என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சலவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்
    • 442 கிராம் தங்கம், 590 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் காணிக்கை எண்ணப்படும்.

    இம்மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் விஜயலட்சுமி, தேக்கம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கோவல் கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, அறநிலையத்துறை ஆனைமலை பகுதி ஆய்வாளர் சித்ரா, மாசாணியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்கா வலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, தங்க மணி, மருதமுத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில், சலவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நிரந்தர உண்டியலில் 80 லட்சத்து 24 ஆயிரத்து 881 ரூபாயும், தட்டு காணிக்கை உண்டியலில் 25 லட்சத்து 15 ஆயிரத்து 485 ரூபாயும் இருந்தது. மேலும் 442 கிராம் தங்கம், 590 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    • வெண்ணை நிரப்பிய, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பானையை குழந்தைகள் தடியால் அடித்து உடைத்தனர்
    • உடைந்த பானையில் இருந்த வெண்ணையை பூஜையில் ைவத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது

    கோவை,

    ஆனைமலை அருகே கோபால்சாமி கோவிலில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    பொள்ளாச்சியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது 1500 அடி உயரத்தில் கோபால்சாமி கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீசத்ய பாமாருக்மணி சமேத ஸ்ரீ நந்தகோபால்சாமி மலைக்கோவில் அமைந்துள்ளது.

    300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சுயம்புவாக சத்யபாமா ருக்மணி சமேத நந்தகோ பால்சாமி காட்சியளிக்கிறார். இக்கோவில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.

    குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமண தடை நீங்க வேண்டியும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் மக்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் கோகுலாஷ்டமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    கோகுலாஷ்டமியை முன்னிட்டு, கோவில் பரம்பரை பூசாரி கிருஷ்ண மூர்த்தி ஏற்பாட்டில் நந்த கோபால்சாமிக்கு சங்காபிஷேகம், யாகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணர், ராதை வேடமிட்டு குழந்தைகள் பங்கேற்றனர்.

    இரண்டாம் நாளான நேற்று வெண்ணை நிரப்பப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பானையை குழந்தைகள் தடியால் அடித்து உடைக்கும் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. பானை உடைக்கப்பட்ட பின்னர் வெண்ணையை பூஜையில் ைவத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். இக்கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் பக்தர்கள் பாலீத்தீன் பைகள் எடுத்துச் செல்வதை தடுக்கவும், வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்லாமல் இருக்கவும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தண்ணீர் பாட்டில் குளிர்ச்சியாக இல்லை எனக்கூறி பணம் தர மறுத்து வாக்குவாதம்
    • காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்க்கும் குன்னூர் வெலிங்டனை சேர்ந்த நபர் உள்பட 3 பேரிடம் விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சரண்குமார் (வயது 29). இவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் கடையில் இருந்த போது மது போதையில் 3 பேர் பேக்கரிக்கு வந்து சாப்பிட்டனர். பின்னர் தண்ணீர் பாட்டில் கேட்டு உள்ளனர். இதனையடுத்து சரண்குமார் அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தார். அப்போது அந்த 3 பேரும் பிரிட்ஜ் இல்லையா, தண்ணீர் குளிர்ச்சியாகவே இல்லை. நீ எல்லாம் எதற்கு கடை வைத்து நடத்துகிறாய் என கூறி பணம் கொடுக்காமல் அங்கு இருந்து செல்ல முயன்றனர்.

    இதனையடுத்து சரண்குமார் அவர்களிடம் பணத்தை கேட்டார். அதற்கு இவர்கள் மில்டரிக்காரன் கிட்டேயே பணம் கேட்கிறாயா என 3 பேரும் சேர்ந்து சரண்குமாரை தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பேக்கரி கடை உரிமையாளரை மீட்டனர்.

    பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பேக்கரி கடை உரிமையாளர் சரண்குமாரை தாக்கியது காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்க்கும் குன்னூர் வெலிங்டனை சேர்ந்த நபர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.

    அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தன்னை யாரோ கையில் வெட்டியதாக கூறி வரவழைத்து கொடூரம்
    • கொலை வழக்கில் தொடர்பு பற்றி பேசியதால் குத்தியதாக வாக்குமூலம்

    கோவை,

    கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள அருளானந்தம் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று கடையில் இருந்த முருகனுக்கு ஆசிரியர் காலனியை சேர்ந்த மாதவன் (21) என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னை யாரோ கையில் வெட்டி விட்டதாக கூறினார். முருகன் உடனடியாக மாதவன் அழைத்த இடத்துக்கு சென்றார்.

    அங்கு தனியாக நின்று கொண்டு இருந்த அவர் நீ என்ன பெரிய ஆளா என கூறியபடி அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து முருகனின் வயிற்றில் குத்தினார். பின்னர் அங்கு இருந்த தப்பிச் சென்றார்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் முருகனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து சூலூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தலைமறைவாக இருந்த மாதவனை கைது செய்தனர்.

