என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காதலர் தினம் என்பதால் சந்திரகுமார் சிறுமியை பார்ப்பதற்காக அவரது ஊருக்கு சென்றார்.
    • சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டிபுதூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்தநிலையில் மாணவிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக அன்னூர் பொன்னேகவுண்டன்புதூரை சேர்ந்த பெயிண்டர் சந்திரகுமார் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போன் மூலமாக பேசி பழகி வந்தனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காதலர் தினம் என்பதால் சந்திரகுமார் சிறுமியை பார்ப்பதற்காக அவரது ஊருக்கு சென்றார். பின்னர் 2 பேரும் அங்குள்ள பழைய கட்டிடத்தில் சந்தித்தனர். அப்போது சந்திரகுமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். கடந்த சில நாட்களாக அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனைகேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை சந்திரகுமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சந்திரகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நம் பாரத தேசம் தற்போது பல வழிகளில் முன்னேறி வருகிறது.
    • நம் பிரதமரின் முயற்சியால் யோகா உலகளவில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

    "வாள் மற்றும் துப்பாக்கியால் மற்ற தேசங்களை ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது. நம் பாரத தேசத்தில் தோன்றிய யோகா, அறிவியல், கலாச்சாரம் போன்றவற்றின் மூலம் உலகை அரவணைக்க வேண்டிய காலம் இது" என சத்குரு கூறினார்.

    ஈஷா சார்பில் பாரத தேசத்தின் 77-வது சுதந்திர தினம் ஆதியோகி முன்பு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சத்குரு அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நம் பாரத தேசம் சுதந்திரம் அடைந்து 77-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பால் நம் தேசம் பெரும் சேதத்திற்கு உள்ளானது. உலகில் வேறு எந்த தேசமும் இந்தளவிற்கு அதிக வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்தது இல்லை எனலாம்.

    நம் தேசம் ஆக்கிரமிப்பில் இருந்த சமயத்தில் நம்முடைய கல்வி, பொருளாதாரம், தொழில் திறன் என பல தளங்களில் சீரழிவுக்கு உள்ளானது. 1000 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 97 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், 1947-ம் ஆண்டு அது வெறும் 3 சதவீதமாக குறையும் அளவிற்கு நம் கல்விமுறை பறிக்கப்பட்டது.

    இவ்வளவு இன்னல்களையும் கடந்த நம் தேசம் படிப் படியாக பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. ஒரு தேசத்தின் வளர்ச்சியை பல காரணிகளை கொண்டு அளவிடலாம். அதில் மிக முக்கியமாக நான் கருதுவது மனிதர்களின் வாழ்நாள் ஆயுட்காலத்தை தான். சுதந்திர அடையும் போது நம் தேசத்தின் சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் வெறும் 28-ஆக இருந்தது. அது இப்போது 73 ஆக உயர்ந்துள்ளது. நம் தேசம் பல விதங்களில் வளர்ச்சி கண்டுள்ளது. இன்னும் பல விஷயங்களில் வளர வேண்டியதும் உள்ளது.

    நாம் வெறும் அரசியல் தேசமாக மட்டும் இருந்தது இல்லை. மனிதர்களின் வாழ்விற்கு மிக முக்கியமாக இருக்கும் அறிவியல், கணிதம், கலாச்சாரம், இசை, வானியல் என பலவற்றை உலகிற்கு அளித்த மாபெரும் நாகரீகமாக நம் தேசம் சிறந்து விளங்குகிறது. இதில் பலவற்றை நாம் முறையாக ஆவணப்படுத்தவில்லை அல்லது உலகிற்கு சரியான முறையில் எடுத்து கூறவில்லை.

    தற்போது தேசத்திற்குள்ளும் தேசத்திற்கு வெளியிலும் இருக்கும் பலர் இது குறித்து எழுத துவங்கியுள்ளனர். குறிப்பாக, பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உலகிற்கு நம் பாரதம் வழங்கியுள்ள பங்களிப்பை பதிவு செய்வதில் பெரும் பங்காற்றி வருகின்றனர். பாரத தேசத்தில் தோன்றிய கணிதம் தான் தற்போதைய பல அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் முதுகெலும்பாக இருக்கிறது என சர்வதேச விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    இப்போது பலர் அதிக காலம் உயிர் வாழ்வதற்கு உதவியாக இருக்கும் அறுவை சிகிச்சை முறை நம் தேசத்தில் சுசுருதர் போன்றவர்களால் 1000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    இவை அனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு நம் தேசத்தில் சிறப்பாக இருந்துள்ளது. ஆனால், கடந்த 800, 900 ஆண்டுகளில் இவை எல்லாம் பெரும் சீரழிவுக்கு உள்ளாகியது. வேறு எந்த தேசத்திலும் இந்தளவிற்கு சேதம் நடைபெறவில்லை.

