என் மலர்
செங்கல்பட்டு
- மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் விவேகானந்தர்.
- விவேகானந்தன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் விவேகானந்தர் (வயது 55), இவர் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், மணிபர்சை பறித்துச்சென்றனர்.
இதுகுறித்து விவேகானந்தன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக மறைமலைநகர் சாமியார் கேட் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (வயது25), தானீஷ் (29) ஆகியோரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் கட்டப்பட்டது.
- அணுமின் நிலைய இயக்குநர் எஸ்.பீ.ஷெல்கே திறந்து வைத்தார்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில், அப்பகுதி நகரியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 1.11 கோடி ரூபாய் செலவில் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. அதை மாணவர்களின் பயன்பாட்டிற்கு அணுமின் நிலைய இயக்குநர் எஸ்.பீ.ஷெல்கே திறந்து வைத்தார்.
விழாவில் புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால், நிலைய கண்காணிப்பாளர் செந்தாமரக்சன், முன்னாள் எம்.எல்.ஏ தனபால், பள்ளி தலைமை ஆசிரியை லலிதா, அணுமின் நிலைய சமூக பொறுப்பு குழுவினர், ஆசிரியர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- குடிநீர், கழிவுநீர் வடிகால் வரிகளை கட்டாமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.
- போலீசார் பாதுகாப்புடன் சப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் வணிகம் சார்ந்த விடுதிகள், ரிசார்ட், ஹோட்டல், கடைகள் ஏராளமாக உள்ளது., சுற்றுலா பயணிகள் மூலம் வருவாய் வரும் இவர்களில் சிலர் நீண்ட நாட்களாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு கட்ட வேண்டிய குடிநீர், கழிவுநீர் வடிகால் வரிகளை கட்டாமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.
இதனால் பேரூராட்சி நிர்வாகம் இன்று அதிரடியாக வரும் 15ம் தேதிக்குள் கட்ட வேண்டும்., இல்லை எனில் இணைப்புகள் துண்டிப்பதுடன், போலீசார் பாதுகாப்புடன் சப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறார்கள். வீடுகளுக்கும் இதே அறிவிப்பை கூறியுள்ளனர்.
- விபத்து நடந்ததும் காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
- குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர். தனியார் நிறுவன ஊழியர். இவர் சிவகாசிக்கு சென்று விட்டு மனைவி குழந்தையுடன் காரில் இன்று காலை ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை-காந்தி சாலை சந்திப்பில் வந்தபோது சிக்னல் போடப்பட்டு இருந்தது. வரிசையாக வாகனங்கள் நின்று கொண்டு இருந்தன.
அப்போது ஸ்ரீதர் வேகமாக ஒட்டிவந்த கார் சிக்னலில் நிற்காமல் முன்னால் நின்றிருந்த கார் மற்றும் அதற்கு முன்னால் நின்றிருந்த தனியார் சினிமா நிறுவனத்திற்கு சொந்தமான வேன் மீது அடுத்தடுத்து மோதியது.
அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் மீட்கும் பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீதர் ஓட்டி வந்த காரின் முன் பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது.
விபத்து நடந்ததும் காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் அவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனடியாக அங்கிருந்த போலீசார் அந்த வழியாக சென்ற தண்ணீர் லாரியை மடக்கி தண்ணீர் ஊற்றி காரில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் காரின் முன்பகுதி எரிந்து பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்து காரணமாக தாம்பரம்-குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் பற்றிய தீ அருகில் நின்றிருந்த மற்ற வாகனங்களுக்கு பரவாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சிறுவன் ராஜேஷ் விளையாடிக்கொண்டு இருந்தான்.
- சிறுவனை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த வாணியஞ்சாவடி திருவள்ளுவர் சாலையில் தனியார் விடுதி உள்ளது. இங்கு நேபாளத்தை சேர்ந்த சூரத்பகதூர் (வயது 43) என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (வயது5).
நேற்று மாலை விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சிறுவன் ராஜேஷ் விளையாடிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அவன் மாயமானான். அவனை குடும்பத்தினர் தேடிவந்தனர்.
