என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கோவை மாநகர் பகுதிகளில் உயர்மட்ட தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி நடந்தது.

    கோவை,

    கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால் அந்த மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    கேரளாவில் நிபா வைரஸ் பரவியதை தொடர்ந்து அண்டை மாநிலமான தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    குறிப்பாக கேரளாவையொட்டி இருக்க கூடிய கோவை, நீலகிரி, கன்னியா குமரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனை சாவடி, பொள்ளாச்சி மீனாட்சிபுரம் உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்ப டுத்தப்பட்டுள்ளது. கேரளா வில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. மேலும் மாவட்டத்திலும் மக்களிடம் நிபா வைரஸ் மற்றும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து டெங்கு, நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால் கோவை மாவட்டத்தில் எவ்விதமான தொற்றும் பரவாமல் தடுப்பதற்கான மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு-கேரள எல்லை பகுதிகளில் இருக்கும் கிராமங்களில் மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் கேரளாவையொட்டி இருக்கும் கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    மேலும் எல்லையோர கிராம பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரியில் போதுமான அளவிற்கு மருந்துகள் தடுப்பூசிகள் ஸ்டாக் வைத்து கொள்வது, மக்களுக்கு நிபா வைரஸ், டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    அதன்படி வாரத்தில் 7 நாட்களும் ஒவ்வொரு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. திங்கட்கிழமை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஊர்வலமும், செவ்வாய்கிழமை ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த உள் ளோம்.

    புதன்கிழமை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உயர்மட்ட தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்துவது, வியாழக்கிழமை ரோடு, வீடு பகுதிகளில் உள்ள டயர்களை அப்புறப்படுத்துதல், வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சனிக்கிழமை வீடு வீடாக சென்று பாத்திரங்களில் தண்ணீர் இருந்தால் சுத்தமாக வைத்துக் கொள்ளும் படி அறிவுறுத்துவது என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    நேற்று கோவை மாநகர் பகுதிகளில் உயர்மட்ட தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதில் 100 தொட்டிகளை சுத்தம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • யானைகள் காலை 6 மணி அளவில் நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் புகுந்து குடியிருப்பு வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.
    • ஊருக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்டம் மாங்கரை மற்றும் தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    வனப்பகுதிக்குள் போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று தடாகம் அடுத்த மூலக்காடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.

    இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர். எனினும் அந்த பகுதியிலேயே சுற்றி வந்த யானைகள் காலை 6 மணி அளவில் நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் புகுந்து குடியிருப்பு வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. ஊருக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    • நேற்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற செல்லதுரை மீண்டும் திரும்பி வரவில்லை.
    • சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கணபதி நேதாஜி நகரை சேர்ந்தவர் செல்லதுரை(39). இவர் சொந்தமாக கிரைண்டர் நிறுவனம் நடத்தி வந்தார்.

    இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் மன வேதனை அடைந்தார். நேற்று வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இவரது உறவினர்கள் அக்கம்பக்கம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் வேடப்பட்டி குளத்தில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்குவதாக தகவல் வரவே போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அது மாயமான செல்லதுரை என்பது தெரியவந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பேரணியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கார்பன் உமிழ்வை குறைப்பது தொடர்பான உறுதிமொழி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் எடுக்கப்பட்டது.

    கோவை,

    புதை படிவ எரிபொருள்களில் இருந்து உலகிற்கு ஓய்வு அளிக்கும் வகையிலும் கார்பன் வெளியேற்றத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வருடம் தோறும் செப்டம்பர் 21-ந் தேதி சர்வதேச பூஜ்ஜிய உமிழ்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதனையொட்டி பல்வேறு இடங்களில் கார்பன் உள்ளிட்ட புதைப்படிவ எரிபொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கார்பன் உமிழ்வை குறைப்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    இந்தப் பேரணியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும், சுற்றுசூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும், போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

    மேலும் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை வலியுறுத்தும் வகையில் மஞ்சப்பைகளையும் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

    பேரணியில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக கார்பன் உமிழ்வை குறைப்பது தொடர்பான உறுதிமொழி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் எடுக்கப்பட்டது.

    • நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளது.
    • பொது மக்கள் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கோவை,

    கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவை மாநகரில் நாளை(வெள்ளிக்கிழமை) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சுண்டப்பாளையம் ரோடு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட உள்ளது.

    இதை யொட்டி நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய் யப்படுகிறது.

    உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து பேரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம், சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    காந்திபுரம் மற்றும்ட வுன்ஹா லில் இருந்து வைசியாள் வீதி, சலீவன் வீதியில் செல்லும் வாகனங்கள் உக்கடம் சென்று பைபாஸ் ரோடு - சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    உக்கடம் வழியாக திருச்சி ரோடு மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்ல வேண்டும்.

    உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ரெயில் நிலையம் வழியாக காந்திபுரம் செல்ல அனுமதிக்கப்படும்.

    தடாகம் ரோட்டில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் வெங்கிட்டாபுரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்.எஸ்.ஆர்.ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோடு- ஏ.ஆர்.சி. சந்திப்பு சென்று சிவானந்தா காலனி வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனூர் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கணபதி, காந்திபுரம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்களும் பேரூர் ரோடு, செல்வபுரம் மேல்நி லைப்பள்ளி அருகில் வலது பக்கம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை வழியாக உக்கடம் அடையலாம்.

    பேரூர் சாலையிலிருந்து தடாகம் ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள் சிவா லயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு, பனமரத்தூர், பூசா ரிபாளையம், சீரநாய்க்கன் பாளையம் வழியாக மருதமலை சாலையை அடைந்து லாலி ரோட்டில் இடது புறமாக திரும்பி தடாகம் சாலையில் பயணிக்கலாம்.

    விநாயகர் சிலை ஊர்வல பாதைகளான ராஜவீதி, ரங்கே கவுண்டர் வீதி, பெரிய கடைவீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி, சலீவன் வீதி, காந்திபார்க், தெலுங்கு வீதி, சுக்கிரவார் பேட்டை, தியாகி குமரன் வீதி, இடையரவீதி, தெப்பக்குளம் மைதானம், பூமார்க் கெட்ரோடு, பால்மார்க்கெட் ரோடு, மெக்ரிக்கர் ரோடு, டி.பி.ரோடு. லைட்ஹவுஸ் மைதானம், சுப்பிரமணியம் ரோடு, வெங்கட கிருஷ்ணா ரோடு, தடாகம் ரோடு, பூசாரிபாளையம் ரோடு ஆகிய சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ஊர்வலப்பாதையில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களது வாகனங்களை மேற்படி பாதையில் நிறுத்துவதை தவிர்த்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 191-வது வைகுண்டர் ஆண்டு 24-வது தேர்த்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.

    கோவை,

    கோவை அருகே வரதய்யங்கார்பாளையத்தில் ஆதிமூலப்பதி அய்யா வைகுண்ட சிவபதி உள்ளது. இங்கு 191-வது வைகுண்டர் ஆண்டு 24-வது தேர்த்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 6.30 மணிக்கு நாதஸ்வர வாத்தியம், செண்டை வாத்தியம் முழங்க சிறப்பு பணிவிடையுடன் கொடியேற்றம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து உகப்படிப்பு, அன்னதர்மம், உச்சிபடிப்பு, பணிவிடை, திருஏடு வாசிப்பு, இரவு 7.30 மணிக்கு அய்யா தொட்டியில் வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    23-ந் தேதி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உகப்படிப்பு, அன்னதர்மம், உச்சிப்படிப்பு, ஏடுவாசிப்பு, இரவு 7.30 மணிக்கு அய்யா மயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 24-ந் தேதி இரவு 8 மணிக்கு அன்னவாகனம், 25-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொட்டில் வாகனம், 26-ந் தேதி இரவு 7.30 மணிக்கு பூஞ்சரப்ப வாகனம், 27-ந் தேதி சர்ப்ப வாகனம், 28-ந் தேதி இரவு 8.30 மணிக்கு கருடவாகனம் ஆகிய வாகனங்களில் அய்யா எழுந்தருளி பதிவலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அய்யா வெள்ளைக் குதிரை வாகனம் 30-ந் தேதி இரவு 9.30 மணிக்கு ஆஞ்சநேயர் வாகனம், அடுத்த மாதம் (அக்டோபர் 1-ந் தேதி) இரவு இந்திர வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதிவலம் வருதல் நடைபெறுகிறது.

