என் மலர்
செங்கல்பட்டு
- கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே போலீசார் பயணிகளின் நடவடிக்கையை கண்காணிப்பார்கள்.
- மொத்தம் 72 போலீசார் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்ற கேட்கப்பட்டு உள்ளனர்.
வண்டலூர்:
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
90 சதவீதத்துக்கு மேல் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் போது கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தின் முன் பகுதியில் மழைநீர் அதிக அளவில் தேங்கிய மழைநீர் வெளியேற கால்வாய் வசதி இல்லாததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தின் முன் பகுதியில் கால்வாய் பணியை முடித்த பின்னர் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கால்வாய் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகின்றன. அப்பகுதியில் கல்வெட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறக்கப்படும் என்று தெரிகிறது. தீபாவளிக்கு முன்பு புதிய பஸ்நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்படும் போது பயணிகள் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு, கண்காணிப்பு கேமிரா பொருத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதனால் புதிய பஸ் நிலைய பகுதியில் புதிதாக நவீன வசதிகளுடன் போலீஸ் நிலையம் அமைய இருக்கிறது. இதற்கான டெண்டரை சி.எம்.டி.ஏ. கோரி உள்ளது.
சுமார் 7,380 சதுர அடி பரப்பளவில் புதிய போலீஸ் நிலையம் அமைய இருக்கிறது. ஒரே இடத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரிவு, கண்காணிப்பு கேமிரா மையம், ஆயுதங்கள் வைப்பு அறை, கட்டுப்பாட்டு அறை, கீழ்தளத்தில் கார்கள் நிறுத்தும் இடம், முதல் உதவி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, மொத்தம் 72 போலீசார் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்ற கேட்கப்பட்டு உள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே போலீசார் பயணிகளின் நடவடிக்கையை கண்காணிப்பார்கள். நவீன வசதியுடன் போலீஸ் நிலையம் அமைய உள்ளது. பஸ் நிலையத்தின் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்.
- ரெயில் புறப்பட்டபோது மாணவர் நேதாஜி பெட்டியில் ஏறியதாக தெரிகிறது.
- நேதாஜியின் இரண்டு கால்களும் முழுவதுமாக நசுங்கி துண்டாகி போனது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் வன்னியர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் நேதாஜி (வயது 19).இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தினசரி கல்லூரிக்கு மதுராந்தகத்தில் இருந்து ரெயிலில் சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேதாஜி இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மதுராந்தகம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது சென்னை நோக்கி செல்லும் விழுப்புரம் பயணிகள் ரெயில்வந்தது.
ரெயில் புறப்பட்டபோது மாணவர் நேதாஜி பெட்டியில் ஏறியதாக தெரிகிறது. அப்போது அவர் கால் தவறி ரெயில் தண்டவாளத்திற்கும் ரெயில் பெட்டிக்கும் இடையே சிக்கிக்கொண்டார்.
இதில் தண்டவாளத்தில் விழுந்த போது அவரது கால்களில் ரெயில் பெட்டியின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இதில் நேதாஜியின் இரண்டு கால்களும் முழுவதுமாக நசுங்கி துண்டாகி போனது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள், மற்றும் ரெயிலில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் நேதாஜியை மீட்டு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் மதுராந்தகம் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- கம்ப்ரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- சீனிவாசன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் ஆட்டோ மொபைல்ஸ் தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. இங்குள்ள கூலிங் செய்யும் கம்ப்ரசர் எந்திரத்தை சர்வீஸ் செய்யும் பணியில் பெருங்களத்தூர், ஆர்.எம்.கே.நகரை சேர்ந்த சீனிவாசன்(46) அதே பகுதியை சேர்ந்த விநாயக மூர்த்தி(40), கூடுவாஞ்சேரி காந்தி நகரை சேர்ந்த பொன்ராஜ்(45) ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கம்ப்ரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சீனிவாசன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனை ரும் பொத்தேரிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசஉதயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.
- திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரியில் மாரியம்மன் கோவில் உள்ளது.
- இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
திருக்கழுக்குன்றம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் கத்தி வெட்டில் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவன், அசோக், வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- கிழக்கு கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தது
- பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத் தலைவர் ராகவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கடலோர மீனவர் பகுதியில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு அதிகரித்ததால், அப்பகுதி கடற்கரை, மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தது. இதை கட்டுப்படுத்தும் விதமாக மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் உத்தரவின் பெயரில் அங்குள்ள கடைகளை அலுவலர்கள் சோதணையிட்டு எச்சரித்தனர்.
மேலும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வீட்டுக்கு வீடு துணிப்பைகளை வழங்கியது. பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத் தலைவர் ராகவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
- தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் நடை மேடையில் நின்று கொண்டிருந்த மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது.
இதன் காரணமாக அந்த வழியாக ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தென் மண்டலங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
அதன்பிறகு தண்ட வாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. சென்னை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரம், மாம்பலம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஏறி செல்வது வழக்கம். அந்த ரெயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்ததால் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்களும், மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
- சரவணனுக்கும், சுவேதாவுக்கும் கடந்த 17-ந்தேதி தடபுடலாக திருமணம் நடந்தது.
- திருமணத்துக்கு பிறகு 2 நாட்கள் கழித்து மணமக்கள் திம்மாவரத்தில் உள்ள மணமகளின் வீட்டுக்கு சென்றனர்.
செங்கல்பட்டு:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற சுவேதா (21).
இவர்கள் இருவரும் உறவினர்கள். இதனால் இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்தனர். சுவேதா தற்போது கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார்.
