என் மலர்
செங்கல்பட்டு
- லட்சுமணன் வீட்டை பூட்டி விட்டு சென்று ஒருவாரம் ஆவதால் கொள்ளை நடந்தது எப்போது என்று தெரியவில்லை.
- கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம்.எஸ். வி.எஸ் நகரில் வசித்து வருபவர் லட்சுமணன். ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி. இவர் கடந்த மாதம் 29-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலையில் உள்ள தனது மகள்வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார்.
இந்நிலையில் நேற்று மாலை அவர்கள் திரும்பி வந்த போது வீட்டின் முன் பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 108 பவுன் நகை, ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து மேல்மரு வத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லட்சுமணன் வீட்டை பூட்டி விட்டு சென்று ஒருவாரம் ஆவதால் கொள்ளை நடந்தது எப்போது என்று தெரியவில்லை.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதி புதிதாக உருவாகும் குடியிருப்பு ஆகும். இதனால் நெருக்கமாக வீடுகள் இல்லை. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் பூட்டி இருந்த லட்சுமணனின் வீட்டை குறிவைத்து நகை-பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர்.
மர்ம கும்பல் லட்சுமணன் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை மேல்மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
- அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அப்பகுதிக்கு சென்று கட்சி கொடிகளை நட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்போரூர்:
திருப்போரூர் ரவுண்டனா அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்நிலையில் இன்று காலை அரசு இடத்தில் கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி அ.தி.மு.க, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலை அப்பகுதிக்கு சென்று கட்சி கொடிகளை நட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சூரிய உதயத்தில் ஒளிரும் கருப்பு மணல் பகுதியை பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
- கடல் அலையில் இருந்து வெளிவரும் இந்த கருப்பு மணல் கடற்கரையில் படிந்து தார் சாலை போன்று காட்சி அளிக்கிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டு செல்கிறார்கள். சுற்றுலா வரும் பார்வையாளர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் பொழுதை கழிப்பது வழக்கம்.
இந்த நிலையில் வடக்கு மாமல்லபுரம்-தேவநேரி கடற்கரை பகுதிகள் தற்போது கருப்பு மணல் கடற்கரையாக மாறி வருகிறது. கடல் அலையில் இருந்து வெளிவரும் இந்த கருப்பு மணல் கடற்கரையில் படிந்து தார் சாலை போன்று காட்சி அளிக்கிறது. மேலும் அதிகாலை சூரிய வெளிச்சத்தில் இந்த கருப்ப மணற்பகுதி ரம்யமாக காணப்படுகிறது.
வித்தியாசமாக மாறி வரும் கடற்கரையில் ரிசார்ட்களில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை நடைபயிற்சி சென்றபோது பார்த்து வியந்தனர். சூரிய உதயத்தில் ஒளிரும் கருப்பு மணல் பகுதியை பார்த்து உற்சாகம் அடைந்தனர். அந்த கருப்பு நிற மணலை கைகளில் அள்ளி வீசி மகிழ்ந்தனர்.
இதுபோன்ற கருப்பு மணல் எரிமலை செயல்பாடுகள் அதிகமாக காணப்படும் கடற்கரை பகுதிகளில் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. இந்த மணலில் நடந்தால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இது போன்ற கருப்பு மணல் கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் உள்ள தில்மதி கடற்கரையில் இருக்கிறது. சூரிய உதயம், அஸ்தமம் நேரங்களில் மின்னும் கருப்பு கடற்கரையை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் அங்கு கூடுவர், தற்போது மாமல்லபுரத்தில் கருப்பு மணல் கடற்கரை காணப்படுவது இயற்கை அதிசயமாக உள்ளது என்றனர்.
- ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கப்படுகின்றன.
- புதிய ரெயில் நிலைய பணிகளை ஒரு வருடத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய அளவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு மாற்றாக இந்த பஸ் நிலையம் செயல்பட உள்ளது. இங்கி ருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த பகுதியில் சி.எம்.டி.ஏ. சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில் புதிய பஸ் நிலையம் திறக்கபட உள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கு வருவதற்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தெற்கு ரெயில்வே ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்காக தெற்கு ரெயில்வே ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கப்படுகின்றன. நடைமேடை அமைப்பதற்கான பணிகளை நிரந்தரமாக அமைப்பதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. இந்த புதிய ரெயில் நிலைய பணிகளை ஒரு வருடத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ரெயில் நிலைய பணிகள் முடிந்ததும் தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கு செல்ல மின்சார ரெயிலில் ஏறி கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறங்கி புதிய பஸ் நிலையத்துக்கு எளிதாக செல்லலாம்.