    2-ந் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.

    • தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
    • பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 73).

    இவரது மனைவி ஜோதிலட்சுமி (60). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பழனிவேலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த ஜோதிலட்சுமி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு சின்னசாமி கம்பெனியில் மது குடித்து விட்டு பிரச்சினை செய்தார்.
    • சின்னசாமி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை,

    கோவை அருகே உள்ள பச்சாப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவர் ஈச்சனாரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காந்திமதி. கூலி வேலை செய்து வருகிறார்.

    கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சின்னசாமி மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர் கம்பெனியில் மது குடித்து விட்டு பிரச்சினை செய்தார்.

    இதனால் கம்பெனி நிர்வாகம் சின்னசாமியை வேலையை வீட்டு நீக்கியது. இதன்காரணமாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சின்னசாமி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினார்.
    • ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    ஆனைமலை அருகே உள்ள வி.கே.புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினார்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதன் கரணமாக மணிகண்டன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று இவர் வேட்டைக்காரன்புதூர்- சரளபதி ரோட்டில் வைத்து விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவில்பாளையம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • முட்புதரில் குழந்தையை மர்மநபர் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கருவலூர் ரோட்டில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி அருகே கவுசிகா நதி செல்கிறது. இந்த நதிக்கரையில் உள்ள முட்புதரில் பிறந்து சில நாட்களேயான ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவர் இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது குழந்தை பிறந்து 2 நாட்கள் இருக்கும் என்பது தெரிய வந்தது. மேலும் குழந்தையின் உடலில் எறும்பு கடித்த காயங்கள் மட்டுமே இருந்தது. வேறு எந்த காயமும் இல்லை.

    பின்னர் கோவில்பாளையம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை முட்புதரில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வீசி சென்றார்களா அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் வீசி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடை களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் குழந்தையை வீசி சென்ற மர்மநபர் வந்து செல்லும் காட்சிகள் எதுவும் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    முட்புதரில் குழந்தையை மர்மநபர் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • என்னை பொறுத்த வரையில் எனக்கும், அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை
    • அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும், எனக்கும் பிரச்சனை இருக்கலாம்

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக வார்த்தைப்போர் நடைபெற்ற வந்தது. இறுதியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார்.

    இதுகுறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், கூட்டணி குறித்து வெளிப்படையில் பேச வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வாய்மொழி உத்தரவிட்டு மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    இந்த நிலையில், இன்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் பாத யாத்திரையை தொடங்க இருக்கிறார்.

    அதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறோம். ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதால் அனைத்து கட்சிகளுக்கும் பாராட்டு

    * ஒரு எம்.பி. 22 லட்சம் மக்களை கையாள்வது எளிதாக விசயம் கிடையாது. மக்கள் தொகையை மட்டுமே வைத்து தொகுதி வரையறை இருக்கக்கூடாது. அதில் பல்வேறு காரணிகள் இருக்க வேண்டும்.

    * என்னை பொறுத்த வரையில் எனக்கும், அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை.

    * தமிழக பா.ஜனதாவுக்கும்- அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை. இதில் தெளிவாக இருக்கிறோம்

    * அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும், எனக்கும் பிரச்சனை இருக்கலாம். ஏனென்றால் அவர்களுடைய பேச்சை வைத்து சொல்கிறேன்.

