என் மலர்
சென்னை
- கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
- வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும்.
இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.
அஜித்குமார் காவல் மரண வழக்கில் காவல் துறையினரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போலவே இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.
இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 17-ந்தேதி வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும்.
- விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க அரசு உத்தரவிட்டுஉள்ளது. மாற்றுத்திறனாளிகள், தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சியில் பதவிகளை பெறும் வகையில், சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, தற்போது அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், தலா ஒரு தகுதியான மாற்றுத்திறனாளி நபருக்கு, நியமன கவுன்சிலர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைய இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு https://chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி/நகராட்சி மன்றத்திற்கு https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்றத்திற்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் இன்று முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வருகிற 17-ந்தேதி வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- சாஸ்திரி நகர், காமராஜர் சாலை, வால்மீகி தெரு, ஸ்ரீராம்நகர், குமரகுரு 1 முதல் 4-வது தெரு வரை.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (02.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பெசன்ட்நகர் : சாஸ்திரி நகர், காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலையில் ஒரு பகுதி, லட்சுமிபுரம், ஸ்ரீராம்நகர், குமரகுரு 1 முதல் 4-வது தெரு வரை.
ஆலந்தூர் : எம்கேஎன் ரோடு, டிவிஏசி காவலர் குடியிருப்புகள், குப்புசாமி காலனி, புதுபேட் தெரு, ஏகாம்பர தபேதர் தெரு, ரெயில்வே ஸ்டேஷன் சாலை, அழகிரி சாலை, வேதகிரி தெரு, மண்டி தெரு, ஜின்னா தெரு, முத்தம்ஜி தெரு, காஜி சாஹிப் தெரு, இப்ராஹிம் தெரு, அஜர்கானா தெரு, லஷ்கர் தெரு.
பல்லாவரம்: கடப்பேரி அன்னை இந்திரா நகர், நியூ காலனி 12 முதல் 14-வது மெயின் ரோடு, 6-வது குறுக்கு தெரு, உமயாள்புரம், சாரதி தெரு, தபால் அலுவலகம், பழைய டிரங்க் சாலை, பல்லாவரம் பஸ் நிலையம், ஜனதா தியேட்டர், சீனிவாச பெருமாள் கோவில் தெரு, ரங்கநாதன் தெரு, பழைய சன்னதி ரோடு, சர்ச் ரோடு, காவலர் குடியிருப்புகள், ஆர்பி ரோடு தெரேசா பள்ளி, பிள்ளையார் கோவில் தெரு, ஐஜி சாலை, கண்ணபிரான் தெரு, யூனியன் கார்பைடு காலனி, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, நடேசன் சாலை, க்ரஷ் தெரு, பல்லாவரம் கிழக்கு நகரின் பகுதி.
சோழிங்கநல்லூர் : மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி தெரு 1 முதல் 7, விசாலாட்சி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விக்னராஜபுரம் 6வது தெரு, கோபால்புரம் நகர், விக்னராஜபுரம் மோஹி புளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்தசாரதி நகர், கோவிலம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, காந்தி நகர், சத்யா நகர், கொளத்தூர்.
அம்பத்தூர் : அடையாளம்பட்டு, கேஜி அபார்ட்மெண்ட்ஸ்.
- தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கியது.
- அரசு அங்கீகரித்த பிற அடையாள ஆவணங்களும் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரெயில் முன்பதிவு டிக்கெட்டை பெறுவதற்கு பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குகளால் தட்கல் முன்பதிவு டிக்கெட் பெறுவதில் பயணிகள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தனர். இதைத்தொடர்ந்து சுமார் 2½ கோடி போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குளை ரெயில்வே நிர்வாகம் நீக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
அதேவேளையில், ஜூலை 1-ந் தேதி முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைக்க ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியது.
இந்த நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் செயலியில், ஆதார் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே இன்று முதல் இருந்து 'தட்கல்' டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் மட்டுமின்றி, அரசு அங்கீகரித்த பிற அடையாள ஆவணங்களும் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
- உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான ஞானம் கிடைக்க வாழ்த்துகிறேன்.
