என் மலர்
கோயம்புத்தூர்
- பெற்றோருடன் சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
- வாலிபரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். கல்லூரியில் படிக்கும் போது எனக்கு நெய்வேலியை சேர்ந்த புவன் கிருஷ்ணன் (வயது 24) என்ற வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 2 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தோம். அப்போது புவன் கிருஷ்ணன் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார்.
அவர் என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் என்னை அவர் திருமணம் செய்ய மறுத்தார். பின்னர் புவன் கிருஷ்ணன் என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.
இது குறித்து நான் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி ஏற்கனவே புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் என்னை திருமணம் செய்வதாக போலீசாரிடம் கூறினார். ஆனால் தற்போது வரை அவர் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார். இது குறித்து நான் எனது பெற்றோருடன் சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
எனவே திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த புவன் கிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த புவன் கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- குரும்பபாளையம் குட்டையில் முதலை நடமாட்டம் தென்பட்டு இருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- முதலையை தேடி பிடித்து அடர்ந்த காட்டுக்குள் உள்ள அணையில் பத்திரமாக விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை:
கோவை காரமடை அடுத்த பெள்ளாதி பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய குளம் அமைந்து உள்ளது. இது 100 ஏக்கர் பரப்பளவு உடையது. சுமார் 30 அடி உயரம் கொண்டது.
கட்டாஞ்சிமலை, மருதூர், திம்மம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், ஏழுஎருமைப்பள்ளம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் இருந்து பெள்ளாதி குளத்துக்கு நீர்வரத்து உள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. எனவே அந்த பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன்காரணமாக பெள்ளாதி குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து தற்போது ஒட்டுமொத்த நீர்நிலையும் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அங்கு தேங்கும் உபரிநீர் தண்ணீர் மறுகால் பாய்ந்து குரும்பப்பாளையம் குட்டைக்கு செல்கிறது.
இந்த நிலையில் குரும்ப பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று குளக்கரைக்கு சென்றனர்.
அப்போது அங்கு உள்ள ஒரு பாறையில் பெரிய முதலை சாவகாசமாக படுத்திருந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் குரும்பபாளையம் குட்டையோரத்தில் கிடந்த முதலையை செல்போனில் படம் பிடித்தனர்.
அப்போது அது திடீரென தலையை தூக்கி பார்த்தது. பின்னர் பாறையில் இருந்து வெளியேறி தண்ணீருக்குள் சென்று விட்டது. அங்கு தற்போது நீந்தியபடி குளத்தை சுற்றி வருகிறது.
மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காட்டு வெள்ளம் குரும்பபாளையம் குட்டைக்கு வருகிறது. எனவே காட்டுக்குள் பதுங்கியிருந்த முதலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மேற்கண்ட குட்டைக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குரும்பபாளையம் குட்டையில் முதலை நடமாட்டம் தென்பட்டு இருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் கடும் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.
குரும்பபாளையம் குளத்தில் பதுங்கி நிற்கும் முதலையை தேடி பிடித்து அடர்ந்த காட்டுக்குள் உள்ள அணையில் பத்திரமாக விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- இந்தியா கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி மேலும் முயற்சி செய்ய வேண்டும்.
- தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது.
கோவை:
கோவை குனியமுத்தூரில் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்தது.
பின்னர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி சார்பில் பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் கூட்டங்களை நடத்தி பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர்.
இந்தியா கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி மேலும் முயற்சி செய்ய வேண்டும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
2019 பாராளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்தது. ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடக் கூடிய வாய்ப்பை தரக்கோரி தி.மு.க.விடம் கோரிக்கை வைக்க நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.
