என் மலர்
சென்னை
- தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையங்கள் உள்ளன.
- ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, ஆவின் பொருட்கள் சிறிய கிராமங்களில் விற்பனை செய்ய முடியாத சூழல் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையங்கள் உள்ளன. இந்த வருடம் அதிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது.
அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்க மக்கள் ஆவின் நெய்யை தான் விரும்புகிறார்கள். ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
- பனை மரம் வளர்ப்போர் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
- பனை பொருட்கள் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாங்குநேரியில் பனைப் பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்கப்படுமா? என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-
பனை மரம் வளர்ப்போர் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதுபோல் நாங்குநேரியில் பனை பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பனை கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்க அரசு முன்வருமா? என்று ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, பனையில் இருந்து பதநீர் இறக்கும்போது கலக்க வேண்டியதை கலந்து விட்டால் போதை பொருளாக மாறிவிடும். பனை பொருட்கள் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள் இறக்குவது குறித்து முதலமைச்சர் எதிர்காலத்தில் பரிசீலிப்பார் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய அசோகன், பதநீர் 2 நாட்களை கடந்தால் கள்ளாக மாறுகிறது. இதனால் கள் என்று வழக்கு போடாமல், தற்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வழக்கு போடுகிறார்கள். இதனை கவனத்தில் கொண்டு, வழக்கு போடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, கைது செய்பவர்கள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- ஐதராபாத் மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன.
- போலீசில் சிக்காமல் இருக்க தனித்தனி விமானத்தில் டிக்கெட் எடுத்து இருக்கிறார்கள்.
சென்னையில் இன்று காலை ஒரு மணிநேரத்தில் 7 பெண்களிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் தப்பி சென்ற வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.
இதில் நகை பறித்து தப்பியவர்கள் விமான நிலையம் நோக்கி சென்று இருப்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் பற்றிய விபரங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதில் ஐதராபாத் மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த விமானங்கள் புறப்படுவதை நிறுத்தினர்.
மேலும் விரைந்து சென்று ஐதராபாத் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் ஏறி சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒரு வாலிபரை பிடித்தனர். இதேபோல் மும்பை செல்ல தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்த மற்றொரு வாலிபரையும் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் 2 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் நகை பறிப்பில் ஈடுபட்டு விட்டு விமானத்தில் தப்பி செல்ல முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள். மேலும் போலீசில் சிக்காமல் இருக்க தனித்தனி விமானத்தில் டிக்கெட் எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் இதுபோல் பலமுறை வந்து நகை பறிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் அவர்களுடன் மேலும் சிலரும் சேர்ந்து இந்த நகைபறிப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள அவர்களது கூட்டாளிகள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இன்று நடைபெற்ற நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 வடமாநில வாலிபர்கள் பிடிபட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
விசாரணைக்கு பின்னரே அவர்களுடன் தொடர்பில் உள்ள கொள்ளைகும்பல் மற்றும் இது போல் அவர்கள் ஏற்கனவே நகைபறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா? என்பது தெரிய வரும் என்றனர். சென்னையில் நகை பறித்து விட்டு விமானத்தில் தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்கள் பிடிபட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
- குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
தமிழகத்தில் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
தமிழகத்தில் இன்று முதல் 29-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும்/ ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- சமாதானப்படுத்த முயன்ற போலீசாரை மாணவர் அமைப்பினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:
சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நேர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான வாலிபர் நண்பர்களுடன் சேர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி ரத்த காயத்துடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கல்லூரி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ததாக SFI மாணவர் அமைப்பினர் புகார் கூறியுள்ளனர். இதனிடையே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த SFI மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்த முயன்ற போலீசாரை மாணவர் அமைப்பினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஜனநாயகத்தில் இத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
- யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னையில் யு டியூபர் சவுக்கு சங்கரின் இல்லம் தூய்மைப்பணியாளர்கள் போர்வையில் வந்தவர்களால் அருவருக்கத்தக்க வகையில் தாக்கப்பட்டிருப்பதும், அவரது வயது முதிர்ந்த தாயார் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதும் கடுமையான கண்டிக்கத்தக்கவை.
ஜனநாயகத்தில் இத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களும், இதற்கு பின்னணியில் உள்ளவர்களும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற திமுகவின் மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
- ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்பது, தமிழகம் முழுவதும், முதலமைச்சர் குடும்பம் உட்பட திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது போல இந்தித் திணிப்பு அல்ல. இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான்.
இந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில், இந்தித் திணிப்பு என்று மீண்டும் கூறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மும்மொழிக் கல்வியை இந்தித் திணிப்பு என்று திரித்துக் கூறுவதன் மூலம், பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற திமுகவின் மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் அவர்.
இது தவிர, பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், மொழி வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, கடந்த 2024 -25 நிதியாண்டில் ரூ. 11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், 2025 - 26 நிதியாண்டிற்கு, ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
திமுக அரசு, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கும் என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து, முதலமைச்சர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- 3 வகை பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மட்டும் தான் புதிதாக அறிவிக்கப்பட்டவையாகும்.
- அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2025-ம் ஆண்டில் மொத்தம் 9 வகையான தேர்வுகளை நடத்தப்போவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அவற்றில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட 3 தேர்வுகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தவை. அவற்றில் இரு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்ப நடைமுறைகளும் தொடங்கி விட்டன. 1915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 1205 பட்டதாரி ஆசிரியர்கள், 51 வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகிய 3 வகை பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மட்டும் தான் புதிதாக அறிவிக்கப்பட்டவையாகும்.
தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் ஒரே ஒரு இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. கடந்த ஆண்டில் நடத்தப்பட்டத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் இன்னும் பணி வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இனியும் ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என்பதால் எதற்காக தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என நினைத்து விட்டதால் தான் நான்காவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை தி.மு.க. அரசு நடத்தவில்லையோ? என எண்ணத் தோன்றுகிறது.
அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் துணைத்தலைவர் பேசும் போது இருமொழிக் கொள்கை விவகாரத்தில் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
- இருமொழி என்பது நமது கொள்கை மட்டும் அல்ல, நமது வழிக்கொள்கையும் விழிக்கொள்கையும் அதுதான்.
சென்னை:
தமிழக சட்டசபையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யாரை சந்தித்தாலும் இருமொழிக்கொள்கையை வலியுறுத்த வேண்டும்.
* பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் துணைத்தலைவர் பேசும் போது இருமொழிக் கொள்கை விவகாரத்தில் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
* இருமொழி என்பது நமது கொள்கை மட்டும் அல்ல, நமது வழிக்கொள்கையும் விழிக்கொள்கையும் அதுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு பெண் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- கட்சி தலைவர் விஜய் செல்வதற்கென தனி வழி அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
கட்சி தொடங்கி நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து கொடுக்க விஜய் உத்தர விட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் விஜய் உத்தரவுபடி இரவு பகல் பாராமல் செய்து வருகிறார்.
பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். மாவட்டத்திற்கு 15 பேர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள் என 5 பேரும் 10 பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.
இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு பெண் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க வரும் அனைவருக்கும் நேற்று கியூ.ஆர். கோர்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வழங்கினார். இதற்கான பணிகள் நேற்று நள்ளிரவு வரை நடந்தது.
கூட்ட அரங்குக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அடையாள அட்டை கொடுக்கப்பட்டவர்கள் அதில் உள்ள கியூ.ஆர். கோர்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே அரங்கிற்குள் செல்ல முடியும்.
கூட்ட அரங்கம் முற்றிலும் துபாய் பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.
பெண்களுக்கு என தனி இடவசதி மற்றும் அடிப்படை வசதி அரங்கத்தில் செய்யப்படுகிறது. கூட்டத்திற்கு வருவதற்கும், செல்வதற்கும் தனித்தனி நுழைவு வாயில்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. கட்சி தலைவர் விஜய் செல்வதற்கென தனி வழி அமைக்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழக மக்கள் பிரச்சனை பற்றியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.
பொதுக்குழு நடைபெறுவதை தொடர்ந்து கூட்டம் நடைபெறும் திருவான்மியூர் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் இப்போதே களை கட்ட தொடங்கி இருக்கிறது. சுவர் விளம் பரங்கள், பேனர்கள், ராட்சத வரவேற்பு பலூன்கள் என பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்தில் விஜய்யின் அரசியல் அதிரடி பேச்சு பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. கூட்டத்திற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த உற்சாகம் எழுந்து உள்ளது.
- தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை.
- இந்தி மொழி திணிப்பு மூலம் ஒரு இனத்தை ஆதிக்கம் செய்ய நினைக்கின்றனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* இருமொழிக்கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க.வை தவிர்த்து அனைத்து கட்சிகளும் தங்களது உணர்வை வெளிப்படுத்தின.
* தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை.
* தமிழகத்துக்கு உரிய நிதியை தராவிட்டாலும் இனமானத்தை அடகு வைக்கும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல.
* இது பண பிரச்னை அல்ல இன பிரச்னை.
* இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும். பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம் என உறுதியாக உள்ளோம்.
* இந்தி மொழியால் தான் பணம் வரும் என்று கூறினால் அந்த பணமே வேண்டாம் என தீர்மானிப்போம்.
* திராவிட ஆட்சியில் தமிழ் மொழி காப்பதே இரு கண்கள்.
* யார் எந்த மொழியை கற்கவும் நாம் தடையாக இருந்ததில்லை. எந்த மொழிக்கும் எதிரானவர் அல்ல நாம்.
* இன்னொரு மொழியை திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்றுவிடும் என்பதை நாம் அறிவோம்.
* இந்தி மொழி திணிப்பு மூலம் ஒரு இனத்தை ஆதிக்கம் செய்ய நினைக்கின்றனர்.
* மாநிலங்களை தங்கள் கொத்தடிமைகளாக நினைப்பதாலேயே மொழியை திணிக்கிறது.
* மாநில உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.
* மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமையை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும் என்றார்.
- கர்நாடகம், பீகார், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து 5-வது மாநிலமாக ஜார்க்கண்ட் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது.
- இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெற்று நாடகங்களை மட்டுமே நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெலுங்கானா மாநிலத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அடுத்த வாரம் தொடங்கவுள்ள புதிய நிதியாண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.
கர்நாடகம், பீகார், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஐந்தாவது மாநிலமாக ஜார்க்கண்ட் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது.
ஆந்திரா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெற்று நாடகங்களை மட்டுமே நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. எனவே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






