என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பிப்ரவரி மாதம் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்தது.
    • சின்னதம்பி, சுயம்பு என்ற 2கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    பொள்ளாச்சி,

    தருமபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப் பட்ட மக்னா யானை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது. அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து கோவையை நோக்கிச் சென்றது.

    இங்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு, மானாம்பள்ளியில் உள்ள மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது. ரேடியோ காலர் கருவி பழுதாகி விட்டதால் யானையின் நகர்வை கண்காணிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    இந்நிலையில், மக்னா யானை சரளபதி கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது. யானை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மக்னா யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து கும்கி யானைகளான சின்னதம்பி, சுயம்பு ஆகிய இரு யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    யானையின் நடமாட்டம் உள்ள பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் மக்னாவை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிறுமியின் பெற்றோர் மகளை கண்டித்து படிப்பை நிறுத்தினர்.
    • சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    பொள்ளாச்சி,

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவியின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டனர்.

    கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி சிறுமியை அவரது தாய், தனது தங்கை வீடான பொள்ளாச்சியில் கொண்டு வந்து விட்டார். 1 மாதத்திற்கும் மேலாக அங்கு தங்கி இருந்த சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தனது வீட்டிற்கு சென்றார்.

    சம்பவத்தன்று, சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சிறுமி மட்டும் இருந்தார். சிறுமியின் பெற்றோர் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது சிறுமி மாயமாகி இருந்தார்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தனர்.

    போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி, தனது காதலனுடன் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் திருப்பூர் விரைந்து சென்று சிறுவனுடன் இருந்த சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    மேலும் சிறுவன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவின் தந்தையும், தாயும், அவர்களது மகளை பார்ப்பதற்காக சென்று விட்டனர்.
    • மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வடவள்ளி:

    கோவை தொண்டாமுத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் வேணுகோபால்.இவரது மகன் மாரிமுத்து (வயது32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் அ.தி.மு.க. தொண்டாமுத்தூர் பேரூராட்சி 14-வது வார்டு துணை செயலாளராக இருந்துள்ளார். தற்போது தொண்டாமுத்தூர் பேரூராட்சி தொழில்நுட்ப பிரிவில் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார். இதுதவிர இவர் தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இ-சேவை மையமும் நடத்தி வந்தார்.

    32 வயதை கடந்து தனக்கு இன்னும் திருமணம் ஆகாததால் மாரிமுத்து மன வேதனை அடைந்தார். இதனால் கடந்த சில நாட்களாக இதுகுறித்து தனது தாய், தந்தையிடம் புலம்பியுள்ளார்.

    அவர்கள் மாரிமுத்துவுக்கு ஆறுதல் கூறி அவரை தேற்றி வந்தனர். இருந்த போதிலும் அவர் மனவருத்தத்துடனேயே காணப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவின் தந்தையும், தாயும், அவர்களது மகளை பார்ப்பதற்காக சென்று விட்டனர்.

    இதனால் மாரிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று வழக்கம் போல இ-சேவை மையத்திற்கு மாரிமுத்து சென்று பணியாற்றினர்.

    அங்கிருந்து மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் மகள் வீட்டிற்கு சென்றிருந்த மாரிமுத்துவின் தாய், தந்தையினர் மாலையில் வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியான அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது மகன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதனை பார்த்ததும் அவர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்தனர். வீட்டில் அவர் இறப்பதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளரா என வீடு முழுவதும் சோதனையிட்டனர்.

    அப்போது வீட்டில் உள்ள அறையில் மாரிமுத்து தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் தொந்தரவும் செய்ய வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.

    அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இவருக்கு அதிகளவில் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற முயற்சித்ததாகவும், ஆனால் கடன் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    இதனால் அவர் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 120 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய சேப்பாக் அணி 121 ரன்கள் எடுத்து வென்றது.

    கோவை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடந்தது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது திருப்பூர் அணி.

    அதன்படி, முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ராதாகிருஷ்ணன் 36 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்கள், ராஜேந்திரன் 26 ரன்களும் (நாட்அவுட்) எடுத்தனர்.

    சேப்பாக் அணி சார்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 13 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரதோஷ் பால் 25 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய சஞ்சய் யாதவ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இந்த தொடரில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. பாபா அபராஜித் 46 ரன்னும், ஹரீஷ் குமார் 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணிக்கு, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, ராதாகிருஷ்ணன் 36 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்கள், ராஜேந்திரன் 26 ரன்களும் (நாட்அவுட்) எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

    • சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
    • திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையிடம் தோல்வி அடைந்தது.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது 2-வது போட்டியாகும். டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

    அதேசமயம், திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையிடம் தோல்வி அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    • ஈஸ்வர மூர்த்தி தனது காரை சிட்ரா அருகே உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
    • ஈஸ்வர மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை,

    கோவை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது50). ரியல் எஸ்டேட் அதிபர்.

