என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் பெண்களை தாக்கி நகை பறிப்பு
- மொபட்டில் வீடு திரும்பியபோது கொள்ளையர்கள் கைவரிசை
- சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை
குனியமுத்தூர்.
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள வி.எஸ். என் கார்டன் பகுதியை சேர்ந்த பிரதீப் மனைவி வனிதா (வயது31).
இவரது மாமியார் கடந்த 3நாட்களாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே வனிதா மாமியாரை அழைத்துக் கொண்டு, மொபட்டில் சுந்தராபுரத்தில் உள்ள பிசியோதெரபி மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவரது மாமியாருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் இரவு 8 மணி அளவில் 2 பேரும் மொபட்டில் வீடு திரும்பினர்.
அப்போது மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பாலம் அருகே, இன்னொரு பைக்கில் வந்த 2 பேர், வனிதாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை மின்னலென பறித்தனர்.அவர்களை வனிதா தடுக்க முயன்ற போது, நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் வனிதாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. மாமியாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சுந்தராபுரம் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து அறிந்த சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






