என் மலர்
கோயம்புத்தூர்
- திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வல்லுறவு
- வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் தொழிலாளியிடம் விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடுமலை அருகே உள்ள பூக்களத்தை சேர்ந்த 19 வயது கூலித் தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
கடந்த 29-ந் தேதி சிறுமி தனது பெற்றோரிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். அப்போது அவரை அவரது காதலன் திருமண ஆசை காட்டி கடத்தி சென்றார். பின்னர் வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத் காரம் செய்தார்.
சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாலிபர் சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வாலிபருடன் தங்கி இருந்த சிறுமியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு வால்பாறை அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காய்கறி வாங்கி விட்டு வீடு திரும்பியவரிடம் மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை
- மொபட்டில் சென்ற பெண்ணிடமும் 8 பவுன் தங்கச்செயின் கொள்ளை
கோவை,
கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி சந்திரிகா (வயது 56). இவர் மாலை 7 மணி அளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார்.
சந்தையில் காய்கறி வாங்கி விட்டு தனது வீடு நோக்கி நடந்து வந்தார். அப்போது வீட்டிற்கு முன்பு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சந்திரிகா அருகில் மோட்டார்சைக்கிளை நிறுத்தினர். சந்திரிகா கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க செயினை பறித்து சென்றனர்.
செயின் பறிக் கும்போது கீழே விழுந்த சந்திரிகா சத்தம் போட்டார். சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த கணவர் கோபி ஓடி வருவதற்குள் மோட்டார்சைக்கிளில் வந்த திருடர்கள் செயினுடன் தப்பிச் சென்றனர். இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு , வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அதே போன்று சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி நிர்மலா (வயது 56). இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு தனது மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். பீள மேட்டில் திடீரென மொபட் நிற்கவே, கீழே இறங்கி பெட்ரோல் இருக்கிறதா என சோதித்து பார்த்தார்.
அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென நிர்மலா அணிந்திருந்த 8 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்மலா பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கண்காணிப்பு காமிரா மூலம் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
- கோவாவுக்கு செல்ல தந்தை பணம் தராததால் ஆத்திரம்
- பால்கனி விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை
கோவை,
கோவை மதுக்கரை அருகே உள்ள மேட்டாங்காடு நகராஜா நகரை சேர்ந்தவர் இஜாஸ் அகமது. இவரது மகன் சஜ்ஜத் கல்பான் (வயது 29). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் கத்தார் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சஜ்ஜத்கல்பானுக்கு அவரது பெற்றோர் பூமார்க் கெட்டை சேர்ந்த பலக் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். இந்தநிலையில் மாமனார், மாமியாருடன் ஒத்து போகாததால் பலக் தனது கணவரை பிரிந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் பெற்றோர் கத்தார் நாட்டில் வசித்து வரும் மகள் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த பலக் கோவாவிற்கு சென்றார்.
மனைவி பிரிந்து சென்றதால் சஜ்ஜத்கல்பான் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். அவர் கோவாவுக்கு சென்று மனைவியை பார்க்க முடிவு செய்தார். அதன்படி சஜ்ஜத்கல்பான் கோவாவுக்கு செல்வதற்காக தந்தையிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை.
இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தற்கொலை செய்வதற்கு முன்பு தற்கொலை செய்ய போவ தாக சேலையை பால்கனியில் உள்ள தடுப்பு கம்பியில் கட்டி புகைப்படம் எடுத்து அவரது தந்தைக்கு அனுப்பி னார். பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சஜ்ஜத்கல்பானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி
- உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் பங்கேற்பு
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி கேரளா மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டம் உள்ளது.
ஆண்டு தோறும் இப்பகுதி களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். இதேபான்ற நேரங்களில் பில்லூர் அணைக்கு அந்த பகுதிகளில் பொழியும் மழைநீர் வந்தடையும். அப்போது மின் உற்பத்தி போக மீதமுள்ள நீர் பவானி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்போது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரை யோரத்தில் உள்ள மக்கள், வருவாய் துறையினர் சார்பில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது வழக்கம்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையையொட்டி மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சார்பில் வெள்ள பாதிப்பு நேரங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வனபத்ர காளியம்மன் கோவில் அருகே நடத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் 10-க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஒத்திகை நிகழ்ச்சியில் வெள்ள பாதிப்பு காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகு மூலம் எப்படி மீட்பது. அவர்களுக்கு எப்படி பாது காப்பு கவசம் வழங்குவது, பரிசல் மூலம் சென்று எப்படி காப்பாற்றுவது? என்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் உள்ளூர் பொது மக்கள் மட்டுல்லாமல், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் பங்கேற்றனர்.
