என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

    • வெட்ட வந்த தொழிலாளர்களை பொது மக்கள் தடுத்து நிறுத்தினர்
    • நெடுஞ்சாலை பகுதியில் இருந்ததால் மரத்தை வெட்ட வருவாய் துறை அனுமதி அளித்துள்ளனர்

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் கரியாஞ்செட்டிபாளையம் பிரிவு, சோமந்துறை சித்தூர் பிரிவு அருகே நெடுஞ்சாலை யோரம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது.

    இந்த நிலையில் தனியார் வணிக வளாக கட்டுமான பணிக்கு இடையூறாக இருப்பதாக கூறி இந்த ஆலமரத்தை வெட்ட வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை யினரிடம் அனுமதி பெற்றுள்ளனர்.

    சாலையோரத்தில் போக்குவரத்து இடையூறு இல்லாத நிலையில், தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணிக்கு இடையூறாக இருப்பதாக கூறி ஆலமரத்தை வெட்டுவதற்கு நேற்று ஊழியர்கள் வந்தனர்.

    அவர்கள் ஆலமரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுபற்றிய தகவல் அந்த பகுதி மக்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆலமரத்தின் அருகே திரண்டனர்.

    அவர்கள் மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இருந்தவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த மரத்தை வெட்டக்கூடாது என தெரிவித்தனர். இதனால் மரம் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது:-

    தங்களது மூதாதையர் காலத்தில் இருந்தே இந்த மரம் எங்கள் பகுதியில் இருந்து வருகிறது. இது எங்கள் பகுதிக்கு நிழல் கொடுக்கும் மரமாக 100 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

    இப்படி பழமை வாய்ந்த ஆலமரத்தை தனியார் வணிக வளாக பயன்பாட்டுக்காக எவ்வாறு வெட்டலாம்? அரசு ஒருபுறம் மரம் வளர்க்கவும், மரக்கன்று நடுவதை ஊக்கப்படுத்தி வருகிறது.

    மறுபுறம் அதிகாரிகள் மரத்தை வெட்ட அனுமதி அளிக்கின்றனர். தனியாருக்கு அதிகாரிகள் துணை போவது மிகுந்த வேதனையாக உள்ளது. இந்த மரத்தை வெட்டக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் உசேன் கூறும் போது, நெடுஞ்சாலை பகுதியில் இருந்ததால் மரத்தை வெட்ட வருவாய் துறை அனுமதி அளித்துள்ளனர் என்றார். ஆனைமலை தாசில்தார் ரேணுகா தேவி கூறும்போது, இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரிக்கிறேன் என்றார்.

    Next Story
    ×