாதிக்கும், ஒரு பெருமை இருப்பதை போல குலத்தொழிலுக்கும் பெருமை உள்ளது என்றார்.
விஸ்வகர்மா சமூகத்தினர் முன்பாக குலத்தொழில் குறித்து பேசிய வானதி சீனிவாசன் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
வானதி சீனிவாசனின் பேச்சு ஆணவத்தின் உச்சம். குலத்தொழிலை பற்றி பேசும் அனைவரும் அவர்களின் குலத்தொழிலை செய்யப்பட்டும். வானதி தனது குலத்தொழிலை செய்ய தயாரா என்று திருச்சி வேலுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
- சாலையோரங்களில் யானையை கண்டால் இறங்கி அதனை தனியாக விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது.
- யானையை துன்புறுத்தும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள், மான், காட்டு மாடு, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதுடன் மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
அதிலும் குறிப்பாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை சிறுமுகை வனச்சரகத்துக்கு இடையே அமைந்து உள்ளதால், வனவிலங்குகள் இந்த ரோட்டை கடந்து வனத்தின் மறுபுறம் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலைகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி சாலையில் உள்ள முதல் வளைவு அருகே, ஒற்றை காட்டு யானை சாலையோரம் உலா வந்தது.
இதனை கண்ட வாகனஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு வனத்துறைக்கு தகவலளித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்ட முயன்றனர்.
இருப்பினும் அந்த யானை 2-வது வளைவு அருகே சென்று நீண்ட நேரம் சுற்றி திரிந்தது. பின்னர் வனத்துறையின் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் வாகனஓட்டிகள் நிம்மதி அடைந்து, தங்களின் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:-
கோத்தகிரி சாலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. எனவே கோத்தகிரி சாலை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் வாகனங்களை இயக்க வேண்டும்.
சாலையோரங்களில் யானையை கண்டால் இறங்கி அதனை தனியாக விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது. அதேபோல யானை அருகே சென்று செல்பி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ முயற்சி செய்யக்கூடாது. மேலும் யானையை துன்புறுத்தும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம். மீறினால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படுகிறது.
வடவள்ளி:
வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு பருவமழை இன்னும் சில நாட்களில் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவு பெய்யும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2024-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பை கொண்டு முன்னறிவிப்பு பெறப்பட்டது.
இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டம் வாரியாக பெய்யும் சராசரி மழை அளவு, எதிர்பார்க்கப்படும் மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
சென்னை 810-850, கோவை 338-360, மதுரை 370-390, நெல்லை 515-540, திருச்சி 379-410, சேலம் 331-360, நீலகிரி 501-510, திருப்பூர் 306-330, கரூர் 313-330, கன்னியாகுமரி 533-540, நாமக்கல் 270-270, மயிலாடுதுறை 888-900, நாகப்பட்டினம் 935-950, தஞ்சை 579-610, திருவாரூர் 725-760, திருவண்ணாமலை 450-490, தூத்துக்குடி 442-450, ராணிப்பேட்டை 406-420, கிருஷ்ணகிரி 278-290, தர்மபுரி 314-340, கடலூர் 702-720.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பூசாரி விக்னேஷ் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ. அலுவலகத்தில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகினார்.
- தனியார் வங்கி சார்பில் 2 அலுவலர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.
இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இது தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் பலருக்கும் சம்மன் அனுப்பியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடநாடு எஸ்டேட் மற்றும் சென்னை போயஸ் கார்டனில் பல வருடங்களாக பூசாரியாக பணியாற்றி வந்த கோத்தகிரியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் புதுச்சேரியை தனியார் வங்கிக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதன்படி கோத்தகிரியை சேர்ந்த பூசாரி விக்னேஷ் இன்று காலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ. அலுவலகத்தில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகினார்.
அவரிடம் கொடநாடு சம்பவம் குறித்தும், அங்கு நடந்தவை பற்றி தெரியுமா? எவ்வளவு நாட்களாக அங்கு வேலை பார்க்கிறீர்கள்.
கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை பற்றி தெரியுமா? என பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர்.
இதேபோல் தனியார் வங்கி சார்பில் 2 அலுவலர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் வங்கி கணக்கு மற்றும் பரிவர்த்தனைகள் பற்றி கேட்டு விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணை முடிந்த பின்னரே அவர்களிடம் எது தொடர்பாக விசாரித்தனர் என்ற தகவல் தெரியவரும்.
