என் மலர்
கோயம்புத்தூர்
- வெட்ட வந்த தொழிலாளர்களை பொது மக்கள் தடுத்து நிறுத்தினர்
- நெடுஞ்சாலை பகுதியில் இருந்ததால் மரத்தை வெட்ட வருவாய் துறை அனுமதி அளித்துள்ளனர்
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் கரியாஞ்செட்டிபாளையம் பிரிவு, சோமந்துறை சித்தூர் பிரிவு அருகே நெடுஞ்சாலை யோரம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது.
இந்த நிலையில் தனியார் வணிக வளாக கட்டுமான பணிக்கு இடையூறாக இருப்பதாக கூறி இந்த ஆலமரத்தை வெட்ட வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை யினரிடம் அனுமதி பெற்றுள்ளனர்.
சாலையோரத்தில் போக்குவரத்து இடையூறு இல்லாத நிலையில், தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணிக்கு இடையூறாக இருப்பதாக கூறி ஆலமரத்தை வெட்டுவதற்கு நேற்று ஊழியர்கள் வந்தனர்.
அவர்கள் ஆலமரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுபற்றிய தகவல் அந்த பகுதி மக்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆலமரத்தின் அருகே திரண்டனர்.
அவர்கள் மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இருந்தவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த மரத்தை வெட்டக்கூடாது என தெரிவித்தனர். இதனால் மரம் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது:-
தங்களது மூதாதையர் காலத்தில் இருந்தே இந்த மரம் எங்கள் பகுதியில் இருந்து வருகிறது. இது எங்கள் பகுதிக்கு நிழல் கொடுக்கும் மரமாக 100 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இப்படி பழமை வாய்ந்த ஆலமரத்தை தனியார் வணிக வளாக பயன்பாட்டுக்காக எவ்வாறு வெட்டலாம்? அரசு ஒருபுறம் மரம் வளர்க்கவும், மரக்கன்று நடுவதை ஊக்கப்படுத்தி வருகிறது.
மறுபுறம் அதிகாரிகள் மரத்தை வெட்ட அனுமதி அளிக்கின்றனர். தனியாருக்கு அதிகாரிகள் துணை போவது மிகுந்த வேதனையாக உள்ளது. இந்த மரத்தை வெட்டக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் உசேன் கூறும் போது, நெடுஞ்சாலை பகுதியில் இருந்ததால் மரத்தை வெட்ட வருவாய் துறை அனுமதி அளித்துள்ளனர் என்றார். ஆனைமலை தாசில்தார் ரேணுகா தேவி கூறும்போது, இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரிக்கிறேன் என்றார்.
- இளம்பெண் தனது பெற்றோரிடம் வீரக்குமாருடன் சேர்ந்து வாழ போவதாக கூறினார்.
- பெற்றோரை சந்தித்த வீரகுமார், உங்கள் மகளை எனக்கு 2-வதாக திருமணம் செய்து வையுங்கள் என கேட்டார்.
கோவை:
கோவை ராமநாதபுரம் கருப்பண்ண தேவர் வீதியை சேர்ந்தவர் வீரகுமார் (வயது 33). இவர் திருமண நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். கருத்துவேறுபாடு காரணமாக வீரகுமார் கடந்த 3 மாதங்களாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இவர் கோவை ராமநாதபுரத்தில் நடந்த காதணி விழாவுக்கு அலங்காரம் செய்வதற்காக சென்றார். அப்போது வீரகுமாருக்கு திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் அக்கம்பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு வடவள்ளி அருகே ஆண்டிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.
இளம்பெண் தனது பெற்றோரிடம் வீரக்குமாருடன் சேர்ந்து வாழ போவதாக கூறினார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவத்தன்று வீரகுமாரை தொடர்பு கொண்ட இளம்பெண் தன்னை திருமணம் செய்வது தொடர்பாக தனது பெற்றோரிடம் வந்து பேசுமாறு அழைத்தார்.
