என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் செல்போனில் வீடியோ எடுத்தபடி வடமாநில தொழிலாளி தற்கொலை
- குந்தன்குமாருக்கு, முன்னாகுமார் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தார்.
- இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தினர்.
கிணத்துக்கடவு,
பீகார் மாநிலம் நவ்டாவை சேர்ந்தவர் குந்தன்குமார்(வயது22). இவர் கடந்த 12-ந் தேதி பீகாரில் இருந்து கோவைக்கு வந்தார்.
பின்னர் கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளத்தில் வேலை பார்த்து வரும் தனது சகோதரியின் கணவரான முன்னாகுமாரை சந்தித்தார்.
பின்னர் அவரது அறையில் தங்கியிருந்தார். குந்தன்குமாருக்கு, முன்னாகுமார் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தார். 2 பேரும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தனர்.
நேற்று காலை முன்னாகுமார் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்தார். ஆனால் குந்தன்குமார் எழுந்திருக்காமல் படுத்திருந்தார். இதனால் அவரிடம் வேலைக்கு புறப்படு என தெரிவித்தார்.
அதற்கு அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் வேலைக்கு வரவில்லை. நீங்கள் செல்லுங்கள் என கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரை அறையில் வைத்து விட்டு முன்னாகுமார் மட்டும் வேலைக்கு சென்றார்.
இந்த நிலையில், அவர்களுடன் தங்கியிருக்கும் லாலாகுமார் என்பவர் தனது பணி முடிந்ததும் மாலையில் அறைக்கு திரும்பினார். அப்போது அறை பூட்டி இருந்தது.
கதவை தட்டி பார்த்தார். ஆனால் வெகுநேரமாகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாலாகுமார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது, அறைக்குள் குந்தன்குமார் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
அதிர்ச்சியான அவர் முன்னாகுமாருக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து சக தொழிலாளர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் தூக்கில் தொங்கிய குந்தன்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட குந்தன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குந்தன்குமாருக்கு ஊரில் ஏதோ பிரச்சினை இருந்துள்ளது. இதனால் பீகாரில் இருந்த போதே தற்கொலைக்கு முயற்சித்தார். அப்போது அவரை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து காப்பாற்றினர்.
அங்கிருந்தால் பிரச்சினை என்பதால், அவரை குந்தன்குமாரின் சகோதரன் சித்தரஞ்சன் தனது சகோதரி கணவர் பணியாற்றி வரும் கோவைக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் இங்கு வந்த பின்னரும் அவர் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்து வந்ததும், தற்போது தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
மேலும் அவர் தான் தற்கொலை செய்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். எதற்காக அவர் தற்கொலை செய்ததை வீடியோ எடுத்தார் என்பது தெரியவில்லை.
அந்த வீடியோவை அவர் யாருக்காவது அனுப்பினாரா? அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பணியாற்றும் சக தொழிலாளர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