இந்தநிலையில் தண்ணீர் தொட்டியில், சிறுவன் ராஜேஷ் மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவனை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் ராஜேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பார்வதி கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டு நல்லூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
- சந்தேகம் அடைந்த கோவிந்தசாமி அவர்கள் இருவரையும் சரமாரியாக உருட்டுகட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
வண்டலூர்:
மறைமலைநகர் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. கொத்தனார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பார்வதி கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டு நல்லூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கோவிந்தசாமி தனது மனைவியை சந்திப்பதற்காக அங்கு சென்றார். அப்போது பார்வதியும், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான பாரதிதாசனும் தனியாக இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்தசாமி அவர்கள் இருவரையும் சரமாரியாக உருட்டுகட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பார்வதியும், பாரதிதாசனும் பலத்த காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக கோவிந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.
- அரிசி ஆலையில் போலி மதுபானங்கள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலி மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே உள்ள வட மணிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி ஜெயந்தி. இவர் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.
வடிவேலு, கொங்கறை கிராமத்தில் ஒரத்தி-திண்டிவனம் சாலையில் உள்ள ஒரு அரிசி ஆலையை ஒப்பந்தத்துக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த அரிசி ஆலையில் போலி மதுபானங்கள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு போலீசார் அந்த அரிசி ஆலையில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு போலி மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கு மதுபானம் தயாரிக்க வைத்திருந்த 212 கேன்களில் இருந்த எரி சாராயம், 11 ஆயிரம் பாட்டில் மூடிகள், 20 ஆயிரம் காலிபாட்டில்கள், மதுபாட்டில்களை சீல் வைக்கும் எந்திரங்கள் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக ஊராட்சி தலைவியின் கணவர் வடிவேலு, அவருக்கு உடந்தையாக இருந்த முருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இங்கு தயாரிக்கப்பட்ட போலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலும் கள்ளத்தனமாக கொடுத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். அரிசி ஆலையில் சோதனையின் போது மதுபானை தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து நடந்ததும் தண்ணீர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
திருப்போரூர்:
தாம்பரத்தை அடுத்த வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது27)எலக்ட்ரீசியன்.
நேற்றுஇரவு அவர் தாழம்பூர் கூட்டு ரோட்டில் இருந்து நாவலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அதே சாலையில் சென்றுக் கொண்டிருந்த தண்ணீர் லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த மோட்டர் சைக்கிளில் மோதி பிரவீன் குமார் கிழே விழுந்தார். அந்தநேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி பிரவீன் குமார் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் தாழம்பூர் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து விசாரணைநடத்தினர்.
பலியான பிரவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்ததும் தண்ணீர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- திருமணம் செய்ய பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்ய முடியாது என சலீம் கூறி உள்ளார்.
- சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது சம்பந்தப்பட்ட சலீமுடன் அந்த பெண் சென்றது தெரியவந்தது
செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் கிருஷ்ணவேணி என்பவரது வீட்டின் கதவை இளம்பெண் ஒருவர் தட்டியுள்ளார். தொடர்ந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்களிடமிருந்து போராடி தப்பி வந்ததாகவும் காவல் நிலையத்தில் தன்னை ஒப்படைக்கும் படி கூறி உள்ளார்.
இதனைஅடுத்து சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த கை களத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க பெண் என்பதும், சென்னை சைதாப்பேட்டையில் தங்கி டெலிகாலராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இவருக்கும் உத்திரமேரூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்ய பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்ய முடியாது என சலீம் கூறி உள்ளார். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். அதேபோல நேற்று இரவும், செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்த பெண்ணை சலீம் சாலவாக்கம் அருகே மாம்பாக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே திருமணம் செய்து கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பெண்ணை தாக்கிய சலீம் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதைத்தொடர்ந்து அப்பெண் அருகே இருந்த வீட்டிற்கு சென்று சலீமை காவல்துறையிடம் சிக்க வைக்க கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக நாடகமாடியிருக்கிறார்.