    நேற்று இரவு இவர் வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு நண்பரான கண்ணன் என்பவருக்கு கொடுப்பதற்காக காரில் புறப்பட்டார்.

    இரவு 9.30 மணியளவில் ஈஸ்வர மூர்த்தி தனது காரை சிட்ரா அருகே உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.

    திரும்பி வந்து பார்த்த போது காரில் இருந்த பணம் மாயமாகி இருந்தது. ஈஸ்வரமூர்த்தி சாப்பிட சென்றதை நோட்டமிட்டு, மர்மநபர் கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த ரூ.70 லட்சம் பணத்தைத் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஈஸ்வர மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் மர்ம நபர் பணத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை ஒண்டிப்புதூர் கிருஷ்ணன் நாயுடு வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (63). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர்.

    சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றார்.

    வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு வெளியில் வந்த அவர் பணத்தை மொபட்டில் உள்ள சீட்டுக்கு அடிப்பகுதியில் வைத்தார். இதனைத் தொடர்ந்து தேவராஜ் மொபட்டில் சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றார்.

    மோட்டார் சைக்கிளை வங்கி முன்பு நிறுத்திவிட்டு வங்கியினுள் சென்றார். பின்னர் வந்து பார்த்த போது, வண்டியில் வைத்திருந்த பணம் மாயமாகி இருந்தது. இவர் வங்கிக்குள் சென்றதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர் வண்டியில் இருந்த பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள். நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் தினேஷ் (32). என்ஜினியரிங் பட்டதாரி. சம்பவத்தன்று இவர் வேலைக்கு நேர்காணலுக்காக கோவைக்கு வந்தார்.

    அப்போது பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்கா அருகே அவரை, வாலிபர் ஒருவர் நேர்காணல் செய்தார். அப்போது அந்த நபர் ஐ.டி கம்பெனியில் வேலை என்பதால் கட்டாயமாக லேப்டாப் மற்றும் செல்போன் வேண்டும் என்றார். மேலும் அப்ளிகேஷனை லேப்டாப் செல்போனில் ஏற்ற ரூ.10 ஆயிரமும் கேட்டார்.

    இதை நம்பிய தினேசும், தனது செல்போன், லேப் டாப் மற்றும் ரூ.6 ஆயிரம் கொடுத்தார். அதனை வாங்கி கொண்ட நபர் சிறிது நேரத்தில் வருகிறேன் என கூறி சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வரவில்லை.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தினேஷ் காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை ஏமாற்றி யதாக அன்னூர் அடுத்த செங்காளி பாளையத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்(34) என்பவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் தயாநிதி. இவரது மனைவி மசக்காரணி (50). சம்பவத்தன்று இவர் ராஜ வீதி வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் முகவரி கேட்டார். அப்போது மசக்காரணி முகவரியை கூறிக்கொண்டிருந்தார்.

    கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் மசக்காரணி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றார்.

    இதுகுறித்து அவர் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற வாலி பரை தேடி வருகிறார்கள்.

    • டாஸ்க்குகளை முடித்தால், ஆன்லைன் மூலம் வேலை தருவதாகக் கூறி ஒரு லிங்கை அனுப்பினர்.
    • ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லத்திகா லட்சுமி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்.

    இவரின் மனைவி லத்திகா லட்சுமி (வயது29). பி.காம் பட்டதாரி. இவர் வீட்டிலிருந்தபடியே கணக்காளராக வேலை செய்து வருகிறார்.

    இவரது செல்போனில் வாட்ஸ்-அப்புக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் டாஸ்க்குகளை முடித்தால், ஆன்லைன் மூலம் வேலை தருவதாகக் கூறி ஒரு லிங்கை அனுப்பினர்.

