என் மலர்
கோயம்புத்தூர்
- பாலாஜி தேவராஜை டோலி கட்டி மலையடிவாரத்திற்கு தூக்கி வந்தனர்.
- மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாலாஜி தேவராஜ் இறந்தது தெரியவந்தது.
வடவள்ளி:
கோவை கோல்டு வின்ஸ் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி தேவராஜ்(வயது49).
இவர் அந்த பகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் பாலாஜி தேவராஜ் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
அப்போது தென் கயிலாய பக்தி பேரவை அமைப்பினர் மலைஏறுவதற்கு சிறப்பு அனுமதி பெற்றிருந்ததை அறிந்தார்.
உடனடியாக அவர்களுடன் அந்த குழுவில் இணைந்து கொண்டார். நேற்று காலை அந்த குழுவினருடன், பாலாஜி தேவராஜூம் மலையேறினார்.
3-வது மலையில் ஏறிகொண்டிருந்த போது பாலாஜி தனக்கு நெஞ்சுவலிப்பதாக தன்னுடன் வந்தவர்களிடம் தெரிவித்தார். சிறிது நேரத்தில் மயங்கியும் விட்டார்.
இதனால் அதிர்ச்சியான அவருடன் வந்தவர்கள், பாலாஜி தேவராஜை டோலி கட்டி மலையடிவாரத்திற்கு தூக்கி வந்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து பாலாஜி தேவராஜை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து அவரது மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாலாஜி தேவராஜ் இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.
- மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது.
இங்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.
பின்னர் ஏல முறையில் காய்கறிகளை விலைக்கு வாங்கி வியாபாரிகள் விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர்.
இந்த மொத்த காய்கறி மண்டிக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், நூல்கோல், டர்னீப், முள்ளங்கி, முட்டைகோஸ், சேனைகிழங்கு, பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது.
இதில் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கொண்டு வரப்படுகிறது.
பின்னர் இஞ்சி தரம் பிரிக்கப்பட்டு, தரத்திற்கு ஏற்பட விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கும், குறைந்த பட்சமாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
கடந்த வாரத்தை காட்டிலும் இஞ்சி வரத்து குறைவாக இருப்பதால் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த வாரத்தில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.8,750க்கு விற்பனையானது. தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தற்போது 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கு விற்பனையானது. அதேபோல தரம் குறைந்த இஞ்சி குறைந்தபட்ச அளவாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேவை தொடங்க பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.
- சேவையால் கோவையில் இருந்து பல உலக நாடுகளுக்கு செல்பவர்களுக்கு மிகுந்த பயன்தரும்.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது.
2020-ம் ஆண்டு வரை கோவை- இலங்கை இடையே ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில் சேவை வழங்கப் பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேவையை அந்நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்தது.
இந்த விமான சேவையை விரைவில் மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை-இலங்கை இடையே கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை விமான சேவை வழங்கப்பட்டு வந்தது. நிர்வாக காரணங்களால் அது நிறுத்தப்பட்டது.
இலங்கை நாட்டின் கொழும்பு நகருக்கு கோவையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விமான சேவை கடந்த 2017-ல் தொடங்கியது. முதலில் ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமை என வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்பட்டது.
அதன் பின்னர் வாரத்தின் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டது.
கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 2.35 மணியளவில் கோவையில் தரையிறரங்கும். மீண்டும் 3.35 மணியளவில் கோவையில் இருந்து புறப்பட்டு கொழும்பு செல்லும்.
சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. கொரோனா தொற்று பரவலால் 2020-ம் ஆண்டு முதல் தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேவை தொடங்க பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஓடுதள புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து 24 மணி நேரமும் விமான நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே இலங்கை நாட்டுக்கு மீண்டும் தொடங்கப் பட உள்ள விமான சேவைக்கு ஸ்லாட் என்று சொல்லக்கூடிய நேரம், ஓடுபாதை, விமானம் நிறுத்துமிடம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிவு செய்தபின் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கொங்கு குளோபல் போரம் இயக்குனர் நந்தகுமார் கூறும்போது, ஒரு மணி பயண நேரத்தில் இலங்கை சென்றடையும். இந்த விமான சேவையால் கோவையில் இருந்து ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு செல்பவர்களுக்கு மிகுந்த பயன்தரும் என்றார்.
- முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கி பேசுகிறார்.
- அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கோவை,
கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க கோவை ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற 21-ந் தேதி காலை 10 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதற்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கி பேசுகிறார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, வர்த்தக அணி, கட்டுமான தொழிற்சங்கம், மருத்துவர் அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் முகத்தை சுழித்தபடி சாலையை கடக்கின்றனர்.
- சாக்கடை அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி ஊழியர்கள் யாரும் வரவில்லை.
வடவள்ளி,
கோவை சாய்பாபா காலனி- மேட்டுப்பாளையம் சந்திப்பு அருகே, சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் வெளியேற வழியின்றி, சாக்கடை மூடி வழியாக பீறிட்டு வெளியேறி வருகிறது. இதனால் சாலை முழுவதும் சாக்கடை நீர் ஆறாக ஓடுகிறது.
இது அருகில் உள்ள பெட்ரோல் பங்க, மருத்துவமனை வாசலிலும் குளம் போல தேங்கி நிற்கிறது. எனவே அந்த பகுதிக்கு எவரும் செல்ல முடியவில்லை. இரு சக்கர- நான்கு சக்கர வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் முகத்தை சுழித்தபடி சாலையை கடந்து செல்கின்றனர்.
கோவை சாய்பாபா காலனியில் அதிகாலை முதல் கழிவு நீர் வெளியேறி வருகிறது. இருந்தபோதிலும் சாக்கடை அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி ஊழியர்கள் யாரும் வரவில்லை. எனவே பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
- கல்வி உதவி தொகை வழங்குவது தொடர்பாக பேசுவதற்கு தான் நான் போன் செய்துள்ளேன் என்றனர்.
- புகாரின் பேரில் மாநகர சைபர் குரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
கோவை,
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 மற்றும் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு போன்கால் வந்தது.
அந்த போனில் பேசிய மர்மநபர், நான் அரசு அலுவலராக உள்ளேன். கல்வி உதவி தொகை வழங்குவது தொடர்பாக பேசுவதற்கு தான் நான் போன் செய்துள்ளேன். உங்களது மகன், மகள்களுக்கு அரசு மூலமாக உதவித்தொகை வழங்க உள்ளோம்.
உதவி தொகையை நாங்கள் போன் மூலமே அனுப்பி விடுவோம். பணம் அனுப்பியதற்கான கியூ ஆர் கோர்டு உங்களது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணில் அனுப்பி விடுவோம். அதனை தொட்டால் உங்களுக்கு பணம் வந்து விடும் என தெரிவித்தனர்.
இதனை உண்மை என நம்பிய பெற்றோரும், அந்த நம்பரை செல்போனில் சேமித்து விட்டு, அந்த வாட்ஸ்-அப் பக்கத்திற்கு சென்றனர். அந்த கும்பல், மக்களை நம்ப வைப்பதற்காக தங்கள் வாட்ஸ் அப் முகப்பு பக்கத்தில் தமிழ்நாடு அரசு லோகோவை வைத்திருந்தனர்.
இதனால் உண்மையிலேயே நம்மை தொடர்பு கொண்டு உதவி தொகை தருவதாக கூறியது அரசு அதிகாரிகள் என பெற்றோர் நினைத்து விட்டனர். தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வாட்ஸ்-அப் மூலமும் மாணவர்களின் பெற்றோரிடம் பேசினார்.
இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்கு ஒரு கியூ ஆர் கோடு வரும். அது வந்தால் உங்களுக்கு பணம் வந்துவிட்டது என அர்த்தம் என தெரிவித்த னர்.
சொன்ன படியே அந்த கும்பல் அனைவரின் வாட்ஸ்அப்பு க்கு கியூ ஆர்கோடு அனுப்பி விட்டு பணம் அனுப்பி விட்டோம். அந்த கியூ ஆர் கோடை கிளிக் செய்தால் பணம் வந்ததை நீங்கள் பார்த்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.
பெற்றோரும் கல்வி உதவி தொகை கிடைக்கும் ஆசையில் அந்த கியூ ஆர் கோடை கிளிக் செய்தனர். மாணவர்களின் பெற்றோர் அந்த கியூ ஆர்கோடை கிளிக் செய்த அடுத்த நொடியில், அவர்களது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் பறிபோய்விட்டது.