நீண்ட காலமாக ஜெயிலில் உள்ள 49 பேரில் 20 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு தமிழக அரசு கடந்த ஆகஸ்டு 24-ந் தேதியே பரிந்துரைத்தது. ஆனால் 3 மாதங்களை கடந்தும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே கவர்னர் மீது தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதன் முதல்கட்ட விசாரணையின் போது சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள், கவர்னர்களுக்கு பல்வேறு செய்திகளை எடுத்துரைத்திருக்கிறார்கள். தி.மு.க. அரசு சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு வகையான நன்மைகள் செய்வதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். தொடர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
வழிபாட்டு தலங்களை பாதுகாக்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் டிசம்பர் 6-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுமார் 1.30 மணி நேர போராட்டத்துக்கு பின் 8.45 மணிக்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
- இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுண்டம்பாளையம்,
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள அசோக்நகரில் தனியார் ஒர்க்ஷாப் ஒன்று உள்ளது. இந்த ஒர்க்ஷாப்பில் 4 சக்கர வாகனங்களுக்கான டிங்கரிங் மற்றும் பெயிண்டிங் வேலைகள் செய்து கொடுக்கப்பட்டு வந்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒர்க் ஷாப்புக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் ஒர்க்ஷாப் மூடியே கிடந்தது.
இந்தநிலையில் இன்று காலை ஒர்க்ஷாப்பில் இருந்து திடீரென புகை வந்தது. நேரம் ஆக, ஆக அங்கிருந்து வெளியேறிய புகை அந்த பகுதி முழுவதையும் புகை மூட்டமாக்கியது.
இதுபற்றி அந்த பகுதியினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்றனர்.
ஒர்க்ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 கார்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. காலை 7.15 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் பணியை தொடங்கி தீயை அணைக்க போராடினர். சுமார் 1.30 மணி நேர போராட்டத்துக்கு பின் 8.45 மணிக்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருந்தாலும் அங்கு நின்ற 14 கார்களும் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு தீப்பிடித்ததா அல்லது பட்டாசு எதாவது பறந்து தீப்பிடிக்க காரணமாக அமைந்ததா என்பது பற்றி போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
- கோவர்தன் கீழே கிடந்த கல்லை எடுத்து செல்வகுமாரை தாக்கியுள்ளார்.
- உடனடியாக துடியலூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோவை.
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (38), இவர் தனது குழந்தைகளுடன் வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்து கொண்டிருந்தார்.
குழந்தைகள் பட்டாசு வைப்பதை பார்த்து கொண்டிருக்கும் போது திடீரென குடிபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த கோவர்தன் மற்றும் மதி என இருவரும் குழந்தைகள் பட்டாசு வைத்த இடத்தில் வண்டியை நிறுத்தினார்கள்.
இதனால் செல்வகுமார் இரண்டு பேரிடமும் கேள்வி கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில் கோவர்தன் கீழே கிடந்த கல்லை எடுத்து செல்வகுமாரை தாக்கியுள்ளார். மேலும் வீட்டிற்கு முன்புறம் உள்ள கூரையை உடைத்தனர்.
மதியின் நண்பர்கள் நந்தகுமார் லோகேஷ் என இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து செல்வகுமாரிடம தகராறில் ஈடுபட்டனர், அப்போது தடுக்கவந்த தவமணி என்ற பெண்ணின் ஆடையை கிழித்தனர்.
இது குறித்து உடனடியாக துடியலூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து நந்தகுமார், லோகேஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- முடிஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை தெப்பக்குளம் மேடு கல்லாறு எஸ்டேட்டை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 27). சம்பவத்தன்று இவர் உடும்பன் பாறையில் இருந்து ஆனைமுடியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு செல்வதற்காக தேயிலை தோட்டத்தின் வழியாக குடி போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக காட்டெருமை வந்தது. காட்டெருமை கார்த்திக் ராஜாவை துரத்தியது. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் பயந்து ஓடினார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆனை முடி எஸ்டேட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து முடிஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் இளம்பெண் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தீபாவளி பண்டிகைக்காக குழந்தை மற்றும் கணவருடன் அவரது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு அனைவரும் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கினர்.
அப்போது அதிகாலை 4 மணி அளவில் இளம்பெண் தனது 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
இது குறித்து இளம் பெண்ணின் தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த தனது மகளை மீட்டு தரும்படி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
- பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர்.
- மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி.
வடவள்ளி,
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிர மணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. இதை யொட்டி காலை 5 மணிக்கு கோபூஜை நடந்தது. தொடர்ந்து 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 16 வகை வாசனை திரவியங்களால் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.
பின்னர் மலர் அலங்காரத்தில் சிறப்பு தோற்றத்தில் முருகப்பெ ருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல் நடந்தது.
