என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் வனத்துறை ஆலோசனை
    • சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்ததால் அதிகாரிகள் நடவடிக்கை

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறைக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து மாதந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வால்பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறை சார்பில் சமீபத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததாக வால்பாறையில் உள்ள ஓட்டுநர் சங்கத்தினர் தெரிவித்தனர். வால்பாறையில் சுற்றுலாவை நம்பி இருக்கும் அனைவருடைய வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படும் என்றும், கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து வால்பாறை எம்.எல்.ஏ. கந்தசாமி தலைமையில் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் பார்கவ் தேஜா முன்னிலையில், வால்பாறையில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

    இதுகுறித்து, வனத்துறையினர் கூறும்போது, தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. 6 மணிக்கு மேல் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க சாலை ஓரங்களில் நடந்து செல்கின்றன. இந்த நேரத்தில் சுற்றுலா பயணிகள் வனத்துக்குள் வரும் போது மனித வனவிலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனவிலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாது. இதனால் 6 மணிக்கு மேல் வால்பாறை செல்வதை பயணிகள் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த தடை நேரத்தை தளர்த்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து பரிசீலனை செய்யப்படும் என்றனர்.

    • கண்டக்டருக்கு வீடியோகாலில் பேசி தூக்கு கயிறுடன் சாகப்போவதாக கூறினார்
    • ஓட்ைட பிரித்து உள்ளே சென்று சடலம் மீட்பு

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாச்சியூரை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் சண்முக சுந்தரம் (வயது 28). இவர் நாச்சிபாளையம் - உக்கடம் வரை செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சண்முகசுந்தரம் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    இவர் தனது நண்பர்களிடம் அடிக்கடி தற்கொலை செய்யப்போவதாக கூறி வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சண்முகசுந்தரம் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

    தற்கொலை செய்வதற்கு முன்பு அவரது நண்பரான கண்டக்டருக்கு வீடியோ அழைப்பு மூலமாக தொடர்பு கொண்டு தற்கொலை செய்யப்போவதாக தூக்கு கயிற்றுடன் பேசினார். மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு அவருடைய ஸ்டேட்டசில் புகைப்படத்தை வைத்து ரிப் என இரங்கல் பதிவு செய்து விட்டார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரது வீட்டுக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்க வில்லை. பின்னர் ஓட்ைட பிரித்து உள்ளே சென்று பார்த்த போது சண்முக சுந்தரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட சண்முக சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கூலித்தொழிலாளி வீட்டில் 5 பவுன் செயின், அரை பவுன் கம்மல், ஒரு பவுன் மோதிரம், பணம் திருட்டு
    • வீட்டுக்குள் தூங்கிய மூதாட்டியிடம் 2 தங்க வளையல்கள் கொள்ளை

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கைலாசம் (வயது 49).

    இவர் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு வந்து விட்டார். இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் செயின், அரை பவுன் கம்மல், ஒரு பவுன் மோதிரம் மற்றும் ரொக்கப்பணம் திருடுபோய் இருந்தது.

    இதுபற்றி அவர் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதேபோன்று கோவை கணபதி, எப்.சி.ஐ. ரோட்டில் உள்ள வரதராஜூலு நகரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி அம்மாள் (வயது 73). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பாப்பாத்தி அம்மாள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்மநபர் வீட்டிற்குள் நுழைந்து ரு.45000 2 தங்க வளையல்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் சரவணம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார்.

    புகாரை பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது,வீட்டிற்குள் வந்த திருடன் சத்தம் இல்லாமல் வளையல்களை திருடிக் கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சரவ்ணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அழைத்து சென்று திருமணம்
    • 18 வயது தாண்டுவதற்கு முன்பே கர்ப்பமாக்கியது அம்பலம்

    கோவை,

    கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து அவர்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி வாலிபர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து 2 பேருடைய பெற்றோருக்கும் தெரியாமல் வாலிபர் சிறுமியை திருமணம் செய்தார்.