- கடந்த 3-ந்தேதி 80 சவரன் நகையுடன் ஆர்த்தி மாயமானார்.
- தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெரு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் வயது 27 சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவருடைய மகள் ஆர்த்தி வயது 22 என்பவருக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள ஏ.ஜி சர்ச்சில் திருமணம் நடைபெற்றது, திருமணத்தின் போது 80 சவரன் நகை போட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 3-ந்தேதி 80 சவரன் நகையுடன் ஆர்த்தி மாயமானார்.
இது தொடர்பாக தாம்பரம் போலீசில் விக்னேஷ் புகார் செய்தார். இந்நிலையில் ஆர்த்தி தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் விக்னேஷ் உடன் வாழ பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நஸ்ருதீன் அடியாட்களுடன் சென்று கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
- இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து நஸ்ருதீன்னை கைது செய்தார்.
வண்டலூர்:
நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி மகாலட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் என்கிற தீபக் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் காரணை புதுச்சேரி பகுதியை சேர்ந்த நசீர் என்கிற நஸ்ருதீன் (31) என்பவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகி றார். இவர்கள் இருவரும் ஒன்றாக பணிக்கு சென்று வருவார்கள். இதனால் நண்பர்கள் ஆனார்கள்.
இந்நிலையில் நஸ்ருதீன், மணிகண்டனின் ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை பெற்று அவரது பெயரில் தனியார் வங்கியில் ரூ.20 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதில் ரூ.10 லட்சத்து 25 ஆயிரத்தை மணிகண்டனிடம் கொடுத்து விட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்து உள்ளார். இந்நிலையில் பணத்தை கேட்டு மணிகண்டன் நெருக்கடி கொடுத்ததால், நஸ்ருதீன் அடியாட்களுடன் சென்று கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக மணி கண்டன் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து நஸ்ருதீன்னை கைது செய்தார். பின்னர் அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
- பரனூர் சுங்கச்சாவடி பகுதி நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்டது.
செங்கல்பட்டு:
சமவேலைக்கு சம ஊதி யம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும், முழுநேர ஆசிரியர் பணி மற்றும் பணி நிரந்தரம் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்களும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்யக்கோரி டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தமிழகம் முழு வதும் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1600 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். திருமணமண்டபம் மற்றும் சமுதாயநலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் இரவு விடுவிக்கப்பட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்ல அவர்கள் அனை வரும் மொத்தமாக ஒரே இடத்திற்கு சென்றால் மீண்டும் போராட்டத்தில ஈடுபடலாம் என்பதால் போலீசார் முன்ஏற்பாடாக ஆசிரியர்கள் அனைவரையும் தனித்தனியாக பிரித்து பஸ்களில் அனுப்பி வைத்தனர்.
இதில் தனியார் பஸ்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாடிக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
போலீஸ்சூப்பிரண்டு சாய்பிரனீத் மேற்பார்வை யில், டி.எஸ்.பி பரத் மற்றும் போலீசார் அங்கிருந்து ஆசிரி யர்களை தனித் தனியாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனு ப்பி வைத்தனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடி பகுதி நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்டது.
- அர்ச்சுனன் தபசுக்கு அருகில் உள்ள குடைவரை மண்டபத்தின் தூண் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
- விரிசல் பகுதி எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்துடன் சுற்றுலா பயணிகள் அங்கு சுற்றி பார்த்துவிட்டு செல்கின்றனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பராம்பரிய நகரமாக திகழ்கிறது. இங்குள்ள பல்லவர் கால குடைவரை மண்டபங்கள், குடைவரை சிற்பங்கள், ரத கோவில்கள் அதிகம் உள்ளன.
இதனை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனை மத்திய தொல்லியல் துறை பராமரித்து பாதுகாத்து வருகிறது.