- பிற்போக்குத்தனமான சித்தாந்தங்களுக்கு எதிராக எப்போதும் வலுவாக நிற்க வாழ்த்துகிறேன்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
வெங்கையா நாயுடு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான ஞானம் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்,
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
வி.பி.சிங் அவர்களின் மண்ணில் சமூகநீதியின் ஜோதியை முன்னெடுத்துச் சென்று, முற்போக்கான அரசியலுக்கு வழிவகுத்து, உங்கள் தந்தை முலாயம் சிங் அவர்களின் பெருமைமிக்க மரபில், பிற்போக்குத்தனமான சித்தாந்தங்களுக்கு எதிராக எப்போதும் வலுவாக நிற்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- வருகிற 6-ந்தேதி தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
சென்னை :
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 6-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், நெல்லை, தென்காசி, குமரி, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- ஜூலை மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
அந்த வகையில், ஜூலை மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 57 ரூபாய் 5௦காசுகள் குறைந்து ரூ.1,823.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868-க்கு விற்பனையாகிறது.
- மின்சார ஒழுங்கு வாரியம் ஆணையம் நிர்ணயத்துள்ள 3.16 சதவீதம் மிகாமல் கட்டண உயர்வு.
- 2.83 கோடி மின்நுகர்வோருக்கு எந்தவிதமான கட்டண உயர்வும் இல்லை.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி தமிழ்நாட்டில் அனைத்து வீட்டு மின்இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறுவணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. இதன்மூலம் 2.83 கோடி மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும் தற்போது உள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும்.
மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்பொழுது மின்கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்லாண்டு மின்கட்டண உயர்வை அறிவித்து ஆண்டுதோறும் நுகர்வோர் விலைக்குறியீட்டு அடிப்படையில் மின்நுகர்வோர்களுக்கு மின்கட்டணத்தை மாற்றி அமைத்து ஆணை வெளியிடுகிறது.
அதன்படி 2025-26 ஆண்டிற்கு ஜூலை-1ஆம் தேதி முதல் வரக்கூடிய மின்கட்டண மாற்றங்களில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அனைத்து, 2.42 கோடி வீட்டு நுகர்வோர்களுக்கு ஏற்படக்கூடிய மின்கட்டண மாற்றங்களை அரசே ஏற்று அதற்கான மானியத்தொகையை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்று உத்தரவிட்டதை ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சரால் அறிக்கையாக வெளியிடப்பட்டது.
மேலும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.374.89 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது.
வீட்டு மின் நுகர்வோர்களுக்கு, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்த முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயனடைவார்கள்.
தற்பொழுது விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுதலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலை ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண சலுகைகள்:-
* இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை (Energy charges) தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.51.40 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 34 லட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள்
* 50 கிலோவாட் வரை ஒப்பந்த பளு (sanctioned load) கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு (LT (III) B Industries) உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.76.35 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2.81 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
* குடிசை மற்றும் குறு தொழில்களுக்கு (LT (III) A(1)– Cottage and Micro Industries) உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.9.56 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2.70 லட்சம் குடிசை மற்றும் குறு தொழில் மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
* விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மேலும் 1001 யூனிட்டுகளுக்கு மேல் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.7.64 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 1.65 லட்சம் விசைத்தறி நுகர்வோர்களும் பயனடைவார்கள்.
எனவே 2025-26 ஆம் ஆண்டின் மின்கட்டண உயர்வின்படி தமிழ்நாட்டில் சுமார் 2.83 கோடி மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லாமல் பயனடைவார்கள். இதனால் தமிழக அரசிற்கு ஆண்டொன்றுக்கு ரூ.519.84 கோடி கூடுதல் செலவாகும். இந்த மானியத் தொகையினை தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும்.
