என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ரூ.110.68 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள், நலத்திட்ட உதவிகள்
    X

    கோவையில் ரூ.110.68 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள், நலத்திட்ட உதவிகள்

    • அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துசாமி தொடங்கிவைத்தனர்
    • அக்டோபரில் இருந்து கோவைக்கு 2 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படும் என அறிவிப்பு

    கோவை,

    கோவை வ.உ.சி. மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி , பேரூராட்சிகளில் முடிவற்ற பணிகளை இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கேஎன்.நேரு, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    விழாவில் ரூ.11.8 கோடி மதிப்பீட்டில் 27 முடிவற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். ரூ.67.48 கோடி மதிப்பீட்டில் 558 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.32.12 கோடி மதிப்பீட்டில் 703 பயனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகளும் இந்த விழாவில் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ110.68 கோடி ஆகும்.

    பின்னர் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. குடிநீர் வழங்கலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.கேரள அரசுடன் பேசி சிறுவாணி அணையில் இருந்து முறையாக தண்ணீர் பெற்று தரப்பட்டுள்ளது. பில்லூர் 3- வது கூட்டு குடிநீர் திட்டம் வருகின்ற அக்டோபர் மாதத்தில் முடிவடையும்.அக்டோபரில் இருந்து கோவைக்கு 2 நாளுக்கு ஒருமுறை பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படும் .

    கடந்த 10 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி தான் குடிநீருக்கு நிதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் 2 ஆண்டுகளில் ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செய்ய வேண்டிய கடமையை நாங்கள் செய்கிறோம். அதற்கான நன்றியை நீங்கள் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாநகருக்கு நாள் ஒன்றுக்கு 298 எம்.எல்.டி. குடிநீர் தேவை. ஆனால் 214 எம்.எல்.டி. தண்ணீர் தான் கிடைத்து வருகிறது. பில்லூர் 3-வது கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறப்போகிறது. அந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இன்னும் ஒன்றரை கி.மீ. தான் பாக்கி உள்ளது. அப்பணிகள் விரைவில் முடியும்.

    188 எம்.எல்.டி தண்ணீர் கூடுதலாக வந்ததும் கோவை மாநகருக்கு தினமும் தண்ணீர் வழங்கப்படும். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தினமும் தண்ணீர் வழங்கப்படும் .

    சிறுவாணி, ஆழியார் அணை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் முதல்-அமைச்சர் கேரள அரசுடன் கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் பேசியுள்ளனர்.

    சாலைகள் சீரமைக்க பணம் ஒதுக்கி சீரமைக்க உத்தரவிட்டுள்ளோம். 680 கி.மீ. தூரம் சாலை சீரமைக்க நிதி ஒதுக்கி உள்ளோம்.

    அமைச்சர் உதயநிதியை மிரட்டிய அயோத்தி சாமியார் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவர்களால் செய்ய முடியுமா? தலையை சீவ 10 கோடி தேவையில்லை, 10 ரூபாய் சீப்பு போதும் என அமைச்சர் உதயநிதி பதில் சொல்லிவிட்டார்.

    நாங்கள் திராவிட இயக்க கொள்கையை 100 வருடங்களாக பேசி வருகிறோம்.இவர்கள் புதிதாக ஆரம்பித்துள்ளா ர்கள்.பாரத் என வந்தாலும், இந்தியா என இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சொல்லியுள்ளார். பெயரை எப்படி மாற்றினாலும் நாங்கள் எப்போதும் போல மத்திய பா.ஜ.க. அரசை ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம்.ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடக்காத காரியம். அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதாப் மேயர் கல்பனா, எம்பிக்கள் நடராஜன் சண்முகசுந்தரம், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், திமுக மாவட்ட செயலாளர்கள் கார்த்திக் , தொண்டாமுத்தூர் ரவி , தளபதி முருகேசன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×