ஒரே நாளில் 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
- சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்
- போலீஸ் சூப்பிரண்டு யோகா மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு.
கோவை:
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டுதருமாறு கூறி கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று ஐகோர்ட்டில் நடந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் ஈஷா யோகா மையம் மீது எத்தனை குற்றவழக்குகள் உள்ளன? என்ற விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் ஈஷா யோகா மையத்துக்கு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களுடன் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அம்பிகாவும் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை விவரங்களை போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.
- கடந்த 2 நாட்களாக குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
- சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் குன்னூர் பகுதிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கல்லார் முதல் குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதிக்குள் ரெயில் பயணிக்கும்.
எனவே அந்த பகுதியிலுள்ள தண்டவாள பாதைகளில் அவ்வப்போது மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரெயில் தண்டவாளங்கள் சேதமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கல்லார்-குன்னூர் இடையேயான வனப்பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரெயில் பாதையில் கல்லார் முதல் ஹில்கிரோ வரை அடுத்தடுத்து 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதம் அடைந்து உள்ளன.
இந்த நிலையில் மலைரெயில் தண்டவாள பாதைகள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கும் வகையில், ரெயில்வே ஊழியர்கள் ரோந்து மேற்கொண்டனர். அப்போது மேற்கண்ட பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை குன்னூருக்கு புறப்பட்டு சென்ற மலைரயில், கல்லார் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திதை வந்தடைந்தது.
தொடர்ந்து மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரெயில் போக்குவரத்து இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும் சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று எந்திரத்தில் பணம் வரும் இடத்தில் டேப் ஒட்டி நூதனமுறையில் பணம் திருடி வருகிறார்கள்.
- கண்காணிப்பு காமிராக்களில் திருடர்களின் உருவம் பதிவாகி உள்ளது.
கேரளாவில் 4 ஏ.டி.எம். மையங்களில் கியாஸ் வெல்டிங் மூலம் எந்திரங்களை உடைத்து ரூ.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல், கண்டெய்னர் லாரியில் தப்பி செல்லும்போது நாமக்கல் அருகே பிடிபட்டது.
அப்போது அந்த லாரியில் இருந்த 7 பேரில் ஒருவன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், அசார்அலி என்பவன் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
வடமாநிலத்தைச் சேர்ந்த இந்த கும்பல் சென்னையில் வைத்து திட்டம் தீட்டி ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் கோவையில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று எந்திரத்தில் பணம் வரும் இடத்தில் டேப் ஒட்டி நூதனமுறையில் பணம் திருடி வருகிறார்கள்.
அதாவது கார்டை சொருகி நம்பரை அழுத்திவிட்டு பணத்திற்கான தொகையை டைப் செய்து விட்டு காத்திருந்தால் டேப் வரை வந்து பணம் நின்று விடும். அதன்பிறகு பொதுமக்கள் எந்திரத்தில் பணம் வராததால் ஏமாற்றத்துடன் வங்கி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க சென்று விடுவர்.
தொடர்ந்து வெளியே காத்திருக்கும் 2 வாலிபரில் ஒருவர் உள்ளே சென்று, எந்திரத்தில் ஒட்டியுள்ள டேப்பை எடுத்துவிட்டு அங்கு குவிந்து நிற்கும் பணத்தை அள்ளி சென்று விடுவார். முதலில் ரத்தினபுரி ஆறு மூக்கு பகுதியிலுள்ள ஏ.டி.எம். மையத்தில் மேற்கண்ட நூதன பணம் திருட்டு தொடங்கியது.
பின்னர் அதே வாலிபர்கள் ஆவாரம்பாளையம், கருமத்தம்பட்டி, போத்தனூர் பகுதிகளிலும் ஏ.டி.எம். எந்திரத்தில் டேப் ஒட்டி இதேமுறையில் பணத்தை திருடி சென்று உள்ளது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வரும் 2 வெளிமாநில வாலிபர்கள் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
மேலும் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் திருடர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து அங்கு பணம் வரும் எந்திர பகுதியில் டேப்பை ஒட்டிவிட்டு வெளியே வருகிறார்.
தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துவிட்டு பணம் வராமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பின்னர் இன்னொரு நபர் உள்ளே சென்று எந்திரத்துக்குள் சிக்கி குவிந்து கிடக்கும் பணத்தை எடுத்துச் செல்கிறார். இந்த காட்சிகள் குற்ற சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்ட்டு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.