முன்னதாக காவல்துறையினரிடம் தன்னை காரில் நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக பெண் கூறியதால் செங்கல்பட்டு நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பந்தப்பட்ட சலீமுடன் இரு சக்கர வாகனத்தில் அந்த இளம்பெண் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் திவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
- பள்ளியில் இருந்து மாணவி வரும்போது விக்கி அடிக்கடி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று உள்ளார்.
- வீட்டு உரிமையாளரின் மகன் என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
தாம்பரம்:
தாம்பரம் அருகே உள்ள அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக மாணவி மிகவும் சோர்வாக இருந்தார். மேலும் சில நாட்களுக்குமுன்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது.
இதுபற்றி ஆசிரியர்கள் விசாரித்தபோது வீட்டின் உரிமையாளரின் மகன் விக்கி (22) என்பவர் மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்கியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
பள்ளியில் இருந்து மாணவி வரும்போது விக்கி அடிக்கடி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று உள்ளார். வீட்டு உரிமையாளரின் மகன் என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி விக்கி மாணவியுடன் நெருங்கி பழகினார்.
மேலும் மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்று அதே பகுதி யில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். அப்போது மாணவிக்கு குளிர்பானத்தில் போதை பவுடர் கலந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து போதைக்கு மாணவியை அடிமையாக்கி அடிக்கடி அழைத்து சென்று அத்துமீறி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியிடம் அவரது பெற்றோரை தீர்த்து கட்டி விடுவதாகவும் விக்கி மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார்.
கைதான விக்கி ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. அவரது நண்பர் இதற்கு உடந்தையாக இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இளம்பெண்ணும், மலையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர்.
- வாலிபரும், இளம்பெண்ணும் நேற்று இரவு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து மாம்பாக்கம் பகுதிக்கு தனியாக சென்றதாக தெரிகிறது.
செங்கல்பட்டு:
சென்னை சைதாப்பேட்டையில் தங்கி 21 வயது இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் ஆகும்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தன்னை 4 பேர் கும்பல் கற்பழித்துவிட்டதாக அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தார்.
மேலும் இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார் தெரிவித்தார். இதுபற்றி அறிந்ததும் சாலவாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது இளம்பெண் போலீசாரிடம் கூறும்போது, செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை செல்வதற்காக காத்திருந்தேன். அப்போது அங்குவந்த 4 பேர் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்து தப்பி ஓடிவிட்டனர் என்று கூறினார்.
இதையடுத்து போலீசார் இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் மேலும் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக கூறிவருகிறார். இதனால் போலீசார் கற்பழிப்பு குற்றம் நடந்ததா? என்ற முடிவுக்கு வரமுடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
அந்த இளம்பெண்ணும், மலையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர். நேற்று இரவு அவர்கள் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து மாம்பாக்கம் பகுதிக்கு தனியாக சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இளம்பெண் தனது நண்பர் உள்ளிட்ட 4 பேர் கற்பழித்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக சாலவாக்கம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு ரெயில் நிலையம் மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும் இளம்பெண்ணும் தொடர்பில் இருந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் குறித்தும் தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இளம்பெண் எதற்காக செங்கல்பட்டு வந்தார் என்றும் விசாரணை நடக்கிறது.
பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னைக்கு செல்வதற்காக செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த இளம்பெண், 4 பேர் கொண்ட கும்பலால் மகிழுந்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை கடத்தி, பல கிலோமீட்டர் தொலைவுக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறது என்றால், அதற்கு பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பாலியல் வன்கொடுமை செய்தால், மிகக்குறைந்த காலத்தில் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாதது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். பாலியல் குற்ற வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். பொது இடங்களிலும், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அவர்கள் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும்.
31.12.2022 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் 45 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை. விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும், கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்குரிய விண்ணப்ப படிவத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக பெற்றுகொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/downloads/uaApplication.pdf- என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் மேற்படி இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 28-ந் தேதிக்குள் அனைத்து அசல் கல்விசான்றுகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடனும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தன.