- காதலியிடம் வீடியோகால் பேசிவிட்டு துயர முடிவு
- வாழ பிடிக்கவில்லை என்று கூறி தூக்கு போட்டு தற்கொலை
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மகன் கார்த்திக் (வயது 24). இவர் பி.எஸ்.சி. ஐ.டி. படித்து முடித்து உள்ளார்.
இந்தநிலையில் கார்த்திக்கிற்கு பாரதியார் வீதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் கார்த்திக்கின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கார்த்திக் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் அவரது காதலியை வீடியோ அழைப்பு மூலமாக தொடர்பு கொண்டு தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தன்னால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வர வேண்டாம் என கூறினார். பின்னர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திக், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அவரது பெற்றோர் கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கற்கள் சிதறி முத்துஅழகர்சாமி தலையில் தாக்கி படுகாயம் ஏற்பட்டது
- மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்
கோவை,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தோளூரை சேர்ந்தவர் முத்து அழகர்சாமி (வயது 40). இவர் கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள கல் குவாரியில் தொழிலாளியாக கடந்த 7 மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று மதியம் 1.30 மணியளவில் பாலையா என்பவர் கல் உடைப்பதற்காக வெடி வைத்தார். அப்போது சிதறிய கல் முத்து அழகர்சாமியின் தலையில் தாக்கியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த அங்கு இருந்தவர் உடனடியாக முத்து அழகர்சாமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் முத்து அழகர்சாமியை மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்து அழகர்சாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தொழிலாளர் அணி சார்பில் மாநில செயலாளர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு
- மாநில துணைச் செயலாளர் எல்.பி.எப் தமிழ்ச்செல்வன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்பு
கோவை,
தி.மு.க தொழிலாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் செயலாளர் செல்வராஜ் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடுவது, நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வருகிற 17-ந் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் தொழிலாளர் அணி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
30- ந் தேதி கழகத் தலைவர் ஆணைக்கு ஏற்ப கோவையில் தொழிலாளர் அணி சார்பில் மாநில செயலாளர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் எல்.பி.எப் தமிழ்ச்செல்வன், வரதன், ராஜகாந்தன், காசி, பாலு, ராஜா, குப்புசாமி, ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.
- சாமியாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் அதிர்ச்சி
- உ.பி. சாமியாரின் படங்களை கிழித்தெறிந்து ஆவேசம்
வடவள்ளி,
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய அயோத்தி சாமியாரை கண்டித்து தி.மு.க. கோவை வடக்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் ஆலாந்துறை நகர செயலாளர் ரங்கசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சாமியாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது சாமியாரின் படம் கிழித்தெறியப்பட்டது.
போராட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் ராமமூர்த்த முன்னிலை வகித்தார். கண்டே கவுண்டர், துணைத்தலைவர் மல்லேஸ் என்ற மூர்த்தி, டி.எஸ்.டி. ஆறுமுகம், ஏ.கே.நாகராஜ், இளைஞர் அணி பெருமாள் ராஜ், குருதர்சன், பாபுராஜ், கவுன்சிலர், சாமியப்பன், உதய மூர்த்தி, மு.நாகராஜ், தர்மன், சாந்து, சண்முகராஜன், கவுன்சிலர்கள் மூர்த்தி, முத்து, வினோத் குமார், கவுன்சிலர் அய்யாசாமி லட்சுமி, அமிர்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- பாலகோபாலருக்கு அபிஷேகம், ஜெகன்னாதருக்கு தீபராதனை வழிபாடு
- 3 நாள் திருவிழாவில் திரளான பக்தர்கள் திரண்டு வந்த சாமி தரிசனம்
பீளமேடு,
கோவை மாவட்டத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள ஸ்ரீஜெகந்நாதர் (ஹரே கிருஷ்ணா) ஆலயத்தில் இன்று முதல் 3 நாட்கள் விழா நடக்கிறது.
அதிகாலை 4.15 மணிக்கு நடை திறக்கப்பட்டு மங்கள ஆரத்தியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அகண்ட நாம சங்கீர்த்தனம், பகவான் கிருஷ்ணரின் லீலைகள் குறித்த சொற்பொழிவுகள், பாலகோபாலருக்கு அபிஷேகம், ராதாகிருஷ்ணருக்கு வழிபாடுகள், கோபூஜை, பகவான் ஜெகன்னாதருக்கு தீபராதனை, கலைநிகழ்ச்சிகள், அஷ்டோத்திர மகா கலசாபிஷேகம் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடந்தன.
