என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • மாமல்லபுரம் சுற்றுலா வரும் பார்வையாளர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.
    • மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சுற்றுலா வரும் பார்வையாளர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.

    மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கலங்கரை விளக்கம், கப்பல் அருங்காட்சியகம் இன்று முதல் பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

    மறு உத்தரவு வரும்வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    • செட்டிபுண்ணியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஒருவரை பிடிக்க போலீசார் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டும் சிக்காமல் இருந்தார்.
    • போலீஸ்காரர் கோகுலை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிரடியாக உத்தரவிட்டார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அனைத்து போலீசாரும் தங்களது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனையை ஒழிக்கவும், இதில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மறைமலைநகர் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஒருவரை பிடிக்க போலீசார் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டும் சிக்காமல் இருந்தார். இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தபோது மாமல்லபுரம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வரும் கோகுல் என்பவர் கஞ்சா வியாபாரிக்கு போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவித்து வந்தது தெரியவந்தது. மாவட்ட போதை தடுப்பு சிறப்பு பிரிவில் உள்ள போலீஸ்காரர் கோகுல் பல குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீஸ்காரர் கோகுலை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிரடியாக உத்தரவிட்டார்.

    • பயணிகள் ஏறும் முன்பே பஸ் திடீரென இயக்கப்பட்டு எலக்ட்ரானிக் கதவு மூடப்பட்டது.
    • காது வலியால் துடித்த மோனிஷா தனது பெற்றோரிடம் கண்டக்டர் தன் கன்னத்தில் அறைந்த தகவலை தெரிவித்தார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், இவரது மகள் மோனிஷா (வயது 15). இவர் மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை நடந்த ஆங்கிலம் சிறப்பு வகுப்பில் பயின்றுவிட்டு அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் தனது வீட்டுக்கு செல்வதற்காக தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் அரசு பஸ்சில் ஏற முயன்றார். பஸ்சில் நிற்க கூட இடம் இல்லாத நிலையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி மோனிஷா படிக்கட்டில் நின்று கொண்டு நெரிசலில் சிக்கி தவித்தார்.

    பயணிகள் ஏறும் முன்பே பஸ் திடீரென இயக்கப்பட்டு எலக்ட்ரானிக் கதவு மூடப்பட்டது. பஸ்சில் கூட்டம் முண்டியடித்தால் எரிச்சலடைந்த அந்த பஸ் கண்டக்டர் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மோனிஷாவை கன்னத்தில் பளார் பளார் என 3 முறை தாக்கி தனது கோபத்தை அந்த மாணவியின் மீது காட்டியுள்ளார்.

    காது வலியால் துடித்த மோனிஷா தனது பெற்றோரிடம் கண்டக்டர் தன் கன்னத்தில் அறைந்த தகவலை தெரிவித்தார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தனது பெற்றோருடன் மாமல்லபுரம் போலீஸ் நிலையம் வந்த மாணவி மோனிஷா தன்னை தாக்கிய கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் செய்தார். இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் தாம்பரம் போக்குவரத்து பணிமனைக்கு தகவல் அனுப்பி சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற சரக்கு வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வண்டலூர்:

    சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி பகுதியை சேர்ந்தவர் சாமுண்டி(வயது55). கட்டிட தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் திருத்தேரி சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார். அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற சரக்கு வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சாமுண்டி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஹரி வார விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமையில் தனது மனைவி, மகளுடன் வீட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் செல்வது வழக்கம்.
    • சாலையில் செல்பவர்களை வேடிக்கை பார்த்த படி ரூபி ஹாயாக சென்று வருகிறது.

    திருப்போரூர்:

    சோழிங்கநல்லூர் அடுத்த நாவலூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரி. என்ஜினீயரான இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் ஹரிக்கு வீட்டில் குட்டியில் இருந்தே வளர்த்து வரும் "ரூபி" என்ற நாய் மீது அதிக பாசம் உண்டு. வெளியூர் சென்றால் கூட நாயை உடன் அழைத்து சென்று வந்தார். ஒரு நாள் கூட ஹரியும், அவரது குடும்பத்தினரும் வளர்ப்பு நாயை விட்டு பிரியாமல் இருந்தனர்.

    இந்தநிலையில் ஹரி வார விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமையில் தனது மனைவி, மகளுடன் வீட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் செல்வது வழக்கம். அப்போது அவர் தனது செல்லபிராணி ரூபியையும் சைக்கிளில் அழைத்துசென்று வருவது சவாலாக இருந்தது.

    கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இ.சி.ஆர். சாலையில் தனது சைக்கிளின் பின்பக்கம் அமரவைத்து அழைத்து செல்லும் ரூபி எங்கு கீழே விழுந்து விபத்தில் சிக்கிவிடுமோ என்று ஒவ்வொரு முறையும் பயந்தார்.

