என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரியநாயக்கன்பாளையம் அருகே குவாரியில் வெடி வைத்தபோது கல் தாக்கி தொழிலாளி பலி
- கற்கள் சிதறி முத்துஅழகர்சாமி தலையில் தாக்கி படுகாயம் ஏற்பட்டது
- மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்
கோவை,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தோளூரை சேர்ந்தவர் முத்து அழகர்சாமி (வயது 40). இவர் கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள கல் குவாரியில் தொழிலாளியாக கடந்த 7 மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று மதியம் 1.30 மணியளவில் பாலையா என்பவர் கல் உடைப்பதற்காக வெடி வைத்தார். அப்போது சிதறிய கல் முத்து அழகர்சாமியின் தலையில் தாக்கியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த அங்கு இருந்தவர் உடனடியாக முத்து அழகர்சாமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் முத்து அழகர்சாமியை மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்து அழகர்சாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