தொடர்ந்து கோவை மாநகர போலீசார் கண்காணிப்பு காமிராவில் சிக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும கன்டெய்னர் கொள்ளையன் அசார்அலியிடம் காட்டி விசாரணை நடத்தினர். ஆனால் அவன், இவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உள்ளான். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கோவையில் கடந்த சில நாட்களாக கைவரிசை காட்டி வரும் ஏ.டி.எம். நூதன கொள்ளையர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஆவடியில் நடந்த ஏ.டி.எம். பணம் கொள்ளையில் கைதாகி சிறையில் இருந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து கோவையில் சுற்றி திரியும் ஏ.டி.எம். நூதன கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தி.மு.க.வின் வாரிசு அரசியல் குறித்து பா.ஜ.க. தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும்.
- 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கோவை:
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் இன்று தொண்டர்களுடன் அமர்ந்து பார்த்தார்.
பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, பொதுமக்களிடம் உரையாடி வருகிறார். நாட்டின் சிறிய கிராமங்களிலும், மூளை முடுக்குகளிலும் சிறந்த மனித சேவை செய்பவர்களையும், கண்டுபிடிப்பாளர்களையும், சமூக சேவை செய்பவர்களையும் கண்டறிந்து உலகம் முழுவதும் அறியும் வகையில் குறிப்பிட்டு பேசி வருகிறார்.
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றப்பட்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்க உள்ளார். தி.மு.க.வில் அனுபவமிக்க மூத்த அமைச்சர்கள் பலர் இருந்த போதும் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்ற அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தி.மு.க.வின் வாரிசு அரசியலையே காட்டுகிறது.
தி.மு.க.வில் மற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தாலும், அவர்களால் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே நீடிக்க முடியும். பொறுப்பிற்கும் தலைமைக்கும் வருவதற்கு வாரிசாக இருக்க வேண்டும் என்ற நிலையை தி.மு.க. பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளது.
மாற்றி அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில், குற்றம் சாட்டப்பட்டு சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கொடுப்பதால் அவர் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை வலுவிழக்க செய்ய முடியும்.
திராவிட மாடல் என்பதற்கு சமூக நீதி, சமத்துவம், பெரியாரின் கொள்கைகள் என பேசும் தி.மு.க. அரசு, அமைச்சரவையில் முக்கிய துறைகள் எதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு வழங்கவில்லை.
கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும், மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் உயர்ந்த பொறுப்புகளை வழங்கும் ஜனநாயகம் மிக்க ஒரே கட்சியாக பாரதிய ஜனதா கட்சி தான் செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வின் இந்த வாரிசு அரசியல் குறித்து பா.ஜ.க. தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும். 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்.
- சில உதிரி அமைப்பினர் இவருடன் சேர்ந்து புது புது அவதூறுகளை உருவாக்கும்.
ஈஷாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிக்கும் காமராஜ், பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஈஷா நிர்வாகி தினேஷ் ராஜா கூறியதாவது:
சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற போலி பெயர்களில் திரியும் நபர் பியூஷ். இந்து கலாச்சாரம், ஆன்மீக மரபுகள் மற்றும் அதை சார்ந்து இயங்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவது தான் இவருடைய முழு நேர தொழிலாக உள்ளது.
இவர், ஈஷாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை நாகரீகமற்ற முறையில் சமூக வலைத்தளங்களில் பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
கோவையில் செயல்படும் சில உதிரி அமைப்பினர் இவருடன் சேர்ந்து புது புது அவதூறுகளை உருவாக்கும் முயற்சிகளை கையில் எடுத்துள்ளனர். இந்த உதிரி அமைப்புகள் சில மாதங்களுக்கு முன்பு ஈஷாவிற்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்ததும், அவர்களை காவல்துறையினரின் ஒத்துழைப்போடு, உள்ளூர் மக்கள் தடுத்து திருப்பி அனுப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.
பியூஷ் மனுஷ் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள வீடியோவில், லட்சக்கணக்கான மக்கள் பக்தியுடன் வணங்கும் ஆதியோகி மற்றும் லிங்கபைரவி குறித்து மிக கொச்சையாக அவதூறு பரப்பி உள்ளார். எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி அவர் பேசியுள்ள கருத்துக்கள் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களின் மனதை காயப்படுத்தி உள்ளது.