    இதையடுத்து இணையதளத்தில் ஜெர்மன் நாட்டு குறும்படம் ஒன்றில் அங்கு சைக்கிளிங் செய்பவர்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சொகுசு வண்டியை சைக்கிளுடன் இணைத்து வளர்ப்பு நாயை சைக்கிளிங் அழைத்து செல்வதை ஹரி பார்த்தார். உடனடியாக அவர் ஆன்லைன் மூலம் ஜெர்மன் நாட்டில் இருந்து அந்த பிரத்யேக வாகனத்தை வரவழைத்தார். இதற்காக அவர் ரூ.25 ஆயிரம் செலவும் செய்து உள்ளார்.

    தற்போது ஹரி தனது வளர்ப்பு நாய் ரூபியை பிரத்யேக வாகனத்தில் அமர வைத்து அதனை தனது சைக்கிளில் பொருத்தி அழைத்து சென்று வருகிறார். அதில் சாலையில் செல்பவர்களை வேடிக்கை பார்த்த படி ரூபி ஹாயாக சென்று வருகிறது. இந்த சிறப்பு வாகனத்தில் மழை, வெயில் படாதவாறு தடுப்பும் உள்ளது. குடும்பத்தில் ஒருவர் போல் வளர்ப்பு நாயை பராமரித்து வரும் ஹரியின் பாசபிணைப்பினை பொதுமக்கள் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

    • தகவல் அறிந்ததும் சதுரங்கப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கூவத்தூர் அடுத்த அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது19). இவர் உறவினரான அதே பகுதியை சேர்ந்த சுகந்தி(19)என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து க்கொண்டு கல்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கூவத்தூரை அடுத்த சின்னகுப்பம் பகுதியை சேர்ந்த கவுதம்(26) என்பவர் தனது மனைவி அஸ்வினியுடன்(20) மோட்டார் சைக்கிளில் கல்பாக்கத்தில் இருந்து சின்னகுப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது பாஸ்கர் மற்றும் கவுதம் ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் திடீரென நேருக்கு நேர் மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். கவுதம், சுகந்தி, அஸ்வினி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் சதுரங்கப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்த கவுதம் உள்பட 3 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே கவுதமும் உயிரிழந்தார்.

    சுகந்தி, அஸ்வினி ஆகிய இருவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக சதுரங்கப் பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழைக்காலங்களில் தண்ணீர் கால்வாயில் செல்லாமல் குடியிருப்புகளில் தேங்கும் நிலை காணப்படுகிறது.
    • 4-வது தெருவில் மட்டும் பெயரளவுக்கு கால்வாயை தூர் வாரி சென்றுள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.

    தாம்பரம் மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட அஸ்தினாபுரம் மற்றும் மகேஸ்வரி நகரில் 7 தெருக்கள் உள்ளன. இங்கு 130 வீடுகள் உள்ளன.

    இந்த குடியிருப்புகளில் உள்ள தெருக்களில் இருந்து வெளியேறும் மழைநீர் 4-வது தெரு வழியாக சென்று அங்குள்ள ரேஷன் கடையையொட்டியுள்ள காய்வாய் வழியாக ஓடி செம்பரம்பாக்கம் ஏரியை சென்றடையும். இந்த கால்வாய் மற்றும் தண்ணீர் சென்று சேரும் இடம் ஆகியவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் கால்வாயில் செல்லாமல் குடியிருப்புகளில் தேங்கும் நிலை காணப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் இந்த பிரச்சினை ஏற்படுவதால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே மகேஸ்வரி நகரில் உள்ள கால்வாயை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள தெருக்களிலும் கால்வாய்கள் தூர் வாரப்படாமலேயே உள்ளது.

    4-வது தெருவில் மட்டும் பெயரளவுக்கு கால்வாயை தூர் வாரி சென்றுள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.

    அப்பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் குப்பைகள் அதிக அளவில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

    கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. 2 மாதங்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கழிவு நீரும் கலந்துள்ளதால் அஸ்தினாபுரம் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    தேங்கி கிடக்கும் குப்பை மற்றும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது என்றும் மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், சுகாதார சீர்கேட்டை சரி செய்யவும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

    இதற்கிடையே ஒரு குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோயும் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாநகராட்சி மண்டல அதிகாரிகள் விரைந்து சென்று அஸ்தினாபுரத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டை போக்குவதற்கு நிரந்தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கடந்த ஒரு வாரத்தில் சுமார் 2600 பேர் லயன் சபாரியில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
    • இன்னும் இரண்டு வாகனங்கள் கூடுதலாக பெறுவதற்கு டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்து விலங்குகளை பார்த்து செல்கிறார்கள்.

    கொரோனோ காலகட்டத்தில் கடந்த 3 ஆண்டு முன்பு வண்டலூர் பூங்காவில் வாகனத்தில் சென்று சிங்கங்களை பார்வையிடும் லயன் சபாரி வசதி நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2-ந்தேதி வாகனத்தில் சென்று சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் லயன் சபாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்காக குளிர்சாதன வசதியுடன் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும்.

    வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் லயன்சபாரி தொடங்கப்பட்டு இருப்பதால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. லயன்சபாரி தொடங்கப்பட்ட நாள் அன்று மட்டும் 18 முறை வாகனங்கள் இயக்கப்பட்டு சுமார் 500 பேர் சிங்கம், மான்களை பார்த்து ரசித்து உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் சுமார் 2600 பேர் லயன் சபாரியில் சென்று பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 7-ந்தேதி (சனிக்கிழமை) 25 முறையும், ஞாயிற்றுக்கிழமை 32 முறையும் லயன்சபாரிக்கு வாகனங்கள் சென்று உள்ளன. சனிக்கிழமை சுமார் 650 பேரும், ஞாயிற்றுக்கிழமை 850 பேரும் கண்டுகளித்து உள்ளனர்.

    இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறும்போது, வாகனத்தில் சென்று சிங்கம், மான்களை பார்வையிடும் வசதி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. விடுமுறை நாட்களில் லயன்சபாரி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது இரண்டு வாகனங்கள் மட்டுமே லயன் சபாரிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு வாகனங்கள் கூடுதலாக பெறுவதற்கு டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதிய 2 குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

    • புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவி தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
    • மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவி தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    வண்டலூர்:

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி பட்டப்படிப்பு மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவி தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    இந்த கல்வி உதவி தொகைக்கு 2023-2024 கல்வி ஆண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட நல இயக்ககம், மிக பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது http://bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவி தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்து புதுப்பித்தல் விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள்ளும் மற்றும் புதிய விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு 2024 ஜனவரி மாதம் 15-ந் தேதிக்குள்ளும் ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம் சென்னை - 5 என்ற முகவரியிலோ அல்லது 044 - 29515942 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail.com ல் அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வளையக்கரணை பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
    • புருஷோத்தமன் உடல் அருகே மது பாட்டில் மற்றும் சோடா பாட்டில் கிடந்தது.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பைகாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 28). இவர் மகேந்திரா சிட்டி பகுதியில் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆப்பூர் அடுத்த வளையக்கரணை பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி பாக்கியலட்சுமி கடந்த 7-ந் தேதி கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் நேற்று சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த பெரிய விஞ்சியம்பாக்கம் ஏரிக்கரை அருகே புருஷோத்தமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் போலீசார் புருஷோத்தமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புருஷோத்தமன் உடல் அருகே மது பாட்டில் மற்றும் சோடா பாட்டில் கிடந்தது.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அடித்து கொலை செய்தனரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். புருஷோத்தமனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசார் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குவது போல் சமூகவலைதள விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணில் பேசினர்.
    • கூட்டாளிகள் யார்?யார்? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி, ஸ்ரீபத்மா அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ரசாக். கல்லூரி மாணவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அப்துல்ரசாக்கின் மோட்டார் சைக்கிள் அதே பதிவு எண்ணுடன் விற்பனைக்காக சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதனை அறிந்த அப்துல்ரசாக் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குவது போல் அந்த சமூகவலைதள விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணில் பேசினர். அப்போது அதில் பேசிய வாலிபர் மோட்டார் சைக்கிள் விற்பனைக்காக மன்னார்குடியில் இருப்பதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் மன்னார்குடிக்கு விரைந்து சென்று அப்பகுதியை சேர்ந்த முனீஸ் (23), என்பவரை கைது செய்தனர். அவர் மோட்டார் சைக்கிளை திருடி இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருட்டு மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய அதே பதிவு எண்ணுடன் படத்தை வெளியிட்டதால் அவர் சிக்கிக்கொண்டார். கைதான முனீஸ் இதுபோல் வேறு எந்தெந்த இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார். கூட்டாளிகள் யார்?யார்? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிடிபடும் மாடுகள் காலியாக உள்ள மாநகராட்சி இடங்களில் கட்டி வைத்து அபராதம் செலுத்திய பின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
    • தாம்பரம், செம்பாக்கம் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை மாடம்பாக்கம் பகுதியில் கட்டி வைத்து வருகின்றனர்.

    தாம்பரம்:

    சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்களும், உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொ டர்ந்து சென்ைன மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிந்து வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு மீது மோதாமல் இருக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருப்பியபோது லாரியில் சிக்கி பலியானார். இதற்கிடையே சமீபத்தில் நடந்த தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தின்போது சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது. மேலும் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பிடிபடும் மாடுகள் காலியாக உள்ள மாநகராட்சி இடங்களில் கட்டி வைத்து அபராதம் செலுத்திய பின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது. தாம்பரம், செம்பாக்கம் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை மாடம்பாக்கம் பகுதியில் கட்டி வைத்து வருகின்றனர். தற்போது சுற்றி உள்ள பல இடங்களில் இருந்து அதிக அளவு மாடுகள் பிடிக்கப்பட்டு கொண்டு வரப்படுவதால் இப்பகுதியில் தற்போது இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது. வரும் சில நாட்களில் மாடம்பாக்கம் பகுதியில் மாடுகளை கட்டி வைக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பல்லாவரம், பம்மல் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை திருநீர்மலைப் பகுதியில் அடைத்து வைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சாலையில் பிடிபடும் மாடுகளை அடைத்து வைக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல தனியாக புதிய வாகனங்களும் வாங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×