கோவை சந்திரா நாடகக் குழுவினர், பூரி ஜெகன்நாதர் தோன்றிய லீலையைச் சித்தரிக்கும் வகையிலான நாடகத்தை அரங்கேற்றினர். பால்யபருவ கிருஷ்ண லீலைகளை விளக்கும் சிறுவர்களின் நாடகம் அனைவரையும் ஈர்த்தது. சிறுகுழந்தைகளின் மாறு வேடப் போட்டியும் நடை பெற்றது. குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து பெற்றோர் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர். இது அனைவரையும் கவருவதாக அமைந்திருந்தன. மேலும் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நள்ளிர வில் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததை நினைவு கூறும் வகையில், இரவு 10.30 மணிக்கு பாலகோபாலருக்கான மகா கலசாபிஷேககம், சிறப்பு ஆரத்தி நடக்கிறது.
விழாவையொட்டி பீளமேடு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல கோவையில் உள்ள பெருமாள் கோவில்கள் உள்பட பல கோவில்களில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டா டப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் படைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. தனியார் அமைப்பு கள் சார்பிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதில் உறியடி நிகழ்ச்சிகள் நடந்தன.
பக்குவமான கேள்விகளும் பக்குவமான பதில்களும் என்ற தலைப்பில் ஆன்மீக கருத்தரங்கமும் நடைபெற்றது. குழந்தைகள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி, கோவை சந்திரா குழுவினரின் நாடகம், சிறப்பு பட்டிமன்றம், மற்றும் உரியடி நிகழ்ச்சிகள் கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி நடைபெற விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.
இன்றுடன் மூன்று நாட்கள் நாள் முழுவதும் தரிசனத்துக்காக கோவில் திறந்தேயிருக்கும். அது சமயம் பக்தர்களனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
விழாவில் அதிக அளவு பக்தர்கள் கலந்து கொள்வதால் பீளமேடு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு கிருஷ்ணரை வழிபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- மகளுக்கு பணம் அனுப்ப சென்றவரை ஏமாற்றி பணத்தை அபகரித்த வாலிபர்
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவிர விசாரணை
கோவை,
கோவை சிறுமுகை அருகே உள்ள கோவிந்தனூரை சேர்ந்தவர் சிவசாமி (வயது 62). விவசாயி.
சம்பவத்தன்று இவர் காரமடை ரோட்டில் உள்ள வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் ரூ.49,500 பணம் போடுவதற்காக சென்றார். அவருக்கு பணம் போட தெரியாததால் அருகில் நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவரிடம் விவசாயி சிவசாமி ரூ.49,500 பணத்தை கொடுத்து தனது மகளின் வங்கி கணக்கில் போடுமாறு கூறினார்.
இதனையடுத்து அந்த வாலிபர் பணம் போடுவது போல நடித்து ரூ.48,500 பணத்தை போட்டாச்சு, ரூ.1000 மட்டும் திரும்பி வந்து விட்டதாக கூறி பணத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.
வீட்டிற்கு சென்ற சிவசாமி தனது மகளை தொடர்பு கொண்டு பணம் வந்து விட்டதா என கேட்டார். அதற்கு அவர் வரவில்லை என்று கூறி விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த சிவசாமி வங்கிக்கு சென்று கேட்டார். அப்போது கணக்கை ஆய்வு செய்த அதிகாரிகள் பணம் செலுத்தப்படவில்லை என கூறினர்.
உதவி செய்வது போல நடித்து வாலிபர் ஏமாற்றியதை உணர்ந்த விவசாயி இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் பணம் போடுவது போல நடித்து விவசாயிடம் ரூ.48,500 பணத்தை ஏமாற்றி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
- புதிதாக திருமணமான பெண்ணும் சேர்ந்து மிரட்டுவதால் அதிர்ச்சி
- பொள்ளாச்சியில் சிறுமியை துன்புறுத்தியதாக போக்சோ வழக்கில் சிக்கியவர்
கோவை.
கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவர் கோவை சாய்பாபா காலனி போலீசில் ஒர புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியுள்ளதா வது:-
கோவை பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 38 வயது நபருக்கும், எனக்கும் இணையதளம் மூலமாக வரன் பார்த்து திருமணம் நடந்தது. தற்போது அவர் சாய்பாபா காலனியில் வாசித்து வருகிறார்.
திருமணமாகி சில மாதங்கள் அவருடன் நான் வாழ்ந்து வந்தேன். அப்போதுதான் அவரின் பல்வேறு மோசடி முறைகேடுகள எனக்கு தெரிய வந்தது. பொள்ளாச்சியில் சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக் கில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவ ரையும் திருமணம் செய்து அவரிடம் பணம் நகை வாங்கி ஏமாற்றி உள்ளார். கோவையை சேர்ந்த இன்னொரு பெண்ணையும் அவர் இதே போல் திரும ணம் செய்து பணம் நகை வாங்கி மோசடி செய்துள்ளார். எனக்கு தெரிந்து அவர் 5 பெண்களை திரும ணம் செய்து இதுபோல் மோசடி செய்துள்ளார்.