தங்களுக்கு பணம் கிடைக்கும் என நினைத்த பெற்றோர்களுக்கு தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோவையை சேர்ந்த 7 பேர் தங்களிடம் ஒரு கும்பல் கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்து விட்டதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மாநகர சைபர் குரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். முதலில் மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி உதவித்தொகை தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது யார் என்பதை கண்டறியும் பணியில் இறங்கினர்.
விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட கும்பல் நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த டேவிட் (வயது32), லாரன்ஸ்ராஜ்(28), ஜேம்ஸ் (30), எட்வின் சகாயராஜ் (31), மாணிக்கம் (34) என்பது தெரியவந்தது. இவர்கள், கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்டோரிடம் இதுபோல ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் எங்கு பதுங்கி இருக்கி ன்றனர் என்பதை செல்போனை வைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நாமக்கல்லில் பதுங்கி இருப்பது தெரி யவரவே போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கு பதுங்கி இருந்த டேவிட் உள்பட 5 பேரையும் சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் 44 செல்போன்கள், 7 வங்கி புத்தகம், 28 சிம் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைதான 5 பேரையும் போலீசார் இன்று காலை கோவைக்கு அழைத்து வந்தனர். இங்கு வைத்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் தமிழகம் முழுவதும் எத்தனை பேரிடம் மோசடி செய்துள்ளீர்கள். எவ்வளவு லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும் போது, கோவையில் கல்வி உதவி தொகை தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேபோல் லாட்டரி மோசடி, ரிவார்டு பெற்று தருவதாக மோசடி, செல்போன் டவர் அமைக்க பணம் தருவதாக மோசடி என பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.
- கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த இளம்பெண் மெடிக்கலுக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
- சம்பவம் குறித்து, பெற்றோர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தனர்.
பொள்ளாச்சி,
காதலுக்கு வயதில்லை. இருவரின் மனமும் ஒத்துப்போனால் யார் வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்பார்கள். அப்படி 20 வயது மூத்த நபரை காதலித்து கரம்பிடித்துள்ளார் கோவையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவர்.
கோவை பொள்ளாச்சியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் அங்குள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இது தவிர அந்த பகுதியில் உள்ள மெடிக்கல்லில் பகுதி நேரமாகவும் வேலை பார்த்து வந்தார்.
அப்போது, இளம்பெண்ணுக்கும், கடையின் உரிமையாளருக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
ஆனால் இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவில்லை. இளம்பெண் நீண்ட நேரம் போனில் பேசியதை கேட்டபோதும், வேலை விஷயமாக பேசுவதாக தெரிவித்து வந்தார். கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த இளம்பெண் தனது தாயிடம் தான் மெடிக்கலுக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர், இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். அவரும் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் இளம்பெண்ணின் செல்போனுக்கு அவரது தாய் போன் செய்தார். அப்போது அவர், தான் மருந்தகத்தின் உரிமையாளருடன் வேலை விஷயமாக சென்னைக்கு சென்று கொண்டிருக்கிறேன். வேலை முடிந்தவுடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விடுவேன் என தெரிவித்தார்.
வேலை விஷயமாக செல்வதாக கூறியதால் அவர்களும் விட்டு விட்டனர். 2 நாட்கள் ஆகியும் திரும்பி வராததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து மீண்டும் தங்களது மகளுக்கு போன் செய்தனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பெற்றோர் பதறி போனார்கள்.
உடனடியாக சம்பவம் குறித்து, பெற்றோர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வந்தனர்.
இதற்கிடையே மாயமான இளம்பெண் தான் வேலை பார்த்து வந்த மருந்தகத்தின் உரிமையாளரை திருமணம் செய்து கொண்ட தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் சென்னையில் உள்ளனரா அல்லது வேறு எங்காவது தங்கி இருக்கின்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பழனிச்சாமி வனவிலங்குகள் வந்தால் அதனை விரட்டுவதற்காக சிறிய அளவிலான பட்டாசினை பயன்படுத்தி வந்தார்.
- இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே தாயனூர் தெற்குத்தோட்டம் பகுதியைச்சேர்ந்தவர் பழனிச்சாமி (37). இவருக்கு நந்தினி (31) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இவரது தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் அவ்வப்போது காட்டு யானைகள், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் பழனிச்சாமி வனவிலங்குகள் வந்தால் அதனை விரட்டுவதற்காக சிறிய அளவிலான பட்டாசினை பயன்படுத்தி வந்தார்.