    * என்.டி.ஏ. கூட்டணியின் முக்கிய புள்ளியே பிரதமர் மோடிதான். அவரை 3-வது முறையாக பிரதமராக்க வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் நோக்கம். இதை அதிமுக ஏற்றுக் கொள்கிறது.

    * மத்தியில் பிரதமர் மோடியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியையும் அறிவிக்க வேண்டும் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதைப்பற்றி தேசிய தலைவர்கள் கூற வேண்டும். நான் யாரையும், எங்கேயும் தவறாக பேசவில்லை.

    * என்னைப் பற்றி வரும் விமர்சனம் மற்றும் கருத்துக்கு பதில் அளிக்கமாட்டேன். ஆனால், என்னுடைய தன்மானத்தை கேள்விக்குறியாக்கும்போது பதில் பேசுவேன். நாளைக்கும் பேசுவேன். நாளைக்கு அடுத்த நாளும் பேசுவேன். அடுத்த வாரமும் பேசுவேன். தன்மாத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்ய நான் இங்கே வரவில்லை. அதில் தெளிவாக இருக்கிறேன். தன்மானம் முக்கியம். அதன்பின்தான் அரசியல். தன்மானம் விசயத்தில் பதில் அளிப்பது என்னுடைய கடமை மட்டுமல்ல. அது உரிமையும் கூட.

    * அவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை. பதில் சொல்லவும் முடியாது. செல்லூர் ராஜூ பேசியதற்கு நான் எப்படி பதில் சொல்வேன். நான் பதில் சொல்ல முடியாது. தேசிய தலைமை, தேசிய தலைவர்கள் சொல்ல வேண்டும்.

    * அதேபோல் அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் பேசியுள்ளனர். அதற்கும் மத்தியில்தான் பதில் சொல்ல வேண்டும். யாரெல்லாம் மோடியை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் அனைவரும் ஒரு மையப்புள்ளியில் இணைய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

    * தமிழகத்தில் தலைவர்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டிற்கு காரணம், ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம் உள்ளது. ஒவ்வொரு கட்சியின் சித்தாந்தமும் வேறுவேறு. அதனால் இதுபோன்ற மோதல் வருவது சகஜம்தான்.

    * அதிமுக கட்சி 1972-ல் உருவான சரித்திரம் வேறு. சனசங்கம் 1950 காலக்கட்டத்தில் உருவான கருத்து வேறு. 1980-ல் பா.ஜனதா கட்சியாக மாறிய சரித்திரம் வேறு. எல்லா பிரச்சனைகளையும், விசயங்களையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    * அறிஞர் அண்ணாவை நான் எங்கேயும் விமர்சித்தது கிடையாது. சனாதன தர்மம் விவகாரத்தில் பா.ஜனதா போன்று அதிமுக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் குரலும், திமுகவின் குரலும் ஒரே குரல்தான். அதில் எந்த மாறுபாடும் இல்லை. காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த சட்டத்தையே, அவர்கள் ஆதரித்து என்று பேசுவதில்லை. திமுக சொன்னால் சரி என்று கேட்டுக்கொள்கிறது.

    *தேசிய கட்சிகள் அனுகக்கூடிய பிரச்சனைகளில் ஒரு விசத்தியாசம் உள்ளது. இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையில் பிரச்சினை இல்லை.

    • விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.
    • பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

    கவுண்டம்பாளையம்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.

    கவுண்டம்பாளையம், உருமாண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், வடமதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பூஜைக்கு பிறகு நேற்று துடியலூர் பஸ் நிறுத்தத்திற்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் அங்கிருந்து சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள குட்டைக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அப்போது பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக துடியலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் புகார் அளித்தார்.

    அதன் பேரில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க பொறுப்பாளர் நந்தகுமார், கோவை மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி துணைத்தலைவி வத்சலா, இளங்கோ, சாஜூ, கிருஷ்ணா மற்றும் பலர் மீது அனுமதியின்றி கூடியது, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், சிலை எடுத்து செல்லப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×