இந்த நிலையில் அர்ச்சுனன் தபசுக்கு அருகில் உள்ள குடைவரை மண்டபத்தின் தூண் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த விரிசல் வழியாக மழை நீர் கசிவதால் அந்த மண்டபத்தை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் விரிசல் பகுதி எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்துடன் சுற்றுலா பயணிகள் அங்கு சுற்றி பார்த்துவிட்டு செல்கின்றனர். எனவே தொல்லியல் துறை நிர்வாகம் குடைவரை மண்டபத்தில் உள்ள விரிசல் பகுதியை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அ.தி.மு.க. சார்பில் கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- முன்னாள் அமைச்சரும் மாநில மகளிர் அணி செயலாளருமான வளர்மதி தலைமை தாங்கினார்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சி, 5-வது மண்டலத்தில் அடிப்படை வசதிகளை முறையாக செய்யாதது, சாலை அமைத்ததில் முறைகேடு உள்ளிட்டவற்றை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் மாநில மகளிர் அணி செயலாளருமான வளர்மதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கனிதா சம்பத், ப.தன்சிங் மாவட்ட பொருளாளர் பரசுராமன், பகுதி செயலாளர்கள் மோகன்,ஜெய் பிரகாஷ், வெங்கடேசன், அருணாச்சலம், வழக்கறிஞர் சதீஷ், கூத்தன், கோபிநாதன் எல்லார் செழியன், தேவேந்திரன், கவுன்சிலர்கள் சேலையூர் சங்கர், வாட்டர் ராஜ், சாய் கணேஷ் மாவட்ட இளைஞரணி செயலாளர் புருஷோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
- ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தாம்பரம்:
சென்னை கன்டோன் மென்ட் பல்லாவரம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த பல ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து அதில் வீடுகள் கட்டி வசித்து வந்தனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்றி, அரசு நிலத்தை மீட்க கலெக்டர் ராகுல்நாத் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து இன்று காலை பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் அரசு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், வீடுகளை பூட்டி சீல் வைத்தனர்.
வீடுகளை பூட்டி சீல் வைப்பதற்கு முன்பு அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல அங்குவசித்து வந்தவர்களுக்கு அனுமதி அளித்தனர். பொருட்கள் அனைத்தும் எடுக்கப்பட்டதும் அதிகாரிகள் உடனடியாக வீட்டினை பூட்டி சீல் வைத்தனர். மேலும் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் முழுவதையும் மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.200 கோடி ஆகும். பின்னர் அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் உள்ளது.
- ஓட்டலில் பணிபுரியும் முக்கிய ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாமல்லபுரம்:
முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தற்போது அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. அங்கு இன்று காலை 6 மணிக்கு நான்கு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஓட்டல் அலுவலகத்தில் நுழைந்து அங்குள்ள கம்ப்யூட்டர், ஆவணங்களை சோதனையிட்டு வருகிறார்கள்.
ஓட்டல் மேலாளர், கணக்காளர் மற்றும் வெளி மாநில உணவு பொருட்கள், ஓட்டலுக்கு தேவையான ஆடம்பர அலங்கார பொருட்கள் வாங்கும் பிரிவுகளில் பணிபுரியும் முக்கிய ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டலில் தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழக்கம் போல் ஊழியர்கள் பின்புற வழியில் சென்று வருகிறார்கள். முன் பகுதியில் மட்டும் யாரையும் அனுமதிக்கவில்லை. ஜெகத்ரட்சகன் ஓட்டலில் வருமான வரி சோதனை நடப்பதால் ஓட்டல் கட்டுமான பணிகள் நடைபெற்றபோது கட்டுமான பொருட்கள் சப்ளை செய்த திருப்போரூர், மாமல்லபுரம் பகுதி தி.மு.க. பிரமுகர்கள் சிலர், அவர்களிடமும் விசாரணை வருமோ என பதட்டம் அடைந்துள்ளனர். இதனால் மாமல்லபுரம்-தேவநேரி இ.சி.ஆர் பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.
- பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் பெயரில் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
- செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவரை தொடர்பு கொண்ட நபர்கள் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல்வேறு தவணைகளில் ரூ.17 ஆயிரம் பெற்றனர். ஆனால் கூறியபடி அவர்கள் அஜித்குமாரை சினிமா படத்தில் நடிக்க வைக்கவில்லை.
விசாரணையில் அந்த நபர்கள் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் பெயரில் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
இதுகுறித்து செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டது விருத்தாச்சலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பகுதியை சேர்ந்த சுதாகரன் மற்றும் கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, பொதுமக்கள் இதுபோன்று சமூக வலைதளங்களில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் செயல்பாடு மூலமாகவோ முன்பணமாக பணத்தை கேட்டால் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். சைபர் கிரைம் குற்றங்களினால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களது புகார்களை அளிக்கலாம் என்றனர்.