நேற்று இரவு இவரது தோட்டத்திற்கு காட்டு யானை வந்தது. இதனையடுத்து பழனிச்சாமியும், அவரது மனைவியும் சேர்ந்து யானையை பட்டாசு வெடித்து விரட்ட முயன்றனர். அப்போது தவறுதலாக பட்டாசு பழனிச்சாமியின் கையில் வெடித்தது.
இதில் பழனிச்சாமியின் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மனைவிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்த அறிந்த காரமடை போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இதுவரை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு புதிதாக இன்ஸ்பெக்டர் பணிநியமனம் செய்யப்படவில்லை.
- 2 போலீஸ் நிலையங்களிலும் வழக்குகளை விசாரிப்பதற்கு போலீசாருக்கு தடுமாற்றம் அடைகின்றனர்.
குனியமுத்தூர்,
கோவை மாநகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள போத்தனூர், குனியமுத்தூர் போலீஸ் நிலையங்கள் நகரின் முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் நிலையங்கள் ஆகும்.
குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தெய்வசிகாமணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதன் பிறகு இதுவரை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு புதிதாக இன்ஸ்பெக்டர் பணிநியமனம் செய்யப்படவில்லை.
அதேபோன்று போத்தனூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நடேசன் கடந்த மாதம் 26-ந் தேதி புதிதாக திறக்கப்பட்ட சுந்தராபுரம் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.
இதனால் அங்கும் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் 2 போலீஸ் நிலையங்களிலும் வழக்குகளை விசாரிப்பதற்கு போலீசாருக்கு தடுமாற்றம் ஏற்பட்டு வரும் சூழ்நிலை உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
2 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி மிகவும் பரந்து விரிந்ததாகும். ஏற்கனவே 2 காவல் நிலையங்களிலும் போலீஸ் பற்றாக்குறை இருந்து வரும் சூழலில் இன்ஸ்பெக்டர் பணியிடமும் நிரப்பப்படவில்லை என்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே குனியமுத்தூர், போத்தனூர் ஆகிய 2 போலீஸ் நிலையங்களுக்கு உடனே இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும் என கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வனவர் காட்டு யானையை விரட்ட முயன்றதால் யானை ஆக்ரோஷம் அடைந்தது.
- ஜோனி, தலைதெறிக்க ஓட்டம் பிடித்து, அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு யானை, கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட னவிலங்குகள் உள்ளன. ஆனைமலையின் அடர்ந்த காட்டுப்பகுதியில், கடந்த சில வாரங்களாக மழை இல்லை. எனவே அங்கு உள்ள நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.
இதனால் காட்டு யானைகள் கூட்டமாக கிராமப்பகுதிகளுக்கு சென்று, அங்கு உள்ள குளம் குட்டைகளில் தண்ணீர் குடித்து செல்கின்றன.
எனவே ஆனைமலை காட்டுக்கு வெகு அருகில் உள்ள ஆழியாறு அணைக்கட்டு, வால்பாறை, நவமலை ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளை அடிக்கடி பார்க்க முடியும். அதேநேரத்தில் வனவிலங்குகள் உணவுதேடி கிராமத்துக்குள் புகுந்து உயிர்ச்சேதம் மட்டுமின்றி பயிர்களையும் நாசப்படுத்த வாய்ப்பு உண்டு.
எனவே பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
அப்போது அவர்கள் கிராமத்துக்குள் நுழைய முயற்சிக்கும் வன விலங்குகளை நடுவழியில் தடுத்து நிறுத்தி, மீண்டும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் நேற்று நவமலை பகுதியில் முகாமிட்டு இருந்தனர். அப்போது அங்கு காட்டு யானைகள் கூட்டம் வந்ததன. அதில் ஒரு யானை கிராமத்துக்குள் நுழைய முயன்றது. இதனை அங்கு பணியில் இருந்த வனவர் ஜோனி என்பவர் தற்செயலாக பார்த்து விட்டார்.
எனவே அவர் அந்த காட்டு யானையை விரட்ட முயன்றார். இதனால் அது கடும் ஆக்ரோஷம் அடைந்தது. எனவே அந்த காட்டு யானை பிளிறியபடி வேகமாக விரட்டி வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோனி, தலைதெறிக்க ஓட்டம் பிடித்து, அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். இதற்கிடையே வனத்துறையின் மற்ற வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக திரண்டு வந்தனர்.