    பின்னர், லத்திகா லட்சுமியை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் லிங்க் மூலம் சென்று யூடியூப் வீடியோவை பார்த்து லைக் கொடுத்தால் போதும் வருமானம் கிடைக்கும் என கூறியுள்ளார்.இதனை நம்பி லத்திகா வீடிய விற்கு லைக் கொடுத்தார். பின்னர், டெலிகிராம் லிங்க் மூலம் இணைந்து பணியாற்ற வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும், ரூ.10 ஆயிரம் முதலீடு செய்ய கூறினர். லத்திகா லட்சுமி ரூ.10 ஆயிரத்தை முதலீடு செய்தார். இதன் மூலம்அவருக்கு ரூ.14 ஆயிரம் வருமானம் கிடைத்தது. பின்னர், ரூ.60 ஆயிரம் முதலீடு செய்து ரூ.90 ஆயிரம் பெற்றார். இதை யடுத்து, ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வி.ஐ.பி உறுப்பினராக முடியும் எனவும்,ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு ஒரு புள்ளி அளிக்கப்பட்டு கூடுதல் வருமானம் கிடைக்கும் என கூறினர்.

    இதனை நம்பி லத்திகா லட்சுமி ரூ.22 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லத்திகா லட்சுமி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருகூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • மின்தடை குறித்த தகவலை சம்பந்தப்பட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்கள் தெரிவித்து உள்ளன.

    கோவை,

    கோவை இருகூர் துணை மின்நிலையத்தில் நாளை (16-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளப்பாளைத்தின் ஒரு பகுதி, சிந்தாமணிப்புதூர், கண்ணம்பாளையத்தின் ஒரு பகுதி, சின்னியம்பாளையத்தின் ஒருபகுதி, வெங்கடாபுரம், தொட்டிபாளையத்தின் ஒருபகுதி, கோல்டுவின்சின் ஒருபகுதி, அத்தப்பக்கவுண்டன்புதூர் ஆகிய இடங்கில் மின்விநியோகம் இருக்காது.

    இதேபோல சோமனூர், காளிபாளையம், கருமத்தம்பட்டி, இளச்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே சோமனூர், கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சிபாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன்பாளையம், கணியூரின் ஒரு பகுதி, ராயர்பாளையம், கருமத்தம்பட்டி 4 ரோடு, தண்ணீர்பந்தல், செகுடந்தாளி, இளச்சிபாளையம், பள்ளிபாளையத்தின் ஒருபகுதி, அய்யம்பாளையத்தின் ஒருபகுதி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடைபடும்.

    கோவை டாடாபாத் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோட்டின் ஒரு பகுதி, நாராயணகுரு ரோடு, சாய்பாபா காலனி, மனையியல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர் ரோட்டின் ஒரு பகுதி, பாரதி பார்க் கிராஸ், ராஜாஅண்ணாமலை ரோடு, சென்ட்ரல் திரையரங்கம், திவான்பகதூர் சாலையின் ஒரு பகுதி, பூ மார்க்கெட், பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்பகவுண்டர் சாலை, சி.எஸ்.டபிள்யூ மில்ஸ், ரங்கேகவுண்டர் சாலை, சுக்கர்வார்பேட், மரக்கடை, தெப்பக்குளம் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர பகுதி, ஆவராம்பாளையம் பகுதி, டாடாபாத், அழகப்பசெட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, அட்கோ காலனி, அலமு நகர் ஆகிய பகுதிகளில் வருகிற 17-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    சூலூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சூலூர், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதூர், ராவத்தூர் ஆகிய பகுதிகளில் வருகிற 17-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைபடும். இந்த தகவலை சம்பந்தப்பட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்கள் தெரிவித்து உள்ளன.

    • ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை - வடகோவை ரெயில் நிலையம் இடையே உள்ள தண்டவாள பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். இதில் அந்த வாலிபர் ரெயிலில் அடிபட்டு இறக்கவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவரை எவரேனும் கொன்று தண்டவாளத்தில் வீசி சென்றனரா? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரங்கசாமி, சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.
    • போலீசார் ரங்கசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரங்கசாமி (வயது 26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    கடந்த ஆண்டு ரங்கசாமி, சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். பின்னர் அவர் பண்ணாரி அருகே உள்ள கோடயாபாளையத்துக்கு சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்தார்.

    கடந்த 10 மாதங்களாக ரங்கசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். சிறுமி திடீரென மாயமானதால் அவரது பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் சிறுமியை ரங்கசாமி கடத்தி சென்று திருமணம் செய்து கோடயாபாளையத்தில் வசித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 மாதங்களாக ரங்கசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிறுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கடந்த 10 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ரங்கசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • வாலிபர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு வருகிற 20-ந் தேதி திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். நர்சிங் பட்டதாரி.

    இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. வாலிபர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்தனர்.

    அதன்படி மாப்பிள்ளை பார்த்த இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு வருகிற 20-ந் தேதி திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பொள்ளாச்சிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர், தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    வெளியே சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இளம் பெண்ணின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தனர். மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து மீட்டுத்தருமாறு புகாரில் கூறி இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ×