என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலையில் வன ஊழியரை தாக்க ஆக்ரோஷமாக  வந்த காட்டு யானை
    X

    ஆனைமலையில் வன ஊழியரை தாக்க ஆக்ரோஷமாக வந்த காட்டு யானை

    • வனவர் காட்டு யானையை விரட்ட முயன்றதால் யானை ஆக்ரோஷம் அடைந்தது.
    • ஜோனி, தலைதெறிக்க ஓட்டம் பிடித்து, அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு யானை, கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட னவிலங்குகள் உள்ளன. ஆனைமலையின் அடர்ந்த காட்டுப்பகுதியில், கடந்த சில வாரங்களாக மழை இல்லை. எனவே அங்கு உள்ள நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.

    இதனால் காட்டு யானைகள் கூட்டமாக கிராமப்பகுதிகளுக்கு சென்று, அங்கு உள்ள குளம் குட்டைகளில் தண்ணீர் குடித்து செல்கின்றன.

    எனவே ஆனைமலை காட்டுக்கு வெகு அருகில் உள்ள ஆழியாறு அணைக்கட்டு, வால்பாறை, நவமலை ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளை அடிக்கடி பார்க்க முடியும். அதேநேரத்தில் வனவிலங்குகள் உணவுதேடி கிராமத்துக்குள் புகுந்து உயிர்ச்சேதம் மட்டுமின்றி பயிர்களையும் நாசப்படுத்த வாய்ப்பு உண்டு.

    எனவே பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

    அப்போது அவர்கள் கிராமத்துக்குள் நுழைய முயற்சிக்கும் வன விலங்குகளை நடுவழியில் தடுத்து நிறுத்தி, மீண்டும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அனுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் நேற்று நவமலை பகுதியில் முகாமிட்டு இருந்தனர். அப்போது அங்கு காட்டு யானைகள் கூட்டம் வந்ததன. அதில் ஒரு யானை கிராமத்துக்குள் நுழைய முயன்றது. இதனை அங்கு பணியில் இருந்த வனவர் ஜோனி என்பவர் தற்செயலாக பார்த்து விட்டார்.

    எனவே அவர் அந்த காட்டு யானையை விரட்ட முயன்றார். இதனால் அது கடும் ஆக்ரோஷம் அடைந்தது. எனவே அந்த காட்டு யானை பிளிறியபடி வேகமாக விரட்டி வந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோனி, தலைதெறிக்க ஓட்டம் பிடித்து, அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். இதற்கிடையே வனத்துறையின் மற்ற வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக திரண்டு வந்தனர்.

    அந்த காட்டு யானை மீண்டும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று விட்டது.

    Next Story
    ×