அதன்படி அவர் தன்னுடன் வேலை பார்க்கும் ராம்குமார், சதீஷ்குமார் ஆகியோருடன் ஆண்டிபாளையத்தில் உள்ள இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அவரது பெற்றோரை சந்தித்த வீரகுமார், உங்கள் மகளை எனக்கு 2-வதாக திருமணம் செய்து வையுங்கள் என கேட்டார். இது இளம்பெண்ணின் பெற்றோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வீரகுமாரை கண்டித்தனர். இதனால் 2 தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது வீரகுமார், இளம்பெண்ணின் தந்தையை தாக்க முயன்றார். இதனை பார்த்த இளம்பெண்ணின் தாய் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வீரகுமாரின் மண்டையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வீரகுமாரை தாக்கியது இளம்பெண்ணின் தந்தையான சுப்பிரமணியம் (65), அவரது தாயார் தங்கமணி (57) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடை த்தனர். கைதான சுப்பிரமணியம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். அவர் வேடப்பட்டி பகுதி அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார்.
- கலாமணி மீது கருப்புராயன் இறங்கும் நிகழ்வு ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும்.
- அருள்வாக்கு நிகழ்வை பார்ப்பதற்காக 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வருவார்கள்.
நிலாம்பூர்,
கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் கருப்புராயன் சுவாமி கோவில் உள்ளது. இங்கு அமாவாசைதோறும் கருப்புராயன், மாசாணி அம்மனுக்கு கறிப்படை சகிதம் சிறப்பு பூஜைகள் செய்து மதுபானம் ஊற்றி, கடந்த 4 தலைமுறையாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
கருப்புராயன் கோவிலில் அமாவாசை பூஜைக்கான அனைத்து நிகழ்வுகளையும் பெண் பூசாரி கலாமணி என்பவர் முன்னின்று நடத்துகிறார். அப்போது கலாமணி மீது கருப்புராயன் இறங்கும் நிகழ்வு ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும்.
அதன்பிறகு அந்த பெண்மணி சாட்டை, அரிவாள், பிரம்பு எடுத்து துடும்பு இசைக்கேற்ப சூறாவளி வேகத்தில் கருப்புராயன் ஆட்டம் ஆடுவார். இதனை தொடர்ந்து பூசாரி கலாமணி ஆணிமுள் செருப்பில் நின்று கொண்டு அருள்வாக்கு சொல்கிறார். அதன்பிறகு கருப்பு ராயனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் நிகழ்வு நடக்கிறது.
அன்னூர் கருப்புராயன் கோவில் அமாவாசை அருள்வாக்கு நிகழ்வை பார்ப்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வருவார்கள். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கருப்புராயன் கோவிலில் பூசாரி கலாமணி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் பூசாரியாக உள்ளார். அமாவாசை நேரத்தில் அருள்வாக்கு கேட்கும் பக்தர்கள் வேண்டியது அனைத்தும் நடக்கும் என்று ஐதீகம் என்று பரவசத்துடன் கூறுகின்றனர்.
- பஸ்சில் இருந்த சிலர் யானைகளை போட்டோ எடுத்தனர்.
- வனவிலங்குகள் சுற்றி திரியும் ரோட்டில் அரசு பஸ் டிரைவர்கள் பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும்
மேட்டுப்பாளையம்,
நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் முதல் கெத்தை சாலை, பில்லூர் அணைக்கு செல்வதற்கான பிரதான சாலையாக உள்ளது. இது அடர்ந்த வனப்பகுதி ஆகும்.
எனவே இங்கு யானைகள், காட்டெருமை, மான் மற்றும் வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அங்கு நேற்று ஒரு அரசு பஸ் சென்றது. அப்போது காட்டு யானைகள் கூட்டம் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது.
இருந்தபோதிலும் டிரைவர் ஹாரன் அடித்தபடி அரசு பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது பஸ்சில் இருந்த சிலர் யானைகளை போட்டோ எடுத்தனர்.
இதனால் யானைகள் கூட்டம் மிரண்டு காட்டுக்குள் தப்பி சென்றது. கெத்தை ரோட்டில் நின்ற காட்டு யானைகள் ஒருவேளை வெகுண்டு தாக்குதல் நடத்தி இருந்தால், அரசு பஸ்சில் இருக்கும் பயணிகள் நிலைமை கேள்விக்குறியாகி விடும். எனவே வனவிலங்குகள் சுற்றி திரியும் ரோட்டில் அரசு பஸ் டிரைவர்கள் பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- இரவு 9.30 மணியளவில் ஈஸ்வர மூர்த்தி தனது காரை சிட்ரா அருகே உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
- இதுகுறித்து ஈஸ்வர மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
கோவை,
கோவை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது50). ரியல் எஸ்டேட் அதிபர்.
சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு நண்பரான கண்ணன் என்பவருக்கு கொடுப்பதற்காக காரில் புறப்பட்டார்.
இரவு 9.30 மணியளவில் ஈஸ்வர மூர்த்தி தனது காரை சிட்ரா அருகே உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது காரில் இருந்த பணம் மாயமாகி இருந்தது. ஈஸ்வரமூர்த்தி சாப்பிட சென்றதை நோட்டமிட்டு, மர்மநபர் கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த ரூ.70 லட்சம் பணத்தைத் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஈஸ்வர மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.விசாரணை மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பணத்தை கொள்ளையடித்தது ஈரோடு குமாரபாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 33) என்பது தெரிய வந்தது. அவரை பீளமேடு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து ரூ.24 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- உக்கடம் மீன் மார்க்கெட் சந்தையில் 24 மணிநேரமும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
- வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கு விற்பனை
கோவை,
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அசைவபிரியர்கள் மீன் உணவுகளை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
இதற்காக உக்கடம் பகுதியில் மீன் மார்க்கெட் சந்தை உள்ளது. இங்கு மத்தி, உளி, கிழங்கா, விலா, மடவை, அயிரை, வஞ்சிரம், ஏட்டை, சங்கரா, சீலா, ஜிலேபி, கட்லா, ரோகு ஆகிய மீன் வகைகள் குறைந்த விலையில் கிடைக்கும்.
எனவே உக்கடம் மீன் மார்க்கெட் சந்தையில் 24 மணிநேரமும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மீன்பிடிதடைக்காலம் அமலுக்கு வந்தது.
எனவே தூத்துக்குடி, ராமேஸ்வரம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. எனவே உக்கடம் மார்க்கெட் சந்தைக்கு மீன்கள் வரத்து வெகுவாக குறைந்தது.
எனவே வியாபாரிகள் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கடல் மீன்களை வரவழைத்து விற்பனை செய்தனர். இதனால் அங்கு மீன்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1500 என்ற விலைக்கு விற்பனை ஆகி வந்தது.
இதனால் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நடுத்தரமக்கள் வேறுவழியின்றி குளத்து மீன்களை வாங்கி சென்று வந்தனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்தது. எனவே மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்களை அள்ளிக்கொண்டு வருகின்றனர்.
அவை உடனுக்குடன் வாகனங்கள் மூலம் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு, சுடச்சுட விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே உக்கடம் மார்க்கெட் சந்தையில் மீன்கள் வரத்து படிப்டியாக அதிகரித்து வருகிறது.
எனவே இங்கு கடல் மீன்கள் வழக்கம் போல குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. உக்கடம் சந்தையில் மீன்கள் வரத்து அதிகரிப்பு, பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்கள் மீண்டும் கூட்டம் கூட்டமாக உக்கடம் மார்க்கெட் சந்தைக்கு வந்திருந்து, அங்கு விற்பனையாகும் கடல் மீன்களை குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
உக்கடம் மார்க்கெட் சந்தையில் மீன்கள் விலை விவரம் (ரூபாயில்):
மத்தி-200, உளி-250, கிழங்கா-200, விலா-500, மடவை-350, அயிரை-200, வஞ்சிரம்-900, ஏட்டை-400, சங்கரா-300, ஜிலேபி-100, கட்லா-130, ரோகு-130.
- தகவலின் பேரில் கோட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
- பட்டாசு தயாரிக்கும் மருந்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை,
கோவை கோட்டூர் பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பதாக கோட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் கோட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கு பட்டாசு தயாரித்து கொண்டிருந்த கோட்டூர் பாறை வீதியை சேர்ந்த சுப்பிரமணியம், நாகராஜ், மணி, மணிவேல், பேச்சிமுத்து , கிருஷ்ணசாமி, மகாலிங்கம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இவர்கள் 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளாக பனை ஓலையில் ஓலைவெடி, திருவிழாவுக்கு பானம் விடும் பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர். இவர்கள் அதற்கான உரிமத்தை கடந்த ஏப்ரல் மாதம் புதுப்பித்து இருக்கின்றனர். இந்த வருடத்திற்கான உரிமத்தை புதுப்பிக்காமல் இருப்பது தெரியவந்தது.
