என் மலர்
செங்கல்பட்டு
- காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
செங்கல்பட்டு:
மாவட்டங்களுக்கு சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும், கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சென்றார். அப்படி செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் மறைமலைநகரில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் 4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து இன்று 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றுள்ளனர். ஆய்வு கூட்டத்தில் 28 துறைகளை சார்ந்த மாவட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
- பருவநிலை மாற்றம் குறித்த 3 ஆய்வு மாநாட்டு புத்தகங்களை வெளியிட்டார்.
- துறையின் கல்வி பேராசிரியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் இந்திய மீன்வள அமைச்சகம் சார்பில், சர்வதேச மீன்வள மேம்பாட்டு கருத்தரங்கு 3நாட்கள் நடைபெறுகிறது. கருத்தரங்கை மத்திய மீன்வள அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா இன்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் பருவநிலை மாற்றம் குறித்த 3 ஆய்வு மாநாட்டு புத்தகங்களை வெளியிட்டார்.
மீன் வளம் மற்றும் அதைச்சார்ந்த தொழில் முன்னேற்றம், புதுப்புது கண்டுபிடிப்புகள், பேரிடர் உள்ளடங்கிய பருவநிலை மாற்றங்கள் குறித்தும், இந்திய பசிபிக் பகுதியில் மீன்வள மேலான்மையை வலுப்படுத்தவும் கருத்தரங்கில் பேசப்பட்டது. சைனா, ஸ்ரீலங்கா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஆஸ்த்ரேலியா, மாலத்தீவு, பங்கலாதேஷ் போன்ற பகுதிகளில் இருந்து அந்நாட்டு பிரதிநிதிகள், கடல்வள ஆய்வாளர்கள், அத்துறையின் கல்வி பேராசிரியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
- நோட்டு ஆவணங்களை பார்வையிட்டு ஊழியர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விவரங்களை கேட்டறிந்தார் முதலமைச்சர்.
- ஊழியர்கள் தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சரிடம் விருப்பம் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மறைமலைநகர் செல்லும் வழியில் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசனும் உடன் சென்றார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்ததும் அங்கு மனு கொடுக்க வந்திருந்த பெண்ணிடம் எதற்காக நிற்கிறீர்கள். என்ன பிரச்சனை? மனு கொடுக்க வந்தீர்களா? என்று கேட்டார். அதற்கு அந்த பெண் விரிவாக பதில் கூறினார். அதன்பிறகு ஊழியர்கள் பணியாற்றும் பொதுப்பிரிவு அறைகளுக்கு சென்று பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்தார்.
அங்கு பணியாற்றும் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமும் பணியின் விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கூறுகையில், மக்கள் தரும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அங்கிருந்து நோட்டு ஆவணங்களை பார்வையிட்டு ஊழியர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் புறப்படும்போது அங்கிருந்த ஊழியர்கள் தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சரிடம் விருப்பம் தெரிவித்தனர்.
உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
- மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுமார் 6 அடி முதல் 7 அடி வரை வளரும் தன்மை கொண்டது.
- அனகோண்டாக்கள் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் இதனை ரசித்து செல்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுக்கு பிறகு வாகனத்தில் சென்று சிங்கம், மான்களை பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கிடையே வண்டலூர் பூங்காவில் புதிதாக பிறந்த 8 மஞ்சள் நிற அனகோண்டா குட்டிகள் பார்வையாளர்கள் பார்வைக்கு விடப்பட்டு உள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பாறையில் ஏறி அனகோண்டா குட்டிகள் சறுக்கி செல்வதை சிறுவர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரியிடம் கேட்டபோது, இந்த மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுமார் 6 அடி முதல் 7 அடி வரை வளரும் தன்மை கொண்டது. கடந்த 2020 -ம் ஆண்டு விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தில் சென்னை முதலைப் பண்ணையில் இருந்து அனகோண்டா பாம்பு ஜோடி பெறப்பட்டது. இதன் இனப்பெருக்கத்தின் மூலம் 6 குட்டிகள் கிடைத்தது. அதனை தனியாக பராமரித்து வந்தோம். இப்போது நல்ல நிலையில் உள்ள அனகோண்டா குட்டிகளை பார்வைக்கு விட்டுள்ளோம். இதற்கு உணவாக சிறிய கோழி குஞ்சுகள், மூஞ்சூறு எலிகள் வழங்கப்படுகிறது. அனகோண்டாக்கள் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன.