    பொதுவாக இனப்படுகொலைகள் போன்றவற்றை பற்றி பேசும் போது, செங்கிஸ்கான் பற்றி பேசுவார்கள். சமீபத்திய கொடூரங்களை பற்றி பேசும் போது, அமெரிக்க பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் மற்றும் ஆப்பிரிக்க மக்கள் அடிமைப்படுத்த வரலாறு, ஹிட்லரின் கொடுமைகள் குறித்தும் பேசுவார்கள். ஆனால், இவற்றையெல்லாம் விட மிக அதிகளவிலான கொலைகளும் கொடுமைகளும் நம் பாரத தேசத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

    இருப்பினும், நாம் நம் கலாச்சாரத்தை தக்க வைத்து கொண்டுள்ளோம்.

    உலக அளவில் சிறந்து விளங்கும் 500 பெரு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்தியர்கள் இருக்கிறார்கள். மற்ற தேசத்தை ஆக்கிரமிக்கும் மனநிலையிடன் அவர்கள் இந்த பொறுப்புகளை அடையவில்லை. எல்லோரையும் அரவணைக்கும் பண்பாலும், திறமைகளாலும் இப்பொறுப்புகளை அவர்கள் அடைந்துள்ளார்கள். இது தான் முன்னேற்றத்திற்கான சிறந்த வழி.

    ஆக்கிரமிக்கும் காலம் முடிவடைந்துவிட்டது. இது அரவணைப்பதற்கான காலம். நம் தேசத்தில் தோன்றிய அறிவியல், கலாச்சாரம், பொருளாதாரம், இசை என எல்லாவற்றின் மூலம் உலகில் நாம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வாள் அல்லது துப்பாக்கியால் உலகில் தாக்கம் ஏற்படுத்தும் காலம் முடிந்துவிட்டது. குறிப்பாக, பாரதத்தில் தோன்றிய யோகாவின் மூலம் பெரும் தாக்கத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்.

    நம் பிரதமரின் முயற்சியால் யோகா உலகளவில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் யோகா செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியம் என்று யாரும் கற்பனை செய்து கூட பார்த்து இருக்கமாட்டார்கள்.

    நம் பாரத தேசம் தற்போது பல வழிகளில் முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்ற பயணத்தில் தமிழ் மக்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும். நம்மிடம் அந்த திறமையும், வாய்ப்பும் உள்ளது. இந்த 77-வது சுதந்திர தினத்தில் அனைவரும் இதற்கான உறுதியை எடுத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சத்குரு பேசினார்.

    முன்னதாக, புராஜக்ட் சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் இவ்விழாவில் ஈஷா தன்னார்வலர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • போலீசார் கனகராஜை தொடர்பு கொண்டு மனைவி தற்கொலை தொடர்பாக விசாரணைக்கு போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.
    • போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பனூரை அடுத்த ஆலங்குட்டை ஏ.டி. காலனியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 27). இவருக்கும், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சங்கீதா (26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பின் கடந்த 2 மாதங்களாக அவர்கள் சங்கீதாவின் ஊரிலேயே வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் கனகராஜ், தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். நேற்று மாலையில் சங்கீதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவர் போனை எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் பக்கத்து வீட்டுக்கு போன் செய்து தனது மனைவி போனை எடுக்கவில்லை, எனவே வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினர். இதனையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சங்கீதாவின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டிற்குள் தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து போலீசார் தற்கொலை செய்து கொண்ட சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் கனகராஜை தொடர்பு கொண்டு மனைவி தற்கொலை தொடர்பாக விசாரணைக்கு போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். இதனால் பயந்த அவர் குப்பனூர் ஆலங்குட்டை பகுதியில் உள்ள கரியன் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கீதா எதனால் தற்கொலை செய்து கொண்டார், கணவன்-மனைவி பிரச்சனை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை தேடினார்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் கனகராஜ் தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கிறார்கள்.

    • பொங்காளி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
    • குப்பை தொட்டி வைத்தது, கோவிலின் புனித தன்மையை கெடுக்கும் வகையில் உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை-பொள்ளாச்சி ரோடு குறிச்சி குளக்கரையில் பொங்காளி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

    கோவையை காக்கும் கோனியம்மன் என்பது போன்று, குறிச்சி, சுந்தராபுரம் பகுதி மக்களை காக்கும் குறிச்சி பொங்காளியம்மன் என்று பக்தர்களால் இந்த கோவில் போற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த கோவிலின் முன்பு, மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறியதாவது:-

    குறிச்சியில் அமைந்துள்ள பொங்காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். இந்த வழியே செல்லும் அனைவரும் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டே செல்வார்கள்.

    இந்நிலையில் கோவிலுக்கு முன்பாக அம்மனின் கருவறைக்கு நேர் எதிரே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியாக உள்ளது.

