என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகாரிகள் சோதனை
    X

    மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகாரிகள் சோதனை

    • 10 உணவகங்களுக்கு அபராதம்-5 கிலோ இறைச்சி பறிமுதல்
    • அதிகாரிகளின் திடீர் ஆய்வால் உணவக உரிமையாளர்கள் கலக்கம்

    மேட்டுப்பாளையம்,

    நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் சாலையோர துரித உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்ததுடன், அபராதம் விதித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் இந்த சோதனை நடந்தது.

    அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம், காரமடை நகராட்சிகளில் உணவுப்பாதுகாப்பு அலுவலர் ஆறுச்சாமி, மேட்டுப்பாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன், மகாராஜன், காரமடை நகராட்சி சுகாதார ஆய்வா ளர் சீனிவாசன் உள்ளிட்டோர் இணைந்து மேட்டுப் பாளையத்தில் ஊட்டி சாலை, சத்தி சாலைகளில் உள்ள உணவகங்கள், சாலையோர துரித உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது,சில கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகள் பயன்படுத்தியது தெரியவந்தது.

    இதேபோல் காரமடை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உணவகங்களில் உணவு தயாரிக்கும் கூடங்கள், பரிமாறும் இடங்கள், பாத்திரங்களை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் உள்ளிடவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும், மேட்டுப்பாளையம்,காரமடை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவகங்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர். சில கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர்.

    மேட்டுப்பாளையம், காரமடை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர் உடன் இணைந்து நகராட்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாரிகளின் திடீர் ஆய்வால் உணவகங்களின் உரிமையாளர்கள் கலக்கமடைந்தனர்.

    Next Story
    ×