எனக்கு திரும ணத்தின்போது வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகை மற்றும் பணத்தை அவர் திரும்ப தரவில்லை. அவரின் செயல்பாடு பிடிக்காமல் நான் அவரிடம் வாழாமல் திரும்ப வந்து விட்டேன். எனக்கு அவர் 40 லட்ச ரூபாய் தர வேண்டி உள்ளது.
எனது பணம், நகையை திருப்பி தராமல் செல்போனில் அழைத்து தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அவர் மீதும் அவருக்கு துணையாக உள்ள அவரது ெபற்றோர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடைசியாக அவர் மேலும் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்தது . அந்தப் பெண்ணும், அவரு டன் சேர்ந்து என்னை மிரட்டி வருகிறார். போலீசார் அவர் மீதும், குடும்பத்தினர் மீதும உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அந்த பெண் புகாரின் பேரில் வாலிபர், அவரது பெற்றோர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துசாமி தொடங்கிவைத்தனர்
- அக்டோபரில் இருந்து கோவைக்கு 2 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படும் என அறிவிப்பு
கோவை,
கோவை வ.உ.சி. மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி , பேரூராட்சிகளில் முடிவற்ற பணிகளை இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கேஎன்.நேரு, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழாவில் ரூ.11.8 கோடி மதிப்பீட்டில் 27 முடிவற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். ரூ.67.48 கோடி மதிப்பீட்டில் 558 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.32.12 கோடி மதிப்பீட்டில் 703 பயனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகளும் இந்த விழாவில் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ110.68 கோடி ஆகும்.
பின்னர் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. குடிநீர் வழங்கலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.கேரள அரசுடன் பேசி சிறுவாணி அணையில் இருந்து முறையாக தண்ணீர் பெற்று தரப்பட்டுள்ளது. பில்லூர் 3- வது கூட்டு குடிநீர் திட்டம் வருகின்ற அக்டோபர் மாதத்தில் முடிவடையும்.அக்டோபரில் இருந்து கோவைக்கு 2 நாளுக்கு ஒருமுறை பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படும் .
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி தான் குடிநீருக்கு நிதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் 2 ஆண்டுகளில் ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செய்ய வேண்டிய கடமையை நாங்கள் செய்கிறோம். அதற்கான நன்றியை நீங்கள் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாநகருக்கு நாள் ஒன்றுக்கு 298 எம்.எல்.டி. குடிநீர் தேவை. ஆனால் 214 எம்.எல்.டி. தண்ணீர் தான் கிடைத்து வருகிறது. பில்லூர் 3-வது கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறப்போகிறது. அந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இன்னும் ஒன்றரை கி.மீ. தான் பாக்கி உள்ளது. அப்பணிகள் விரைவில் முடியும்.
188 எம்.எல்.டி தண்ணீர் கூடுதலாக வந்ததும் கோவை மாநகருக்கு தினமும் தண்ணீர் வழங்கப்படும். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தினமும் தண்ணீர் வழங்கப்படும் .
சிறுவாணி, ஆழியார் அணை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் முதல்-அமைச்சர் கேரள அரசுடன் கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் பேசியுள்ளனர்.
சாலைகள் சீரமைக்க பணம் ஒதுக்கி சீரமைக்க உத்தரவிட்டுள்ளோம். 680 கி.மீ. தூரம் சாலை சீரமைக்க நிதி ஒதுக்கி உள்ளோம்.
அமைச்சர் உதயநிதியை மிரட்டிய அயோத்தி சாமியார் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவர்களால் செய்ய முடியுமா? தலையை சீவ 10 கோடி தேவையில்லை, 10 ரூபாய் சீப்பு போதும் என அமைச்சர் உதயநிதி பதில் சொல்லிவிட்டார்.
நாங்கள் திராவிட இயக்க கொள்கையை 100 வருடங்களாக பேசி வருகிறோம்.இவர்கள் புதிதாக ஆரம்பித்துள்ளா ர்கள்.பாரத் என வந்தாலும், இந்தியா என இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சொல்லியுள்ளார். பெயரை எப்படி மாற்றினாலும் நாங்கள் எப்போதும் போல மத்திய பா.ஜ.க. அரசை ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம்.ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடக்காத காரியம். அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதாப் மேயர் கல்பனா, எம்பிக்கள் நடராஜன் சண்முகசுந்தரம், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், திமுக மாவட்ட செயலாளர்கள் கார்த்திக் , தொண்டாமுத்தூர் ரவி , தளபதி முருகேசன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






