என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த புகைப்படத்தை வைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மாதேகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கிப்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. எனக்கு 16 வயது இருக்கும் போது எனது காதலன் என்னை செங்கல் சூளைக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக நான் கர்ப்பமானேன். இதனையடுத்து 2 வீட்டு பெற்றோரும் சேர்ந்து 2020 ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து வைத்தனர்.

    திருமணமான சில மாதங்களிலேயே எனக்கும் எனது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒரு நாள் என்னை அவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற போது கோபத்தில் கீழே தள்ளி விட்டார். இதனால் கர்ப்பம் கலைந்தது. மேலும் எனது கணவரின் தாய், தந்தை ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தினர்.

    இதற்கிடையே நான் 2-வது முறையாக மீண்டும் கர்ப்பமானேன். அப்போது எங்கள் 2 பேருக்கு ஏற்பட்ட தகராறில் தாக்கியதில் 2- வது கர்ப்பமும் கலைந்தது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனது கணவரிடம் கோபித்துக்கொண்டு எனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தேன்.

    சம்பவத்தன்று எனது செல்போனில் கணவரின் டி.பியை பார்த்தேன். அப்போது அதில் அவர் வேறு ஒரு பெண்ணை திரு மணம் செய்த புகைப்படத்தை வைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். எனவே என்னை சிறுவயதில் பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிவானந்தா காலனியில் நாளை மாலை 5 மணிக்கு இந்த கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.
    • இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.

    கோவை,

    மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறை ஆகியவற்றில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரணைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் அவரை இரவோடு இரவாக கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.

    அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் நாளை (வெள்ளிக்கிழமை) கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என தி.மு.க கூட்டணி கட்சிகள் அறிவித்தன.

    அதன்படி கோவை சிவானந்தா காலனியில் நாளை மாலை 5 மணிக்கு இந்த கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்.

    மேலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களான காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தி கம்யூனிஸ்டு செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொ கதீன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவஹி ருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன உரையாற்ற உள்ளனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் கண்டன பொதுக்கூட்டத் தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பொதுக்கூட்டத்தில் 50 ஆயிரம் பேரை திரட்டுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட செயலாளர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பந்தல், மேடை அமைப்பது உள்பட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.

    • நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் காரின் முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர்.
    • ரவிக்குமார் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஜெகஜீவன்ராம் வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40). இவர் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் ரவிக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு இவர் அவரது வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் யாரோ காரின் முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர்.

    மறுநாள் காலையில் ரவிக்குமார் வந்து பார்த்த போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராவில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • படுகாயம் அடைந்த என்ஜினீயரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் 32 வயது சிவில் என்ஜினீயர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக்கின் வீட்டில் கட்டுமான பணிகள் மேற்கொண்டார்.

    அப்போது என்ஜினீயருக்கு மெக்கானிக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது கள்ளக்காதலனை அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் மெக்கானிக்கிற்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் இளம்பெண் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்றார். இது மெக்கானிக்கிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்று என்ஜினீயர் புளியம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த மெக்கானிக் தனது நண்பருடன் சேர்ந்து என்ஜினீயரை இரும்பு கம்பியால் தாக்கினார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த என்ஜினீயரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு என்ஜினீயருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?.
    • செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது

    கோவை:

    பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. குற்றம்சாட்டியது.

    அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தினார்.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.

    மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பா.ஜ.க அரசு, சட்டத்தின்படியே, அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படிதான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஆனால், இதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என பழிசுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

    அ.தி.மு.க.வில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?.

    செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது. அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால் அதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அனுமதிக்காது.

    பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உணர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஐஎஸ் ஆதரவு எண்ண ஓட்டத்தில் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களின் செயல்பாட்டை கண்காணிக்க தொடங்கினர்.
    • கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் வெப்பு சம்பவம் நடைபெற்றது.

    இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். அவனது வீட்டில் இருந்து வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த முபின் கோவையில் மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் நுண்ணறிவுப் பிரிவினர் (ஐ.எஸ்), மத ரீதியிலான தகவல்களை விசாரிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவினர் (எஸ்.ஐ.சி.) ஆகியோர் தங்களது ரகசிய கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

    ஐஎஸ் ஆதரவு எண்ண ஓட்டத்தில் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களின் செயல்பாட்டை கண்காணிக்க தொடங்கினர். அவ்வாறு கோவையில் 200 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். குறிப்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளில் தீவிரமாக இருப்பவர்களை கண்காணித்து வந்தோம்.இதில் 200 பேர் இருப்பதை கண்டறிந்துள்ளோம்.

    படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என எல்லா தரப்பினரும் இதில் அடக்கம். இவர்களின் செயல்பாடுகள், செல்லும் இடங்கள், செல்போன் அழைப்புகள் உள்ளிட்ட விவரங்களையும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய தகவல்கள் பரிமாறப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையுடன் மோசமாக தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்த போராடும்.
    • சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

    கோவை:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி மைதானத்தில் கடந்த 12-ந் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை தோற்கடித்தது. நேற்று முன்தினம் நடந்த 2-வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 52 ரன் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தியது.

    நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட்டில் மதுரை பாந்தர்சையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பால்சி திருச்சியையும் வென்றன.

    டி.என். பி.எல். போட்டியின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் -சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது 2-வது போட்டியாகும்.

    4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

    தொடக்க ஆட்டக்காரரான பிரதோஷ் ரஞ்சன் பால், கேப்டன் ஜெகதீசன், சஞ்சய் யாதவ் ஆகியோர் பேட்டிங்கிலும் , ஹரீஷ்குமார், ராக்கி பாஸ்கர், விஜூ அருள், ரஹில் ஷா ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பணியில் பாபா அபராஜித் சிறப்பான நிலையில் இருக்கிறார். இது தவிர ஆர்.சதீஷ், சசிதேவ் போன்ற திறமையான வீரர்களும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் உள்ளனர்.

    திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையுடன் மோசமாக தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்த போராடும். முதல் வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது.

    கேப்டன் சாய் கிஷோர் , விஜய் சங்கர் போன்ற சிறந்த வீரர்கள் திருப்பூர் அணியில் உள்ளனர்.

    • முதலில் ஆடிய திருச்சி 120 ரன்னில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய திண்டுக்கல் 122 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    கோவை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சி திருச்சி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணி 19.1 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திண்டுக்கல் அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்தனர். கங்கா ஸ்ரீதர் ராஜூ 41 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 48 ரன்கள் சேர்த்தார். ராஜ்குமார் 22 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார்.

    திண்டுக்கல் சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின், சரவணக்குமார், சுபோத் பதி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விமல் குமார் டக் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் அதிரடியாக ஆடினார். அவர் 30 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 46 ரன்கள் எடுத்தார். பாபா இந்திரஜித் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். சரத் குமார் 5 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 14.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆதித்ய கணேஷ் 20 ரன்னும், சுபோத் பதி 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூவுடன் இணைந்த ராஜ் குமார் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்தார்.
    • திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு கோவையில் நடைபெறும் ஆட்டத்தில் பார்சி திருச்சி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.

    கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ துவக்க வீரராக களமிறங்கி நிதானமாக ஆடினார். ஆனால் மறுமுனையில் திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்தனர். ஜாபர் ஜமால் (4), அக்சய் சீனிவாசன் (0), பெரைரோ (5), மணி பாரதி (2), ஷாஜகான் (13), அந்தோணி தாஸ் (0) ஆகியோர் விரைவில் அவுட் ஆகினர். 49 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகள் சரிந்தன.

    இந்த நெருக்கடியான சூழ்நிலையில், கங்கா ஸ்ரீதர் ராஜூவுடன், இணைந்த ராஜ் குமார் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்தார். அணியின் ஸ்கோர் 114 ஆக இருந்தபோது, கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆட்டமிழந்தார். அவர் 41 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 48 ரன்கள் சேர்த்தார். அடுத்த ஓவரில் ராஜ் குமார் அவுட் ஆனார். அவர் 22 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார்.

