என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சோதனையின்போது குறைகள் கண்டறியப்பட்ட 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • டைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதமாக ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கெட்டுபோன இறைச்சிகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவின்படியும், மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து கோவை மாநகரில் கோவைபுதூர், கணபதி, சரவணம்பட்டி, ராமநாதபுரம், வடவள்ளி, அவினாசி ரோடு, பீளமேடு, சூலூர், சிங்காநல்லூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் நேற்று 2-வது நாளாக சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையில் 54 கடைகளில் 102 கிலோ பழைய இறைச்சியும், 2.5 கிலோ சவர்மா என மொத்தம் 104.5 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.57,400 மற்றும் லேபிள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட மில்க் ஷேக் 15 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3000. மேலும் ஆய்வின்போது 2 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டது. சோதனையின்போது குறைகள் கண்டறியப்பட்ட 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதமாக ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது:-

    சவர்மா கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் முறையான உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்கும் வணிகரிடமிருந்தே இறைச்சியை பில்லுடன் வாங்க வேண்டும். வாங்கிய பில்லை தினந்தோறும் முறையாக பராமரித்து வைத்திருத்தல் வேண்டும்.

    சவர்மா கம்பியின் உயரம் சூடுபடுத்தும் எந்திரத்தின் அளவுக்கு இருக்க வேண்டும். உயரமாக இருத்தல் கூடாது. சவர்மா தயார் செய்யும் இடம் பெரும்பாலும் கடையின் முகப்பில் அல்லது வெளியில் உள்ளது. தூசி மற்றும் அசுத்தம்படாமல் மறைக்கப்பட வேண்டும். தினந்தோறும் உபயோகத்திற்கேற்ப தினம் தினம் கொள்முதல் செய்ய வேண்டும். இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் 2 நாட்களுக்கு மேல் வைத்து உபயோகப்படுத்துதலை தவிர்க்க வேண்டும்.

    மையோனைஸ் தயாரிக்கும் முன்னர் முட்டையை நன்றாக கழுவி நன்றாக உலர்த்தி, அதன் பின்னர் கையுறையுடன் தயாரிக்க வேண்டும். அதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை பூண்டு, எண்ணெய் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருத்தல் வேண்டும். 3 மணி நேரத்திற்கு மேல் அதனை உபயோகிக்காமல் தேவைக்கேற்ப தயார் செய்து கொள்ள வேண்டும்.

    சவர்மா தயாரிக்கும்போது ஒவ்வொரு பகுதியும் வெந்திருத்தல் (70 டிகிரி செல்சியசுக்கு மேல்) அவசியம். தயார் செய்து கொடுக்கும் நபர் தன் சுத்தம், முகக்கவசம், தலைக்கவசம், கையுறை ஆகியவை அணிந்து இருக்க வேண்டும். அன்றைய இரவே குளீருட்டியில் சேமிக்காமல் தேவைக்கேற்ப தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

    சவர்மாவை மடித்து கொடுக்க உதவும் குப்பூஸ் எனப்படும் ரொட்டி வகையை அந்தந்த பொருளினை முழுமையான லேபிளுடன் அச்சிடப்பட்டு வாங்க வேண்டும். அதாவது தயாரிப்பு தேதி, பேட்ச் எண், காலாவதி தேதி போன்றவையும் முழு முகவரியுடன் கூடிய லேபிள் இருத்தல் அவசியம்.

    அதனை வாங்கியவரின் முழு முகவரி, அவர் உணவுப் பாதுகாப்பு துறை உரிமம் பெற்றவாரா என அவரின் உரிமத்தை பார்த்து வாங்க வேண்டும். லேபிளில் உணவுப் பாதுகாப்பு உரிமம் இருத்தல் அவசியம்.

    குளிரூட்டியை உரிய வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். முழுமையாகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். வெப்பநிலையை எளிதில் அறியும் முறையில் தெளிவான முறையில் வைத்திருத்தல் அவசியம்.

    குளிரூட்டியை முறையாக பராமரிக்க வேண்டும் என சவர்மா கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இதுபோன்ற விதிமுறைகளை பின்பற்றாத உணவு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை சார்ந்த சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சவர்மா தயாரிப்பில் ஏதேனும் சுகாதாரக் குறைபாடுகளை கண்டறிய நேரிட்டால் உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளாவில் பதுங்கியவரை போலீசார் பிடித்தனர்
    • கொலையாளி பென்னி பரபரப்பு வாக்குமூலம்

    கோவை,

    கோவை ஆடிஸ் வீதியில் உள்ள பிளாட்பாரத்தில் சமையல் தொழிலாளி ராஜேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் அவரை பென்னி என்பவர் அடித்து கொன்றது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பென்னி ரெயில் மூலம் கேரளாவுக்கு தப்பி விட்டார்.