அனுமதியின்றி கடந்த சில நாட்களாக பட்டாசு தயாரித்தாக தெரிகிறது. அவர்களிடம் இருந்து பட்டாசு தயாரிக்கும் மருந்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் முறையான உரிமம் பெற்று பட்டாசு தயாரிக்குமாறு அறிவுறுத்தினர்.
- மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் வலது புறத்தில் மோதியது.
- ராய் ஜார்ஜ் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை,
கேரள மாநிலம் கோட்டயம் மட்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராய் ஜார்ஜ்(வயது21).
இவர் தனது காதலியான 18 வயது இளம்பெண்ணுடன் கோவையில் இருந்து கேரளா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மோட்டார் சைக்கிள் சேலம்-பாலக்காடு ரோட்டில் கே.ஜி.சாவடி அருகே உள்ள தனியார் கம்பெனி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் வலது புறத்தில் மோதியது. மோதிய வேகத்தில், அருகே சென்ற கார் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ராய் ஜார்ஜூம், அவரது காதலியும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். ராய் ஜார்ஜ் பஸ்சின் சக்கரத்தின் அருகே விழுந்ததில் பஸ்சின் பின்சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
ராய்ஜார்ஜின் காதலி படுகாயத்துடன் வலியால் துடித்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.ஜி.சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான ராய் ஜார்ஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
- கணவரின் மருத்துவ செலவுக்காக, விஜயா அங்கு உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களில் ரூ.1.20 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
- சம்பவம் குறித்து அன்னூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
கோவை,
அன்னூர், இந்திரா நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி விஜயா( வயது 44). கூலி தொழிலாளி.இவர்களுக்கு வைஷ்ணவி, கவுசல்யா என 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரங்கசாமி விபத்தில் சிக்கினார். இதனால் கணவரின் மருத்துவ செலவுக்காக, விஜயா அங்கு உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களில் ரூ.1.20 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
அந்த கடனுக்கான தொகையை மாதந்தோறும் திருப்பி செலுத்தி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கஷ்டம் ஏற்படவே வாங்கிய கடனுக்கான தவணைத்தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனல் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். இதனால் மன வேதனை அடைந்த விஜயா தனது கணவருடன் வெளியூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதுகுறித்து அறிந்த மகளிர் சுய உதவிக்கு ழுவினர் அவரை தொடர்பு கொண்டு அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கணவருடன் வீட்டிற்கு வந்த விஜயா வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் விஷத்தை குடித்தார். இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதனால் பயந்துபோன ரங்கசாமி, உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்லலாம் என மனைவியை அழைத்தார். அதற்கு விஜயா, ஆஸ்பத்திரி எல்லாம் வேண்டாம். தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு படுத்து தூங்கினார். நீண்ட நேரத்துக்கு பிறகும் விஜயா எழவில்லை. எனவே உறவினர்கள் ஓடிவந்து பார்த்தனர்.
அப்போது விஜயா இறந்து கிடந்தார்.
உடனடியாக சம்பவம் குறித்து அன்னூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இறந்த விஜயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
- மேட்டுப்பாளையம் கல்லூரியில் தற்போது 1200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- 19,20-ந்தேதிகளில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே குட்டையூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு பிகாம், பி.ஏ(ஆங்கிலம்),பி.ஏ(பொருளாதாரம்), பி.காம்(சி.ஏ), பி.எஸ்.சி(கணிதம்), பி.எஸ்.சி(கணினி அறிவியல்), பி.ஏ(டூரிசம் அண்டு டிராவல் மேனேஜ்மெண்ட்), பி.எஸ்.சி(வேதியியல்),பி.எஸ்.சி (இயற்பியல்) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
மேட்டுப்பாளையம் கல்லூரியில் தற்போது 1200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மேட்டுப்பாளையம் கல்லூரியில் மொத்தம் 468 இடங்கள் உள்ளன.