இந்த நிலையில் சரவணனுக்கும், சுவேதாவுக்கும் திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 1 வருடத்துக்கு முன்பு அவர்களின் நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நிச்சயதார்த்தத்துக்கு பிறகு சரவணன் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்தார். சுவேதாவும் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் சரவணனுக்கும், சுவேதாவுக்கும் கடந்த 17-ந்தேதி தடபுடலாக திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு 2 நாட்கள் கழித்து மணமக்கள் திம்மாவரத்தில் உள்ள மணமகளின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு கடந்த 19-ந்தேதி முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரவு 9 மணியளவில் புதுமண தம்பதிகள் தங்களின் அறைக்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சுவேதா கூச்சல் போட்டபடியே அறை கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவந்தார். பின்னர் அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு புதுமாப்பிள்ளை சரவணன் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் மணமகள் சுவேதாவின் முகூர்த்த புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து சுவேதா மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள்.
சரவணன் 19-ந்தேதி இரவு அவரது பெற்றோருக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது தேனிலவுக்கு செல்ல இருக்கும் இடங்களை பற்றி கூறியுள்ளார்.
20-ந்தேதி தேனிலவு பயணத்தை தொடங்குவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் அதற்குள் அவர் தற்கொலை செய்திருக்கிறார். தாம்பத்ய உறவில் திருப்தி இல்லாததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தகவல் கிடைத்து உள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- நீச்சல் தெரிந்த மாமல்லபுரம் மீனவ இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு சிலையாக தூக்கி செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
- கடல் சீற்றம் காரணமாக சிலைகள் எடுத்து வந்த சிலை அமைப்பாளர்கள் யாரையும் கடலில் இறங்கி கரைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.
மாமல்லபுரம்:
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தெருக்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நேற்றும் வருகிற 24 ந்தேதி (ஞாயிற்றுகிழமை) மாமல்லபுரம் கடலில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கினர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் நகரம், பாலுசெட்டிசத்திரம், வாலாஜாபாத், செவிலிமேடு, கருக்குபேட்டை, முத்தியால்பேட்டை, சிங்கபெருமாள்கோவில், திம்மாவரம், பாலூர், படாளம், கூடுவாஞ்சேரி, மாமல்லபுரம் நகரம் உள்பட பல்வேறு இடங்களில் 6 அடி, 10 அடி, உயரமுள்ள விநாயகர் சிலைகள் இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
முதல் கட்டமாக நேற்று காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை மாமல்லபுரம் கடலில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கினார்கள். இதையடுத்து ஒவ்வொரு சிலையாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல்வேறு இடங்களில் இருந்து மாட்டு வண்டிகள், டிராக்டர், வேன்களில் ஏற்றி மாமல்லபுரம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்கு தேங்காய் உடைத்து தீபாராதனை செய்து வழிபட்டார்கள். பின்னர் நீச்சல் தெரிந்த மாமல்லபுரம் மீனவ இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு சிலையாக தூக்கி செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
கடல் சீற்றம் காரணமாக சிலைகள் எடுத்து வந்த சிலை அமைப்பாளர்கள் யாரையும் கடலில் இறங்கி கரைக்க போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட நூற்றுக்கணக்கான களிமண் விநாயகர் சிலைகளும் நேற்று மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன. கடற்கரையில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் தலைமையில், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- குமார் மதுராந்தகத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
- போலீசார் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த வள்ளுவப்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் எபி என்ற குமார் (வயது 32). மதுராந்தகத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் அந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்த நாள் பரிசு தருவதாக கூறி அதே ஊரில் உள்ள செல்லியம்மன் கோவிலுக்கு அருகே அழைத்துள்ளார். அங்கு வந்த மாணவிக்கு குமார் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் உனது குடும்பத்தை காலி செய்து விடுவேன், உனது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
- வீட்டின் அருகே உள்ள கங்கை அம்மன் கோவில் குளத்தில் பிணமாக கிடந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது28). இவர் வீட்டின் அருகே உள்ள கங்கை அம்மன் கோவில் குளத்தில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓட்டேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பாலாஜி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வெங்கடேசன் பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- மதுகுடிக்க அழைத்து சென்று அவர்கள் தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்தது.
தாம்பரம்:
தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் (33).ரவுடியான இவர் மீது புரட்சி பாரதம் நிர்வாகி ராஜா கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. பாரதிய ஜனதா கட்சியில் பெருங்களத்தூர் மண்டல எஸ்.சி. அணி தலைவராக இருந்தார்.
நேற்று காலை வெங்கடேசன் பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான குணா, சதீஷ் குமார், சந்துரு, அருண் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருங்களத்தூர் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்களை மடக்கி விற்பதில் வெங்கடேசுடன் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. மதுகுடிக்க அழைத்து சென்று அவர்கள் தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்தது.
- செல்போன் மற்றும் எடை எந்திரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
சூனாம்பேடு:
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம், கடப்பாக்கம், சூனாம்பேடு சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இதைபோல சூனாம்பேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வேலூர் தபால் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூட்டை உடைத்து அங்கிருந்து ரூ.24 ஆயிரத்து 500 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதைபோல கடப்பாக்கம் தபால் நிலையத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்து விலையுயர்ந்த செல்போன் மற்றும் எடை எந்திரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது சம்பவங்கள் குறித்து சூனாம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் உத்தரவின் பேரில் சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சூனாம்பேடு பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு மற்றும் தபால் நிலையத்தில் பூட்டை உடைத்து திருடியதை ஒப்புகொண்டார். இந்நிலையில் அவருடன் திருட்டில் ஈடுபட்ட அவரது நண்பர்களான மகாவீர், சந்திரகுமார் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 13 மோட்டார் சைக்கிள்கள், புகைப்பட கேமரா, ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