இது தவிர பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு 3.16%-க்கு மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா முழுவதும் நாளை முதல் தொடர்வண்டிக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- இந்தக் கட்டண உயர்வு பெரிதல்ல. ஆனாலும் இந்த சுமை கூட மக்கள் மீது சுமத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியா முழுவதும் நாளை முதல் தொடர்வண்டிக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புறநகர் தொடர்வண்டிகளிலும், சாதாரண தொடர்வண்டிகளில் 500 கி.மீ வரையிலும் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், விரைவு வண்டிகளில் சாதாரண வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதமும், குளிரூட்டி வசதி கொண்ட தொடர்வண்டிகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்குள் அதிகபட்ச பயணதூரமான சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சாதாரண தொடர்வண்டிகளில் பயணம் செய்ய 5 ரூபாயும், விரைவு வண்டிகளின் சாதாரண வகுப்புகளில் பயணிக்க 8 ரூபாயும், குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க 15 ரூபாயும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒப்பீட்டளவில் இந்தக் கட்டண உயர்வு பெரிதல்ல. ஆனாலும் இந்த சுமை கூட மக்கள் மீது சுமத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
மேலும் இந்தக் கட்டண உயர்வின் மூலம் தொடர்வண்டித்துறைக்கு கிடைக்கும் கூடுதல் வருமானமான ரூ.1,100 கோடி என்பது, நடப்பாண்டில் பயணியர் போக்குவரத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானமான ரூ. 92,800 கோடியில் 1.18% மட்டும் தான். இதை வேறு ஆதாரங்களின் மூலம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் திரட்ட முடியும். எனவே, தொடர்வண்டிக் கட்டண உயர்வை ரயில்வே வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- 2021-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ 297 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க. கடந்த மாதத்தில் எட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைச் சார்ந்த 5,920 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி கரும்பு கிரயத் தொகை வழங்கப்பட்டது. மேலும், கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349/-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, 2021-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, முன்எப்போதும் இல்லாத அளவிற்கு. 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2024-25 அரவைப்பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை மற்றும் 16 தனியார் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.349/- சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது, கரும்பிற்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349/- வழங்கிடும் வகையில், ரூ.297/-கோடி நிதியினை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, 2024-25 அரவைப் பருவத்தில், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். இந்த சிறப்பு ஊக்கத்தொகை தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பு ஊக்கத்தொகையாக 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16/-கோடி வழங்கப்பட்டுள்ளது.
2024-25 அரவைப்பருவத்திற்கு கரும்பு வழங்கிய சுமார் 1,30,000 விவசாயிகளுடன் சேர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகள் ரூ.1.145.12 கோடி சிறப்பு ஊக்கத்தொகை பெற்று பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், வரலாற்றில் முதன்முறையாக சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரய நிலுவைத் தொகை வழங்க சுமார் 1,945.25/- கோடி வழங்கப்பட்டுள்ளது.
- குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.
- போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.
"போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்" என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
- கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை.
- காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வருகின்ற அனைத்து பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.
தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ததோடு, காணொலிக் காட்சி வாயிலாக மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டல காவல்துறை தலைவர்களுடனும் ஆய்வு மேற்கொண்டார்,
அப்போது, முதலமைச்சர் காவல் துறை மண்டல வாரியாக ஆய்வு மேற்கொண்டு, குற்றங்கள் குறித்தும், அவைகள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததோடு, நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார்.
காணொலி ஆய்வில் கலந்து கொண்ட மண்டல காவல்துறை தலைவர்கள் தங்கள் மண்டலங்களில் குற்றத்தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் குறித்து விளக்கி கூறினார்கள்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, பொது அமைதியை மிக கவனமாக கையாண்டு வருவதையும், இவ்வரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் போன்றவை அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டு, அத்துடன் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ்கின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது என்றால் அதற்கு காவல்துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாய் விளங்குகின்றது என்று குறிப்பிட்டார்.
மேலும், காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வருகின்ற அனைத்து பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொண்டு, அவர்களது புகார்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும், கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சட்டம் ஒழுங்கு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் ஏற்படும்போது தொடர்புடைய காவல்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக ஊடகங்களை சந்தித்து அந்த பிரச்சினை குறித்து தெளிவாக விளக்கம் அளித்து, வதந்திகள் பரவுவதை தடுத்திடவும், காவல்துறையின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தவும் அது உதவும் என்றும் சுட்டிக்காட்டினார்.
சாதி மற்றும் சமய பூசல்களில் ஈடுபடுவர்கள், வதந்தி மற்றும் வெறுப்புணர்வை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ஆகியோர் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்திட அறிவுறுத்தினார்.
பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில், சமுதாயத்தின் பங்களிப்பை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றச்செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், காவல் துறையினர் முழுமையாக செயல்பட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில். காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