இதற்கு 10,549 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் 2023-24 ம் கல்வியாண்டு இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது.
அதற்கு இதுவரை இணைய வழியில் விண்ணப்பிக்காத மாணவர்கள் நேரில் வந்து விண்ணப்பம் பெற அரசு கலை அறிவியல் கல்லூரி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கானப்பிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 2023 - 2024 ஆம் கல்வியாண்டு இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதுவரை இணைய வழியில் விண்ணப்பிக்காதவர்கள் வருகிற 19, 20-ந்தேதிகளில் 2 நாட்கள் மட்டும் காலை 10 மணிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது.
- இங்குள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் 26 யானைகள் உள்ளன.
- ெகாரோனா கால கட்டத்தில் யானைகளின் பாதுகாப்பு கருதி யானை சவாரி நிறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி,
ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனச்சரகத்தில் அமைந்துள்ளது டாப்சிலிப்.
இங்குள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் 26 யானைகள் உள்ளன. இந்த யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு பாகன்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, கும்கி ஆபரேஷன்கள், வனப்பகுதி மேம்பாடு, யானை சவாரி போன்ற பணிகள் மேற்கொள்ளப்படு கின்றன.டாப்சிலிப் வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் யானைகளுக்கு உணவு வழங்குவதை பார்ப்பதையும், யானை சவாரியையும் விரும்புகின்றனர்.
சவாரிக்கு நன்கு பயிற்சி பெற்ற ஆண் மற்றும் பெண் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டணம் செலுத்தி வனப் பகுதிக்குள் யானை மீது அமர்ந்து சவாரி செய்வது மிகவும் சுவாரசியமான அனுபவமாக இருக்கும். இந்நிலையில், ெகாரோனா கால கட்டத்தில் யானைகளின் பாதுகாப்பு கருதி யானை சவாரி நிறுத்தப்பட்டது. தற்போது 3 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் யானை சவாரி மீண்டும் தொடங்கப்படவில்லை.
இதனால், டாப்சிலிப் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அமைந்து வருகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு அதிக அளவு இல்லாததால் மீண்டும் யானை சவாரியை தொடங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கொரோனா பாதுகாப்பு காரணங்களால் முதுமலையிலும், டாப்சிலிப்பிலும் அரசின் உத்தரவின்பேரில் யானை சவாரி நிறுத்தப்பட்டது. மீண்டும் யானை சவாரி தொடங்குவது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.
- மாநாட்டை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பறை இசைத்து தொடங்கி வைத்தார்.
- அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு பகுதி நேர வகுப்புகள் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வடவள்ளி:
கோவை பேரூர் பகுதியில் உள்ள சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ் கல்லூரியில் நிமிர்வு கலையகம் மற்றும் பேரூர் ஆதின கல்வி நிறுவனங்கள் சார்பில் உலகப்பொது பறை மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பறை இசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொல்லிசை கருவிகளையும் பார்வையிட்டு, இசைத்து பார்த்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பல்லாயிரம் ஆண்டுகளாக இசையை வளர்த்து வந்துள்ளனர்.
பறை போன்ற இசைக் கருவிகளை கொண்டு தான் மன்னர்களே பொது மக்களுக்கு செய்திகளை தெரியப்படுத்தி வந்துள்ளனர்.
அந்த காலத்தில் கோவில் நிகழ்ச்சிகளிலும், சுப நிகழ்ச்சிகளிலும் இந்த கருவி தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.
எனவே இது போன்ற நமது கலாசார கலை பண்பாடுகளை மீட்டெடுக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். அதற்கான முன்னெடுப்பை தற்போது நமது முதலமைச்சர் செய்து வருகிறார்.
இது போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் நடத்தப்பட வேண்டும். மேலும் பண்டைய காலத்தில் தமிழர்களிடமிருந்த இசைக் கருவிகள், பண்பாடு கலாச்சாரம் ஆகியவை மீட்டெடுக்கப்பட வேண்டும்.
இசை கல்லூரிகளில் கிராமிய கலை ஆசிரியர்களை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு பகுதி நேர வகுப்புகள் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






