search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாம்பரம், கிளாம்பாக்கம் பகுதியில் நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    தாம்பரம், கிளாம்பாக்கம் பகுதியில் நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல்

    • தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமான அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், வாகனங்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • ஆயத பூஜை தொடர்விடுமுறையையொட்டி பஸ்கள், கார்கள், ரெயில்கள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்து உள்ளனர்.

    தாம்பரம்:

    ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி நாளை, நாளை மறுநாள் தொடர்ந்து விடுமுறைகள் வருகின்றன. இதற்கு முன்னதாக சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று முன்தினம் முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். அவர்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நேற்று இரவு வழக்கத்தை விட ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையம், ரெயில்நிலையத்தில் குவிந்தனர். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 950 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்ததால் நள்ளிரவு வரை பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தங்கி இருந்தவர்கள் ஏராளமானோர் சொந்த கார்களிலும் நேற்று இரவு புறப்பட்டு சென்றனர். தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமான அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், வாகனங்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கோயம்பேடு பஸ்நிலைய பகுதி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இதேபோல் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அருகே மழைநீர் கால்வாய் அமைக்க சென்னை-திருச்சி நெடுஞ்சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு நேற்று பணிகள் நடந்தன. போக்குவரத்து எதிர்திசையில் மாற்றப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரனூர் சுங்கச்சாவடியிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சென்றன.

    மேலும் குரோம்பேட்டை தனியார் வணிக வளாகங்களில் பொதுமக்கள் பொருட்களை வாங்க குவிந்து இருந்ததால் குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் சானிடோரியம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது. போக்குவரத்து போலீசார் குறைந்த அளவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆயத பூஜை தொடர்விடுமுறையையொட்டி பஸ்கள், கார்கள், ரெயில்கள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்து உள்ளனர். இன்று இரவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

    வெளியூர் செல்லும் பொதுமக்களின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னையில் இருந்து இயக்கப்படும் 2100 பஸ்களுடன் சேர்ந்து 950 பஸ்கள் இயக்கப்பட்டது. நேற்று 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட 1545 பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.27.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.15.41 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ரூ.24.53 லட்சம் வரி விதிக்கட்ட நிலையில் ரூ.7.54 லட்சம் வசூலிக்கப்பட்டது. 102 பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்புவதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×