    கோவில் முன்பு குப்பை தொட்டி வை த்தது, கோவிலின் புனித தன்மையை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே கோவில் கருவறைக்கு நேர் எதிரே வைக்கப்பட்டிருக்கும் அந்த குப்பைத் தொட்டியை அகற்றி, குளத்தை ஒட்டி வைத்தால், கோவிலின் புனித தன்மை பாதுகாக்கப்படும். கோவிலின் முன்பாக சிதறி கிடக்கும் குப்பைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு வழியாகும். எனவே கோவை மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வாலிபர் தற்கொலை செய்து 10 நாட்களை கடந்திருக்கும்.
    • தற்கொலை செய்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடக்கிறது

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு 2- வது கொண்டை ஊசி வலைவு அருகே வனப்ப குதியில் உள்ள மரத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டு 10 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதனை பார்த்த அந்த வழியாக ரோந்து சென்ற வன ஊழியர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு மேட்டுப்பா ளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொ ண்ட வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
    • போதைப் பொருட்கள் விற்பதைக் குறித்து கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் குறைதீர்முகாம் நடந்தது.

    இதில் ஏராளமான பொது மக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கினர்.சூலூர் பதுவ ம்பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் செயல்படும் பெட்டிக்கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை விற்கப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்.

    போதை பொருட்கள் விற்கப்படுவதாலும், அதனை வாங்கி சாப்பிடுபவர்களாலும் அந்த வழியாக செல்லக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வெளியில் வரவே அச்சமாக உள்ளது. எனவே இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    கோவை மாநகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் மரியராஜ், 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா, 28-வது வார்டு கண்ணகி ஆகியோர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கோவை சத்தி சாலையில் உள்ள எப்.சி.ஐ. குடோனுக்கு செல்லும் வழியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பாதை ஒன்று உள்ளது. தற்போது இந்த பாதையை சீரமைக்கும் பணியை இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது.

    சத்தி சாலையில் இருந்து அந்த பாதை நுழையும் இடத்தில், நுழைவாயில் ஒன்று அமைத்து அதில் உணவுக் கழக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட ஏதுவாக, வாயில் கதவு ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு அமைத்தால் மேற்கண்ட 3 வார்டுகளை சேர்ந்த மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும்.

    மேலும் சத்தி சாலையிலிருந்து, அவினாசிக்கு செல்வோர் 6 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • பரத் தனது ஐ.டி. தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று பணம் கேட்டார்
    • ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண்.

    இவர் இன்டீரியர் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ரத்தினபுரியை சேர்ந்த பரத்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் ஒன்றாக வாழ முடிவு செய்ததாக தெரிகிறது.

    இதையடுத்து இளம்பெண் தனது வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் பரத்தும், இளம்பெண்ணும் லிவிங் டுகெதர் முறையில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும், அதன் மூலம் அந்தப் பெண் 4 முறை கர்ப்பம் அடைந்து கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

    நன்றாக சென்றிருந்த இவர்களது வாழ்க்கையில், பரத் தனது ஐ.டி. தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்றும், அதற்கு பணம் வேண்டும் என்றும் கேட்டார். இதுபோன்று பல முறை அவரிடம் பணம் கேட்டதாக தெரிகிறது.

    மேலும் பரத்தின் தாயார் சாந்தி இளம் பெண்ணிடம், உங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் ரூ. 10 லட்சம் தர வேண்டும். இல்லை யென்றால் எனது மகனுக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவேன் என அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இதற்கு வாலிபரின் குடும்பத்தினர் சிலர் உடந்தையாக செயல்ப ட்டுள்ளனர்.

    இதனால் மனம் நொந்துபோன இளம்பெண் சம்பவம் குறித்து கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் பரத், அவரது தாயார் சாந்தி, உறவினர்கள் அருண், ராணி, தினகரன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
    • போலீசார் மாணவியின் காதலன் உட்பட அவரது நண்பர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை அய்யண்ண கவுண்டர் விதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி.

    இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    நேற்று மாணவிக்கு பிறந்தநாள். இதனையடுத்து மாணவி அவரது காதலனுடன் வெரைட்டி ஹால் ரோடு அருகே உள்ள பூங்காவிற்கு சென்றார்.

    அங்கே மாணவியின் காதலன் அவரது நண்பர்களுடன் மாணவிக்காக காத்திருந்தார். மாணவி வந்ததும் அவர்கள் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி மாணவியின் பிறந்தநாளை கொண்டாடினர்.

    அப்போது அவர்கள் சந்தோஷத்தில் சத்தம் போட்டனர். இதனை அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்கள் சிலர் பார்த்து, இவர்களின் அருகே வந்து இங்கே சத்தம் போடக்கூடாது என எச்சரித்தனர்.

    அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். வீட்டுக்கு சென்றதும் வாலிபரை காதலிக்கும் விஷயம் மாணவியின் தந்தைக்கு தெரிய வந்தது.

    இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதுகுறித்து மாணவி தனது காதலனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மேலும் உடனே வீட்டிற்கு வந்து தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார்.

    வாலிபர் தனது நண்பர்கள் 3 பேருடன் மாணவியின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து அவரை வெளியே அழை த்துச் செல்ல முயன்றார்.

    அப்போது அவரது தந்தை தடுத்து நிறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாணவியின் தந்தையை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து மாணவியை அழைத்து சென்றார்.

    இதுகுறித்து மாணவியின் தந்தை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவியின் காதலன் உட்பட அவரது நண்பர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர்.

    • விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 4 அழகிகளை போலீசார் மீட்டனர்
    • பெண் புரோக்கர் சுபாஷினியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து செல்வபுரம் போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

    பின்னர் போலீசார் மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த பெண் புரோக்கர் கோவை கணபதியை சேர்ந்த சுபாஷினி (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    அங்கு உள்ள அறையில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 4 அழகிகளை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    கைது செய்யப்பட்ட பெண் புரோக்கர் சுபாஷினியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 1045 குளம், குட்டைகளுக்கு ஆண்டுக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.
    • 1045 குளங்களில் 906 குளங்களுக்கு சோதனை ஓட்டம் முடிந்து மீதமுள்ள 139 குளங்களுக்கு இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

    கோவை,

    கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றது.

    இதனால் போதிய நீராதாரமின்றி பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறின.

    இதற்கு தீர்வாக பவானி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1045 குளம், குட்டைகளை நிரப்ப ரூ.1657 கோடி மதிப்பில் அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப்பணி, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசின் நீர்வளத்துறையினரால் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு இத்திட்ட ப்பணிக்காக ரூ.90 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.1747 கோடி மதிப்பில் இத்திட்டப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் 945 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதான குழாய்களும், கிளைக்குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதில், 1045 குளம், குட்டைகளுக்கு ஆண்டுக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.

    இத்திட்டத்துக்காக நீரேற்று நிலையங்களில் வெள்ளோட்டமும் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் குழாய்களின் வழியாக குளங்களுக்கு சோதனை அடிப்படையில் தண்ணீர் திறந்து விடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் போது பகிர்மானக் குழாய்களில் கசிவு ஏதேனும் உள்ளதா, குளங்களுக்கு நீர் சரியான முறையில் செல்கிறதா, அடைப்புகள் உள்ளனவா என்பன குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இத்திட்டத்தில் மொத்தம் 6 நீரேற்று நிலையங்கள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் அணைக்க ட்டில் தொடங்கி 4 நீரேற்று நிலையங்களை கடந்து, ஈரோடு மாவட்டம் வரப்பா ளையம், அந்தியூர் ஒன்றி யத்தில் எம்மாம்பூண்டியில் உள்ள 5-வது நீரேற்று நிலையத்தில் இருந்து கோவை மாவட்டம் அன்னூரில் அமைந்துள்ள 6-வது நீரேற்று நிலையத்துக்கு நீர் வந்து சேர்ந்தது. இத்திட்டத்தின் கீழ் 1045 குளம், குட்டைகளுக்கு நீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி, அனைத்து குளங்களுக்கும் குழாய்கள் பதிக்கப்பட்டு, சோதனை அடிப்படையில் தண்ணீர் விடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் 3-வது மற்றும் 4-வது நீரேற்று நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 61 குளங்களில் 60 குளங்களிலும், 4-வது, 5-வது நீரேற்ற நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 391 குளங்களில் 322 குளங்களிலும், 5-வது, 6-வது நீரேற்று நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 349 குளங்களில் 353 குளங்களிலும், 6-வது நீரேற்று நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களில் 244 குளங்களில் 191 குளங்களிலும் சோதனை ஓட்டப்பணிகள் முடிந்துள்ளன.

    மீதமுள்ள குளங்களுக்கும் தொடர்ச்சியாக சோதனை செய்யும் பணி நடக்கிறது. தற்போதைய சூழலில் 906 குளங்களில் சோதனை ஓட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 139 குளங்களில் சோதனை ஓட்டப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினர். 

    • முத்துக்குமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளை யார்புரத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 29). டிரைவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த திருமணமாக இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    இதன் காரணமாக முத்துக்குமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழக்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இது குறித்து சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நண்பரை பார்த்து விட்டு திரும்பி வீட்டிற்கு வந்த போது கோர விபத்து நடந்தது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள செங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் மோகன்தாஸ் (வயது 17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மலுமிச்சம்பட்டியில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் கோவை- பொள்ளாச்சி ரோட்டில் வந்து கொண்டு இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மோகன்தாஸ் சம்பவஇடத்திலயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் விபத்தில் பலியான மோகன்தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×