    இதனை அறிந்த வாலிபரின் பெற்றோர் அவரிடம் சிறுமிக்கு 18 வயது தாண்டி விட்டதா என கேட்டனர். அதற்கு அவர் தாண்டி விட்டதாக கூறினார். இதனையடுத்து காதலர்கள் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் சிறுமி கர்ப்பமானார்.

    வாலிபர் நேற்று சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு 18 வயது தாண்டுவதற்கு முன்பே வாலிபர் அவரை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இது குறித்து டாக்டர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் 18 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோப்பநாய் ராஜாவுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
    • முதுமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

    சூலூர்:

    கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 7 மோப்ப நாய்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நாய்கள் கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டுபிடிப்பு ஆகிய சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

    வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக லேப்ரடார் வகையை சேர்ந்த ராஜா என்ற மோப்பநாய் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்த மோப்ப நாய் கடந்த ஒருவார காலமாக உடல் சரியில்லாமல் இருந்து வந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தது. உயிரிழந்த மோப்ப நாய்க்கு கோவை மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி. தென்னரசு தலைமையில் இறுதி சடங்கு நடந்தது.

    அப்போது மோப்பநாய் ராஜாவுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சூலூர் போலீஸ் நிலையத்தில் உள்ள துப்பறியும் மோப்ப நாய் பிரிவு வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    உயிரிழந்த மோப்ப நாய் ராஜா சென்னையில் நடந்த சுதந்திர தின விழா, நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

    • கோவை மத்திய ஜெயிலில் குறள் கூறும் பொருள் என்ற தலைப்பில் தினமும் காலை 7 மணிக்கு ஏதாவது ஒரு கைதியின் மூலம் ஒலிபெருக்கியில் ஒரு திருக்குறள் வாசிக்கப்படும்.
    • அறிஞர்களின் சிந்தனைத்துளிகள், அன்றைய தினத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், தன்னம்பிக்கை பொன்மொழிகள் ஆகியவை தினமும் வாசிக்கப்படுகிறது.

    கோவை:

    கோவை மத்திய ஜெயிலில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் தடுப்பு பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் குற்றங்களுக்கு தகுந்தவாறு வெவ்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் நல்லெண்ணத்தை அதிகரிக்கும் வகையிலும், திருந்தும் வகையிலும் கல்விக்கூடம் மூலம் கற்பித்தல், நூலகம் மூலம் வாசிப்புத்திறனை மேம்படுத்துதல், யோகா பயிற்சி, உடற்பயிற்சிகள் அளித்தல் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியான ஜெயில் வளாகத்தில் திருக்குறள் வாசிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் அறிவுரையின் பேரில் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    கோவை மத்திய ஜெயிலில் குறள் கூறும் பொருள் என்ற தலைப்பில் தினமும் காலை 7 மணிக்கு ஏதாவது ஒரு கைதியின் மூலம் ஒலிபெருக்கியில் ஒரு திருக்குறள் வாசிக்கப்படும். தொடர்ந்து குறளின் பொருளும் வாசிக்கப்படும். அதைத்தொடர்ந்து அறிஞர்களின் சிந்தனைத்துளிகள், அன்றைய தினத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், தன்னம்பிக்கை பொன்மொழிகள் ஆகியவை தினமும் வாசிக்கப்படுகிறது.

    சிறைத்துறை நிர்வாகத்தினர் மூலம் இவை தயார் செய்து கைதியிடம் அளிக்கப்படும். அவர் கட்டுப்பாட்டு அறையில் உள்ள மைக்கை பயன்படுத்தி வாசிப்பார். அனைத்து பிளாக்குகளிலும் ஒலிபெருக்கி உள்ளது. இதன் மூலம் சிறையில் உள்ள அனைத்து கைதிகளும் திருக்குறள், அதன் பொருள், தன்னம்பிக்கை பொன்மொழிகள் உள்ளிட்டவற்றை கேட்டு அறிந்து கொள்வர். இந்த மாதம் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

    சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா கூறும்போது சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளை நல்வழிப்படுத்திட இந்த குறள் கூறும் பொருள் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

    • வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர்.
    • முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    சூலூர்:

    கோவை அருகே உள்ள சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன். இவர் இன்று அதிகாலை 2.45 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

    ெதன்னம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் டிரைவர் சிவக்குமார் ஆகியோர் அந்த வாலிபர்களை ரோந்து வாகனத்தில் விரட்டி சென்றனர். 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர்.