அந்த காட்டு யானை மீண்டும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று விட்டது.
- கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.
நெகமம்,
கோவை மாவட்டம் பெரியநெகமம் திருமூர்த்தி செட்டியார் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது40). லேத் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி அபிநயா என்ற மனைவியும், நீலேஷ் ராமசாமி(13) என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பும் இதே போன்று கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அபிநயா கோபித்து கொண்டு மகனுடன், கேரளமாநிலம் வண்ணாமடையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து கார்த்திகேயன் மட்டும் தனியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ அழைப்பதற்காக அவர் கேரளாவுக்கு சென்றார்.
அங்கு தனது மனைவியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. மேலும், கார்த்திகேயனின் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் அவரை தகாத வார்த்தைகளால் பேசி அனுப்பி விட்டனர்.அங்கிருந்து வந்த கார்த்திகேயன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்தார். நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமாகி விட்டார்.
அவரை உறவினர்கள் அக்கம் பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் ஏதாவது இருக்கிறதா என தேடி பார்த்தனர். அப்போது, வீட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதனை உறவினர்கள் எடுத்து பார்த்தனர். அப்போது தான் தற்கொலை செய்ய போகிறேன். தன்னை தேட வேண்டாம் எழுதி வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கார்த்திகேயனின் உறவினர் இது தொடர்பாக நெகமம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.
- குந்தன்குமாருக்கு, முன்னாகுமார் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தார்.
- இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தினர்.
கிணத்துக்கடவு,
பீகார் மாநிலம் நவ்டாவை சேர்ந்தவர் குந்தன்குமார்(வயது22). இவர் கடந்த 12-ந் தேதி பீகாரில் இருந்து கோவைக்கு வந்தார்.
பின்னர் கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளத்தில் வேலை பார்த்து வரும் தனது சகோதரியின் கணவரான முன்னாகுமாரை சந்தித்தார்.
பின்னர் அவரது அறையில் தங்கியிருந்தார். குந்தன்குமாருக்கு, முன்னாகுமார் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தார். 2 பேரும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தனர்.
நேற்று காலை முன்னாகுமார் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்தார். ஆனால் குந்தன்குமார் எழுந்திருக்காமல் படுத்திருந்தார். இதனால் அவரிடம் வேலைக்கு புறப்படு என தெரிவித்தார்.
அதற்கு அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் வேலைக்கு வரவில்லை. நீங்கள் செல்லுங்கள் என கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரை அறையில் வைத்து விட்டு முன்னாகுமார் மட்டும் வேலைக்கு சென்றார்.
இந்த நிலையில், அவர்களுடன் தங்கியிருக்கும் லாலாகுமார் என்பவர் தனது பணி முடிந்ததும் மாலையில் அறைக்கு திரும்பினார். அப்போது அறை பூட்டி இருந்தது.
கதவை தட்டி பார்த்தார். ஆனால் வெகுநேரமாகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாலாகுமார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது, அறைக்குள் குந்தன்குமார் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
அதிர்ச்சியான அவர் முன்னாகுமாருக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து சக தொழிலாளர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் தூக்கில் தொங்கிய குந்தன்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட குந்தன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குந்தன்குமாருக்கு ஊரில் ஏதோ பிரச்சினை இருந்துள்ளது. இதனால் பீகாரில் இருந்த போதே தற்கொலைக்கு முயற்சித்தார். அப்போது அவரை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து காப்பாற்றினர்.
அங்கிருந்தால் பிரச்சினை என்பதால், அவரை குந்தன்குமாரின் சகோதரன் சித்தரஞ்சன் தனது சகோதரி கணவர் பணியாற்றி வரும் கோவைக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் இங்கு வந்த பின்னரும் அவர் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்து வந்ததும், தற்போது தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
மேலும் அவர் தான் தற்கொலை செய்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். எதற்காக அவர் தற்கொலை செய்ததை வீடியோ எடுத்தார் என்பது தெரியவில்லை.
அந்த வீடியோவை அவர் யாருக்காவது அனுப்பினாரா? அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பணியாற்றும் சக தொழிலாளர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