    ராமதாஸ் அலெக்சாண்டர் 4 ரன்னிலும், ரகுபதி ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, திருச்சி அணி 19.1 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின், சரவணக் குமார், சுபோத் பதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
    • ஆட்டத்தின் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் 13.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து அசத்தலாக வெற்றிப்பெற்றது.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக் மற்றும் கேப்டன் ஹரி நிசாந்த் களமிறங்கினர். கார்த்திக் ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபன் லீங்கேஷ் 6 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து நிசாந்த்- வாஷிங்டன் சுந்தர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி வந்த சுந்தர் 17 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நிசாந்த் அரை சதம் கடந்தார்.

    இவர் 64 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் முறையில் விக்கெட்டை இழந்தார். கடைசி ஓவரில் பொய்யாமொழி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் பிரசாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    தொடர்ந்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக நிதிஷ் ராஜகோபால் 42 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, அருண் கார்த்திக் 32 ரன்களும், ஸ்ரீ நிரஞ்சன் 15 ரன்களும், குருசுவாமி அஜிதேஷ் 14 ரன்களும், சோனு யாதவ் 13 ரன்களும், எஸ்ஜே அருண் குமார் 11 ரன்களும் எடுத்தனர்.

    இதில், நிதிஷ் ராஜகோபால் மற்றும் குருசுவாமி அஜிதேஷ் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் 13.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து அசத்தலாக வெற்றிப்பெற்றது.

    • சோதனை மட்டுமல்லாமல் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்துவதாக கூறி துன்புறுத்தல்களை கொடுத்துள்ளனர்.
    • கூட்டத்தில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், வக்கீல் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவை,

    கோவை வடகோவையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்ற செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் நாளை மறுநாள் மாலை தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது, இதில் 50 ஆயிரம் பேர் பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்திற்கு பின்னர் மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற அரசு துறைகளை ஏவி கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்க கூடிய செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தி உள்ளது.

    சோதனை மட்டுமல்லாமல் அவரிடம் விசாரணை நடத்துவதாக கூறி துன்புறுத்தல்களை கொடுத்துள்ளனர்.

    இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.மத்திய பா.ஜ.க அரசின் இந்த செயலை கண்டித்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவை சிவானந்தா காலனியில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செ யலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுரு கன் பங்கேற்கிறார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தி.மு.க தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் உள்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. வை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், வக்கீல் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எல்கார்ட் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார்.
    • நிச்சயமாக எங்கள் மீது எந்த தவறும் இல்லை என நிருபித்து செந்தில் பாலாஜி வழக்கில் இருந்து வெளியே வருவார்.

    கோவை,

    கோவை பீளமேட்டில் உள்ள தொழில் நுட்ப பூங்கா (டைடல் பார்க்) மற்றும் எல்கார்ட் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜனதாவும், மத்திய அரசும் எதுவும் செய்யாமல், சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவற்றை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான வேலைகளை அவர்கள் தமிழகத்திற்கு செய்ய வேண்டும்.

    .

    தி.மு.க இதை விட பெரிய முதலைகளை எல்லாம் சந்தித்த இயக்கம். இந்த அடக்குமுறையில் இருந்தும் இன்னும் வலிமையாக வெளியே வருவோம். நிச்சயமாக எங்கள் மீது எந்த தவறும் இல்லை என நிருபித்து செந்தில் பாலாஜி வழக்கில் இருந்து வெளியே வருவார்.

    திமுகவை அடக்க வேண்டும் என்று நினைத்தால், இன்னும் வேகமாக வெளியே வரும் இயக்கம் தான் தி.மு.க. இயக்கம்.

    கலைஞரின் வளர்ப்பு, தளபதியின் தம்பிகளாகிய நாங்கள், இதற்கெல்லாம் பயந்து போகும் ஆட்கள் கிடையாது. செந்தில் பாலாஜி கைதின்போது நிறைய விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது.

    மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. அதைக் கண்டு பயப்பட்டு, மத்திய அரசு அவர்களிடம் இருக்கும் துறைகளை ஏவி ஏதாவது செய்ய முடியுமா? என பார்க்கின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை,

    நாங்கள் யார் என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×