search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
    X

    அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

    • கொலைகும்பல் திட்டமிட்டு அன்பரசுவை தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
    • கொலை வழக்கு தொடர்பாக சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    திருப்போரூர்:

    வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி கல்யாணி. இவர் தற்போது ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். இவர்களது மகன் அன்பரசு(வயது28). இவர் வேங்கடமங்கலம் ஊராட்சியின் 9-வது வார்டு கவுன்சிலராகவும், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளராகவும் இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்பரசு கீரப்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் நண்பர்களுடன் கலந்து விட்டு காரில் வந்து கொண்டு இருந்தனர். கீரப்பாக்கம் சுடுகாடு அருகே காரை நிறுத்திவிட்டு அனைவரும் இருந்தபோது மர்ம கும்பல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் அன்பரசுவை கொடூரமாக கொலை செய்தனர்.

    இதுகுறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் 3 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் கொலையில் தொடர்புடைய 2 பேர் மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி மேலும் 2 பேரை போலீசார் பிடித்தனர்.

    இந்த கொலை வழக்கில் கேளம்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி (வயது 23) ஒத்திவாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுனில் (19) கீரப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் (18) நெடுங்குன்றம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினம் (24) ஆகிய 4 பேர் பிடிபட்டு உள்ளனர். கடந்த ஆண்டு நல்லம்பாக்கத்தைச் சேர்ந்த தேவகுமார் என்பவரை இந்த கும்பல் கொலை செய்து உள்ளது. இதற்கு பழிக்கு பழி வாங்க தேவகுமாரின் நண்பரான வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் திட்டமிட்ட வந்ததாகவும் இதற்கு பல்வேறு வகைகளில் அன்பரசு உதவி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனை அறிந்த கொலைகும்பல் திட்டமிட்டு அன்பரசுவை தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அன்பரசு தனது நண்பர்களுடன் காரை நிறுத்திவிட்டு மது அருந்தும்போது அங்கு பதுங்கி இருந்த கும்பல் வெடிகுண்டை வீசி அவர்களை நிலை குலைய செய்து விட்டு பின்னர் அன்பரசுவை மட்டும் விரட்டி சென்று அரிவாளால் வெட்டி தீர்த்து கட்டி உள்ளனர்.

    கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×