என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரூர் அருகே காதலுக்கு எதிர்ப்பால் பட்டதாரி வாலிபர் தற்கொலை
- காதலியிடம் வீடியோகால் பேசிவிட்டு துயர முடிவு
- வாழ பிடிக்கவில்லை என்று கூறி தூக்கு போட்டு தற்கொலை
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மகன் கார்த்திக் (வயது 24). இவர் பி.எஸ்.சி. ஐ.டி. படித்து முடித்து உள்ளார்.
இந்தநிலையில் கார்த்திக்கிற்கு பாரதியார் வீதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் கார்த்திக்கின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கார்த்திக் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் அவரது காதலியை வீடியோ அழைப்பு மூலமாக தொடர்பு கொண்டு தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தன்னால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வர வேண்டாம் என கூறினார். பின்னர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திக், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அவரது பெற்றோர் கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






