என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வண்டலூர் அருகே லாரி மோதி 6 வயது சிறுமி பலி
- கண்டிகையில் நடைபெற்ற உறவினர் சீமந்த விழாவில் கணபதி குடும்பத்துடன் பங்கேற்றார்.
- விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வண்டலூர்:
படப்பை அடுத்த ஆரம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி வனிதா. இவர்களது 6 வயது மகள் அவந்திகா. பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இரவு வண்டலூர் அருகே உள்ள கண்டிகையில் நடைபெற்ற உறவினர் சீமந்த விழாவில் கணபதி குடும்பத்துடன் பங்கேற்றார்.
பின்னர் கணபதி தனது மனைவி மற்றும் மற்றொரு மகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அவரது உறவினர்களான பிரசாந்த், அஜித் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளில் கணபதியின் மகள் அவந்திகா உடன் பயணம் செய்தார்.
இதில் வண்டலூர் பூங்கா அருகே வந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி திடீரென சிறுமி அவந்திகா பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் வண்டலூர் உயிரியல் பூங்காவின் சுற்றுச்சுவரில் மோதி நொறுங்கியது. படுகாயம் அடைந்த அவந்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உறவினர்களான பிரசாந்த் மற்றும் அஜித் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிருக்கு போராடிய பிரசாந்த், அஜித்தை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
விபத்து ஏற்படுத்திய லாரி சுமார் ஒரு மீட்டர் தூரத்திற்கு வண்டலூர் உயிரியல் பூங்காவின் சுற்றுச்சுவரை உரசியபடி மோதி நின்றது குறிப்பிடத்தக்கது.