பூங்காவில் விலங்குகள் இனப்பெருக்கம் செய்வதற்கான இயற்கை சூழ்நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெருப்பு கோழிகள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்தன என்றார்.
- மோட்டார் சைக்கிளையும் பறித்து வைத்ததாக தெரிகிறது.
- புகாரின் பேரில் சஞ்சய், தமிழரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பரத்(20). பாண்டூர் பகுதியில் உள்ள பெண்தோழி ஒருவரை சந்திக்க சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் பரத்தை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்து வைத்ததாக தெரிகிறது. இதற்கிடையே பாண்டூர் பகுதியை சேர்ந்த 2 பேரை பரத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சஞ்சய், தமிழரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- சூலேரிக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற அலுவலகம் சம்பந்தமான கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.
- நீச்சல்குளம் தண்ணீரில் மூழ்கி ராம்குமார் பரிதாபமாக இறந்தார்.
மாமல்லபுரம்:
திருச்சி அடுத்த திருவானைக்கோயிலை சேர்ந்தவர் ராம்குமார் (வயது39). மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலைபார்த்து வந்தார்.
இவர் மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற அலுவலகம் சம்பந்தமான கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.
பின்னர் அங்குள்ள நீச்சல் குளத்தில் ராம்குமார் குளித்தார். அப்பேது அவர் திடீரென மயங்கினார். இதில் நீச்சல்குளம் தண்ணீரில் மூழ்கி ராம்குமார் பரிதாபமாக இறந்தார்.
- சைக்கிள் வீரர்கள் செல்லும் பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- நிர்ணயிக்கப்பட்ட 3 திருப்பங்களிலும் டிஜிட்டல் டயர் பதிவு கருவிகள் வைத்து துல்லியமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
மாமல்லபுரம்:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் இன்று தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த சைக்கிள் போட்டி நடை பெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் 24கி.மீ தூரம் கொண்ட பெண்களுக்கான போட்டியும் நடைபெற்றது. கோவளம், வடநெம்மேலி, பூஞ்சேரி என மூன்று திருப்பங்களுடன் 3 அணிகள், என வெளிநாட்டு, வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்கள் 179 பேர் உட்பட மொத்தம் 1,125 பேர் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டனர். மொத்தம் 3 கட்டமாக இந்த போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியின் போது பிற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக, அப்பகுதியில் இரு வழித்தடங்களிலும் இன்று அதிகாலை 4 மணி முதல் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் அனை த்தும் கிழக்கு கடற்கரை சாலை வெங்கம்பாக்கத்தில் திருப்பி செங்கல்பட்டு வழியாக காலை 9 மணிவரை சென்றது.
இதேபோல் கார், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் பூஞ்சேரியில் மாற்றுப்பாதையில் திரும்பி ஓ.எம்.ஆர் வழியாக சென்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் வாகனங்கள் அக்கரை சோழிங்கநல்லூர் வழியாக ஓ.எம்.ஆர் சாலையில் சென்றது. இதனால் கிழக்குகடற்கரை சாலை சுமார் 5மணி நேரம் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சைக்கிள் வீரர்கள் செல்லும் பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வீரர்கள் சென்ற சைக்கிள்களின் பின்னால் சைக்கிள் மெக்கானிக், மருத்துவ பிரிவினர் அவர்களின் வேகத்திற்கு ஏற்ப மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து சென்றனர். நிர்ணயிக்கப்பட்ட 3 திருப்பங்களிலும் டிஜிட்டல் டயர் பதிவு கருவிகள் வைத்து துல்லியமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாதரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அனைத்து மருந்து கடைகளிலும் வருகிற 31-ந்தேதிக்குள் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
- உத்தரவினை பின்பற்றாத காரணத்தினால் மருந்து கடைகளின் உரிமையாளரின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் 29-9-2023 அன்று இணைய வழியில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945-ல் அட்டவணைகள் எச், எச் ஒன், எக்ஸில் (H, H1, X) குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் வருகிற 31-ந்தேதிக்குள் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
மேலும், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால், இந்த உத்தரவினை பின்பற்றாத காரணத்தினால் மருந்து கடைகளின் உரிமையாளரின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழரசு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் தமிழரசு. தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஞ்சபாண்டவர் மண்டபத்தின் மேல்பகுதியில் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது.