    எனவே கோவை போலீசார் கேரளாவுக்கு புறப்பட்டு சென்று திருச்சூர் மாவட்டம், சாலக்குடியில் பதுங்கி இருந்த பென்னியை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை போலீசார் கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பென்னி போலீசிடம் அளித்த வாக்குமூலம் பற்றி கூறப்படுவதாவது:-

    நான் கோவை ஆடிஸ் வீதி பிளாட்பாரத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தேன். அப்போது எனக்கு சமையல் தொழிலாளி ராஜேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் அவருடன் சேர்ந்து சமையல் வேலைக்கு சென்று வந்தேன். நாங்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக மது குடிப்பது வழக்கம். அந்த நேரங்களில் எல்லாம் ராஜேஷ் என்னை சரமாரியாக அடித்து துன்புறுத்துவார்.

    இந்த நிலையில் நான் சம்பவத்தன்று கூலி வேலைக்கு சென்றுவிட்டு ஆடிஸ் வீதி பிளாட்பாரத்தில் படுத்திருந்தேன். அப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த ராஜேஷ் சரமாரியாக அடித்து உதைத்தார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    உடனடியாக காந்திபுரம் டாஸ்மாக் கடைக்கு சென்று மதுகுடித்தேன். அப்போது ராஜேசை கொல்வது என்று முடிவு செய்தேன். பின்னர் மீண்டும் ஆடிஸ் வீதிக்கு வந்து சேர்ந்தேன். அப்போது ராஜேஷ் பிளாட்பார மேஜையில் படுத்து இருந்தார். அவரை பார்த்ததும் எனக்கு கொலைவெறி ஏற்பட்டது. எனவே அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினேன்.

    இதில் ராஜேஷ் இறந்து விட்டார். அதன்பிறகு உருட்டுக்கட்டையை வீசி விட்டு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து கேர ளாவுக்கு தப்பி சென்றேன்.

    சமையல் தொழிலாளி ராஜேஷ் கொலை வழக்கில் போலீசார் என்னை சந்தேகப்படமாட்டார்கள் என கருதினேன். ஆனால் அவர்கள் சரியாக துப்பறிந்து, கேரளாவில் பதுங்கியிருந்த என்னை மடக்கி பிடித்து விட்டனர்.

    இவ்வாறு போலீசாரிடம் பென்னி வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கோவை சமையல் தொழிலாளி ராஜேஷ் என்பவரை உருட்டுக்கட்டையால் தாக்கி படுகொலை செய்ததாக, பென்னியை போலீசார் கைது செய்தனர்.

    அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    • மொபட்டில் வீடு திரும்பியபோது கொள்ளையர்கள் கைவரிசை
    • சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை

    குனியமுத்தூர்.

    கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள வி.எஸ். என் கார்டன் பகுதியை சேர்ந்த பிரதீப் மனைவி வனிதா (வயது31).

    இவரது மாமியார் கடந்த 3நாட்களாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே வனிதா மாமியாரை அழைத்துக் கொண்டு, மொபட்டில் சுந்தராபுரத்தில் உள்ள பிசியோதெரபி மருத்துவமனைக்கு சென்றார்.

    அங்கு அவரது மாமியாருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் இரவு 8 மணி அளவில் 2 பேரும் மொபட்டில் வீடு திரும்பினர்.

    அப்போது மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பாலம் அருகே, இன்னொரு பைக்கில் வந்த 2 பேர், வனிதாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை மின்னலென பறித்தனர்.அவர்களை வனிதா தடுக்க முயன்ற போது, நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் வனிதாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. மாமியாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சுந்தராபுரம் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து அறிந்த சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவிளக்கு பூஜையில் 108 திருவிளக்கு மந்திரங்கள் முழங்கப்பட்டன
    • பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கும் மஞ்சள் கயிறு, பூக்கள் வழங்கப்பட்டன.