இதன் அடுத்தக்கட்டமாக, பத்திரிக்கையாளர் சந்திப்பு, துண்டு பிரசுரங்கள் விநியோகம், ஆர்ப்பாட்டம் என பல வழிமுறைகள் மூலமாக மக்களின் மத உணர்வுகளை கொச்சைப்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
'ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம்' என்ற பெயரில் இயங்கும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான இந்த உதிரி அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த 2021 ஆம் ஆண்டு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
- பிரதமர் மோடி பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார்.
விவசாயத்தில் பங்களிப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வென்ற கோவையை சேர்ந்த பாப்பம்மாள் (109) பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 100 வயதை கடந்தும் இயயற்கை விவசாயம், ஆரோக்கிய உணவு பழக்கம் என சுறுசுறுப்பாக வலம் வந்தவர் ஆவார்.
சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் கொண்டிருந்த பாப்பம்மாள் தனது வாழ்க்கையை விவசாயத்திற்காக அர்ப்பணித்தார். விவசாயத்தை முறையாக கற்றுக் கொள்ள தமிழக வேளான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இதே பல்கலைக்கழகத்தில் விவாதக் குழு அமைப்பாளராகவும் இருந்தார்.
விவயாசயத்தில் இவர் செய்த சாதனைகளை பாராட்டும் வகையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. கோவையை அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வந்த பாப்பம்மாளை கடந்த 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி கோவை வந்த போது, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.
- மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
- வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவையை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
நான் விமானத்தில் விமானியாக (பைலட்) பணியாற்றினேன். போட்டி தேர்வில் பங்கேற்க விரும்பியதால், நான் பார்த்து வந்த விமானி வேலையை விட்டு விட்டு, போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தேன்.
இந்த நிலையில் அவினாசி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் என்ஜினீயரான ஆனந்தராஜ் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார்.
நாங்கள் கடந்த 2023-ம் ஆண்டு முதல் நெருங்கி பழகி வந்தோம். இதனை அறிந்த எனது தந்தை, ஆனந்தராஜை அழைத்து கேட்டார்.
அதற்கு அவர், தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், தற்போது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருவதாகவும், அது முடிந்ததும் உங்களது மகளை திருமணம் செய்து கொள்வதாகவும் எனது தந்தையிடம் தெரிவித்தார்.
இதனை எனது தந்தையும் நம்பினார். அத்துடன் நாங்கள் பழகுவதையும் தடுக்கவில்லை.
எனது தந்தை கார் வாங்குவதற்காக ரூ.16 லட்சம் வைத்திருந்தார்.
கார் வாங்குவது தொடர்பாக எனது தந்தை ஆனந்த ராஜிடம் தெரிவித்தார். அதற்கு அவர் நான் உங்களுக்கு கூடுதலாக பணம் போட்டு வேறு ஒரு புதிய காரை வாங்கி தருவதாக தெரிவித்து, அவரிடம் இருந்த பணத்தையும் வாங்கி கொண்டார். ஆனால் கார் வாங்கி கொடுக்கவில்லை.
கடந்த ஜூலை மாதம் ஆனந்தராஜ், என்னை அவர் குடியிருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து எனக்கு குளிர்பானம் கொடுத்தார். நானும் அதனை குடித்தேன்.
அதனை தொடர்ந்து ஆனந்தராஜ் நாம் தான் திருமணம் செய்ய போகிறோமோ இருவரும் உல்லாசம் அனுபவிக்கலாம் என தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியான நான், அதெல்லாம் திருமணத்திற்கு பிறகு தான் என மறுத்தேன். ஆனால் ஆனந்தராஜ் வலுக்கட்டாயமாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
மேலும் இதனை வீடியோவாகவும் எடுத்து, அதனை லேப்-டாப்பிலும் பதிவு செய்துள்ளார். ஆனால் அது எனக்கு தெரியாது.
தொடர்ந்து நான் ஆனந்தராஜை சந்தித்து, என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். அத்துடன் என்னை ஜாதியை சொல்லியும் திட்டினார்.
எனவே என்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த என்ஜினீயர் ஆனந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
அவரது புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, என்ஜினீயர் ஆனந்தராஜ் மீது கற்பழிப்பு, வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.