    இதனையடுத்து டிரைவர் சிவக்குமார் வாலிபர்களை பிடிப்பதற்காக அவர்களின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்று பின் பக்கத்தில் இடித்தார். அப்போது ரோந்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் வலது பக்கத்தில் இருந்த தடுப்பு கம்பியில் மோதியது.

    மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர்கள் இருட்டில் ஓடி தப்பித்தனர். ரோந்து வாகனம் விபத்தில் சிக்கியதில் இன்ஸ்பெக்டர் மாதையனின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை நீலாம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    போலீசார் வாலிபர்கள் விட்டுச் சென்ற கைப்பையை சோதனை செய்தனர். அதில் பட்டாகத்தி, வீடுகளை உடைக்க பயன்படுத்தும் இரும்பி கம்பி 2, ஸ்குரு டிரைவர், கையுறை, 2 டார்ச் லைட், சிறிய கத்தி ஆகியவை இருந்தது. வாலிபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கணியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாள் (72) என்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்தவர்கள் யார், எதற்காக செய்தனர் என்று இதுவரை கண்டுபி டிக்கப்படவில்லை. போலீசார் கொலையாளிகளை தேடி வரும் நிலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

    இதனால் அவர்களுக்கு கொலை வழக்கில் எதுவும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் பங்கேற்பு
    • சிறு வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பலன்பெற்றனர்

    கோவை,

    மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் சார்பில் பிரதமரின் ஸ்வநிதி என்ற திட்டத்தின் கீழ் சிறு வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு மூலதனக் கடன் வழங்கும் முகாம் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமினை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் கடன் பெறுவ தற்கான விண்ணப்பங்கள் பயனாளிகளுக்கு வழ ங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் தாமோதரன், மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமின்றி நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்
    • மருதமலையில் கழிவுநீரை உடனடியாக அகற்றி, பொது கழிவறையை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை

    வடவள்ளி,

    கோவை மருதமலை அடிவாரம் பகுதியில் பஸ் நிலையம் உள்ளது.

    இங்கு தினமும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. மருதமலை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன் பாட்டுக்காக ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி யாக கழிப்பிட வசதிகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் மூலம் செல்கிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருசிலர் கழிவு நீர் கால்வாயை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் அங்கு கழிவுநீர் வெளியேற வழியின்றி ரோட்டில் குள ம்போல தேங்கி நிற்கிறது.

    எனவே பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் மருதமலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது மட்டுமின்றி நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

    கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு மருதமலை பஸ் நிலையத்தில் குளம் போல தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீரை உடனடியாக அகற்றி, பொது கழிவறையை மீண்டும் சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 8 கிலோவுக்கு பணம் வாங்கி 5 கிலோ தங்கம் மட்டுமே அனுப்பினர்
    • உக்கடத்தை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை

    கோவை.

    மும்பை விதல்வாடி பகுதியை சேர்ந்தவர் உத்தம்சவ் (வயது 44). இவர் கோவை செல்வபுரம் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    நான் மும்பையில் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். இந்த நிலையில் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முன்னா மண்டேல், நியாஸ்மாலிக், மாசின்மாலிக் மற்றும் ஜெயிரூன்மாலிக் ஆகிய 4 பேரும் என்னை தொடர்பு கொண்டனர்.

    அப்போது நாங்கள் கோவையில் சுத்த தங்க கட்டிகளை விற்பனை செய்து வருகிறோம் என்று கூறினர்.

    இதை நம்பிய நான் அவர்களிடம் 8 கிலோ தங்கம் வேண்டும் என்று கேட்டேன். இதற்கு உண்டான பணத்தை செலுத்தி விட்டேன்.

    ஆனால் அவர்கள் எனக்கு 5 கிலோ தங்கம் மட்டுமே அனுப்பி வைத்தனர். மீதம் உள்ள 3.265 கிலோ தங்கத்தை ஒப்படைக்கவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் தவிப்பு
    • வேனை பறிமுதல் செய்து மதுபோதையில் இருந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை

    வடவள்ளி,

    கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக வேன் வசதி உள்ளது. இந்த நிலையில் 12 மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் பள்ளிக்கூடத்துக்கு புறப் பட்டு வந்தது.

    அப்போது டிரைவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

    எனவே அவர் வடவள்ளி குருசாமி நகர் பகுதியில் நடுரோட்டில் வண்டியை நிறுத்தி விட்டு ஸ்டியரிங் மீது உட்கார்ந்த நிலையில் தூங்கினார். எனவே வேனுக்குள் இருந்த மாணவ- மாணவிகள் எப்படி பள்ளிக்கு செல்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். இந்த நிலையில்அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாற்று வேன் ஏற்பாடு செய்யப்பட்டு, 12 குழந்தைகளும் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட னர்.

    இதற்கிடையே மது போதையில் வாகனம் ஓட்டி வாகனத்தை நடுரோ ட்டில் நிறுத்திவிட்டு தூங்கிய வேன் டிரைவர் செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் வடவள்ளி போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வேனை பறிமுதல் செய்து, அதனை மதுபோதையில் ஓட்டி டிரைவர் செந்திலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டுப்பாளையம் பகுதியில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேத தொகையை வழங்க கோரிக்கை
    • பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் உறுதி

    மேட்டுப்பாளையம்,

    தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் சிறுமுகை வனத்துறை சார்பில் முன்களப் பணியா ளர்கள், மனிதன்-வனவி லங்கு மோதலை கையாள்ப வர்களுக்கான விழிப்பு ணர்வு மற்றும் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சிமுகாம், மேட்டுப்பாளையம் அடுத்த வச்சினாம்பாளையம் கிராமத்தில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமை நடைபெற்றது.

    கோவை மாவட்ட ஓய்வுபெற்ற உதவி வனப்பாதுகாவலர் நசீர், கோவை வன கால்நடை மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குநர் என்.எஸ்.மனோகரன், கோவை இணை ஒருங்கி ணைப்பாளர் கிருஷ்ணகு மார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கூட்டத்தில் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    விழிப்புணர்வு முகாமில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பேசும்போது, காட்டுப்பன்றி இனப்பெருக்கம் அதிகமாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இருந்த வனச்சட்டத்தை இன்றும் அரசு பயன்படுத்தி வருகிறது.

    விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றி, மயில், மான், காட்டு யானை ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    லிங்காபுரம் கிராமத்தில் முக்கு வளைவில் இருந்து வனச்சோதனை சாவடி வரை யானைகளுக்கான அகழியை அகலப்படுத்த வேண்டும்.

    காட்டுயானைகளைவிட காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனை விவசா யிகள் சுட்டுகொல்ல அனுமதி வழங்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேத தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    லிங்காபுரம் வனசோதனை சாவடியில் இருந்து காந்தவயல் வரை சாலையின் இருபுறமும் முட்புதர் அதிகளவில் உள்ளது. இதனை அப்புறப்படுத்த வேண்டும். லிங்காபுரம் பகுதியில் யானை தொல்லை அதிக ளவில் உள்ளது. விஸ்கோஸ் பகுதி யானைகள் முகாம் போல உள்ளது. எனவே அங்கு யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வனப்பகுதி ஒட்டியுள்ள விவசாயிகளுக்கு டார்ச் லைட் வழங்க வேண்டும். இரவு 6 மணிக்கு மேல் கிராமத்தில் நுழையும் யானைகளை விரட்ட வனத்துறை யினர் உடனடியாக வர வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    தொடர்ந்து வனச்சரக அலுவலர் மனோஜ் பேசுகையில், பொதுமக்க ளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கிராம பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நாட்டு வெடி குண்டு மூலம் வேட்டையாடுபவர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    ×