    கவுண்டம்பாளையம்,

    கோவை உருமாண்டம்பாளையம் பகுதியில் இந்துமுன்னணி சார்பில் 31-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    2வது நாளாக இன்று உருமாண்டம்பாளையம் மாகாளியம்மன் கோயில் திடலில் திருவிளக்கு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. இதனை வேள்வி ஆசிரியர் மனோஜ்குமார் நடத்தி வைத்தார். இதில் அந்த பகுதியை சேர்ந்த 251 பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். இதற்காக அவர்கள் ஒரே வண்ண ஆடையில் வந்திருந்தனர்.

    அப்போது பெண்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பழம், உள்ளிட்டவற்றை அம்மன் முன்பு வைத்து திருவிளக்கேற்றி மக்கள் நலன் வேண்டியும், குடும்பம் செழிக்கவும், மழை வேண்டியும் வழிபாடு செய்தனர்.

    திருவிளக்கு பூஜையில் 108 திருவிளக்கு மந்திரங்கள் முழங்கப்பட்டன. பெண்கள் குத்துவிளக்குகளை அலங்கரித்து தீபம் ஏற்றியும், மஞ்சள் பொடியால் விநாயகர் செய்தும் பூஜைகள் நடத்தினர். 

    • வனத்துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு
    • வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்தால் மக்களே விரட்ட முயலக்கூடாது எனவும் அறிவுரை

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவுட்டுக்காய் கடித்து யானை உள்ளிட்ட வனவி லங்குகள் இறப்பது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர், பொதுமக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையில் வனத்துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    குறிப்பாக வனப்பகுதியை ஒட்டியுள்ள ஓடந்துறை, லிங்காபுரம், கோவிந்தனூர், திம்மராயம்பாளையம், குஞ்சப்பனை, துதிக்கரை, மந்தாரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் நேரில் சென்று அவுட்டு காய் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவது, நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பது உள்ளிட்டவை சட்டப்படி குற்றம். வனவிலங்குகளை வேட்டையாடினால் வனவிலங்குகள் பாதுகாப்புச்சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    வருகிற செப்டம்பர் 30 -ந் தேதிக்குள் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்போர் அதனை காவல் நிலையத்திலோ, வனத்துறை அலுவலகத்திலோ ஒப்படைக்க வேண்டும். மேலும்,வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்தால் அதனை மக்களே விரட்ட முயலக்கூடாது. வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்களை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • சோலார் மின்வேலி குறித்து விழிப்புணர்வு மற்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன
    • வனப்பணியாளர்கள், வேட்டைதடுப்பு காவலர்களுக்கு மழை-குளிரை தாங்கும் மழை கோட்

    குனியமுத்தூர்,

    கோவை வனக்கோட்டம் மதுக்கரை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சரக அலுவலர் சந்தியா தலைமையில் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் கரடிமடை, மங்கலப்பாளையம், பச்சனாம்பதி, வாசவி பார்ம் பகுதி, தீத்திபாளையம், கரடிபாளையம், மத்திப்பாளையம், மோலப்பாளையம், காளியமங்கலம், பெரு மாள்கோவில்பதி, நாதேகவுண்டம்புதூர், நல்லூர்வயல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    அப்போது சோலார் மின் வேலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த குரோவ்ன் சோலார் பவர் பென்சிங் நிர்வாக இயக்குனர் ஜெயந்த் விவசாயிகளுக்கு நேரடி செயல்முறை விளக்கம் அளித்தார்.

    நிகழ்ச்சியில் மதுக்கரை வனச்சரக பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், ஆலந்துறை கிழக்கு மின் பணியாளர்கள், ஆலந்துறை பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் வன அதிகாரிகள் பதிலளித்தனர்.

    தொடர்ந்து வனச்சரக அலுவலர் சந்தியா விவசாயிகளுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்புக்கு பயன்படும் டார்ச் லைட்டுகளை வழங்கினார். வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மழை-குளிரை தாங்கும் மழை கோட் வழங்கப்பட்டது.

    • திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தூத்துக்குடிக்கு அழைத்து சென்றது அம்பலம்
    • மாயமான மகளை மீட்டு தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார்

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 18-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரியில் இருந்து சுற்றுலா செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாணவியின் செல்போனுக்கு அவரது பெற்றோர் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தங்களது மகளை மீட்டு தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிக்கும், தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. வாலிபர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை தூத்துக்குடிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. போலீசார் மாணவியை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மகளிர் உரிமைத்தொகை கேட்டு 7.41 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர்
    • கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையங்களின் தொடர்பு எண்களுடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது

    கோவை,

    கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 7.41 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த திட்டம் கடந்த 15-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்களுக்கு கடந்த 19-ந் தேதி முதல் நிராகரிப்பு செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து குறுந்தகவல்கள் வர ஆரம்பித்து உள்ளது.

    தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இ-சேவை மூலமாக மேல் முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக இ-சேவை மையத்தில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் கட்டணம் செலுத்த வேண் டும்.

    ஆனால் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீட்டுக்கு கட்டணம் இல்லாமல் இலசவமாக மேல்முறையீடு செய்யலாம்.

    விண்ணப்பதாரர்களுக்கு உதவ கோவை கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் அமைக்கப்பட்டது. இந்த உதவி மையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையங்களை தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண்களுடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

    • வயிற்று வலியால் அவதிப்பட்டவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
    • பொள்ளாச்சி தாலுகா போலீசார் பள்ளிக்கு சென்று தீவிர விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் ராஜ வீதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகன் நவீன் (வயது 8). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று காலை இவர் பள்ளிக்கு சென்றார். பள்ளியில் படிக்கும் 25 மாணவர்களுக்கு காலை உணவாக உப்புமா வழங்க ப்பட்டது. இதனை நவீன் சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தார். உடனடியாக ஆசிரியர்கள் வயிற்று வலியால் அவதிப்பட்ட நவீனை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் ஆஸ்பத்திரிக்கு மற்றும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி நவீன், பொங்கல், சுண்டல் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டார். அதனால் ஏற்பட்ட உடல் உபாதையால் அவருக்கு வயிற்று வலி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • செல்போனில் யாருடனோ அடிக்கடி பேசி வந்ததாக தகவல்
    • மனைவியை மீட்டு தரும்படி கணவர் போலீசில் புகார்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் இளம்பெண் யாருடனோ அடிக்கடி பேசிக்கொண்டு இருந்தார். இது அவரது கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அவர் இளம்பெண்ணின் தாயிடம் கூறினார். அவர் இளம்பெண்ணை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அவரது கணவர் வேலைக்கு சென்று இருந்தார். அப்போது இளம்பெண் அக்கம் பக்கத்தினரிடம் தான் ஏற்கனவே வேலை செய்த மில்லுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கும் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து இளம் பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் திருமணமான 6 மாதத்தில் மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்

    • 10 உணவகங்களுக்கு அபராதம்-5 கிலோ இறைச்சி பறிமுதல்
    • அதிகாரிகளின் திடீர் ஆய்வால் உணவக உரிமையாளர்கள் கலக்கம்

    மேட்டுப்பாளையம்,

    நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் சாலையோர துரித உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்ததுடன், அபராதம் விதித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் இந்த சோதனை நடந்தது.

    அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம், காரமடை நகராட்சிகளில் உணவுப்பாதுகாப்பு அலுவலர் ஆறுச்சாமி, மேட்டுப்பாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன், மகாராஜன், காரமடை நகராட்சி சுகாதார ஆய்வா ளர் சீனிவாசன் உள்ளிட்டோர் இணைந்து மேட்டுப் பாளையத்தில் ஊட்டி சாலை, சத்தி சாலைகளில் உள்ள உணவகங்கள், சாலையோர துரித உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது,சில கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகள் பயன்படுத்தியது தெரியவந்தது.

    இதேபோல் காரமடை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உணவகங்களில் உணவு தயாரிக்கும் கூடங்கள், பரிமாறும் இடங்கள், பாத்திரங்களை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் உள்ளிடவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும், மேட்டுப்பாளையம்,காரமடை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவகங்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர். சில கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர்.

    மேட்டுப்பாளையம், காரமடை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர் உடன் இணைந்து நகராட்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாரிகளின் திடீர் ஆய்வால் உணவகங்களின் உரிமையாளர்கள் கலக்கமடைந்தனர்.

    • ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம், கொள்கை இருக்கும்.
    • கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

    கோவை:

    பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும். கூட்டணி பற்றி எங்களது கருத்துகளை கட்சி மேலிடத்திற்கு சொல்வோம்.

    ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம், கொள்கை இருக்கும். கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் தற்போது கூட்டணிக்குள் இருக்கும் சலசலப்பு சரி செய்யப்படும்.

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை எல்லா இடத்திலும் சிறப்பாக நடக்கிறது. அனைத்து இடங்களிலும் மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, "எந்த தலைவர் சிலையாக இருந்தாலும் அவமதிப்பதை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளாது. அவமதிப்பதை பா.ஜ.க. ஒரு போதும் ஆதரிக்காது என்றார்.

    ×