    அவரிடம் கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்தனர். விசாரணையில் மாதவன், ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். அந்த கொலை சம்பந்தமாக முருகன் பேசியதால் அவரை கத்தியால் குத்தியதாக கூறினார். இதனை தொடர்ந்து போலீசார் மாதவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் ஏற மறுத்ததால் காதலர் ஆத்திரம்
    • பொள்ளாச்சி தாலுகா போலீசார் தீவிர விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தாய் மற்றும் தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மாணவி அவரது தாத்தா பாட்டி பராமரிப்பில் இருந்து வருகிறார்.

    இந்தநிலையில் மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகதீஸ் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவி பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஜெகதீஸ் தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வருமாறு அழைத்தார். ஆனால் மாணவி வர மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாணவியை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். இதில் காயம் அடைந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது தாத்தாவிடம் கூறி னார். அவர் மாணவியை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் மாணவி புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பல்வேறு வழிபாடுகளை செய்வது வழக்கம்.
    • பரிகார நிவர்த்தி செய்யும் வகையில் கழுகுக்கு ஈமச்சடங்கு நடத்துவது என முடிவு செய்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட திம்மராயன்பாளையம், இலுப்பம்பாளையம், வச்சினாம்பாளையம், கிச்சகத்தியூர், மூலத்துறை, பழத்தோட்டம், லிங்காபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன.

    அங்கு அவர்கள் போதிய அளவுக்கு மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பல்வேறு வழிபாடுகளை செய்வது வழக்கம்.

    இந்நிலையில் சிறுமுகை திம்மராயன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியம்மா என்பவரின் தோட்டத்தில் ஒரு கழுகு இறந்த நிலையில் கிடந்தது. பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கழுகின் உடலை பார்வையிட்டனர்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று விவசாய நிலத்தில் கழுகு இறந்து கிடப்பது சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 கிராமங்களுக்கும் நல்லது இல்லை என்று பொது மக்கள் கருதினர். எனவே இதற்கு பரிகார நிவர்த்தி செய்யும் வகையில் கழுகுக்கு ஈமச்சடங்கு நடத்துவது என முடிவு செய்தனர்.

    இதையடுத்து இறந்த கழுகுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கழுகின் உடலை எடுத்து செல்ல பாடை கட்டப்பட்டது. அதில் கழுகை வைத்து தோளில் சுமந்து ஊர்வலமாக பவானி ஆற்றங்கரைக்கு எடுத்து சென்றனர்.

    அங்குள்ள ஒரு பொது இடத்தில் சாஸ்திர சம்பிரதாயபடி கழுகை எரியூட்டி வழிபட்டனர். பின்னர் கழுகின் அஸ்தி பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்பவர் கூறுகையில் கருடன் (கழுகு) விளைநிலத்தில் இறந்து கிடந்தால் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களில் மழை பொழியாது.

    இதனால் விவசாயம் பாதிக்கப்படும்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விளைநிலத்தில் இறந்து கிடந்த கழுகுக்கு ஈமச்சடங்கு நடத்தினோம். பின்னர்தான் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து விவசாயம் செழித்தது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கழுகு இறந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே கழுகுக்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்கு நிகழ்ச்சிகளை செய்து தரிசனம் செய்து வழிபட்டு உள்ளோம் என்று கூறினார்.

    • உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார் அறிவிப்பு வெளியிட்டார்.
    • மாநகர பகுதியில் சர்ச்சைக்குரிய வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவை:

    சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவரது தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார் அறிவிப்பு வெளியிட்டார்.

    சாமியாரின் இந்த மிரட்டலுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சாமியாரின் உருவப்படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமியார் மீது போலீஸ்நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் பொள்ளாச்சியில் சாமியாரின் உருவப்பொம்மையை நள்ளிரவில் யாரோ தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் ரோட்டில் மேம்பாலம் உள்ளது.

    இந்த மேம்பாலத்தில் இரவு 9.30 மணி அளவில் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவ பொம்மையை சிலர் தூக்கில் தொங்க விட்டு சென்றனர். இரவு நேரம் என்பதால் யாரோ ஒருவர் தூக்கில் தொங்குவது போல அந்த பொம்மை காணப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு சாமியாரின் படம் ஒட்டப்பட்டு உருவப்பொம்மை தொங்கவிடப்பட்டு இருந்தது. உடனடியாக அந்த உருவப்பொம்மையை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    சனாதனம் பிரச்சினை தொடர்பாக கோவையில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க .வினர் மாறி, மாறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இதற்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் மாநகர பகுதியில் சர்ச்சைக்குரிய வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுவரொட்டிகளில் அச்சகத்தின் பெயர், உரிமம் எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிடவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கோவையில்மாவட்ட ஆதி தமிழர் பேரவையை சேர்ந்த 5 பேர் கைது
    • போலீசார் தடுத்து நிறுத்தி உருவப்பொம்மையை பறித்து சென்றனர்

    கோவை,

    சனாதனம் குறித்து பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தி சாமியார் ஒருவர் மிரட்டல் விடுத்தார்.

    இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சாமியார் மீது புகார் அளித்து வருகின்றனர். இந்தநிலையில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கோவை மாநகர், மாவட்ட ஆதி தமிழர் பேரவையினர் சாமியாரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி உருவப்பொம்மையை பறித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர்.

    • மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏற்றபடி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை மேம்படுத்த திட்டம்
    • மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் மாதிரி புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது

    கோவை,

    மேட்டுப்பாளையம் ரெயில்நிலையம் கடந்த 1873-வது ஆண்டு தொடங்கப்பட்டது. மீட்டர்கேஜ்-அகல ரெயில் பாதைகளை உடைய மிகச்சில ரெயில் நிலையங்களில் மேட்டுப்பாளையமும் ஒன்று.

    மேட்டுப்பாளையம் - சென்னை இடையேயான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், இந்த பாதை வழியாகவே கோவை வந்துசெல்கிகிறது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை தினமும் சராசரியாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை ரூ.14.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. அங்கு பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் வாகனப் போக்கு வரத்திற்காக அகலமான பாதைகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் தனி நடைபாதைகள், வாகனங்களுக்கான தனி நுழைவு, மற்றும் தனியாக வெளியேறும் வசதிகள், 2 சக்கர-4 சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக வாகன நிறுத்தம் ஆகியவை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளன.

    மேட்டுப்பாளையம் ரெயில்நிலைய வளாகமும் அழகுபடுத்தப்பட உள்ளது. மேலும் பிரதான நுழைவாயில், முன்ப திவு அலுவலகங்கள், காத்திருப்பு கூடம் மற்றும் கழிப்பறைகளின் உட்புறங்களும் மேம்ப டுத்தப்படுகிறது. ரெயில்கள் நிற்கும் இடத்தில் அறிவிப்பு பலகைகள் வைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பலகைகள் பயணிக ளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    தொடர்ந்து நடைமேடை மேற்பரப்பு மேம்படுத்தப்படுகிறது. அங்கு கூடுதலாக நடை மேடை நிழற்கூரைகள் அமைய உள்ளன. மேலும் பழைய தங்குமிடங்கள் சீரமைக்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏற்றபடி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது என திட்டமிடப்பட்டு உள்ளது. லிப்ட், எஸ்கலேட்டர் வசதி செய்து தரவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    ரெயில் நிலையத்திற்கு வருபவர்களின் பாது காப்புக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுகின்றன. இதுதவிர தூய்மையான குடிநீர் வசதி, மின்சார சிக்கனத்திற்காக ரெயில் நிலையத்தில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.

    இத்தகைய சிறப்பம்சங்களுடன் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற உள்ளது. இதற்காக அங்கு மாதிரி புகைப்படம் ஒன்றையும்தென்னக ரெயில்வே தற்போது வெளியிட்டு உள்ளது.

    • அரக்ேகாணம், சோளிங்கர் இடையே தண்டவாள புனரமைப்புப் பணி நடப்பதால் தென்னக ரெயில்வே நடவடிக்கை
    • காட்பாடியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் கோவைக்கு புறப்பட்டு வரும்

    கோவை,

    கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், 4 நாட்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரக்ேகாணம், சோளிங்கர் ரெயில் நிலையங்களில் தண்டவாள புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் வருகிற 13,20,27 மற்றும் அக்டோபர் 4-ந் தேதிகளில் கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் எண் (12680) காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    இந்த ரெயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். இதே போல, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.35 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்.12679) சென்னை சென்ட்ரல் - காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் கோவை புறப்பட்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மற்றொரு செய்திக்குறிப்பில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கொச்சுவேலி (திருவனந்தபுரம்) - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (எண்.06048) வருகிற 10-ம் தேதி மாலை 5 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் ரெயில்நிலையம் சென்றடையும். 

    • வேகமாக வந்த கார் நிலைதடுமாறி கடையில் மோதியது
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் 3 பேருக்கு தீவிர சிகிச்சை

    கோவை,

    கோவை-திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் போலீஸ் நிலையம் அருகே இன்று காலை ஒரு கார் வேகமாக வந்தது. அப்போது நிலைதடுமாறி அருகில் உள்ள கடைக்குள் புகுந்தது. இதில் காரை ஓட்டி சென்ற ஒரு ஆண் மற்றும் 2 பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    அவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடைக்குள் கார் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக ரோட்டில் சென்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்பு
    • தமிழக முதல்அமைச்சர் நேரடியாக தலையிடும்வரை தொடர்போராட்டம் நடத்த முடிவு

    கோவை,

    தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதன்ஒருபகுதியாக தொழில் துறையினருக்கான நிலைகட்டணம், பீக்ஹவர் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதனை திரும்ப பெற வேண்டும் என தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு-குறு தொழில் முனைவோர் இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமை ப்பு ஒன்எறை உருவாக்கி உள்ளனர்.

    இந்த அமைப்பின் சார்பில் கோவை மாவட்டம் காரணம்பேட்டையில் இன்று அடையாள உண்ணா விரத போராட்டம் நடந்தது.

    இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட்ட த்தில்நிலை கட்டணம் உயர்வு, பீக்ஹவர் கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.இதுகுறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ஒழுங்குமுறை ஆணையம், தமிழக அமைச்சர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே தமிழக முதல் அமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும். அது வரை தொடர்போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.

    ×