என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே கடைகளில் போதை பொருட்கள் விற்பதை தடுக்க வேண்டும்
- கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
- போதைப் பொருட்கள் விற்பதைக் குறித்து கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் குறைதீர்முகாம் நடந்தது.
இதில் ஏராளமான பொது மக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கினர்.சூலூர் பதுவ ம்பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் செயல்படும் பெட்டிக்கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை விற்கப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்.
போதை பொருட்கள் விற்கப்படுவதாலும், அதனை வாங்கி சாப்பிடுபவர்களாலும் அந்த வழியாக செல்லக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வெளியில் வரவே அச்சமாக உள்ளது. எனவே இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
கோவை மாநகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் மரியராஜ், 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா, 28-வது வார்டு கண்ணகி ஆகியோர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கோவை சத்தி சாலையில் உள்ள எப்.சி.ஐ. குடோனுக்கு செல்லும் வழியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பாதை ஒன்று உள்ளது. தற்போது இந்த பாதையை சீரமைக்கும் பணியை இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது.
சத்தி சாலையில் இருந்து அந்த பாதை நுழையும் இடத்தில், நுழைவாயில் ஒன்று அமைத்து அதில் உணவுக் கழக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட ஏதுவாக, வாயில் கதவு ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு அமைத்தால் மேற்கண்ட 3 வார்டுகளை சேர்ந்த மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும்.
மேலும் சத்தி சாலையிலிருந்து, அவினாசிக்கு செல்வோர் 6 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.






