என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே யானையை விரட்ட பட்டாசு வெடித்தபோது விவசாயி- மனைவி படுகாயம்
- பழனிச்சாமி வனவிலங்குகள் வந்தால் அதனை விரட்டுவதற்காக சிறிய அளவிலான பட்டாசினை பயன்படுத்தி வந்தார்.
- இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே தாயனூர் தெற்குத்தோட்டம் பகுதியைச்சேர்ந்தவர் பழனிச்சாமி (37). இவருக்கு நந்தினி (31) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இவரது தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் அவ்வப்போது காட்டு யானைகள், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் பழனிச்சாமி வனவிலங்குகள் வந்தால் அதனை விரட்டுவதற்காக சிறிய அளவிலான பட்டாசினை பயன்படுத்தி வந்தார்.
நேற்று இரவு இவரது தோட்டத்திற்கு காட்டு யானை வந்தது. இதனையடுத்து பழனிச்சாமியும், அவரது மனைவியும் சேர்ந்து யானையை பட்டாசு வெடித்து விரட்ட முயன்றனர். அப்போது தவறுதலாக பட்டாசு பழனிச்சாமியின் கையில் வெடித்தது.
இதில் பழனிச்சாமியின் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மனைவிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்த அறிந்த காரமடை போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