இதையடுத்து திருக் கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். காலை 8 மணி அளவில் சுவாமிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. புதிய யாக சாலை மண்டபத்தில் யாக பூஜை தொடங்கியது. கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப்பெருமானை நினைத்து காப்பு கட்டினர். மதியம் 12 மணிக்கு உச்சிக் கால பூஜை நடந்தது.
கந்த சஷ்டி விழாவை யொட்டி வருகிற 19-ந்தேதி வரை தினமும் காலையிலும், மாலையிலும் யாக சாலை பூஜை மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுகிறது.
18-ந்தேதி மதியம் 3 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், சூரபத்மனை சுவாமி வதம் செய்யும் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. மறுநாள் 19-ந்தேதி சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானை திருக்க ல்யா ணம் திருக்க ல்யாண மண்ட பத்தில் நடக்கிறது.
கந்தசஷ்டி விழா ஏற்பாடு களை மருத மலை கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் ஜெயக்குமார், அறங்காவலர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜ், சுகன்யா ராஜரத்தினம் மற்றும் கோவில் துணை ஆணையர் ஹர்சினி ஆகியோர் செய்து வருகின்றனர்.
மருதமலை அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ரூ.3.5 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது.
இதன் காரணமாக கடந்த மாதம் 9-ந் தேதி முதல் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கோவில் பஸ் உள்பட எந்த வாக னங்களும் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக பக்தர்கள் படிக்கட்டு வழியாகவே மட்டுமே கோவிலுக்கு சென்று வந்தனர்.
தற்போது சாலைப்பணிகள் முடிவடைந்து விட்டன. மேலும் இன்று கந்தசஷ்டி விழாவும் தொடங்கியது. இதன்காரணமாக மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்கள் உற்சாகத்துடன் வாகனங்களில் சென்று முருகனை வழிபட்டு வந்தனர்.
- நேற்று தொடர்ந்து 3 நாட்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
- சுற்றுலா பயணிகள் அருவியில் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை, கவியருவி, டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்க ளுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலாபயணிகள் வருகை அதிகளவு உள்ளது.
இதில் ஆழியாருக்கு உள்ளூர் சுற்று வட்டார பகுதியிலிருந்தும் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், பழனி, கேரள உள்பட வெளியூ ர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அதிலும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும். ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையின் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டு பின், பூங்காவில் சென்று குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 11-ந்தேதியில் இருந்து விடுமுறை என்பதால் ஆழியாரில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது.
நேற்று தொடர்ந்து 3 நாட்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். அங்கு வந்த பயணிகளின் வாகனங்கள் பூங்கா அருகே உள்ள சாலையோரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் அடிக்கடி போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில் 3 நாட்களில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்திருந்தனர் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுபோல் ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு கடந்த 3 வாரமாக வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கடந்த 3 நாட்களாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து கவியருவிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள், அருவியில் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர்.
வெகு நாட்களுக்கு பிறகு கவியருவியில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால், தடை விதிக்கப்பட்ட நவமலை வனப்பகுதிக்கு விதிமீறி பயணிகள் செல்கின்றார்களா என வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- பொள்ளாச்சி, பழனி செல்லும் அரசு பஸ்கள் மலுமிச்சம்பட்டி சிக்னல் அருகே அதிவேகமாக வருகின்றன.
- போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி நிறுத்த வைத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து எளிதாக இருக்கும்.
குனியமுத்தூர்,
கோவை பொள்ளாச்சி சாலையில் கற்பகம் கல்லூரி சிக்னலுக்கு அடுத்தபடியாக மலுமிச்சம்பட்டி சிக்னல் அமைந்து உள்ளது. இது நான்கு ரோடுகள் சந்திக்கும் முக்கியமான பகுதி ஆகும். இதில் ஒரு ரோடு கேரளா, இன்னொரு ரோடு செட்டிபாளையம், 3-வது ரோடு கோவை, 4-வது ரோடு பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது.
மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியை சுற்றிலும் ஏராளமான சிறு-சிறு கிராமங்கள் உள்ளன.அந்த பகுதியில் வசிப்பவர்கள் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி மலுமிச்சம்பட்டிக்கு வந்து செல்கின்றனர். அப்போது அவர்கள் சிக்னல் பகுதியில் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால் கோவை-பொள்ளாச்சி செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் செட்டிபாளையம்-மலுமிச்சம்பட்டி செல்லும் வாகனங்கள் ஆகியவை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் எண்ணற்ற பேக்கரி மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன.
அந்த கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களும் தங்களின் வாகனங்களை அப்படி-அப்படியே நிறுத்திவிட்டு செல்வதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று உரசும் நிலையில் செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் தினமும் சிறு-சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-
மலுமிச்சம்பட்டி சிக்னலுக்கு எதிரில் புறக்காவல் நிலையம் உள்ளது. ஆனால் அவர்கள் இந்த வாகனங்களை கண்டுகொள்வதில்லை. போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி நிறுத்த வைத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து எளிதாக இருக்கும்.
மேலும் அங்கு ஒருசில நேரங்களில் டபுள்பார்க்கிங் போடும் வாய்ப்பு ஏற்படுவதால் வாகனத்தை எடுக்க முடியாமல் ஒருசிலர் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும் மற்ற வாகனஓட்டிகளிடம் வாக்குவாதம் செய்யும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி, பழனி செல்லும் அரசு பஸ்கள் மலுமிச்சம்பட்டி சிக்னல் அருகே அதிவேகமாக வருகின்றன. அப்போது அவை தாறுமாறாக நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் வகையில் ஏர்ஹாரன் ஒலி எழுப்புகின்றனர். இதனால் அந்த பகுதியில் எப்போதும் நாராசமான ஒலிகளை கேட்க முடிகிறது.
எனவே போக்குவரத்து போலீசார் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில் இருசக்கர வாகனத்தை முறைப்படுத்தி நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது தான் அந்த பகுதியில் போக்குவரத்து சீராகும். பிறருக்கும் இடையூறு இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சிறுமியின் தாய் இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
- வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.
கோவை,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவருடன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த 12-ந் தேதி சிறுமியும், அவரது தாயும் ஆடுகளை மேய்க்க சென்றனர். அப்போது சிறுமி தனது தாயிடம் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். சிறுமி வீட்டிற்கு நடந்து செல்வதை பார்த்த வாலிபர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லை, வா பேசிக்கொண்டு இருக்கலாம் என கூறி சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அப்போது அவர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2 முறை வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் சிறுமி இல்லை.
அவரை தேடி சென்ற போது சிறுமி வாலிபரின் வீட்டிற்குள் இருந்து அழுது கொண்டே வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் தனது மகளிடம் என்ன நடந்தது என கேட்டார். அப்போது வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஜாலியாக இருந்து விட்டு பின்னர் திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறி கதறி அழுதார்.
இதனை கேட்ட அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- ஸ்டேன் மோர் எஸ்டேட் பகுதியில் கடந்த 2 நாட்களாக 17 காட்டு யானைகள் சுற்றி வந்தது.
- வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஸ்டேன் மோர் எஸ்டேட் பகுதியில் கடந்த 2 நாட்களாக 17 காட்டு யானைகள் சுற்றி வந்தது.
இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சுந்தர்ராஜ் என்பவரின் வீட்டின் ஜன்னல் கதவு, சுவர் போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தின.
குட்டியானை ஒன்று வீட்டிற்குள் சென்று சமையல் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு மற்றும் சமையல் பாத்திரங்களை வெளியே வீசி எறிந்தது. தீபாவளி நாள் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருந்தனர்.
இதனால் உயிர் சேதம் இன்றி அவர்கள் தப்பினர். அருகில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து வால் பாறை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டினர்.
காட்டு யானைகள் வீட்டை உடைத்த விவரம் அறிந்து வீட்டின் உரிமையாளர்கள் வந்து பார்த்து வேதனை அடைந்தனர். இச்சம்பவம் அறிந்த வார்டு உறுப்பினர் பாஸ்கர் நேரில் வந்து வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் தி.மு.க. நகர செயலாளர் சுதாகர், நகர மன்ற துணை தலைவர் செந்தில்குமார், வெங்கடேஷ், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
மேலும் வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