- மண்டபத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டு உள்ள விரிசலின் அளவு, கல்லின் தன்மை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களான ஐந்துரதம், கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பகுதி, அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களை பார்க்க தினந்தோறும் வெளிநாட்டினர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
இதையடுத்து புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளில் சுற்றுலாபயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் புராதன சின்னங்களை மின்விளக்கு ஒளியில் ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அர்ச்சுணன் தபசு பகுதியை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் அதன் அருகே உள்ள பஞ்சபாண்டவர் மண்டபத்தையும் ரசிப்பது வழக்கம். இந்நிலையில் பஞ்சபாண்டவர் மண்டபத்தின் மேல்பகுதியில் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே தொல்லியல்துறையினர் மண்டபத்தின் மேற்பகுதியில் அவ்வப்போது ரசாயன சிமெண்ட் கலவை வைத்து பராமரித்து வந்தனர். தற்போது விரிசல் அதிகமாகி மண்டபத்தின் உள்ளே மழைநீர் ஒழுகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மழை பெய்யும் போது பஞ்சபாண்டவர் மண்டபத்தில் ஒதுங்கி நிற்கும் சுற்றுலா பயணிகள் விரிசல் வழியாக வரும் மழை நீரில் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். சிலர் இணையதளம் வழியாக டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் தலைமை அலுவலகத்திற்கும் புகார் அனுப்பினர்.
இதையடுத்து சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள மத்திய தொல்லியல்துறை தொல்பொருள் ஆய்வாளர்கள், பழங்கால கட்டிட கட்டமைப்பு பாதுகாப்பு என்ஜினீயர்கள் பஞ்சபாண்டவர் மண்டபத்தில் திடீர் ஆய்வு செய்தனர். மண்டபத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டு உள்ள விரிசலின் அளவு, கல்லின் தன்மை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து விரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
- நிலத்தை மீட்பது குறித்து மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
- கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சிஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டிடம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பள்ளி பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் இருந்தது. இந்த நிலம் மற்றும் கட்டிடத்தினை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர்.
இந்த நிலத்தை மீட்பது குறித்து மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி இந்து அறநிலையத்துறையின் செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லஷ்மி காந்த பாரதிதாசன் தலைமையில் கோவில் நிலங்கள் வட்டாட்சியர் தங்கராஜ், செயல் அலுவலர் மேகவண்ணன், சரக ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த ஆட்சிஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
பின்னர் கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் அறிவிப்பு பலகையும் அளவை கற்களும் வைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.4 1/2 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி தணிகா மீது மொத்தம் 17 வழக்குகள் உள்ளன.
- படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
பெரியபாளைம் அருகே உள்ள கன்னிகைபேர் காலனி பகுதியை சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாசலம்(வயது36). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு சித்தாமூர் பகுதியில் நடந்த ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக தணிகாசலம் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து அவர் மீது கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீனில் வரமுடியாத வகையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த தணிகாவை போலீசார் தேடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து ரவுடி தணிகா உள்பட தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் உத்தரவின்படி செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பிரதாப் ஆகியோர் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு சென்னை எஸ்.ஆர்.எம்.சி. ஆஸ்பத்திரி அருகே பதுங்கி இருந்த ரவுடி தணிகாவை தனிப்டை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் மேல் விசாரணைக்காக சித்தாமூர் போலீஸ்நிலையத்துக்கு போலீசார் அவரை வாகனத்தில் அழைத்து சென்றனர்.
செங்கல்பட்டு அருகே லாரல் மால் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது ரவுடி தணிகா திடீரென பாதுகாப்புக்கு இருந்த போலீசாரை தாக்கி விட்டு ஓடும் வாகனத்தில் இருந்து கீழே குதித்து இருட்டான பகுதிக்கு தப்பி ஓடமுயன்றார்.
அவரை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயன்றபோது தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் புகழ் தனது கைத்துப்பாக்கியால் 2 ரவுண்டு ரவுடி தணிகாவை சுட்டார். இதில் வலது கால் முழங்கால் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுருண்டு விழுந்தார்.
அவரை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கை, காலில் பலத்த காயத்துடன் ரவுடி தணிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி தணிகா மீது மொத்தம் 17 வழக்குகள் உள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி மாவ ட்டங்களில் வெடிபொருட்கள் பயன்படுத்தி 8 கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் ஆயுதம் மற்றும் வெடி பொருட்களை பயன்படுத்திய ஒரு கலவர வழக்கும், 2 கொள்ளை வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோழவரம் அருகே 2 ரவுடிகள் எண்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் செங்கல்பட்டு அருகே ரவுடி தணிகா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






